வெளிப்படுத்தின விசேஷம்3- விளக்கவுரை

அதிகாரம் - 3

‘ஏழு சபைகளுக்கு ஆவியானவரின் செய்தி’                                                                     ‘Message of the Spirit to seven Churches’

கர்த்தருடைய ஆவியானவர் யோவானுக்கு தரிசனங்கள் மூலம் 7 சபைகளுக்கும் அனுப்பும்படியாக கொடுத்த செய்திகளில் கடைசி மூன்று சபைகளுக்கான செய்திகள் இந்த 3 ஆம் அதிகாரத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது.      

சர்தை சபைக்கு செய்தி.

1. வாழ்த்து : சர்தை சபைக்குத் தன்னை ஏழு ஆவிகளை உடையவராகவும், ஏழு நட்சத்திரங்களை உடையவராகவும் காண்பித்து, தைரியப்படுத்தி வாழ்த்துகிறார்.(1)  வெளி 5:6
-  ஏழு ஆவிகள் ஆட்டுக்குட்டியானவர் மேலுள்ள ஆவியின பரிபூரணத்துவம், பூலோகம் முழுவதும் காணக்கூடிய சர்வ வியாபகத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஏசாயா 11;: 2,மல் 2: 15, யோவான் 3: 34,அப் 10: 38,
-  ஏழு நட்சத்திரங்கள் பூரணமான ஊழியர்கள்-  தானி 12: 3, எபேசி 4: 11, 12

2. குறை : இவர்களுடைய தற்போதைய செத்த நிலமையும் கிரியைகளின் நிறைவின்மையும் குறையாக காணப்படுவதை ஒவ்வொன்றாகவே எடுத்துக்காட்டுகிறார் .(1- 3) 
அ) செத்த நிலை -  எபே 2: 1, யூதா 12
உள்ளான வாழ்க்கை மரித்த நிலை-  மத் 23:27, யோவான் 11: 25
ஆ) கிரியைகளின் குறைவு - சங் 62: 9, தானி 5: 27, 2 கொரி 9: 6, தீத்து 1: 5, 

3. எச்சரிப்பு : கர்த்தரிடம் கேட்டுப் பெற்றுக்கொண்ட கிருபை ஆசீர்வாதங்களைக் குறித்து ஜாக்கிரதையாகவும், அவற்றை இழந்துவிடாமல் நினைவுகூரவும் எச்சரிப்பு விடுக்கிறார். (3)
-  பெற்றுக்கொண்டதை கைக்கொள்
-  மனந்திரும்பு
-  விழித்திரு 
எரே 48: 10, நீதி 6: 6,9, 10. மத் 25: 5, 26: 41, எபே 5: 14

4. பாராட்டு : ஆனாலும் இவர்களில் வஸ்திரம் அசுசிப்படாமல் ஜாக்கிரதையாக மாறுபாடுள்ள சந்ததியினின்று தங்களை காத்துக்கொள்கிறவர்கள் உண்டென்று பாராட்டுகிறார். (4)
-  உண்மையுள்ளவர்கள் சிலராயினும் கர்;த்தர் பாராட்டுகிறார்.
யூதா 23, அப் 2: 40, 2 தீமொத் 2: 22

5. வாக்கதத்தத்தம் : ஜெயங்கொள்ளுகிறவனுக்கு ஆண்டவர் பரலோக ராஜ்ஜியத்தில் அளிக்கப்போகும் பரிசு, மேன்னை, தகுதி இவைகளாக இருக்கும் என்று வாக்கதத்தத்தம் செய்கிறார். (5)
-  வெண்வஸ்திரம் - வெளி 19: 8
-  ஜீவ புத்தகத்தில் பெயர் – யாத் 32: 32, தானி 12: 1, லூக்கா 10: 20, பிலி 4: 3, எபி 12: 23
-  பிதா, தூதர்கள்முன் சாட்சி – மத் 10: 32,33, லூக்கா 12: 8

பிலதெல்பியா சபைக்கு செய்தி.

குறையே சொல்லப்படாத அற்புத சாட்சிபெற்றது சபை பிலதெல்பியா சபை. ஆகவேதான் இந்த நாட்களிலும் அனேகர் தங்கள் சபைகளுக்கு பிலதெல்பியா சபை என்று பெயர் வைததுக்கொண்டிருப்பதை காணமுடிகிறது.

1. வாழ்த்து :பரிசுத்தமுள்ளவர், சத்தியமுள்ளவர், தாவீதின் திறவுகோலையுடையவர் பிலதெல்பியா சபையை வாழ்த்துகிறார். (7) 
-  பரிசுத்தமுள்ளஇ அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளும் சபைக்கு இவ்விதமாக வெளிப்படுகிறார். அப் 3: 14, 1 யோவான் 5: 20, 
-  திறக்கவும் பூட்டவும் அதிகாரமுள்ளவர். இதற்கு பல விளக்கங்கள் உண்டு. தமது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதத்தை திறந்து கொடுக்கவும், சாபத்தை மூடிப்போடவும் அதிகாரம உள்ளவர் இவர். மேலும், தாவீதின் நகரமாகிய புதிய எருசலேமில் ஒருவரை அனுமதிக்கவும், அனுமதி மறுக்கவும இவர் ஒருவருக்கே அதிகாரம் உண்டு. யோபு 12: 14, ஏசாயா 1: 18, 9: 7, 22: 22, மத் 16: 19.

2. புகழ்ச்சி : இச்சபைக்கு அவர்கள் கிரியைகளுக்கேற்ற பலன் தருவேன் என்று புகழ்கிறார்.; (8- 10) 
கொஞ்ச பெலனிருந்தும் வசனத்தை உறுதியாய் கைக்கொள்கிறாய்என்று புகழ்கிறார். மத் 17: 20, 25: 21, நியாயாதி 6: 14- 19.
-  ஆகவே, திறந்த வாசலை பெற்றாய் 1 கொரி 16: 9
-  சாத்தான் உனக்கு பணிவான் ஏசாயா 45: 14, 60: 14, 2பேதுரு 2: 9.
-  பொறுமையின் வசனத்தை காத்துக்கொண்டாய் பிர 7: 8, லூக்கா 8: 15, 21: 19

3. எச்சரிப்பு : கிரீடத்தைப் பற்றிக்கொண்டிரு என்று எச்சரிப்பின் சத்தமாக புத்தி சொல்கிறார்.(9- 11 ) 
-  சோதனை வரும், சாத்தான் வருவான் 1 தெச 1: 10, 3: 2- 4
-  கிரீடத்தை விடாதே- நான் தப்புவிப்பேன் யோவான் 16: 32, 33.

4. வாக்குத்தத்தம் : குறைகள் சொல்லப்படாவிட்டாலும், ஓட்டத்தை பொறுமையோடீ ஓடி வெற்றியாக முடித்தால் தான் மேன்மை கிடைக்கும். எனவே, ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் சில மேன்மைகளை ஆண்டவர் வாக்குக் கொடுக்கிறார்.( 12) 
-  ஆலயத்தின் தூணாக்குவேன் 1 இராஜா 7: 21, கலா 2: 9, 1 தீமொத் 3: 15
இங்கு சபைக்குத்தூணாக இருந்தால்தான் தேவராஜ்ஜியத்தில் தூணாயிருக்க முடியும்
-  புதிய நாமங்கள் கொடுக்கப்படும். எபே 2: 20, 21. எபி 12: 22, 23.

லவோதிக்கேயா சபைக்கு செய்தி.

புகழ்ச்சி, பாராட்டு பெறாத சபையாக காணப்படுவது வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், ஆண்டவர் தகுந்த எச்சரிப்புகளோடு வாக்கத்தத்தம் கொடுக்க தவறவில்லை. ஒருவரும் கெட்டுப்போவது கர்த்தருக்க சித்தமில்லை என்பதையே இது காட்டுகிறது. லவோதிக்கியா சபை இந்த கடைசி நூற்றாண்டுகளின் சபை நிலமையை காண்பிப்பதாகவும் ஒரு கருத்து உண்டு.

1. வாழ்த்து : அனலுமின்றி குளிருமின்றி இரண்டும் கெட்ட உறுதியற்ற நிலையில் காணப்படும் லவோதிக்கியா சபைக்கு உறுதியான ‘ஆமென்’ என்பவராக இயேசு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தி வாழ்த்துகிறார். (14) 2 கொரி 1: 19, 20
-  மாயையான பொய்சாட்சியுடைய சபைக்கு உண்மையான மெய்சாட்சியுடையவர் வாழ்த்துகிறார். யோவான் 12: 49,  50
-  சர்வ சிருஷ்டியானவர் தகப்பனைபோல நேசித்து வாழ்த்துகிறார். கொலோ 1: 15, 16,  சங் 103: 13

2. குறை : உலகம்,  தேவ ராஜ்ஜியம் இவற்றினிடையில் இரண்டும் கெட்ட மாயையான நிலமையில் இருப்பதே இந்த சபையின் முக்கிய குறை என்று ஆவியானவர் தெரிவிக்கிறார்.(15- 17) மத்தேயு 6: 24
சிமிர்னா,  பிலதெல்பியா சபைகளுக்கு எதிர்மாறான நிலையில லவோதிக்கியா சபையானது, உலக செல்வத்தில் திரட்சியும்,  ஆவிக்குரிய ஜீவியத்தில் தரித்திரமுமாக காணப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஓசியா 12: 8
இப்படிப்பட்ட நிலமையிலுள்ள அனேகசபைகளுக்கு நமது ஊக்கமான ஜெபம் தேவை.

3. எச்சரிப்பு :லவோதிக்கியா சபை தனது பரிதாபகரமான நிலமையிலிருந்து மீண்டு வரவேணடுமானால் தன்னிடமிருந்து     
பெற்றுக்கொள்ள வேண்டியவற்றை உடனடியாக பெற்றுக்கொள்ளும்படி எச்சரிப்பு விடுக்கிறார். (18,  19) ஏசாயா 55: 1
அ) பொன்னைப்போன்ற விசுவாசம். 1 பேதுரு 1: 7
ஆ) வெண்வஸ்திரமாகிய பரிசுத்தம்.  ஏசாயா 59: 17,  மாற்கு 9: 3
இ) கண்களுக்கு பார்வை. (சரியான சுவிசேஷம்,  வேத வசனம்,  பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனை) எபேசி 3: 8, 11.

4. வாக்குத்தத்தம் : மிகவும் கடுமையான வார்த்தைகளால் லவோதிக்கியா சபையை கண்டித்திருந்தாலும் கடைசியாக எல்லா சபைகளுக்கும் அளித்த அற்புத வாக்குத்தத்தஙகளை அளிக்கிறார். ஆண்டவருடைய நேசம் அவருடைய கண்டிப்பிலும் இந்த சபை மனந்திரும்பி வரவேணடும் என்று எச்சரிப்பு கொடுத்ததிலும் கடைசியாக வாக்குத்தத்தம் அளித்ததிலும் தெரிகிறது. ( 20- 22)
-  வாசலைத்திறந்தால் ஐக்கியம் கொள்வேன்.  உன் 5: 2,  யோவான் 14: 23
-  ஜெயங்கொள்ளுகிறவனுக்கு சிங்காசனம்.   தானி 7: 9,  வெளி 20: 4,  மத் 19: 28
                           We can tabulate the;se elements in the messages to each Church verse by verse :

ஓவ்வொரு சபைக்கும் கொடுக்கப்பட்டுள்;ள செய்திகளில் காணப்படும் முக்கியக் கூறுகளை பட்டியலிட்டுப் பார்க்கலாம்:
 

சபை  வாழ்த்து   புகழ்ச்சி   குறை   பாராட்டு   எச்சரிப்பு   வாக்குத்தத்தம்
1.எபேசு வெளி 2:1 வெளி 2:2- 3 வெளி 2:4 வெளி 2:6 வெளி 2:5 வெளி 2:7
 
2.சிமிர்னா வெளி 2:8 வெளி 2:9 வெளி 2:9   வெளி 2:10 வெளி 2:10, 11
3.பெர்கமு வெளி 2:12 வெளி 2:13 வெளி 2:14,15   வெளி 2:16 வெளி 2:17
4.    தியத்தீரா வெளி 2:18 வெளி 2:19 வெளி 2:20- 23   வெளி 
2: 21- 25
வெளி
 2:24- 29
5.    சர்தை வெளி 3:1   வெளி
 3:2- 3
வெளி 3:4 வெளி 3: 3 வெளி 3:4- 5
6. பிலதெல்பியா வெளி 3:7 வெளி 3:8     வெளி
 3: 9- 11    
வெளி 
3:9- 12
7. வோதிக்கியா         வெளி 3:14   வெளி 2:17   வெளி 3:19 வெளி 
3:20- 22
8.    எபேசு வெளி  2:1 வெளி  2:2- 3 வெளி  2:4 வெளி  2:6 வெளி  2:1 வெளி  2:1
9.    சிமிர்னா வெளி  2:8 வெளி  2:9   வெளி  2:10 வெளி  2:1 வெளி  2:1
10.    பெர்கமு வெளி  2:12 வெளி  2:13 வெளி  2:14, 15   வெளி  2:1 வெளி  2:1
11.    தியத்தீரா வெளி  2:18 வெளி  2:19 வெளி  2:20-23   வெளி  2:1 வெளி  2:1
12.    சர்தை வெளி  3:1 வெளி  3:4 வெளி 
 3:2- 3
  வெளி  2:1 வெளி  2:1
13. பிலதெல்பியா வெளி  3:7 வெளி  3:8     வெளி  2:1 வெளி  2:1
14.லவோதிக்கியா வெளி  3:14   வெளி  3:17 வெளி  3:18 வெளி  2:1 வெளி  2:1

Author: Rev. Dr. R. Samuel 


வெளிப்படுத்தின விசேஷம் 3- விளக்கவுரை

1-6 சர்தை சபை 7-13 பிலதெல்பியா சபை 14-22 லவோதிக்கேயா சபை

சர்தை சபை

சர்தைஎன்பதற்கு 'புதுப்பித்தல்”, “தப்பித்தவன்' வெளியே வந்து விட்டவன்' என்று அர்த்தமுண்டு. சபை இருந்த காலம் திருச்சபையின் சரித்திரத்தில் இருண்டகாலம்.சபையின் பரிசுத்த ஆராதனை முறைகளுக்குள், விக்கிரக வணக்கம், மனந்திரும்பாமல் சரீரத்தை ஒடுக்கி, வருத்தி மோட்சம் போக முயற்சி, சாம்பல் பூசிக்கொள்வது,புனித தலங்களுக்கு நடந்தே போதல், இன்னும் பல புறமதச் சடங்காச்சாரங்களைக் கடைப்பிடித்தல் போன்ற தவறான இரியைகள் உட்புகுந்து ஆவியோடும், உண்மையோடுமிருந்த ஆராதனையைச் சாரமிழக்கச் செய்துவிட்டன, இதனால் சபை சாவுக்கேதுவாகி செத்த சபையாயிற்று.

சர்தை பட்டணம் உலகிலேயே புகழ்பெற்ற நகரங்களுள் ஒன்று, இது ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டிருந்தது, ஒருவரும் எளிதில் இதற்குள் வர முடியாது. ஆகவே வசிப்பதற்கு பாதுகாப்பான பட்டணம். மலையிலிருந்ததால் மிக அருமையான காலநிலை கொண்டது, இதில் ஓடிய ஆற்றில் தங்கம் கிடைத்தது,ஆகவே மிகச் செழிப்பான பட்டணம். இங்குதான் முதன்முதலில் நாணயம் செய்யப்பட்டது. ஜமுக்காளத் தொழிலுக்குப் பேர்போன இடம். அங்குள்ள அரண்மனைகள் கலைநயம் மிக்கவை.

ஆனால் சர்தைசபை ஒரு செத்த சபை, செத்த சபையை விட மோசமான சபை இருக்கவே முடியாது! சபை யாரால் ஆரம்பிக்கப்பட்டதென்று தெரியவில்லை. அதிக ஆண்டுகளாய் இருந்த சபை. இந்தப் பட்டணம் ஒரு பூமி அதிர்ச்சியினால் முற்றிலும் அழிந்து போனது.

தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சர்தை சபையின் தூதனுக்கு சொன்னது: நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தாலும் செத்தவனாய் இருக்கிறாய். 

(வ 1-.2: சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய், நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை...

சபை செத்ததாயிருந்தாலும் எல்லாம்செத்துவிடவில்லை. செத்துக்கொண்டிருந்தவைகளும் இருந்தன. கொஞ்சம் உயிர் இருந்தது. அவைகளுக்கு உயிரூட்டி இடப்படுத்தும்படிக்கு தேவன் சபைக்கு ஆலோசனை சொல்லுகிறார். ஏனென்றால் சபையின் கிரியைகள் தேவனுக்கு முன்பாக நிறைவுள்ளவைகளாகக் காணப்படவில்லை.அதாவது சாத்தானுக்கு எதிராகப் போராட மனமுமில்லை, பெலனுமில்லை! அதன் கிரியைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் (01) இருந்த நோயாளி போலிருந்தது. சகோதரனே! உம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் இப்படித்தான் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கதிறதோ? மனந்திரும்பி பாவத்தை விட்டுவிடும், பெலனடைவீர்.

பாவம் ஒருவனது மன உறுதியைக் கொல்லுகிறது. ஒருவன் பாவத்தின் அழைப்பிற்கு தொடர்ந்து இணங்கிக் கொண்டேயிருந்தால், கொஞ்ச நாளில் அவனால் வேறெந்த அழைப்பையும் ஏற்க முடியாது. ஏதோ ஒரு கெட்ட பழக்கத்தில் சிக்கி விடுபட முடியாமல் சீரழிந்து போகிறான்.

பாவம் ஒருவனது உணர்ச்சிகளைக் கொல்லுகிறது . முதல் முறை பாவம் செய்யும்போது நடுங்கிக்கொண்டே செய்கிறான். இருதயம் படபடக்கிறது, பாவம் செய்யச்செய்ய எல்லா பயமும் போய் விடுகிறது. காரணம்: பாவம் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்டது.

பாவம் அழகியவைகளை அவலட்க்ஷணமாக்கிவிடுகிறது, தாழ்மையுள்ளவனை பெருமைகொள்ளச்செய்கிறது. அன்பைக் கொன்று இச்சையாக்கி விடுகிறது.

வ 3: விழித்துக்கொண்டு நித்திரை மயக்கமான ஆவியை உடைய சபை; சர்தை சபை தன் பழையநிலைக்குத் திரும்ப வேண்டுமென்றால், ஒவ்வொரு சபை உறுப்பினனும் விழித்தெழ வேண்டும். மாற்கு 13:36, 37ல் இயேசு தம்முடைய சீஷர்களைப் பார்த்து சொன்னதென்னவென்றால், “நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து,உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்

எதிலெல்லாம் விழித்திருக்க வேண்டும்?
1. விழித்திருத்தல் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் தன்மை. ஒருவன் விழித்திருந்தால் திருடன் தன் வீட்டைக் கன்னமிடவொட்டான். கிறிஸ்தவன் விழித்திருந்தால் தன்னிடத்திலுள்ள ஆவியின் கனிகளை சாத்தான் திருடவிட மாட்டான்.

2. 1பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான். ஒரு கிறிஸ்தவனை தேவனை விட்டுப் பிரிக்க சாத்தான் ஒரு வினாடிகூட இடைவெளியில்லாமல் தந்திரமாய் போராடுவான். எனவே நாம் எப்பொழுதும் சர்வாயுதவர்க்கத்தை தரித்திருக்க வேண்டும்.

3. சோதனைக்குட்படாதபடி விழித்திருக்க வேண்டும்,மத், 26:41ல் இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்த கட்டளை. “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்பதே.

4, கிறிஸ்துவின் வருகையில் அவரை சந்தித்து அவரோடு போக விழித்திருக்க வேண்டும். (மத். 24:42-43: மாற் 13:37) பவுலின் ஆலோசனை என்னவென்றால், 1தெச. 5:6 ஆகையால் மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல் விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். வருகை எப்பொழுது இருக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆகவே ஓவ்வொரு மனிதனும் தான் வாழும் இந்நாளே கடைசி நாள் என்பதுபோல் வாழ வேண்டும்.

5. கள்ளப்போதனைகளையும், கள்ளப்போதகர்களையும் இனம்கண்டுகொள்ள விழித்திருக்க வேண்டும். பவுல் எபேசு மூப்பர்களுக்குக் கடைசியாக சொன்னதென்னவென்றால் 4 நான் போன பின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும், உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடம் இழுத்தக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன் ஆகையால் நான் அவனவனனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டு வந்ததை நினைத்து விழித்திருங்கள் என்றான். அப், 20: 29-31

வ3ல் உயிர்த்தெழுத்த இயேசு மூன்று கட்டளைகளைக் கொடுக்கிறார்.

1. கேட்டுப்பெற்றுக்கொண்டதை (ரட்சிப்பின் சுவிசேஷத்தை) நினைவுகூர்

2. கைக்கொள்

3. மனந்திரும்பு இவைகளை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். விழித்திராவிட்டால் அவருடைய வருகையில் கைவிடப்படுவோம்.

வ 4:, ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு (சர்தையின் தூதனுக்குச் சொல்லப்படுகிறது) அவர்கள் பாத்திரவான்௧ளானபடியால் வெண் வஸ்திரம் தரித்து என்னோடே கூட நடப்பார்கள்,

எல்லா சபைகளிலும் கிறிஸ்துவுக்கு உண்மையானவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமும் தாழ்மையுமாய் ஜீவிப்பார்கள். பதவிக்கோ, புகழுக்கோ ஆசைப்படாதவர்கள், சபையினரின் கண்களில் இவர்கள் பட்டேயிருக்கமாட்டார்கள். ஆனால் தேவன் இவர்களை அறிவார். வருகையில் மத்திய ஆகாயத்தில் இயேசுவோடு இருப்பார்கள். இவர்கள் பாக்கியவான்கள். ஜெயம் கொள்ளுகிறவர்கள்

வ 5: ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல் என் பிதா முன்பாகவும், அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன் ,

ஒருவரை வரவேற்க நாம் மாலை போடுகிறோம். ஒருவரை பொன்னாடை போர்த்தி கனம் பண்ணுகிறோம். இதேவிதமாக பரலோகமும் ஜெயங்கொள்ளுகிறவனை வெண்வஸ்திரம் தரிப்பித்து வரவேற்று கனம்பண்ணுகிறது, ஒரு பெரிய கூட்டத்தில் ஒருவராக. உட்கார்ந்திருக்கிறீர்கள், பேச்சாளர் தனது உரையை ஆரம்பிக்கும்முன், எனது நண்பர் என்று உங்கள் பெயரைச்சொல்லி அவர் வந்திருப்பது எனக்கு சந்தோஷம் என்று சொன்னால் எவ்வளவு பெருமைப்படுவீர்கள்! அப்படியானால் இயேசு உங்கள் பெயரை பிதா முன்னும், தூதர் கூட்டத்திற்கு முன்னும் அறிக்கை செய்வது எவ்வளவு பெரிய சந்தோஷமும், மகிமையாயுமிருக்கும்! அதுவுமன்றி பரலோகத்தின் நிரந்தரவாசி என்னும் கவுரவமும் கொடுக்கப்படுகிறது. சகோதரனே! உமக்கு இப்படிப்பட்ட ஒரு வரவேற்பும்,மடிமையையும் பெற வேண்டுமென்கிற வாஞ்சை இருக்கிறதல்லவா? அப்படியானால் ரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஜீவியம் செய்து உலகத்தையும், சாத்தானையும் ஜெயித்து விடும். உமக்கும் அதே வரவேற்பும், மகிமையும் கிடைக்கும்,காதுள்ளவன் கேட்கக்கடவன்: நம்பினால் மகிமை;நம்பாவிட்டால் மகிமையை இழந்து போவீர்.

பிலதெல்பியா சபை

கிறிஸ்து நேசித்த சபை, பிலதெல்பியா என்றால் “சகோதர அன்பு என்று அர்த்தம், கிறிஸ்து பிறப்பதற்கு 189 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கிரேக்க நாகரீகத்தின் மையத்தில் கட்டப்பட்ட நகரம், சபை மிகவும் வல்லமையுள்ள சபையாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பிலதெல்பியா 14ம் நூற்றாண்டில் துருக்கியரால் பிடிபடும் வரைக்கும் ஒரு இறிஸ்தவ நகரமாகவே இருந்தது. கிபி. 1750 முதல் துன்பக் காலம் வரை நிலைத்திருந்த உயிர் துடிப்புள்ள சபை. இந்த சபையின் காலத்தில்தான் தேவன். ஐரோப்பாவிலும், பிரிட்டிஷ் தீவுகளிலும், அமெரிக்காவிலும் பெரிய எழுப்புதலை உண்டாக்கினார். அதன் விளைவாகப் பல மிஷனரி இயக்கங்கள் தோன்றின, 1793ல் வில்லியம் கேரி மிஷனரியாக இந்தியாவுக்கு வந்தார், அதோனிராம் ஜட்சன்,டேவிட் லிவிங்ஸ்டன், யோனத்தான் கோஃபோர்த் போன்ற ஆயிரக்கணக்கான மிஷனரிகள் எழும்பி ஆப்பிரிக்கா, சீனா,ஜப்பான், கொரியா, இந்தியா, கடல் தீவுகள், தென்அமெரிக்கா போன்ற தேசங்களில் பெரிய எழுப்புதலுக்குக் காரணமானார்கள், மிஷனரிகள் சென்ற இடங்களிலெல்லாம் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்துப் பிரசங்கித்ததும் எழுப்புதலுக்கு ஒரு காரணமாக அமைந்தது..

வ 7: இயேசுவைக் குறித்து பிலதெல்பியா சபைதூதனுக்கு 4 முக்கிய குணாதிசயங்களைச் சொல்லி அறிமுகப்படுத்துகிறார்.

1. பரிசுத்தமுள்ளவர் ஏசா. 6;3ல் சேராபீன்கள், “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்? என்றனர். பிதாவின் தன்மை பரிசுத்தம். இயேசு பிலிப்புவிடம் என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்' என்றார். யோ8:46ல் இயேசு பரிசேயர், யூதரை நோக்கி “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? என்றார். அவருடைய ரத்தம் பரிசுத்தமான ரத்தமானதினாலேதான் நம் பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் வல்லமையுள்ளதாயிருக்கிறது.

2. சத்தியமுள்ளவர் தானே வழியும், சத்தியமும், ஜீவனுமானவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். வெளி, 19:11ல் வெள்ளைக் குதிரையின்மேல் ஏறியிருந்தவர் “உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்”” என்றிருக்கிறது. அவர் பரலோகம் உண்டு என்றிருக்கிறார். ஆகையால் பரலோகம் உண்மை. ரட்சிக்கப்பட்டவர்கள் அதில் பிரவேசிப்பார்கள் என்றார்; ஆகவே விசுவாசிகள் அதில் பிரவேசிப்பது நிச்சயம்.

3. தாவீதின் திறவுகோலை உடையவர் 2 சாமு, 7:16ல் “உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்” லூக்கா 1:32ல் அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்” என்று மரியாளுக்குச் சொல்லப்பட்டது, அந்த சிங்காசனத்தில் அமர்ந்து ஆட்சிசெய்யும்அதிகாரமே “தாவீதின் திறவுகோல்”. இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்ததினால் தாவீதின் திறவுகோல்' இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டது. திறவுகோல் அதிகாரத்திற்கும் வல்லமைக்கும் ஒரு அடையாளம்,

4,ஒருவரும்பூட்டக்கூடாதபடிக்கு திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவருமாயிருக்கிறவர். இது முழு உலகத்திலும் தேவ சித்தமே நடக்கிறது; தேவனுடைய அனுமதியில்லாமல், பூமியிலே ஒன்றுமே நடக்க முடியாது, ஒரு அடைக்கலான் குருவிகூட தேவனுடைய சித்தமில்லாமல் தரையிலே விழுவதில்லை. சுவிசேஷம் சொல்வதற்கு, ஒரு தேசத்தில்

அவர் வாசலைத் இறந்தால் எந்த சர்வாதகாரியாலும் சுவிசேஷத்தைத் தடை செய்ய முடியாது, இயேசு தடை செய்வாரென்றால் ஒருவராலும் அந்தத் தடையை உடைத்து வாசலைத் திறக்க முடியாது!

அவர் பிலதெல்பியா சபைக்கு சொல்வதென்னவென்றால் 
வ 8: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ எனக்காகச் செய்தவைகளையும், செய்து கொண்டிருப்பதையும், செய்யப் போவதையும் அறிந்திருக்கிறேன். சபை செய்தது என்ன?

ஒருசில ஆத்துமாக்களையே கொண்ட சபையாயிருந்தும், உனக்குக்கொஞ்ச பெலனிருந்தும், சுவிசேஷத்திற்கு எதிர்ப்பும்,தடைகளும் வந்தபோதும் தேவனை மறுதலியாமல் மரிப்பதற்கும் ஆயத்தமாயிருந்ததைப் புகழ்ந்து சொல்லுகிறார். இதற்குப் பிரதிபலனாக ஒருவனும் பூட்டக்கூடாத திறந்த வாசலை உனக்குமுன் வைக்கிறேன் என்றார்

வ 9: இதோ யூதரல்லாஇருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்து கொள்ளும்படி செய்வேன்.

சாத்தானை வணங்கிக்கொண்டே யெகோவாவை வணங்குகிறவர்கள் போல் வேஷம் போடும் போலி யூதர்களை உன்னிடத்தில் அனுப்புவேன், ஒரு நாள் நானே மெய்யான தேவனென்றும், நான் உன்னில் அன்பாயிருக்கிறதையும், தாங்கள் சபையைத் துன்பப்படுத்தினபடியால் தேவனுக்கு சத்துருக்களானதையும் அறிந்து கொள்வார்கள். இயேசு இதை அவர்களுக்கு உணர்த்துவார்,

வ 10: என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை (2 பேதுரு 3:9); தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும்மனந்திரும்ப வேண்டுமென்று நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்துக்குத் தப்பும்படி நானும் உன்னைக்காப்பேன்.

சோதனைக்காலம் என்பது ஏழு வருட துன்பக்காலம் அல்லது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலத்தைக் குறிக்கும்,சபையானது துன்பக்காலத்திற்கு முன்னரே ரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படும். இதுவே தேவன் தப்புவிப்பேன்,உன்னைக்காப்பேன் என்று சொன்னது.

வ 11: இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு, நீ வசனத்தைக்காத்து நடப்பதால் உனக்கென்று ஒரு கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. கிரீடம் சூடுதல் வெற்றிபெற்றதற்குக் இடைக்கும் மேன்மை, நீ தேவனுடைய வசனத்தின்படி பரிசுத்தமாய் வாழாமல், உன் மனசும், மாமிசமும் விரும்பியபடி வாழ்ந்தால், உனக்கென்று வைக்கப்பட்டுள்ள கிரீடத்தை இழந்து போவாய், மேன்மையை இழந்து போவாய்,சவுலின் சந்ததியல்ல, அது இன்னொருவனுக்குக் கொடுக்கப்படும், இந்த எச்சரிப்பும், ஆலோசனையும், இதை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது 

வ 12: ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும், என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும்,என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

ஏழு சபைகளிலும் சிறந்த சபை, தேவன் ஒரு குறையும் காணாத சபை; கடிந்து கொள்ளப்படாத சபை; தேவன் இந்த சபையை மிகவும் நேசித்திருக்க வேண்டும், கலியாணமாகி 25 சில வருடங்களுக்குப்பின் ஒரு ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பார்கள்? தாத்தா, அப்பா பெயர்களையெல்லாம் அதற்கு சூடுவார்கள். அப்படியே தேவனும், குறைகளுள்ள சபைகளின் மத்தியில் குறைவற்ற பிலதெல்பியா சபையை தேசித்து அதற்கு தேவனுடைய நாமத்தையும், தேவனால் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன் என்றார். ஜெயங்கொள்ளுகிறவன் தேவனுக்கு அவ்வளவு பிரியம்! (நீங்கள் எப்படி? தேவனுக்குப் பிரியமானவர்களா?)
 
தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன். புதிய ௭ருசலேமில், யோவான், தேவாலயத்தைக் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியுமானவரே அதற்கு ஆலயம் (வெளி. 21:22) ஆலயமே காணப்படவில்லையென்றால் தூண் எப்படி காணப்படும்? காண முடியாது, அப்படியானால் ஜெயங்கொள்ளுகிறவனை தூண் என்றதின் அர்த்தமென்ன? சாலமோன் தான் கட்டின தேவாலயத்திற்கு மகிமையாக, யாசீன், போவாஸ் எனும் தூண்களை நிறுத்தினான். அது போலவே, பிலதெல்பியா சபையில் ஜெயங்கொள்ளுகிறவர்களை தேவனுக்கு மகிமையாக நிறுத்துவார். தூண் பலமானது. தாங்கும் வல்லமையுள்ளது. கொஞ்சம்யோசித்துப் பாருங்கள்: மண்ணினால் உருவான நம்மை தேவனுக்கு மகிமையான வல்லமையுள்ள தூணாக மாற்றுவார்! அற்பமான ஆரம்பம்; முடிவோ மகிமை!

லவோதிக்கேயா சபை குளிரும் அனலுமற்ற சபை

லவோதிக்கேயா சபை ஏழு சபைகளில் கடைசி சபை,இக்காலத்து கிறிஸ்தவ சபைகளைப் போன்ற சபை, ஆகவே அதற்கு சொல்லப்படும் ஆலோசனைகள் நமக்கு மிகவும் தேவையானவைகள். இந்த சபைக்கு தேவன் தம்மை எப்படி அறிமுகம் செய்கிறாரென்றால் உண்மையும், சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் என்று தம்மை அறிமுகப்படுத்துகிறார். கிறிஸ்துவுக்குள் சகலமும் பரிபூரணமாயிருக்கிறபடியால், அவர் ஆமென் எனப்படுகிறார் (2 கொரி. 1:20). அவர் தமக்கு வந்த சகல பரீட்சைகளிலும் உண்மையுள்ளவராய் விளங்கினபடியால் உண்மையுள்ள சாட்சியாகவும், அவர் எதை அறிவிக்க வேண்டுமென்று பிதாவானவர் விரும்பினாரே அதையே அறிவித்தபடியால் சத்தியமுள்ள சாட்சியாகவும் இருக்கிறார். எல்லாம் அவர் மூலமாயும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டபடியால் அவர் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறார். அவர் எல்லா சிருஷ்டிகளுக்கும் முன்பே இருந்தவராகையால் அவரே சிருஷ்டி நாயகர். யோவான் 1:3 ல் , "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவரலேயல்லாமல் உண்டாகவில்லை" என்றிருக்கிறது.

வ 15-17: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல:; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும்,பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும்,குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும்,திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால் என்னிடத்தில் வாங்கிக்கொள்.

வெதுவெதுப்பு லவோதிக்கேயா பட்டணத்தோடு இணைந்தஒன்று.லவோதிக்கேயாவுக்குத் தண்ணீர் வரவேண்டுமென்றால் ஒன்று 6கிமீ தூரத்திலுள்ள ஹீராப்போலியிலுள்ள வெந்நீரூற்றுகளிலிருத்து வாய்க்கால் வழியாக வரவேண்டும்.

6 கிமீ வருவதற்குள் வெந்நீர் வெதுவெதுப்பாகிவிடும். அல்லது 15 கிமீ தூரத்திலுள்ள கொலோசே பட்டணத்திலுள்ள குளிர்ந்த நீர் வர வேண்டும். 15 கிமீ வருவதற்குள் அது சூடாகி வெதுவெதுப்பாகிவிடும். லவோதிக்கேயாவின் ஆவிக்குரிய வாழ்க்கையும் இதே மாதிரி அனலுமின்றி குளிருமின்றி ஆகிவிடுகிறது. லவோதிக்கேயாவின் ஆவிக்குரிய இந்த நிலைக்கு மூன்று காரணங்கள் கூறலாம்,

1. சுய திருப்தி 2. உலக ஐசுவரியங்கள் 3. தன் ஆவிக்குரிய நிலையைக்குறித்த கவலையற்ற நிர்விசாரம். (நம்மிடமும் இவை காணப்படுகிறதல்லவா? நம்மை நாமே ஆராய்ந்து சீர்ப்படுவோம்) வாந்தி பண்ணிப் போடுவேன். வாந்தி பண்ணுவது நோய்க்கு அறிகுறி, தேவனுக்கும், சபைக்கும் ஆரோக்கியமில்லாத உறவை இது காட்டுகிறது. சாப்பிட்டது வெளியே வந்துவிடுவது போல தேவனுக்கென்று சபை செய்வதையெல்லாம் தேவன் ஏற்றுக் கொள்ளாமல் புறம்பாக்கிப் போடுவார்.

வ 18: தேவன் அந்த சபைமேல் அன்புகூர்ந்து அது பழைய நிலையடைவதற்கான ஆலோசனையைக் கொடுக்கிறார்; 1. புடமிட்ட பொன்னை என்னிடத்தில் வாங்கி ஐசுவரியவானாகு, புடமிட்ட பொன் விசுவாசத்தைக்குறிக்கும், விசுவாசத்தில் ஐசுவரியவானாகு. விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிப்பவரும் தேவனே. 2. வெண் வஸ்திரங்களை வாங்கக்கொள். நம்முடைய நீதி அழுக்கான கந்தை, வெண் வஸ்திரமோ பரிசுத்தத்தையும், தேவநீதியையும்குறிக்கும். 3, நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்கு கலிக்கம் போட வேண்டும். அப்பொழுதுதான் உன் நிர்வாணமும், அவலட்சணமும் உனக்குத் தெரியும் வசனத்தின் வெளிச்சத்தில் உன்னை ஆராய்ந்து பார்த்து மனந்திரும்பு ,

வ 19: நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு ,

தகப்பன் சிட்சியாத புத்தரனுண்டோ? (நீதி.3:12) தேவன் நமது பிதா, ஆகையால் அன்பாய் சிட்சித்து நம்மைத் தன்னோடு சேர்த்துக்கொள்ள விரும்புகிறார்(எபி. 12:6)உணர்ந்து மனந்திரும்பினால் மேன்மையுண்டு, சிட்சையில் தான் தேவனுடைய அன்பை முழுமையாய் உணர முடியும்!

வ 20-21: இதோ வாசற்படியிலே நின்று கதவைத்தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக் கேட்டுக் கதவைத்திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படி அருள்செய்வேன்

இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். தேவன் எப்படி தட்டுகிறார்?

தேவன் பல வழிகளில் தட்டுகிறார், தேவன் தட்டும் சில வழிகளைப் பார்க்கலாம்,

1. தம்முடைய வார்த்தையின் மூலமாகத் தட்டுகிறார். யோவா. 5:24 என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. துண்டுப்பிரதிகளிலுள்ள வசனங்கள் அநேகரை ரட்சித்திருக்கிறது. ஒரு போதகரும் அவரது மகனும், ஓவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலையிலும் துண்டுப்பிரதகளை பலருக்கும் விநியோகிப்பார்கள், ஒருநாள் எல்லாப்பிரதிகளையும் கொடுத்து விட்டார்கள். ஒன்றே ஒன்று மட்டும் மீதியிருந்தது. திடீரென மழை கொட்டியது, வீட்டிற்குப் போகலாம் என்று போதகர் கூறினார். மகனோ “அப்பா இந்த ஒன்றையும் கொடுத்து விட்டுப் போகலாம்!” என்றான். தெருவில் ஆள்நடமாட்டம் நின்று போயிற்று, ஒரு வீட்டின் கதவை வெகுநேரம் தட்டிக்கொண்டே இருந்தான். கடைசியில் ஒரு பாட்டியம்மா கதவைத் திறந்தார்கள், பையன் “இயேசு உங்களை நேசிக்கிறார்?” என்று சொல்லி பிரதியைக் கொடுத்து விட்டு வீட்டுக்குப் போய் விட்டான். அடுத்த வாரம் ஆலயத்தில் ஒரு பாட்டியம்மா சாட்சி சொன்னார்கள்; “நான் தற்கொலை செய்ய இருந்தேன், ஒரு சிறுவன் ஒரு துண்டு பிரதியை என்னிடம் கொடுத்து இயேசு உங்களை நேசிக்கிறார்!” என்று சொன்னான். அந்தப்பிரதியில் யோ.3:16 எழுதி இருந்தது. “அந்த அன்பு என்னைத் தொட்டது. தற்கொலை எண்ணம் நீங்கிற்று?” என்றார்கள்.

வசனத்தின் மூலம் தட்டினார்.

மனிதர்கள் மூலம் தட்டுகிறார். ஒரு சிறு பையன் மூலமாக ஒரு பாட்டியம்மாவின் இதயத்தைத் தட்டினார். ஒரு லேகியோன்மூலம் தெக்கப்போலி பட்டணத்தாரைத் தட்டினார். பவுலின் மூலம் ஒரு ரோம சிறைச்சாலைக்காரனைத் தட்டினார். ஒரு பிலிப்புவின் மூலம் எத்தியோப்பிய மந்திரியைத் தட்டினார். உன்னையும் கொண்டு மனிதர்களின் இருதயங்களைத் தட்டுவார். அதற்கு உன்னை ஒப்புக்கொடுப்பாயா? 

பரிசுத்த ஆவியைக்கொண்டு மனித இதயங்களைத் தட்டுவார். சூழ்நிலைகளினாலும், சம்பவங்களினாலும் தட்டுவார். ஒருகுடும்பம் தங்கள் காரில் ரயில் தண்டவாளத்தைத் தாண்டும்பொழுது, வேகமாக வந்த ரயில்காரின் பின் பகுதியை லேசாகத் தட்டி கார் தடுமாறிற்று, காரில் இருத்த அனைவரும் மரண பயத்தால் உறைந்து போனார்கள், மேரி என்ற பெண்ணைத் தவிர. அவள் சொன்னாள், “அப்பா, ஒரு வினாடி தாமதித்திருந்தால் நாமனைவரும் நரகத்திலிருந்திருப்போம், என்னைத் தவிர” என்றாள்.

தகப்பனார் மகளின் வார்த்தைகளை நினைத்துக்கொண்டு காரை ஓட்டி வீடடைந்தார். வீட்டிற்கு வந்தவுடனே குடும்பத்தார் அனைவரையும் அழைத்து, ஜெபம் பண்ணி, இயேசுவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். தேவன் தகப்பனின் இருதயத்தைத் தட்டினார்.

ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத்திறந்தால் தேவன் ஒருவனது இருதயக்கதவைத் தட்டும் சத்தம் அவனுக்கு நிச்சயம் கேட்கும், அநேகர் அந்த சத்தத்தைக் கேட்டும் இயேசுவுக்கு கதவை திறக்காமலிருப்பது ஏன்?

1. தட்டுகிறவரின் அன்பை அறியாததினால் திறக்க மனதில்லை,

2. நமக்குள் வாசம் செய்யும் பாவம் கதவை திறப்பதற்கு தடை செய்கிறது.

3. இச்சைகளினால் நம்மை அடிமையாக்கின சாத்தான் உள்ளே ஆட்சி செய்வதால்.

கள்ளப்புருஷன் உள்ளே இருப்பதால் சொந்த புருஷனுக்குத் திறக்க முடியவில்லை!

திறப்பதால் நன்மை என்ன? இயேசு உள்ளே வருவதால் சாத்தான் ஓடிப்போவான். நம் இருதயத்தில் சமாதானமும்,சந்தோஷமும் இருக்கும். அவர் நம்மோடு போஜனம் பண்ணுவதால் நமக்கு தேவனோடு ஐக்கியம் உண்டாகிறது. அவரது பாதுகாவலும், பராமரிப்பும் நமக்கும், நமது குடும்பத்திற்கும் இடைக்கும். அவர் நம்மோடு இருப்பதால் நாம் ஜெயங்கொள்ளுகிறவர்களாக இருப்போம். பரலோக சிங்காசனத்திலும் நமக்கு இடமுண்டு!

வ 21: நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படி அருள்செய்வேன். நம்மை அவருக்குச் சமமாக்குவேன் என்கிறார். அவரோடு கூட அவநக்குச் சமமாய் சிங்காசனத்தில் உட்காரவைப்பேன் என்கிறார். 1யோ.3:2ல் யோவான் “நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோமே” என்றது இதுவாகத்தான் இருக்கும், இந்த பாக்கியம் உங்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் இருதயத்தை இயேசுவுக்குத் திறந்து, அவரை ஏற்றுக்கொண்டு அவரோடு ஐக்கியப்படுங்கள், சிங்காசனத்தில் உங்களுக்கு இடமுண்டு!

வ 22: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்காதுள்ளவன் கேட்கக்கடவன்'? என்றெழுது என்றார்.

நாம் ஏழு சபைகளையும் அலசி ஆராய்ந்து பார்த்தோம். அவைகள் முற்றிலும்வெவ்வேறு குணாதிசயங்களுள்ளவைகள் ஒரேமாதிரியான இரண்டு சபைகள் கூடக் கிடையாது. நாம் கடைசிக் காலத்திலிருக்கிறோமென்பதில் கொஞ்சம்கூட சந்தேகமே கிடையாது. அந்திக்கிறிஸ்துவின் ஆவி தீவிரமாய்ச் செயல்படுகிறது. இயேசுவின் வருகை மிக மிகச் சமீபமாயிருக்கிறது. விழித்திருந்து ஜெபம் செய்வோம்.

ஏழு சபைகளை ஆராய்ந்ததின் சாராம்சம் என்ன?

1. தேவனிடத்திற்குத் திரும்புவோம். 
2. தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புவோம். 

3. தேவனோடுள்ள ஐக்கியத்திற்குத் திரும்புவோம், 

சில கேள்விகள்

நாம் எபேசு சபையைப் போல சாட்சியாய் வாழ இளைப்படையாமல் பிரயாசப்படுகிறோமா?

நாம் சிமிர்னா சபை விசுவாசிகளைப்போல கிறிஸ்தவனாயிருப்பதால் வரும் பாடுகளைச் சகிக்கிறோமா?

நாம் பெர்கமு சபை விசுவாசிகளைப்போல சாத்தானின் சிங்காசனம் இருக்கும் இடத்திலும் விசுவாசத்தை மறுதலியாமல் வாழ்கிறோமா?

நாம் தியத்தீரா சபையைப்போல அன்பிலும், ஊழியத்திலும், விசுவாசத்திலும் வளர்ந்து சாத்தானின் ஆழங்களை அறிந்து கொள்ளாமலிருக்கிறோமா?
சர்தை சபை விசுவாசிகளின் கிரியைகள் தேவனுக்கு முன்பாக நிறைவுள்ளவைகளாகக் காணப்படாததுபோல நம்முடைய கிரியைகளும் தேவனுக்கு முன்பாகக் குறைவுள்ளவைகளா?

நாம் பிலதெல்பியா சபை விசுவாசிகளைப்போல தேவனாலும் குறைகூறமுடியாத பரிசுத்த வாழ்க்கை வாழுகிறோமா?

நாம் லவோதிக்கேயா சபையினரைப்போல அனலும், குளிருமற்ற பரலோகமும் வேண்டும், இந்த உலகமும் வேண்டும் என்ற போலியான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கிறோமா?

Author: Rev. S.C. Edison



Topics: Tamil Reference Bible Revelation Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download