வெளிப்படுத்தின விசேஷம் 13- விளக்கவுரை

அதிகாரம்- 13

அந்தி கிறிஸ்துவின் ஆட்சி (முதல் 3 ½ வருடம்- உபத்திரவ காலம்)
Anti- Christ Rule (First 3 ½ years – Tribulation period)

அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் ஏறி வரக் கண்டேன். (வச 1)

வச 1- 3: யோவான் தான் கடற்கரை மணலின்மேல் நிற்பதாகவும் சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் ஏறிவருவது போன்ற விசித்திரமான காட்சியை காண்கிறான். இந்த மிருகம் சமுத்திரமாகிய ஜனக்கூட்டத்திலிருந்து தோன்றி மிருகத்தனமாக இந்த உலகத்தை ஆட்சிசெய்யப்போகும் ஒரு மனிதனே ஆவான். அவனே அந்திகிறிஸ்து. 

இந்த மிருகத்தின் 7 தலைகளும் 7 சாம்ராஜ்ஜியங்களைக் குறிக்கிறது. அவை இதுவரை உலகை ஆண்ட 6 சாம்ராஜ்ஜியங்களான எகிப்து,அசீரியா, பாபிலோன், மேதியா-பெர்சியா,கிரேக்கு,ரோமப் பேரரசுகளும் கடைசியாக ஆளப்போகும் அந்தி-கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியமுமாகும். அதன்மேலுள்ள 10  கொம்புகளும் முடியும் அந்தி கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியத்தோடு இணைந்து அகில உலக அரசாங்கத்தை உருவாக்கும் 10 தேசங்களின் கூட்டமைப்பாகும். அவை, ஜெர்மனி, பிரான்ஸ்,பெல்ஜியம், லக்ஸம்பர்க்,இத்தாலி. கிரீஸ், இங்கிலாந்து,அயர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து என்பவைகள். இதைக் குறித்த விளக்கம்  (தானி 7: 23 -24, வெளி 17: 8- 17.)இந்த பகுதிகளிலும் காணலாம். 
யோவான் கண்ட இந்த மிருகத்தின் உருவம் சிறுத்தை ,கரடி. சிங்கம் என்ற நான்கு கொடிய மிருகங்களின் அங்கங்களை கொண்டதாக காண்பிக்கப்பட்டது அக்கொடிய மிருகங்களின் பயங்கர குணங்களையும் வீரியத்தையும் பெலத்தையும் பெற்றிருந்த 6 சாம்ராஜ்ஜியங்களின் குணாதிசயங்களை ஒருங்கே இந்த அந்தி கிறிஸ்து உடையவனாயிருப்பான் என்பதை சித்தரிக்கிறது. 

அந்தி கிறிஸ்துவாகிய இந்த மிருகத்திற்கு வலுசர்ப்பமாகிய சாத்தான் என்னும் பழைய பாம்பானவன் தனது வல்லமையையும் சிங்காசனத்தையும் கொடுத்திருக்கிறான். காரணம், சாத்தான் ஆவியாக இருக்கிறபடியால் நேரடியாகவும், மாம்சமாகவும் இந்த உலகத்தை ஆட்சி செய்ய முடியாது. ஆகவே, மனித ரூபத்தில் மாம்சமாக உள்ள அந்தி கிறிஸ்துவுக்கு தனது சகல அதிகாரத்தையும் கொடுத்து அவன்மூலமாக உலகத்தை ஆட்சி செய்வான்.  
                         
வச 4- 7: சாத்தானாகிய வலுசர்ப்பம் கொடுக்கும் வல்லமையை பயன்படுத்தி அந்தி கிறிஸ்து தேவனுடைய இடத்தில் தன்னை உயர்த்துவான். பூமியிலுள்ளவர்கள் அந்தி கிறிஸ்துவாகிய இந்த மிருகத்தையும் வலுசர்பத்தையும் வணங்குவார்கள். தானி 11: 36- 39 , மத் 4: 8,9. 2 தெச 2: 4- 12, 2 தீமொத் 3: 1, 2.
அந்தி கிறிஸ்துவாகிய இந்த மிருகத்திற்கு 42 மாதங்கள் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இங்கே வாசிக்கிறோம். அதாவது அந்தி கிறிஸ்துவின் முதல் 3 ½ வருட ஆட்சிகாலத்தை இது குறிக்கிறது. உபத்திரவ காலம் என்றும் இந்த பகுதி அழைக்கப்படும்.    

வச 8- 10: இந்த அந்தி கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியம், வெளி 12 ஆம் அதிகாரத்தில் நாம் வாசித்த ‘சபை எடுத்துக்கொள்ளப்படுதல்; சம்பவத்திற்குப் பிறகே ஸ்தாபிக்கப்படும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் மீட்கப்பட்டு, புத்தியுள்ள கன்னிகைகளைப்போல இயேசுவின் வருகைக்கு ஜெயங்கொண்ட கிறிஸ்தவர்களாக ஆயத்தமாக இருந்தவர்களின் பெயர்கள் ஆட்டுக்குட்டியானவான் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டு கர்த்தருடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். புத்தியில்லாத கன்னிகைகளைப்போல தங்கள் பரிசுத்த வாழ்க்கையை காத்துக்கொள்ளாத கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படாமல் அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியில் கைவிடப்பட்டு இருப்பார்கள். இவர்களை அந்தி கிறிஸ்து துன்பப்படுத்துவான். மத் 24: 14, 15 வெளி 12: 17.  
         
ஆனாலும், இந்த காலக் கட்டத்தில் தங்கள்; பரிசுத்தத்தை புதுப்பித்துக்கொண்டு தங்களை காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் திடமனதாயிருக்க வேண்டும். துன்பப்படுத்துகிறவன் (அந்தி கிறிஸ்து) துன்பத்தில் அழிவான். லேவி 24: 16

வச 11- 15: மற்றொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பி வருவதை யோவான் கண்டதாக வாசிக்கிறோம். இந்த மிருகம் கள்ள தீர்க்கதரிசியாவான்.( வெளி 19: 20)
ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்துவின் சாயலை அணிந்து வலுசர்பததைப்போல பேசி சாத்தானின்; தன்மையை பெற்றவனாக மற்றவர்களை வஞ்சிப்பான்..அந்திகிறிஸ்துவை வணங்கச்செய்வான். அந்திக்கிறிஸ்துவுக்கு ஒரு சொரூபத்தை செய்விப்பான். இந்த சொரூபம என்பது ஒரு மகாபெரிய பேசக்கூடிய கணி;ணி (ரோபோ கம்ப்யூட்டர்) ஆக இருக்கலாம. உலகத்தில் உள்ள அனைத்துக் குடி மக்களின் எல்லா விவர்களையும் சேகரித்து வைக்கப் பயன் படுத்தப்படும் எனத்தெரிகிறது. இந்த அந்திக்கிறிஸ்துவின் சொரூபத்தை வணங்காதவர்கள் இரத்தசாட்சிகளாக கொல்லப்படுவார்கள். தானி 3: 4- 6
                                 
வச 16- 18: கடைசியாக அந்திகிறிஸ்து மனித இலக்கம் கொண்ட 666 என்ற தனது முத்திரையை அமுலுக்குக் கொண்டுவருவான். பூமியின் குடிகள் அனைவரும் கட்டாயமாக இந்த முத்திரையை தங்கள் சரீரத்தில் தரித்துக்கொள்ள வேண்டும். இந்த முத்திரை ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படும் தனிப்பட்ட இலக்கம் கொண்ட முத்திரையாகும். இந்த இலக்கத்தை வைத்துதான் அனைத்து மக்களும் வாங்குதல் விற்றல் செய்ய முடியும். ஆகவே, இந்த இலக்கம் அந்தி கிறிஸ்துவின் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் ஒரு மனிதனுடைய  வங்கிக் கணக்கின் இலக்கமாகவோ அடையாள இலக்கமாகவோ இருப்பதே சாத்தியமாகக் கருதப்படுகிறது. அந்த இலக்கமானது 666 என்ற எண்ணில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அரிசி மணி அளவேகொணட மின்னணு சாதனம் (மைக்ரோ ச்சிப்) இந்த இலக்கத்தை தன்னுள் அடக்கி இருக்கும். இது நெற்றியிலோ வலது கையிலோ பொருத்தி விடப்படும். 
இதுவே அந்திக் கிறிஸ்துவின் ஆதிக்கத்தின் அடையாள முத்திரை. இதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஒரேவழிதான். இரத்தசாட்சிகளாக மரிப்பதே அந்த வழி.
இப்படிப்பட்ட மைக்ரோ ச்சிப் பொருத்துதல் இப்பொழுதே பல இடங்களில் பற்பலவிதமான உபயோகங்களுக்காக மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் கையாளப்பட்டுவருவதை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். 666 இலக்கத்தில் முடியும் வங்கிக் கணக்கு எண்கள் உலக வங்கிக் கணக்கு (World Bank code no.),  ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கு (Australiann National Bank code  no) இவற்றில் இப்பொழுது அமுலில் உள்ளது. 
இந்தியாவையும் சேர்த்து பல நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது குடிமக்களுக்கு தனிப்பட்ட அடையாள எண்களைக்கொடுத்து அவற்றை ஒரு மத்திய கணிணியில் இணைத்திருக்கிறார்கள்.
                   
‘காதுள்ளவன் கேட்கக்கடவன்’

Author: Rev. Dr. R. Samuel 


வெளிப்படுத்தின விசேஷம் 13- விளக்கவுரை

அதி. 13. அந்திக்கிறிஸ்துவும் கள்ளத்தீர்க்கதரிசியும்

வ 1-4: பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன், அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக்கண்டேன். அதற்கு ஏழு தலைகளும், பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்தன... பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி ....... என்று சொல்லி மிருகத்தை வணங்கினார்கள், அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்குமுன் உலகத்திலுள்ளவர்கள், சீரழிந்து நம்பிக்கையற்ற உலகத்தை, அழிவின் விளிம்பினின்று மீட்டு, எல்லாவற்றையும் சர்ப்படுத்தி நல்லாட்சி கொடுக்கக்கூடிய ஒரு வல்லமையுள்ள தலைவனுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் அந்திக்கிறிஸ்து வெளிப்படுவான். அவனையே ஜனங்கள் தாங்கள் தேடிக் கொண்டிருந்த மேசியா என நினைத்து அவனுக்குக் கீழ்ப்படிவார்கள்.

அந்திக்கிறிஸ்துவைக்குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ள சில காரியங்களைப் பார்த்தபின் 13ம் அதிகாரத்திற்குத் திரும்பலாம்,

அந்திக்கிறிஸ்துவைப்பற்றி தானியேல் 7-11அதி; 2 தெச.2ம் அதி; வெளி, 17ம் அதிகாரங்களிலிருந்து அறியலாம்.

1. அந்திக்கிறிஸ்துவிற்குப் பல பெயர்கள் வேதாகமத்தில் உண்டு,

ஏசாயா 14 தீரு ராஜா, பாபிலோனின் ராஜா; தானி.7:8, 8:9 சின்னக்கொம்பு வெளி. 13:1 மிருகம், இவையெல்லாவற்றையும் விட பவுலப்போஸ்தலன் 2 தெச. 2:3-8 வரையிலுள்ள பகுதியில் கொடுக்கும் நாமங்களே மிகவும் பொருத்தமானவை. 'கேட்டின் மகன்' 'பாவ மனுஷன்' “அக்கிரமத்தின் இரகசியம்” வஞ்சகத்தின் மறுபெயர் “அந்திக் கிறிஸ்து”.

அந்திக்கிறிஸ்துவுக்கும், இயேசு கிறிஸ்துவுக்குமுள்ள எதிர்மறையான முரண்பாடுகள்: கிறிஸ்து மேலிருந்து வந்தார் (யோ. 6:38). அந்திக்கிறிஸ்து (௮கி), - பாதாளக்குழியிலிருந்து வந்தவன் (வெளி. 11:7);

கிறிஸ்து - பிதாவின் நாமத்திலே வந்தார்; (யோ. 5:43) அகி - தன் சொந்த நாமத்திலே வருவான். (யோ. 5:43)

கிறிஸ்து - தன்னைத் தாழ்த்தினார்(பிலி. 2:8); ௮கி - தன்னை உயர்த்துவான் (2 தெச. 2:4)

கிறிஸ்து - உயர்த்தப்படுவார் (பிலி, 2:9); ௮கி - பாதாளத்தில் தள்ளப்படுவான். (வெளி. 19:20),

கிறிஸ்து - பிதாவின் சித்தம் செய்ய வந்தார் (யோ. 6:38); ௮கி - "சாத்தானின் சித்தம் செய்ய வந்தான் (தானி, 11:36)

கிறிஸ்து - இரட்சிக்க வந்தார் (லூக். 19:10); அகி - மனிதர்களைப் பட்சிக்க (அழிப்பதற்கே) வந்தான் (தானி. 8:24)
கிறிஸ்து - சத்தியம் (யோ. 14:6); அகி - ஒரு “பொய்” (2தெச. 2:11,12)

கிறிஸ்து பரிசுத்தர் - ( மாற் 1:24); அகி - அக்கிரமக்காரன் ( 2தெச 2:8)

கிறிஸ்து தாழ்மையுள்ளவராய் வந்தார் (ச௧. 9;9) அகி - பெருமை பேசும் வாயோடு வந்தான் (வெளி. 13:5)

இதை வாசிக்கிற சகோதரனே சகோதரியே! உன்னிடத்தில் காணப்படுவது கிறிஸ்துவின் தாழ்மை, தேவசித்தம் செய்தல், பரிசுத்தமா? அல்லது பெருமையானவைகளையும், தூஷணங்களையும் பேசும் சாத்தானுடைய குணங்களா? ஆராய்ந்து, முடிவை சிந்தித்து மனந்திரும்பும்,

அந்திக்கிறிஸ்துவின் (அகி) குணாதிசயங்கள் :

1. தானியேல் தன் தீர்க்கதரிசனங்களிலே, சமுத்திரத்திலிருந்து நான்கு மிருகங்கள் ஏறிவரக்கண்டான். இருப்புப் பற்களையுடைய வேற்றுருவமாயிருந்த நான்காம் மிருகத்தின் 10 கொம்புகளுக்கிடையில், ஒரு சின்னக்கொம்பு தோன்றியது. அது 10 கொம்புகளிலே மூன்று கொம்புகளைப் பிடுங்கிப் போட்டது, அந்தச்சின்ன கொம்பிலே மனுஷக்கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (தானி. 7:7-9) அந்தக்கொம்பு பெருமையான பேச்சுக்களைப் பேசினதினிமித்தம் ௮ந்த மிருகம் கொலை செய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதிலிருந்து நாம் அந்திக்கிறிஸ்துவைப்பற்றி அறிவதென்னவென்றால், அவன் நித்தியமானவனல்ல., 7 வருடங்களுக்குள் அவனும், அவனுடைய ராஜ்யமும் அழிந்து போகும். இயேசுவே நித்தியமானவர், அவருடைய ராஜ்யமே முடிவே இல்லாத நித்திய ராஜ்யம்,

2. தானி, 8:24 அந்திக்கிறிஸ்து மூர்க்கமுகமுள்ளவன், சூதான பேச்சுள்ளவன்.
 
சாமர்த்தியமுள்ள ராஜா. பத்துக்கொம்புகளாகிய பத்து ராஜாக்களையும், யுத்தத்தினாலல்ல, தந்திரத்தினாலும் வஞ்சகப் பேச்சினாலும் தனக்கு இசையப்பண்ணி அவர்களைத் தனக்குக் கீழ்ப்படியப் பண்ணுவான். சமாதானத்தையும், செழிப்பையும் வாக்குப்பண்ணி அவர்களைத் தன் அதிகாரத்திற்குள் வைத்துக்கொள்வான். “அவனுடையவல்லமை பெருகும். ஆனாலும் அவனுடைய சுயபலத்தினால் அல்ல; அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அனுகூலம் பெற்றுக் கிரியை செய்து, பலவான்களையும், பரிசுத்தவான்களையும் அழிப்பான் அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமை கொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப் போடப்படுவான்.” (தானியேல் 8: 24, 25)

3. அவன் 'ஒரே உலக அரசாங்கம்' எனும் கொள்கையைப் பரப்பி முழு உலகத்திற்கும் தானே ராஜாவாக திட்டம் தீட்டுவான்,” இவன் மட்டுமே உலகத்திற்கு சமாதானம் தர முடியும், நம்மால் முடியாது” எனும் மனப்பான்மையை ராஜாக்களுக்கு உண்டாக்குவான். அவர்கள் தங்கள் ராஜ்யங்களின் அதிகாரத்தை அந்திக்கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுத்து விடுவார்கள். அவன் முழு உலக சர்வாதிகாரியாவான். (வெளி.17:13) ஐரோப்பிய பொதுச்சந்தை அங்கத்தின நாடுகள் தங்கள் நாணயங்களை விட்டு விட்டு “யூரோ டாலரையே? பயன்படுத்துவது போல, இவனும் உலகெங்கும் ஒரே நாணயத்தைப்புகுத்தி, உலகப் பொருளாதாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வான். 
 
4. அவன் ஒரு நாத்திகனாயிருப்பான் தானி, 11: 36-37 “ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை ௨யர்த்தி, எந்தத் தேவனிலும் 'தன்னைப் பெரியவனாக்கி, தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; “நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே”. ஏசாயா 14: 13 – 14 ல் சொல்லப்பட்ட லூசிபரின் ஆவி அவனுக்குள் இருப்பதால் இப்படிச் செய்வான்.

5. தானி.9: 27 சாலமோன் ஆலயம் கட்டின அதே இடத்தில் தேவாலயம் கட்ட, யூதர்கள் அரபியருடன் பல நூற்றாண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்திக்கிறிஸ்து தன் ஆட்சியின் ஆரம்பத்தில் அந்த இடத்தை யூதர்களுக்குக் கொடுத்து தேவாலயம் கட்டச்சொல்லுவான் , யூதர்கள் இவன்தான் மேசியா என நினைத்து அவனுடன் ஒரு ஏழு (7) வருட உடன்படிக்கைப் பண்ணுவார்கள். மூன்றரை வருடங்களுக்குப்பின், அந்திக்கிறிஸ்து உடன்படிக்கையை முறித்து, யூதர்களிடமிருந்து தேவாலயத்தைக் கைப்பற்றி அதில் தன்னையே தேவனாகக்காட்டித் தன்னை வணங்கும்படி செய்வான். தன்னை (மிருகத்தை) வணங்காதவர்களைக் கொலை செய்வான். அப்பொழுது தான் யூதர்கள் புத்திதெளிந்து தாங்கள் மோசம்போனதை உணர்ந்து, இயேசுவை மேசியாவாக ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பி, 12 கோத்திரத்திலுமிருந்து 1,44,000 பேர் இரட்சிக்கப்பட்டு, சுவிசேஷம் சொல்லி ஒருவரும் எண்ணக் கூடாத அளவு ஜனங்களை இரட்சிப்பார்கள். அந்திக்கிறிஸ்து அவர்கள் மேல் கோபம் கொண்டு அவர்களையும், அவர்களால் இரட்சிக்கப்பட்டவர்களையும் கொல்லுவான். வெகு இரத்தம் சிந்தப்படும். அவர்கள் துன்பக்காலத்து இரத்த சாட்சிகளானதால், நேரடியாகப் பரலோகம் செல்வார்கள். இவர்களே, வெளி. 7ம் அதிகாரத்தில் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு நிற்பவர்கள்.

6. தானியேல் 11:37 அந்திக்கிறிஸ்து ஸ்திரிகளின் சிநேகத்தை விரும்பாதவன். அந்திக்கிறிஸ்துவின் ஆவி இப்பொழுதே, நம் காலத்திலேயே கிரியை செய்கிறது. திருச்சபைகளில் பேராயர்களே ஓரினச் சேர்க்கைக்காரர்களாயிருக்கிறார்கள். இருச்சபைகளே ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கின்றார்கள், இது தேவனின் சித்தத்தை மீறுவதாகும். அந்திக்கிறிஸ்து வெளிப்படும் காலம் வெகு சமீபம் என்பதற்கோர் அடையாளம், விசுவாசிகள் தங்களைக் கெடுத்துக்கொள்ளாமல் பரிசுத்தமாயிருப்பதற்கோர எச்சரிப்பு,

7. அந்திக்கிறிஸ்துவின் மரணமும் மறுபடி உயிரோடு "எழுதலும் வெளி 17:8ல் நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப் போகிறது. உலகத்தோற்ற முதல் ஜீவ புத்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும் இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள் “இராமற்போனதும்' என்றிருப்பதால் அந்த மிருகம் இறந்திருக்க வேண்டும், எப்படி இறந்ததென்று எழுதப்படவில்லை. ஆனால் அந்திக்கிறிஸ்து துன்பகாலத்தின் மத்தியில் மரிப்பது உண்மை. அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து நாசமடையப்போகிறது என்று எழுதியிருப்பதால், சாத்தான் அந்திக்கிறிஸ்துவின் உடலுக்குள் புகுந்து அந்திக்கிறிஸ்துவாகக் காணப்பட்டு ஆட்சி செய்வான்.

வெளி. 13:3ல் “அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் அந்தக்காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள்”, இதுவரை சாத்தான் அந்திக்கிறிஸ்துவுக்குத் தன் முழு அதிகாரத்தையும் கொடுத்து அவன் மூலம் ஆட்சி செய்தான். இப்பொழுதோ இறந்து போன அந்திக்கிறிஸ்துவின் உடலுக்குள் புகுந்து கொண்டு அவனே ஆட்சி செய்கிறான். ஆனாலும் இவர்கள் இருவரும் இயேசுவினால் அக்கினிக்கடலுள் தள்ளப்படுவார்கள், இயேசுவோ ஜெயம் கொண்டவராய் பரலோகத்தில் என்றென்றும் ஆட்சி செய்வார். அவருடைய ராஜ்யத்திற்கு முடிவேயிராது!

வ1 மிருகம் என்பது அவனுடைய ஒரு பெயர். சாத்தான் அவனைப் பெரியவனாக உயர்த்தினாலும் தேவன் அவனை மிருகமாகவே பார்க்கிறார்.

வெளி, 13:1ல் அது சமுத்திரத்திலிருந்து (மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள ராஜ்யங்களிலிருத்து) வந்ததால் ரோம-கிரேக்க கலப்பு வம்சத்தானாயிருக்கலாம். தானி 11:37ல், அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமல் என்றிருப்பதால் அவன் யூதனாக இருக்கலாம், அப்படியானால் அவன் ரோம, கிரேக்க, யூத வம்சங்களின் கலப்பினனாக இருக்கலாம், ஹிட்லர் தன் யூத வம்ச தொடர்பினை மறைத்து தன்னை ஆரியன். என்றது போல இவனும் தன் யூத தொடர்பினை மறைக்கலாம். வெளி, 7ல் குறிப்பிட்டுள்ள 12 கோத்திரங்களில் தாண் கோத்திரம் விடப்பட்டதாலும், ஆதி. 49:17ல் யாக்கோபு அவனை சர்ப்பமென்றும், விரியன் என்றும் சொன்னதால் அவன் தாண் கோத்திரத்தானாகத்தான் இருப்பான் என்ற கருத்தும் உண்டு. யூதனாகத்தான் இருப்பான் என்பதற்கான இன்னொரு வாதம் என்னவென்றால், கிறிஸ்து யூதகுலமானபடியால் அந்திக்கிறிஸ்துவும் யூதனாகவே இருப்பான் என்பதே.

சமுத்திரம் தேசங்களைக் குறிக்கும், யோவானும் தானியேலும் ராஜ்யங்களை மிருகங்களாகவே தரிசித்தனர். தானி7:3ல் நான்கு மிருகங்கள் சமுத்திரத்தினின்று, அதாவது உலக ராஜ்யங்களிலிருந்து எழும்பின, தானி. 7:8ல் உள்ள சின்னக்கொம்பு தான் அந்திக்கிறிஸ்து.

வ2 இந்த வசனம் தானி. 7ல் கூறப்பட்டுள்ளதற்கு இணையானது. தானியேல் நடக்கப் போகிறவைகளைக் கூறினான். யோவானோ நடந்து முடிந்த ராஜ்யங்களைக் கூறினான். சிறுத்தை வெகுவேகமாக ஓடும், கிரேக்க சாம்ராஜ்யம் வெகு சீக்கிரத்தில் உலகத்தின் பல ராஜ்யங்களை வென்று சாம்ராஜ்யமானது. கால்கள் கரடியின் கால்கள், கரடி மேதிய பெர்சிய ராஜ்யங்களைக் குறிக்கும் கரடியின் கால்கள் பலத்தையும் ஸ்திரத்தன்மையையும் குறிக்கும்.

சிங்கம் வல்லமை வாய்ந்த பாபிலோன் சாம்ராஜ்யத்தைக் குறிக்கும், இவையனைத்தின் சிறப்புகளையும் உடையவனாக அந்திக்கிறிஸ்து இருப்பான். வெகுசீக்கிரத்தில் அனைவரையும் மேற்கொள்ளுவான்; பெருமையானவைகளைப் பேசுவான்; இயேசுவின் இரண்டாம் வருகைக்குமுன் இவனே கடைசி உலக சர்வாதிகாரியாயிருப்பான். வலுசர்ப்பம் (சாத்தான்) இவனுக்கு தன் சிங்காசனத்தையும், தன் பலத்தையும், மிகுந்த அதிகாரத்தையும் கொடுப்பான்.

வ3,4 மிருகத்தின் ஏழு தலைகளிலொன்று சாவுக்கேதுவாக காயப்பட்டிருந்தது, அது அற்புதமாக சொஸ்தமாக்கப்பட்டது. இந்த அற்புதத்தைக்கண்ட பூமியின் ஜனங்கள் யாவரும் அந்த மிருகத்தைப் பின்பற்றி, மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். மிருகம் நிகரற்றது என்று சொல்லி மிருகத்தையும் வணங்கினார்கள். தேவன் கொடிய வஞ்சகத்தை அனுப்பியிருக்கிறார் என்பதை பூலோகத்தார் அறியவில்லை.

வ5-9 பெருமையானவைகளைப் பேசும் வாய் மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டது, அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது, அல்லாமலும் நாற்பத்திரண்டு மாதம் (துன்ப காலத்தின் இரண்டாம் கட்டத்தில்) யுத்தம் பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது, மேலும் பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும், பாஷைக்காரர் மேலும், ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 

(வ7) இந்த வசனத்தில் இரண்டு முறையும், இந்தப்பகுதியில் ஐந்து முறையும் “அதிகாரம் கொடுக்கப்பட்டது” என்று வருகிறது, பிசாசு ஏவாளை வஞ்சித்து உலகத்தின் மேலுள்ள ஆளுகையையும், அதிகாரத்தையும் பறித்துக்கொண்டது என்றாலும், தேவ பிள்ளைகள்மேல் அதற்கு அதிகாரம் கிடையாது, தேவனிடத்தில் உத்தரவு பெற்றே அவர்களைத் தொட முடியும், சோதிக்க முடியும், யோபு 1:12ம் லூக்கா 22:31ம் இதை விளக்குகின்றன. இரட்சிக்கப்பட்டு, ஜீவ புத்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள் இந்த உண்மையை அறிந்தபடியினால் சாத்தானையோ, மிருகத்தையோ வணங்க மாட்டார்கள். ஆட்டுக்குட்டியின் ஜீவபுத்தகத்தில் பேரெழுதப்படாத மற்றவர்கள், சாத்தான் பரிசுத்தவான்களை ஜெயித்ததைக் கண்டு, அவனை வணங்குவார்கள். உலகம் உண்டாவதற்கு முன்னரே தேவ திட்டம் ஒன்றிருந்தது. தேவசாயலில் மனிதனை உருவாக்கி பூமியில் வாழவைக்க 'வேண்டும்.அவன் பாவம்செய்து பாவத்திற்கும், சாத்தானுக்கும் அடிமையாவான். அவனால் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. மனிதனை விடுவிக்க இயேசு மனிதனாகப் பிறந்து, குற்ற நிவாரண பலியாக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து, பரிசுத்த ரத்தம்  சிந்தி மீட்க வேண்டும் என்பதே அந்த திட்டம்.

சாத்தானுக்கு உலகத்திலுள்ள எல்லார் மேலும் அதிகாரம் இருந்தாலும், எல்லாரும் அவனை வணங்க மாட்டார்கள். இரட்சிக்கப்பட்ட 1,44,000 யூதர்கள் அறிவித்த சுவிசேஷத்தினால் ஒருவனும் எண்ணக்கூடாத அளவு ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு பரலோகம் வந்ததை வெளி, 7:9லிருந்து அறிகிறோம்.

ஒரு சகோதரியை தன்னோடு ஆலயத்திற்கு வர ஒரு விசுவாசி அழைத்தாள். அதற்கு அவள், “உங்கள் ஆலயத்தில் தொட்டுக் கும்பிட ஒன்றுமில்லையே! நான் வரமாட்டேன்! என்றாள், தாங்கள் கண்டு தொட்டு ஆராதிக்கக் கூடிய ஒரு தேவனையே ஜனங்கள் விரும்புவதால், ஏதோ ஒன்றை தெய்வமாக்கி வணங்குகிறார்கள் (இவர்களுக்கு சத்தியத்தை சொல்வது யார்?நீங்களும் நானும் தானே!) சாத்தானும் இவர்களை இழுத்துக்கொள்ள மிருகத்தின் சொரூபத்தைச் செய்து ஆலயத்தில் வைத்து ஜனங்கள் அதை வணங்கச் செய்வான். இது தேவனுடைய கற்பனைக்கு விரோதமானது!

காதுள்ளவன் கேட்கக்கடவன். இது நாம் அடிக்கடி கேட்ட வசனம் தான் (மத். 11:15; 13:9; மாற், 4:9லூக்கா 8:8; 14:35; வெளி, 2:7, 11, 17, 29, 3:6, 13, 22, 13:9)

இயேசு முக்கியமான சத்தியத்தை அழுத்திக்கூற இவ்வாறு சொல்வார். விருப்பத்தோடு கேட்டு, இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அதைக் கடைப்பிடியுங்கள் என்பதே அதன் அர்த்தம்,

வ10: சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப் போவான்; பட்டயத்தினால் கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும், பரிசுத்தவான்களுடைய பொறுமையும், விசுவாசமும் இதிலே விளங்கும். உபத்திரவக்காலத்திலே சிறைப்படுத்தப்படுகிற விசுவாசிகள் பொறுமையோடும், தேவன் பார்த்துக்கொள்வார் என்கிற விசுவாசத்தோடும் சிறைப்பட்டுப்போக வேண்டும். எதிர்த்து போராடக் கூடாது, பட்டயத்தினால் கொல்லப்படுகிறவன் தேவன் பார்த்துகொள்வார் என்கிற விசுவாசத்தோடே, தான் கொல்லப்பட 'தேவனுக்கு ஒப்புக்கொடுத்து விட வேண்டும். எத்தனையோ விசுவாசிகள், தேவன் நீதியுள்ள நியாயாதிபதியென்றறிந்து சந்தோஷமாய் பாடிக்கொண்டே மரித்தார்கள். நாமும் இதே விசுவாசத்தோடே உபத்திரவங்களை எதிர் கொள்ள வேண்டும். பவுலும் இதே காரியத்தை 2 தெச. 1:6ல், “உங்களை ௨பத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரப்படுகிற உங்களுக்கு எங்களோடே கூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே” என்று சொல்லி விசுவாசிகளை உற்சாகப்படுத்தினான்...

வ 11 - 18 மிருகமாகிய கள்ளத்தீர்க்கதரிசி:

வ11 பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து வலுசர்ப்பத்தைப் போலப் பேசினது. சாத்தான், அந்திக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி - இம்மூவருமே சாத்தானின் திரித்துவம்

பூமியிலிருந்து எழும்பி வந்த மிருகமே கள்ளத்தீர்க்கதரிசி. அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இருந்தது, மனிதனுக்கு ஏதோ ஒரு கடவுளை வணங்காமல் இருக்க முடியாது, ஆகவே எந்த சர்வாதிகாரியானாலும், அரசாங்கமானாலும் கடவுளை வணங்க மனிதனுக்கு ஒரு வழி ஏற்படுத்த வேண்டும், அதனால் தான் அந்திக்கிறிஸ்துவாகிய மிருகமும் வேசி மார்க்கமாகிய இரத்தாம்பரம் உடுத்திய வேசியை சுமந்துகொண்டிருந்தது. அந்திக்கிறிஸ்து தன் ராஜ்யத்தை திடப்படுத்தும் வரை, அந்த வேசி மார்க்கத்திற்கு தன் ஆட்சியில் அதிகாரம் கொடுத்திருந்தான். துன்பக்காலத்தின் மத்தியில், அந்திக்கிறிஸ்து தான் சுமந்து கொண்டிருந்த அந்த ஸ்திரியைப் பகைத்து, பாழும் நிர்வாணமுமாக்கி நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவான் (வெளி. 17:16); அதாவது அந்த வேசியின் அதிகாரத்தை உரிந்து கொண்டு, அந்த; மார்க்கத்தையும் அழித்துப் போடுவான். 
   
அது வலுசர்ப்பத்தைப் போல பேசும், பார்ப்பதற்கு சாதுவான ஆட்டுக்குட்டி, ஆனால் உள்ளமெல்லாம் சாத்தானின் வஞ்சகமும் கபடமும் நிறைந்திருந்தது. அதன் வேலை அந்திக்கிறிஸ்துவை அனைவரும் வணங்கச் செய்வது. அது முந்தின மிருகத்தின் (அந்திக்கிறிஸ்துவின்) அதிகாரம்முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதன் குடிகளும் வணங்கும்படி செய்தது (வெளி, 13:12). எலியா வானத்திலிருந்து அக்கினி இறக்கினது போல,கள்ளத்தீர்க்கதரிசியும் மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து அக்கினியை இறங்கப் பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட வல்லமையினாலே., பூமியின் குடிகளை மோசம் போக்க, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு (அந்திக் கிறிஸ்துவுக்கு) ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று, ஒரு கள்ளத் தீர்க்கதரிசியால் வானத்திலிருந்து அக்கினியை இறக்க முடியுமா? முடியாது தான் ஆனால் தேவ அனுமதி கிடைத்தால் முடியுமே? கள்ளத்தீர்க்கதரிசிக்குள் இருப்பது அவனுடைய வல்லமையல்ல. அது அவனுக்குள்ளிருக்கும் சாத்தானின் வல்லமை, யோபு 1:16ல் “வேறொருவன் வந்து வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும், வேலையாட்களையும் சுட்டெரித்துப் போட்டது” என்றான். ஆனால் அது தேவனுடைய அக்கினி அல்ல, சாத்தான் தேவனுடைய அனுமதியுடன் இறக்கின அக்கினி, அதுபோலவே இதுவும் சாத்தானின் வல்லமையினால் இறக்கப்பட்ட அக்கினி, ஆனால் பூமியில் உள்ளவர்களோ இது தேவ வல்லமை என நினைத்தார்கள். இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள், தேவனுடைய செயல் என்பதற்கு ஒரு அத்தாட்சி அல்ல. ஆகையால் "அற்புதம் செய்கிற ஊழியக்காரர் அனைவரும் தேவனுடைய ஆவியால் செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அந்த ஊழியக்க்காரனின் வாழ்க்கையும், போதனையும், தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதே முக்கியமேயொழிய அடையாளங்களும், அற்புதங்களுமல்ல, மாற்கு 16:20 இதைத் தெளிவுபடுத்துகிறது.

“அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள், கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்.” வசனமே சிறந்த அடையாளம்.

வ15 மேலும் அம்மிருகத்தின் சொரூபம், பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை: வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், இம்மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்கு சத்துவம் கொடுக்கப்பட்டது சாத்தான் கொடுத்த வல்லமையால், கள்ளத்தீர்க்கதரிசி மிருகத்திற்கு ஆவியை (உயிரை)க்கொடுத்து அதைப் பேச வைத்தது.

இன்றைக்கு ஊழியக்காரர்கள் ஜெப கோபுரங்களிலும் ஜெபமையங்களிலும். கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி தேவைகளுக்கேற்ப ஜெபிக்கச் செய்கிறார்கள். கடன் பிரச்னையா? எண் மூன்றை அழுத்தவும், உடனே கம்ப்யூட்டர், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த ஜெபத்தைச் சொல்லும். குடும்பத்தில் சமாதானம் இல்லையா? எண் 1ஐ அழுத்தவும். இப்படி, பல பிரச்னைகளுக்கு பல எண்கள் உண்டு.

ஆனால் இந்த ஜெபங்கள் உண்மையான கரிசனையோடும், கண்ணீரோடும், மனதுருக்கத்தோடும் ஜெபிக்கப்பட்டவை அல்ல. 'ரெடிமேட் ஜெபங்கள்! கள்ளத்தீர்க்கதரிசியும்' இப்படியொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சொரூபத்தைப் பேச வைக்கலாம், இதில் ஆச்சரியமொன்றுமில்லை. எவ்வளவு வல்லமையான, அற்புதங்களைச் செய்யும் ஊழியனானாலும், வேத வசனத்தின்படி வாழ்ந்து போதிக்காவிட்டால் அவன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியே, ஒரு பெண் தீர்க்கதரிசியைப் பற்றிக் கேள்விப்பட்டேன் அவள் கடந்த காலத்தைத் துல்லியமாக, சரியாகச் சொல்வாள். ஆனால் அவள் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட பாயும், ஒரு தாமரைப் பூவும் வேண்டும். இது வேதத்திற்கு முற்றிலும் முரண்பாடானது, இப்படிப்பட்டவர்களுக்கு நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்,இவர்கள் மந்தையைத் தப்பவிடாதகொடிய (ஆட்டுத்தோல் போர்த்த) ஓநாய்கள் என்று பவுல் (அப். 20:29) கூறுகிறான், பேதுருவும் இவர்களைக்குறித்து நம்மை எச்சரிக்கிறான். 2 பே, 2:1-3 தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக் கொள்வார்களென்று சொல்லி வசனத்தால் உன்னை காத்துக்கொள் என்கிறான்...

வ16-18 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், திரித்திரர், சுயாதினர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள். வலது கைகளிலாவது, நெற்றிகளிலாவது, ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது, அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது' தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும், விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுள்ளவன் கணக்குப் பார்க்கக்கடவன் அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கறது. அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு (666).

எளியவனோ, பணக்காரனோ, படித்தவனோ, படிக்காதவனோ,  சிறியவனோ, பெரியவனோ யாராயிருந்தாலும் முத்திரையைத் தரித்துக் கொள்ள வேண்டும். விதிவிலக்கே கிடையாது.

வலது கை, நெற்றி: விஞ்ஞானிகள் இந்த இரு இடங்களிலும் குத்தும் முத்திரை நகர்வதுமில்லை, அழிந்து போவதுமில்லை என்கிறார்கள். மைக்ரோசிப் போன்றவை பொருத்துவதற்கும் இவை இரண்டுமே ஏற்ற இடங்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்

முத்திரையில்லாமல் வாங்கவும் விற்கவும் முடியாது இது தாங்க முடியாத கொடுமை இந்த சூழ்நிலையில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்... உங்கள் கைக்குழந்தைக்கு கொடிய காய்ச்சல். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், ஆட்டோவையோ, டாக்சியையோ கூப்பிடுகிறீர்கள், முத்திரையிருந்தால். வருகிறேன்... இல்லையென்றால் முடியாது என்கிறான். என்ன செய்வீர்கள்? தேவனுக்கு என் நிலை தெரியும் என்று சொல்லி முத்திரை குத்திக்கொள்ளுவீர்களா? 

மருத்துவமனைக்குச் சென்றால் முத்திரையிருந்தால் குழந்தைக்குச் சிகிச்சை, இல்லை என்றால் முடியாது, முத்திரை குத்துவீர்களா அல்லது குழந்தை சாகட்டும் என்பீர்களா? கொடிய இக்கட்டு! பிள்ளைக்குப் பாலோ, உணவோ வாங்க முடியாது; பிள்ளை அழுகிறது. என்ன செய்வீர்கள்? அதனால்தான் இயேசு மத், 24:19ல் “அந்நாட்களி லே (அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிகாலத்திலே) கர்ப்பவதிகளுக்கும், பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! என்றார். விசுவாச துரோகம் கண்டிப்பாக நடக்கும், இயேசுவை உண்மையாய் விசுவாசிக்கிறவர்களே முத்திரையை தரிக்க மறுத்து இரத்த சாட்சிகளாய் மரித்து, தங்கள் மரணத்தினால் சாத்தானை ஜெயிப்பார்கள், (வெளி, 12:11)

வ18: அந்த மிருகத்தின் இலக்கம் அறுநூற்றறுபத்தாறு 666. இது ஒரு ரகசியக் குறியீடு 

இதுவரை ஒருவரும் இந்த ரகசியப் புதிரை முழுமையாய் விடுவிக்கவில்லை, புதிரை அவிழ்க்க இதுவரை ஒருவராலும் முடியாதிருக்கிறது, ஆகையால் இதுதான் அந்தப்புதிருக்கு விடை என்று திட்டமாக எதுவும் கூற முடியாததால், விடை காணும் நம் முயற்சியை விட்டுவிடலாம், பெயரின் எழுத்துகளுக்கு எண்களைக்கொடுத்து, கூட்டி 666 வருகிறதா என்று பார்ப்பதுண்டு, இப்பொழுது நம்முடைய ஆதார் கார்டு எண்12 இலக்கம் கொண்டதாக இருக்கிறது 4+4+4=12.

நம் வங்கி கணக்கு எண் 5+5+5=15 என்ற 15 இலக்க எண்ணாக உள்ளது, வேதத்தில் 6 என்பது ஆறாம் நாளில் உருவாக்கப்பட்ட மனிதனின் எண்ணாகவும், 7என்பது தேவன் தம் கிரியைகளையெல்லாம் முடித்து ஓய்ந்திருந்த பூரணத்தைக் குறிக்கும் தேவனின் எண்ணாகவும் கருதப்படுகிறது, ஆகவே இது உலகத்திலுள்ள மனிதர்கள் யாவரையும் தொகையிட அந்திக்கிறிஸ்து உபயோகிக்கப் போகும் 6+6+6=18 இலக்க எண்ணாகவும் இருக்கலாம், எது எப்படி இருந்தாலும், நாம் அந்த முத்திரயை தரிக்க வேண்டிய சோதனை காலத்திற்குத் தப்பித்துக்கொள்ள தேவனிடம் எல்லா விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.

Author: Rev. S.C. EdisonTopics: Tamil Reference Bible Revelation bible study Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download