வெளிப்படுத்தின விசேஷம் 14- விளக்கவுரை

அதிகாரம்- 14

சீயோன் மலையில் 1,44,000 பேர்
The 1,44,000 on Mount Zion
சீயோன் மலையின்மேல் … 1,44,000 பேரையும் நிற்கக்கண்டேன். ( வச 1)

சில முக்கிய கடைசிகால நிகழ்வுகள் யோவானுக்கு தரிசனமாக காண்பிக்கபபட்டதை இந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம். முதலாவது, சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்துவோடு 1,44,000 பேர் நிற்கிறார்கள். இரண்டாவது, உபத்திரவ காலத்து இரத்த சாட்சிகளின் எண்ணிக்கை நிறைவடைந்து தேவனிடம் சேர்க்கப்படுகிறார்கள். மூன்றாவது, அந்திகிறிஸ்துவின் முத்திரை தரித்தவர்கள் தேவகோபாக்கினையின் ஆலையில் மிதிக்கப்பட்டு அழிவை சந்திக்கிறார்கள்.

வச 1: சீயோன் மலை என்பது தேவனுடைய நகரம். பரலோகத்தின் தலை நகரம். எருசலேமின் மத்திய பகுதி; சங்கீதம் 48: 1,2. 65: 1. ரோமர் 11: 26. எபி 12: 22
அங்கே ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்துவோடு 1,44,000 பேர் நின்றிருந்தார்கள்.

வச 2- 5- இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
• பிதாவின் நாமம் எழுதப்பட்டவர்கள் (வச 1)வெளி 3:12 – ஜெயங்கொண்ட கிறிஸ்தவர்கள்
• புதுப்பாட்டு பாடுகிறவர்கள் (வச 2,3) ஏசாயா 35: 10 – மீட்கப்பட்டவர்கள்
• மாசில்லாதவர்கள் (வச 4,5)எபே 5: 27, 2 கொரி 11: 2
- முதற்பலன்களாக வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களின் கூட்டத்திலிருந்து முதல்தரமான பரிசுத்த குணமும், புறஜாதி தெய்வங்களால் கறைபடாதவர்களும்( உபாகமம் 12:2-3, 2 கொரி 6: 16, 17.) மேலான அர்ப்பணிப்பும் செய்தவர்கள். ஸ்திரீகளால் கறைபடாதவர்கள், கற்புள்ளவர்கள் என்று 4ஆம் வசனத்தில் சொல்லப்பட்டது திருமணபந்தத்தால் கறைபடுவதாகவும் கற்பை இழப்பதாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.  எபிரேயர் 13: 4. மேலும், இந்த பரிசுத்தவான்களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருப்பார்கள். கலாத்தியர் 3: 28. இக்கருத்துக்களை மனதில் கொண்டு வசனம் 4 விளங்கிக்கொள்ளப்படவேண்டும்.

யார் இவர்கள்?
• 1,44,000 என்ற குறிப்பிட்ட எண்ணிக்கை கூறப்பட்டுள்ளதால் யார் இவர்கள் என்று அறிய ஓர் ஆவல் எழும்புகிறது.
• இவர்களை சிலர் முத்திரிக்கப்பட்ட யூதர்கள் (வெளி 7) என்றும்,வேறு சிலர் இவர்களை முழுநேர  ஊழியர்கள் என்றும் விளக்கமளிக்கிறார்கள்.
• விளக்கங்கள் எப்படி இருந்தாலும், இவர்கள் தங்கள் பரிசுத்தத்திலும், அர்ப்பணிப்பிலும், சுத்திகரிப்பிலும் முதல் தரமானவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
- நாம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலும், கர்த்தரின் சேவையிலும் அதிக அர்ப்பணிப்போடு ஈடுபட்டால் அதற்கேற்ற பலனை கர்த்தர் நமக்கு அருளுவார். அவருடைய ராஜ்ஜியத்தில் முதன்மையான இடத்தை கொடுப்பார். வெளி; 22: 12
                
வச 6- 13- மூன்று தூதர்கள பறந்து வந்து சில முக்கிய அறிவிப்புகளைக் கொடுக்கிறார்கள்.
 
1. வச 6,7 : முதலாம் தூதன், கடைசியாக நித்திய சுவிசேஷம் எல்லா தேசங்களுக்கும் அறிவிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தி, தேவனுக்கு பயப்படும்படி உற்சாகப்படுத்துகிறான.; மற்றும், தேவ நியாயத்தீர்ப்பு சமீபமாகிவிட்டதைக் கூறி எச்சரிக்கிறான்.

2. வச 8  : இரண்டாம் தூதன், பாபிலோன் என்ற விழுந்துபோன சபையின் முடிவை அறிவிக்கிறான். 
புறஜாதிமார்க்கங்களுடன் கலந்து, ஆவிக்குரிய வேசித்தனத்தில் ஈடுபட்டு அவற்றின் தவறான போதகங்களை சகல தேச மக்களுக்கும் அளித்த சபை வீழ்த்தப்பட்டது.        
 
3. வச 9- 13 : மூன்றாம் தூதன், தேவ ஜனம் இரத்த சாட்சியாக மரிப்பதாயினும், மிருகத்தின் முத்திரையை தரித்துக்கொள்ளாமல், நரகாக்கினைக்குத் தப்பித்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறான்.          
கர்த்தருக்குள் மரிக்கிறவர்களுக்கோ நித்திய இளைப்பாறுதல் உண்டென்ற ஆறுதல் வார்த்தைகளையும் உச்சரிப்பவனாக இந்த தூதன் காணப்பட்டான்.

இதன் பிறகு இரண்டுவிதமான அறுவடைகள் பூமியில் நடந்து முடிவதை யோவான் தரிசனத்திலே காண்கிறான்.
1. வச 14- 16:  மனுஷகுமாரன் செய்யும் அறுவடை - இரத்தசாட்சிகளின் எண்ணிக்கை நிறைவடைந்ததால் மனுஷகுமாரன் மேகங்கள்மேல் வந்து இரத்தசாட்சியாக மரித்த பரிசுத்தவான்களை தமது அறுவடையாக அவருடைய களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்வார்.  மத் 24: 29- 31

2. வச 17- 20:  தேவ கோபாக்கினையின் அறுவடை – அந்திகிறிஸ்துவின் முத்திரையை தரித்துக் கொண்டவர்கள் தேவ கோபாக்கினையின் ஆலையில் போடப்பட்டு மிதிக்கப்படுவார்கள். சாவு எண்ணிக்கை பெரிதாயிருக்கும் என்பதை குறிக்கும்வகையில் பெருத்த இரத்தவெள்ளம் புறப்பட்டு வருவது எழுதப்பட்டுள்ளது. யோவேல் 3: 12- 14

Author: Rev. Dr. R. Samuel 


வெளிப்படுத்தின விசேஷம் 14- விளக்கவுரை

பூமியின் விளைவு அறுப்புண்டது

வ1 பின்பு நான் பார்த்த போது, இதோ, யோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரையும் நிற்கக் கண்டேன்.

13ம் அதிகாரத்தில் இறுதிக்கால சம்பவங்கள் தீவிரிப்பதையும் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியும், அதிகாரமும் நெருங்குவதையும் வாசித்தோம். 14ம் அதிகாரத்தில் கிறிஸ்துவின் வெற்றி வரப்போவதை வாசிக்கிறோம்,

துன்பக்காலத்தின் இரண்டாம் பகுதிக்குள் உலகம் கடந்து செல்லும் பொழுது பரலோகம் அமைதியாய் சும்மா பார்த்துக் கொண்டிருக்காது. அது கிறிஸ்துவின் வெற்றிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. இந்த 1,44,000 பேரையும் நாம் ஏழாம் அதிகாரத்தில் சந்தித்திருக்கிறோம்.

இவர்கள் வேறு, அவர்கள் வேறு எனும் கருத்தும் வேத அறிஞர்களிடையே உண்டு, ஆனாலும் பெரும்பாலானோர் இரு கூட்டத்தாரும் ஒருவரே என்ற கருத்தையே கொண்டுள்ளனர். அதற்கான ஒரு முக்கிய காரணமுண்டு. 7ம் அதிகாரத்தில் உள்ள 144000 பேரும் 12 கோத்திரங்களிலிருந்து, கோத்திரத்திற்கு 12000மாக வந்த யூதர்கள், 14ம் அதிகாரத்திலுள்ள 144000 பேரும் பிதாவின் நாமம் தரித்த புறஜாதி விசுவாசிகள். ஆகையால் இவர்கள் வேறு என்று சொன்னால், இவர்கள் அரபியரா, ரோமரா, ஆங்கிலேயரா, ஆப்பிரிக்கரா, இந்தியரா, சீனரா, ரஷியரா? ஒவ்வொரு தேசத்திலுமிருந்து எத்தனை பேர்? ஒன்றுமே சொல்லவில்லையே! கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடு யூதன், புறஜாதியான் என்ற வேறுபாடு ஒழிந்ததே! ஆகவே இரு கூட்டத்தாரும் ஒன்றே என்பது தான் ஏற்றுக்கொள்ளத்தக்கது.

மேலும் வெளி 14:3ல் பூமியிலிருந்து இரட்சிக்கப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் மட்டுமே புதுப்பாட்டை பாடினார்கள் என்று எழுதியுள்ளது. இரண்டு 144000 குழுக்கள் இருந்தால் புதுப்பாட்டைப் பாடினவர்கள் 2 X 1 44 000 = 2 88 000 ஆக அல்லவோ இருந்திருக்க வேண்டும்!

பாடியவர்கள் இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேர் என்றதால் 7ம் அதிகாரத்தில் உள்ளவர்களே 14ம் அதிகாரத்திலும் புதுப்பாட்டைப் பாடியவர்கள்.

துன்பக்காலத்தில் ரட்சிக்கப்பட்ட யூத மிஷனரிகள் இவர்களே, 7ம் அதிகாரத்தில் இவர்கள் பூமியில் இருந்தார்கள், இப்பொழுதோ பரலோகத்தில் ஆட்டுக்குட்டியானவருடன் அங்குள்ள சீயோன் மலையில் நிற்கிறார்கள். பூமியில் இருக்கும்பொழுது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியை அதாவது துன்பக்காலத்தை எதிர்நோக்கியிருந்தார்கள். இப்பொழுதோ ஆட்டுக்குட்டியானவர் அந்திக்கிறிஸ்துவின்மேல் அடையப் போகும் வெற்றியைக் கொண்டாட பரலோகத்தில் ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்குள்ள சவால் 144000 பேர்களுடைய நெற்றியிலே தேவனுடைய நாமம் பொறிக்கப்பட்டிருந்தது, அதனால் அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடையவர்கள் என்று விளங்கினது, நாம் யாருடையவர்கள்? நமக்கு யாருடைய நாமம் தரிப்பிக்கப்பட்டிருக்கிறது? நம்மை நாமே ஆராய்ந்து சரிப்படுத்துவோம்,

வ2 அல்லாமலும் பெருவெள்ள இரைச்சல் போலவும், பலத்த இடிமுழக்கம் போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன், நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப் போலிருந்தது.

இடிமுழக்கம் போன்றதும், பெருவெள்ள இரைச்சல் போன்றதும் தேவனின் சத்தத்திற்குரிய அடைமொழிகள், சுரமண்டலங்களின் ஒஓசையைப் போன்றதென்பது அது அத்தனை இனிமையாயிருந்தது, கவனத்தை ஈர்த்தது என்பதைக் குறிப்பதற்குள்ளதாகும்.

வ3 அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப் பாட்டைப்பாடினார்கள்.. மோசேயின் பாட்டைப் பாடின யூதர்கள் இரட்சிக்கப்பட்ட பின் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டாகிய புதுப்பாட்டைப் பாடினார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு மட்டுமே பொருந்துமாதலால் அவர்கள் மட்டுமே கற்றுக்கொண்டு பாடக்கூடியதாயிருந்தது..

மற்றவர்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாதிருந்ததென்றால், அது பரலோக பாஷையில் பாடப்பட்டது. 2 கொரி,12:3ல் பவுல் தான் பரதீசுக்குள் எடுக்கப்பட்ட அனுபவத்தைக் கூறுகிறான். “அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாத்துமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கறேன்". ஒழிந்துபோகும் அந்நிய பாஷையில் ஒருவர் பாடும் பாடல் வேறொருவரும் கற்றுப் பாடக்கூடாததாயிருக்க பரலோகத்தில் 144000 பேர் பாடியது அவர்கள் மட்டுமே பாடக்கூடியதாயிருந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை.

வ.4-5: 144000 பேரின் குணநலன்கள்

1. ஸ்திரிகளால் கறைபடாதவர்கள். இதை வாசிக்கும்பொழுதே தோன்றுகிற எண்ணம் என்னவென்றால். “இவர்கள் மனைவியைத் தவிர வேறு ஸ்திரிகளோடு தவறான பாலுறவு கொள்ளாதவர்கள்" என்பதே.

ஆதி..1;28ல் தேவன் “பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்" என்ற கட்டளையைக்கொடுத்து ஆண் பெண் பாலுறவைப் பரிசுத்தப்படுத்தினார். திருமண உடன்படிக்கைக்குள் கணவன் மனைவி பாலுறவு பரிசுத்தமானது. அது கறைப்படுத்தாது. ஆனால் உடன்படிக்கைக்கு வெளியே உள்ள உறவு கறைப்படுத்தும் விபச்சாரம், ஆனால் இங்கு யோவான் ஒருபோதும் பாலுறவு கொள்ளாதவர்களையே குறிப்பிடுவதுபோல் இருக்கிறது. மத், 19ம் அதிகாரம் வ3 - 12 வரை வாசித்துப்பாருங்கள். தள்ளி விடுதலைக்குறித்து இயேசுவிடம் கேட்ட பொழுது "தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்" என்றார். (வ6) சீஷர்கள் அதைக்கேட்டு, “மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல" என்றார்கள். அதற்கு அவர் வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு, இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார். (வ 11-12) ஆகவே இந்த 144000 யூதர்களும் வரம்பெற்ற அண்ணகர்களாக இருக்கலாம்.

2. கற்புள்ளவர்கள் சிந்தையிலும், செயலிலும் பரிசுத்தமானவர்கள்.

3. ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள், அதாவது உண்மையான ஊழியர்கள். ஆண்டவரை விட்டுப் பிரியாதவர்கள்,

4 இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்...

இவர்கள் உயிர்த்தெழுதலில் முதற்பலனானவர்களில்லை... மனுஷரிலிருந்து, அதாவது உயிர் வாழுகின்ற யூதரிலிருந்து முதல் முதல் ரட்சிக்கப்பட்டு மீட்கப்பட்டவர்கள் .

ஓவ்வொரு கோத்திரத்திலுமிருந்து முதற்பலனாக ரட்சிக்கப்பட்டவர்கள் 12000 பேர்.

புதிய ஏற்பாட்டில் முதற்பலன் எனும் வார்த்தை 9 இடங்களில் வருகிறது, ரோம, 8:23; 11:16; 16:15; 1கொரி. 15:20,23 16:15: 2 தெச. 2:13; யாக். 1:18; வெளி. 14:4.

சுவிசேஷத்திற்கு பாளையங்கோட்டையில் கிடைத்த முதற்பலன் குளோரிண்டா அம்மையார், அவர்கள் பெயரிலே ஒரு சிற்றாலயமும் உள்ளது.

5. இவர்களுடைய வாயில் கபடம் காணப்படவில்லை. இவர்கள் பொய் பேசுவதில்லை, செப், 3:13ல். இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ் செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை, வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை என்றுள்ளது. இது இரட்சிக்கப்பட்ட 144000 பேரைக்குறித்து எழுதப்பட்டது போலிருக்கிறது.

6. இவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகப் பரலோகத்தின் தேவனுக்கு முன்பாக மாசில்லாதவர்களாய், குற்றமற்றவர்களாக இருக்கிறார்கள்.

வச 6 - 7: நித்திய சுவிசேஷம் உடைய தூதன் 

பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்ககாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து மிகுந்த சத்தமிட்டு தேவனுக்குப் பயந்து: அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத் தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது. வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும் உண்டாக்கனவரையே தொழுது கொள்ளுங்கள் என்று கூறினான்.

நித்திய சுவிசேஷம் என்பது நேற்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் மாறாத ஒரே சுவிசேஷம். அதாவது மனிதன் பாவம்செய்து பாவத்திற்கும், பிசாசிற்கும் அடிமையாக பரலோகத்தை இழந்தான் , அவனை மீட்க இயேசு மனுக்குலத்தின் பாவத்திற்கு பரிகாரமாக மாசற்ற, விலையேறப்பெற்ற தம்முடைய பரிசுத்த இரத்தத்தைக் கிரயமாகச் செலுத்தி சிலுவையிலே மீட்பை சம்பாதித்தார். இதை விசுவாசித்து, தன் பாவத்தை அறிக்கைபண்ணுகிற எவனும் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை இலவசமாகப் பெற்றுக்கொள்ளுகிறான். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். இதுவே சுவிசேஷம். வேறொரு சுவிசேஷம் இல்லையே! இதைத்தவிர வேறொரு சுவிசேஷத்தை எவனாலும், வானத்திலிருந்து வந்த ஒரு தூதனாலும் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவன் என்று பவுல் கூறுகிறான், வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுக்களையும் உண்டாக்கின தேவன் என்று சொல்வது அவருடைய சிருஷ்டிப்பின் வல்லமையை அறிவிப்பதாகும், தாவீது வானங்கள் தேவனுடைய மடமையை வெளிப்படுத்துகிறது என்றான். இந்தவேதப்பகுதியின் விசேஷம் என்னவென்றால், சுவிசேஷம் தேவதூதனால் அறிவிக்கப்படுவதே! நம் காலத்தில் ரட்சிக்கப்பட்டவர்களால், மத். 28:19, 20ன்படி சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் துன்பக்காலத்தின் கடைசிப் பகுதியில் மனிதர்களால் சுவிசேஷம் அறிவிக்க முடியாத சூழ்நிலை வரும்,

அப்பொழுது இயேசுவை மேசியாவாக ஏற்று இரட்சிக்கப்பட்ட 1,44,000 யூதர்களும் யூதேயாவை விட்டு பூமியெங்கும் போய் ஒருவரும் எண்ணக்கூடாக திரளான ஜனங்களை சுவிசேஷத்தின் மூலமாய் இரட்சிப்பார்கள், அவர்கள் அனைவரும் இரத்த சாட்சியாய் மரித்துவிடுவார்கள்.. ஆகவே ஒருவேளை, தேவன் சுவிசேஷம் அறிவிக்க தூதரைப் பயன்படுத்துவார், ஏனென்றால் உலகத்தின் முடிவு சமீபமாயிற்று. அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் நாள் வெகு சமீபமாயிற்று, உலகத்தின் முடிவிற்குமுன் ராஜ்யத்தின் சுவிசேஷம் சகல தேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும், ஆகவே அதற்கு தேவன் தூதர்களைப் பயன்படுத்தலாம். ராஜ்யத்தின் சுவிசேஷமாகிய மனந்திரும்புதலும், பாவமன்னிப்பும் தூதனால் பிரசங்கிக்கப்படும்போது அநேகர் மனந்திரும்பி இரட்சிக்கப்படுவார்கள்.

வ8: வேறொரு தூதன் பின்சென்று பாபிலோன் மகாநகரம் விழுந்தது! விழுந்தது!

இந்த பாபிலோனைக்குறித்து பல கருத்துக்கள் உண்டு. இதை பாவத்தின் பிறப்பிடம் அல்லது ஊற்று என்பார்கள். பாபிலோன் அருவருப்புகளின் தாய் என்று வேதம் கூறுகிறது. சிலர் இது இனி வருங்காலத்தில் ஈராக்கில் கட்டப்படப்போகும் ஒரு பட்டணம் என்றும் சொல்வார்கள். பொதுவாக இது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் தலைநகரமாகிய ரோமாபுரியைக் குறிக்கும், ரோம் நகரத்தையே பேதுருவும் ஆவிக்குரிய பாபிலோனாக தன் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேசித்தனமும், விபச்சாரமுமே. இந்த பாபிலோனின் வீழ்ச்சி, அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் அழிவையே சுட்டிக் காட்டுகிறது. யாராயிருத்தாலும் நியாயத்தீர்ப்புக்கு தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையே இது காட்டுகிறது.

வ9.11: அவர்களுக்குப்பின்னே மூன்றாம் தூதன் வந்து மிகுந்த சத்தமிட்டு; மிருகத்தையும், அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதன் முத்திரையைத் தரித்துக் கொள்ளுகிறவனெவனோ....... எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது.

இது மிருகத்தையாவது அதன் சொரூபத்தையாவது வணங்கி அதன் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவர்களுக்கு வரும் நியாயத்தீர்ப்பு, தேவனுடைய கோபாக்கனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் (இரக்கம், கிருபையில்லாமல்) வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக்குடித்து, பரிசுத்த தூதருக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும், கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான் . அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும், அவர்களில் எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது.

வாதை கலப்பற்ற தேவ கோபம்; முடிவில்லாத தாங்க முடியாத பயங்கரமான வேதனை, கொஞ்சம்கூட குறையாத, நீங்காத இளைப்பாறுதலற்ற வாதை.

வ12,13: தேவனுடைய கற்பனைகளையும், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.

யார் பரிசுத்தவான்? இயேசுவின் இரத்தத்தால் பாவமற கழுவப்பட்டவர்கள்,

தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் அதாவது, தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்கள். அவருக்காகப் பாடுகளையும் நிந்தைகளையும் சந்தோஷமாய்ப் பொறுமையோடே சகித்தவர்கள். தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டவர்கள், அதாவது, கர்த்தருக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடந்தவர்கள், இவர்கள் அந்திக்கிறிஸ்துவினால் கொல்லப்பட்டாலும், கிறிஸ்துவுக்குள் மரித்ததினால் தங்கள் பாடுகளை விட்டோய்ந்து இளைப்பாறும் பாக்கியவான்கள்.

அந்திக்கிறிஸ்து சொல்லுவான்: “நான் உங்களை உபத்திரவத்திற்குள்ளாக்குவேன்.”

அவர்களோ “நீ எங்களைப் பரிசுத்தவான்களாக்கி விடுவாய்” என்பார்கள்.

௮கி : “நான் உங்களைக் கல்லறை வரைக்கும் துரத்துவேன்.”

அவர்களோ : “ நீ எங்களை மகமைக்குள் அனுப்புகிறாய், மரணத்திற்குள்ளல்ல!"'

௮கி : “நான் உங்களை அழித்து விடுவேன்" என்பான்.

அவர்களோ: “தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்” என்பார்கள்.

உபத்திரவக்காலத்திலே தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நின்று பாடுகளைப் பொறுமையாய் சகித்ததினால் தேவ சமூகத்தில் இளைப்பாறும் பாக்கியம்பெற்றவர்கள். இவர்களின் நற்கிரியைகளின் பலனை இவர்கள் அனுபவிக்கும்படி அவர்களுக்கு அளிக்கப்பட்டது...

வ 14-20: தேவனுடைய நியாயத்தீர்ப்பு

வ14-16 பின்பு நான் பார்த்த போது, இதோ வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷ குமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும், தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்த்திருக்கிறதையும் கண்டேன். அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி; பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

அவரைப்பற்றி நான்கு காரியங்களை அறியலாம்,

1. அவரது மானிடத்தன்மை மத்தேயு 8:20ல் இயேசு 'நரிகளுக்குக் குழிகளும், பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்" வேதத்தில் முதல்முறையாக இயேசு மனுஷகுமாரன் என்று அழைக்கப்பட்டது இந்த வசனத்தில்தான். அதேபோல் கடைசியாக மனுஷகுமாரன் என்றது வெளி, 14:14ல்தான்.

2. மேகம் தேவபிரசன்னத்தையும், வெண்மை அவரது நீதியையும், பரிசுத்தத்தையும் காட்டுகிறது, மேலும் இயேசு தேவநீதியின்படி நியாயந்தீர்ப்பார் என்பதையும் கூறுகிறது.

3. பொற்கிரீடம் ஜெயங்கொண்ட ராஜாவுக்கு அடையாளம், அது அவருடைய வல்லமையையும், மகிமையையும் காட்டுகிறது இயேசுகிறிஸ்து அந்திக்கிறிஸ்துவை ஜெயித்து அழிக்கும்பொழுது எல்லோரும் இதை அறிந்து கொள்வார்கள்.

4. கருக்குள்ள அரிவாள். இது நியாயத் தீர்ப்பாகிய அறுவடையைக் குறிக்கிறது. மத். 13:37-43வரை உள்ள வசனங்களில் அறுவடையாகிய நியாயத்தீர்ப்பைக்குறித்து வாசிக்கிறோம், அங்கே விதைத்தவர் இங்கே அறுவடை செய்கிறவராக இருக்கிறார்.

விளைந்த பயிரின் அறுவடை

இதுவும் யோவேலின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலே. யோவேல் 3:12,13ல், ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்; பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது,

வெளி. 14:16 அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

ரயில் இஞ்சின் ஓடுவதற்கு ஆயத்தமாயிருக்கிறது. ஆனாலும் புறப்பட்டுப் போக முடியாது, ரயில் ஓட்டத்தின்மேல் அதிகாரமுடையவர் ஒருவர் பச்சைக்கொடி காட்ட வேண்டும் அறுவடை செய்கிறவர்கள் தூதர்கள் (மத். 13:39) பயிர் முதிர்ந்தது, ஆனாலும் தேவதூதர்கள் தாமாகவே அறுவடை செய்ய முடியாது, பச்சைக்கொடி காட்டப்பட வேண்டும். மனுஷகுமாரன் (இயேசு) தமது அரிவாளை பூமியின்மேல் நீட்டினவுடன் தூதர்களுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டது, உடனே பூமியின் பயிர் அறுப்புண்டது. பயிர் புறஜாதிகளைக் குறிக்கும். இது புறஜாதிகளுக்கு வரும் தீர்ப்பு.

திராட்சப் பழங்களின் அறுவடை: இது இஸ்ரவேலருக்கு வரும் நியாயத்தீர்ப்பு (ஏசாயா 5:3).

வ18: அக்கினியின் மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபிடத்திலிருந்து புறப்பட்டு வந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்தருப்பவரை நோக்க, பூமியின் திராட்சப் பழங்கள் பழுத்திருக்கிறது; கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்து விடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.

இயேசு மத்தேயு 13ம் அதிகாரத்தில் களைகள், வலைகள் ஆகிய இரண்டுவிதமான நியாயத் தீர்ப்புகளைக் கூறினார். அதன் நோக்கம் என்னவென்றால் ஜனங்கள் எப்படியாகிலும் நியாயத்தீர்ப்பைக் குறித்து அறிந்து எச்சரிக்கையுள்ளவர்களாக வேண்டுமென்பதே. இந்த அதிகாரத்திலும் மூன்று எச்சரிப்புகளுக்குப் பின்னரே நியாயத்தீர்ப்பு வருகிறது.

1. தூதனால் நித்திய சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது

2. பாபிலோனின் வேசிமார்க்கம் முற்றிலும் அழிக்கப்படும்.

3. அந்திக்கிறிஸ்துவை வணங்குகிற யாவரும் நியாயத்தீர்ப்படைந்து அக்கினியினாலும், கந்தகத்தினாலும் சதா வாதிக்கப்படுவார்கள், இதைக் கேட்டும் மனந்திரும்பாதவன் நிச்சயமாய் நரகாக்கினையை அடைவான். சகோதரரே! நீங்கள் இன்னும் மனந்திரும்பவில்லையென்றால் உங்களுக்கும் இதே நியாயத்தீர்ப்பும், நரகமும்தான் உண்டு.

Author: Rev. S.C. EdisonTopics: Tamil Reference Bible Revelation Daily Devotions Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download