தேவகோபாக்கினையின் நியாயத்தீர்ப்பின் முடிவு
இந்த அதிகாரத்தில் ஏழு தூதர்களின் ஏழு கலச நியாயத்தீர்ப்போடு தேவ கோபாக்கினையின் நியாயத் தீர்ப்பு முடிவு பெறுகிறது. 7 தூதர்களும் தங்கள் கையிலுள்ள கலசங்களிலுள்ள வாதைகளாகிய நியாயத்தீர்ப்பை பூமியின்மேல் கொட்டுவதற்கு தேவனுடைய உத்தரவிற்காக காத்திருக்கிறார்கள் அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே நீங்கள் போய்த் தேவனுடைய கோப கலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள்! என்று சொல்லக் கேட்டேன். தேவாலயத்திலிருந்து புறப்பட்ட சத்தம் தேவனுடையது, அது ஒரு கட்டளை.. மனிதரை வாதிப்பது வருத்தமான காரியமாயிருந்தாலும் தூதர்கள், கட்டளையை நிறைவேற்றினார்கள். தேவ கட்டளையை நிறைவேற்றுவது தூதர்களுக்கு சந்தோஷமான ஒன்று. தேவ கட்டளையை, அதாவது அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவது, நமக்கு சந்தோஷம்தானா?
வ2 முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுன்டாயிற்று, இந்த நியாயத்தீர்ப்புக்குட்பட்டவர்கள் யாரென்றால், அந்திக்கிறிஸ்துவைப் பின்பற்றி, பூமியிலே விற்கவும், வாங்கவும் உரிமை பெற்று வசதியாய் வாழ்வதற்காக அவனை வணங்கி அவனுடைய முத்திரையைத் தரித்தவர்களே.
சகோதரனே! தேவனைப் புறக்கணித்து இம்மைக்காக மாத்திரம் வாழ்வீரென்றால் நியாயந்தீர்க்கப்பட்டு வாதிக்கப்படுவீர் (1 கொரி, 15:19),
இரண்டு காரியங்களை அறிகிறோம்
1.நியாயத்தீர்ப்பின்காலம்: அந்திக்கிறிஸ் துவை ஜனங்கள் வணங்குகிறார்கள். இது துன்பகாலம் தொடங்கினதிலிருந்து மூன்றரை ஆண்டுகளுக்குப்பின், அதாவது துன்பக் காலம் முடிந்து, கொடுந்துன்பக்காலம் ஆரம்பிக்கும் பொழுது நடைபெறும். கொடுந்துன்பக்காலம் முடியும் பொழுது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி அழியும், அந்திக்கிறிஸ்துவும், கள்ளத் தீர்க்கதரிசியும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டு சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
2. யாருக்கு இந்த நியாயத்தீர்ப்பு? சாத்தானையும், மிருகத்தையும், அந்திக்கிறிஸ்துவையும் வணங்குகிற அனைவருக்கும் இந்த நியாயத்தீர்ப்பு உண்டு. பூமியிலே ஒருசில சலுகைக்களுக்காகவும், சீக்கிரத்தில் பணம் சேர்ப்பதற்காகவும், துணிந்து பாவம் செய்பவர்கள் தேவனுடைய கட்டளைகளை மீறி நடந்து சாத்தானை வணங்குகிறார்கள். இவர்களுக்கு சமாதானமிராது.
வ3. இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை சமுத்திரத்திலே ஊற்றினான். உடனே அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று: சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.
மாம்சத்தின் உயிர் அதின் ரத்தத்தில் இருக்கிறது. செத்தவனின் இரத்தத்தில் உயிர் இல்லை. காரணம் அதில் பிராணவாயு (ஆக்ஸிஜன்) இல்லை, கலசத்திலிருந்து சமுத்திரத்தில் ஊற்றியது அவ்வளவு ஆக்ஸிஜனையும் உறிஞ்சிக்கொண்டது.; அதனால் பிராணிகள் யாவும் மூச்சுத்திணறி நொடியில் மரித்திருக்கும்! நம்முடைய சுவாசத்தைத் தம்முடைய கையில் வைத்திருக்கும் ஆண்டவர் நம் பாவத்திற்குத் தண்டனையாக நம்முடைய சுவாசத்தை எடுத்துக்கொள்வாரென்றால் நம்நிலை என்னவாகும்? நாம் நிர்மூலமாகாதிருப்பது அவருடைய சுத்த கிருபை!
வ4-7 மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின. அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர். அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தை சிந்தினபடியால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர். அதற்குப் பாத்திரவான்களாயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன். பலிபீடத்திலிருந்து வேறொருவன் ஆம்,சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும், நீதியுமானவைகள் என்று சொல்லக் கேட்டேன்.
ஆறுகளின் தண்ணீர் இரத்தமாவது தேவன் எகிப்தியரின் மேல் வரப்பண்ணின வாதைகளிலொன்று, இப்பொழுதோ சமுத்திரமும் செத்தவனின் ரத்தமாயிற்று; நீர்நிலைகளும் ரத்தமாயிற்று, துன்பக்காலத்தில் வாழ்வது எத்தனைக் கடினம்!
தண்ணீர்களின் தூதன்: வெளிப்படுத்தின விசேஷத்தில் அநேக தூதர்களைப்பற்றி வாசிக்கிறோம். பலமுள்ள தூதன் (18:21), காற்றுகளைப்பிடித்திருந்த தூதன்(7:1) அக்கினியின் மேல் அதிகாரமுள்ளவன் (14:18), தேவனுடைய முத்திரைக் கோலைப் பிடித்தவன் (7:2), மிகுந்த அதிகாரமுள்ளவன் (18:1). இங்கே தண்ணீர்களின் தூதன் தேவனுடைய நியாயத்தீர்ப்பைப் போற்றினான். யோவான் 5ம் அதிகாரத்தில் ஒரு தூதன் சிலசமயங்களில் பெதஸ்தா குளத்துத் தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி இறங்குகிறானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சுகமாவான் ஒருவேளை இவனே தண்ணீர்களின் தூதனாயிருக்கலாம்.
தேவன் தண்ணீரை ரத்தமாக்கி அதையே குடிக்கக் கொடுத்ததால் தண்ணீர்களின் தூதன் அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பைப் புகழ்ந்தான். ஏனென்றால் அவர்கள் பரிசுத்தவான்களின் ரத்தத்தை அநியாயமாய்ச் சிந்தினார்கள். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
பார்வோன் இஸ்ரவேலரின் ஆண் குழந்தைகளை நைல்நதியில் போடுவித்துக்கொன்றான். அவனும், அவன் சேனைகளும் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து மடிந்தார்கள்.
ஆமான் இஸ்ரவேலரை அழிப்பதற்காக மொர்தேகாயை தூக்கிப்போட 50 முழ உயர தூக்கு மரம் செய்வித்தான். அவனே அதில் தூக்கிப் போடப்பட்டான்.
சவுல் ராஜா தேவ கட்டளையை மீறி அமலேக்கை முற்றிலும் அழிக்கவில்லை. அமலேக்கியரால் அவனும், அவன் மகனும் கொல்லப்பட்டார்கள், இதையே ஆங்கிலத்தில் POETIC JUSTICE என்பார்கள்.
7ம் வசனத்தில் பலிபீடத்திலிருந்து ஒருவன் தங்கள் ரத்ததிற்காக தேவன் பழிவாங்கி நீதிசெய்தபடியால், தேவனைப் போற்றினான்.
வ8-9 நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதிகாரம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல் அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.
சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டு, மிதந்து துர்நாற்றத்தால் பூமியிலுள்ளவர்களுக்கு தாங்கக்கூடாத உபத்திரவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது நீங்கவே நீங்காது. இப்படியிருக்க குடிப்பதற்குத் தண்ணீரே கிடையாது.
ரத்த ஆறுதான் ஓடுகிறது. இந்நிலையில் சூரியன் உஷ்ணம் அதிகமாகி, ஆட்டையோ, கோழியையோ நெருப்பில் வாட்டுவது போல, மனுஷரை வாட்டும் பொழுது மனிதன் என்ன செய்வான்? இதற்கொரு விடையை மல்கியா தீர்க்கதரிசி, மல், 4:1,2ல் தருகிறார்; “இதோ சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும், அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்: வரப்போகிற அந்த நாள் அவர்களை சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும், கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே! புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப்போல் வளருவீர்கள்.
ஆம், உலக மனுஷன் உபத்திரவங்களில் தேவனண்டை வரவேமாட்டான். என் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம், இந்த உலகத்தை இப்படி படைத்த கடவுளே என்று சொல்லி தேவனை தூஷிப்பானேயொழிய, மனந்திரும்பமாட்டான். கொடிய சிறைக்கைதி தண்டனையினால் திருந்த மாட்டான். அவன் இருதயம் பாறையைப்போல கடினப்பட்டிருக்கும். அதே விதமாக பாவிகளின் மனதும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டிருப்பதனால் மனந்திரும்பமாட்டார்கள். கடவுள்மேல்தான் பழி போடுவார்கள். அதுதான் துன்பக்காலத்திலும் நடக்கிறது
வ10-11 ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது, அவர்கள் வருத்தத்தனாலே தங்கள் நாவுகளைக் கடித்துக் கொண்டு தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும் பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியையை விட்டு மனந்திரும்பவில்லை.
இதுவும் எகிப்தியருக்கு வந்த ஒருகொடிய வாதை, ஒருவர் முகம் ஒருவருக்குத்தெரியாது, தடவிக் கொண்டிருக்கத்தக்க இருள். மனிதனோ மனந்திரும்ப மலதல்லாமல் தேவனைத் தூஷித்துக்கொண்டும் வலி தாங்காமல் தங்கள் நாவைக்கடித்துக் கொண்டும் இருந்தார்கள்.
வ 12-14 ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் எனும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.
அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும், மிருகத்தின்வாயிலும், கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக் கொப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன், அவைகள் அற்புதங்களைச்செய்கிற பிசாசின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களை சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது.
கிழக்கிலிருந்து ராஜாக்கள் தேவனுக்கு விரோதமான யுத்தத்திற்கு வருவதற்கு வசதியாக 1800 மைல் நீளமுள்ள ஐபிராத்து நதி வற்றிப்போயிற்று. அர்மகெதோன் எனும் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கில் இந்த யுத்தம் நடக்கும், அந்த இடம் இருபது(20மைல்) மைல் நீளமும் பதினான்கு மைல் (14 மைல்) அகலமும் கொண்டது.,இங்குதான் தெபோராளும், பாராக்கும் சிசெராவை ஜெயித்தார்கள் நியா. 5ம் அதி,
கிதியோன் மீதியானியரை ஜெயித்ததும் நியா. 7ம் அதி: தாவீது கோலியாத்தை ஜெயித்ததும் இந்த இடத்தில்தான். இந்த இடத்தில்தான் பிரிட்டிஷ் தளபதி அலென்பி, 1917ல் துருக்கியரை வென்றது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். இந்த மூன்று தவளைகளும் கிழக்குதேச ராஜாக்களையும், அரபியரையும் இஸ்ரவேலுக்கு விரோதமாய் ஒன்றுகூடி வரப்பண்ணுவான், அது மிகப்பெரிய சேனையாயிருக்கும்.
Author: Rev. S.C. Edison