கிரியையில்லா விசுவாசம் செத்தது என்று யாக்கோபு கூறுகிறார். விசுவாசமில்லாமல் தேவனை பிரியப்படுத்துவது கூடாத காரியம் (எபிரேயர் 11:6). விசுவாசம் இல்லாதவர்கள் எதையும் பெற்றுக்கொள்வோம் என்று ஒருநாளும் நினைக்கக்கூடாது என்றும் யாக்கோபு கூறுகிறார். நம் விசுவாசமே இந்த உலகை ஜெயிக்கிற ஜெயம். விசுவாசிக்கிறவர்களால் கூடாதது எதுவும் இல்லை என்று யோவான் கூறுகிறார். கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது என்பதைப் போன்று உங்கள் விசுவாசம் கடுகளவு இருந்தால் போதும் அதனால் எதையும் சாதிக்க முடியும் என்று இயேசு சொல்கிறார். விசுவாசம் ஒரு ஆவிக்குரிய வரம், ஆயுதம் மற்றும் கனி என்று பவுல் கூறுகிறார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைக்கிறான், மற்றும் ஆபிரகாம் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டான் என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 4:3). விசுவாசம் அது நமது சுவாசம் என்று சகோ. எமில் ஜெபசிங் பாடுகிறார். விசுவாசத்தினாலே இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறோம். விசுவாசம் என்றால் நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது என்றும், விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும் இயேசு என்றும் எபிரேய நிருபத்தை எழுதியவர் கூறுகிறார். தேவனுடைய ராஜ்ஜியம் உங்கள் அருகில் வந்துவிட்டது, மனந்திரும்பி விசுவாசித்தால் அது உங்களுடையதாயிருக்கும் என்று இயேசு தனது முதல் செய்தியாக பிரசங்கித்தார்.
கடவுள் மனிதனிடம் எதிர்பார்க்கும் அடிப்படை காரியம் விசுவாசம். ‘உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது’ என்று இயேசு விசுவாசித்தவர்களின் பலனை அவர்களுக்கு அளித்து அவர்களின் விசுவாசத்தை ஊக்கப்படுத்தினார். நாம் அனைவரும் ‘விசுவாசிகள்’ என்னும் பெயருக்கேற்றபடி வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். விசுவாச வளர்ச்சிக்குத் தேவையான வேதகல்வி, தியானம், ஜெபம், பரிந்துரை, உபவாசம் மற்றும் ஈகை போன்ற அனைத்திலும் ஈடுபடுகிறோம். விசுவாசம் என்பது கடவுளை நான் நம்புகிறேன் என்பதை அறிக்கை செய்வது. விசுவாசம் என்பது கடவுளோடு வாழ்வேன் மற்றும் அவரையே சார்ந்திருப்பேன் என்று சத்தியம் செய்து வாக்கு கொடுப்பது. விசுவாசம் என்பது விசுவாசிக்கப்படுகிறவரை பிரியப்படுத்தி அவருக்கு முழுமையாக கீழ்படிந்து வாழ அர்ப்பணிப்பது. கடவுள் மனிதர்களுக்கு சொல்லும் பிரதான கட்டளை ‘ஈன்றெடுத்தவரை சார்ந்திருப்பது’ என்பதே. இக்கட்டளையில் அன்பு, நம்புதல், கீழ்படிதல் மற்றும் இறுதிவரை நிலைத்திருத்தல் போன்றவைகள் அடங்கியிருக்கிறது.
விசுவாசத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்தந்த நோக்கத்திற்காக விசுவாசத்திற்கு ஏற்ற கிரியைகள் இருக்கவேண்டும். விசுவாசத்துடனான கிரியைதான் கடவுளின் கரங்களை அசைக்கின்றது, அவரது சித்தங்களை தீர்மானிக்கிறது, அது தான் கடவுள் நம்மை நேசிக்க ஏதுவாக இருக்கிறது என்று தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது. காரணம் நமது விசுவாசம் மற்றும் கிரியைகளைக் காட்டிலும் கடவுளது அன்பும், சித்தமும் பெரியது. அவர் தன்னிச்சையாக செயல்படுகிறவர். அவரை செயல்படவைக்கும் உபகரணங்கள் என்று உலகில் ஏதும் இல்லை. கடவுளை செயல்படவைக்கும் உபகரணம் இவ்வுலகில் இருக்குமானால் அது கடவுளைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். அவரைவிட உலகில் உயர்ந்தவர் யாரும் இல்லை. கடவுள் சொல்வதே வேதம். அவர் செய்வதே நீதி. அவருடைய கிரியையெல்லாம் அவரது திட்டம். கடவுளை விசுவாசிப்பதை செயல்வடிவில் காட்டுவது விசுவாசத்தின் கிரியை. கிரியை விசுவாசத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
விசுவாசிக்கப்படுகிறவர் கேட்கும் கிரியை
நாம் கடவுளை விசுவாசிக்கிறோம். அவரை நாம் விசுவாசிப்பதை வெளிப்படுத்த சிலவற்றை எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்ப்பதை செய்வதே மெய்யான கிரியை. கடவுள் என்னென்ன கிரியைகளை விசுவாசத்துடன் எதிர்பார்த்தார் என்பதை அவரே நேரடியாக அல்லது ஊழியர்கள் மூலம் சொன்னதையும் அதன்படி செய்தவர்களின் கிரியைகளையும் பின்வரும் சில சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுகிறது.
இப்படியாக கடவுள் சொன்ன வார்த்தைகளை நம்பியவர்கள் அதற்கேற்ற கிரியையை செய்ததனால் அவர்களின் விசுவாசத்திகேற்ற பலனைப் பெற்றுக்கொண்டார்கள். எதை விசுவாசிக்கிறோமோ அது கேட்கும் கிரியைகளை செய்யவேண்டும். யுத்தம் என்னுடையது, நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்று சொன்ன வார்த்தையின் படி மக்கள் சும்மா இருப்பதையே கடவுள் கிரியையாக எதிர்பார்க்கிறார். எரிகோவை தகர்க்க பானையை உடையுங்கள் என்ற வார்த்தையை நம்பி கீழ்படிந்தார்கள். எரிகோ இஸ்ரவேல் வசமானது. செங்கடலை உன் கோலால் அடி என்ற வார்த்தையை நம்பி கிரியை செய்த மோசே, கடல் இரண்டாக பிரிந்ததை பார்த்தான். எதற்கு நாம் விசுவாசிக்கிறோமோ அதற்கேற்ற கிரியைகளையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அதை செய்யும் போது அவர் நாம் விசுவாசிப்பதை அருளுகிறார்.
விசுவாசத்துடன் தீர்மானிக்கும் கிரியை
விசுவாசிப்பவர்கள் சில கிரியைகளை செய்ய தீர்மானிப்பது வழக்கம். அப்படி செய்யத் தீர்மானித்த கிரியைகளை செய்வதை கடவுள் கணப்படுத்துகிறார். அந்த கிரியையும் அந்த விசுவாசத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். தீர்மானித்த கிரியையை கட்டாயம் செய்யவும் வேண்டும். அப்படி தங்களுடைய விசுவாசத்திற்கேற்ற கிரியையை தாங்களே தீர்மானித்தவர்களின் தீர்மானங்களையும் அதனால் அவர்கள் விசுவாசித்ததைப் பெற்றுக்கொண்டதையும் சில உதாரணங்களையும் கீழே காணாலாம்:
கடவுள் நமக்கு விசுவாசத்தை மாத்திரம் கொடுக்காமல் அதற்கான கிரியைகளை தீர்மானிக்கும் ஞானத்தையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறார். ஞானமும் தைரியமும் இருக்கும்பட்சத்தில் நாம் விசுவாத்திற்கேற்ற கிரியையை செய்வதற்கு தயக்கமும் பயமும் ஏன்? தங்களுடைய விசுவாசத்திற்கேற்ற கிரியைகளை செய்தவர்களின் பட்டியலை எபிரேயர் 11ம் அதிகாரத்தில் காணலாம்: விசுவாசத்தினாலே, ஆபேல் காயினைவிட மேலான காணிக்கை கொடுத்தான், மோசே தன் மக்களுடன் துண்புறுவதை ஏற்றுக்கொண்டான், அத்துடன் பலர் தங்கள் விசுவாசத்திற்கேற்ற பாடுகள், உபத்திரவங்கள், நிந்தைகள், இழப்புகள் ஏற்றுக்கொண்டார்கள். இன்றைக்கு அவர்கள் விசுவாச வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் நமக்கு முன்மாதிரிகளாக மேகம் போன்று திரளாயிருக்கிறார்கள்.
விசுவாசத்திற்கேற்ற கிரியையை செய்யாதிருத்தல்
விசுவாசத்திற்கேற்ற கிரியையை சொல்லியும் அல்லது தீர்மானித்தும் செய்யாதவர்கள் அவர்கள் விசுவாசித்ததைப் பெற்றுக்கொள்ள முடியாது. தங்களுடைய விசுவாசத்திற்கு ஏற்ற கிரியை செய்யாமல் தங்களுடைய விசுவாசப் பலனைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அநேகர் நம்மை எச்சரிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு போதகர் தன்னுடைய பழைய இரண்டு சக்கர வாகனத்தை விற்றுவிட்டு இனி கடவுள் எனக்கு இரண்டு சக்கர வாகனம் கொடுக்கும்வரை நானாக எந்த வாகனத்தையும் வாங்க மாட்டேன் என்றார். சில நாட்களிலேயே ஒரு நாள் புது இரண்டு சக்கர வாகனத்தை லோன் போட்டு வாங்கிவந்தார். வாகனம் இல்லாமல் ஊழியம் செய்ய முடியவில்லை என்று அதற்கு விளக்கம் கொடுத்தார். அநேக ஊழியர்கள் கடவுளை நம்பி கடன் வாங்குகிறார்கள். கடவுள் தனது சபையை கட்;ட இவர்களை கடன்வாங்க அனுமதிப்பாரா? கடவுளின் ஊழியத்தை அவர் கொடுக்கும் மூலதனங்களால்தானே செய்ய வேண்டும்? நம்முடைய மூலதனத்திலா கடவுள் தனது பணியை நிறைவேற்றிக்கொள்வார்? கடவுளை நம்புவோர் அதற்கான ஞானமுள்ள மற்றும் அதற்கு ஏற்ற கிரியையை மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு மாறாக செய்யப்படும் எந்த கிரியைக்கும் அவர் பொறுப்பெடுக்க மாட்டார் என்பதே உண்மை. நம்முடைய விசுவாசத்திற்கேற்ற கிரியை என்னவென்று கடவுளிடம் கேட்க வேண்டும், அல்லது அவர் கொடுத்த ஞானத்தில் அதை கண்டுபிடிக்க வேண்டும், மாறாக அதற்கான கிரியையோ அல்லது அதற்கு எதிரான கிரியையையோ செய்தால் நமது விசுவாசம் வீணாகிவிடும். இப்படி வீணான விசுவாசம் ஏராளம். அவைகளில் சில உதராணங்களை கீழே காணலாம்.
இயேசு கடலின் மேல் நடந்து வந்தபோது, பேதுரு தானும் நடக்க வேண்டும் என்று கேட்டான். அதன்படி இயேசு அவனை நடக்கச் சொன்னார். அவன் நடக்கும் போது அலைகளைக் கண்டு பயந்தான். விசுவாசத்திற்கு எதிரான அவனது பயம் அவனை கடல் நீரினில் மூழ்கடித்தது. அலறினான். இயேசு அவனுடைய விசுவாசத்தை கடிந்துகொண்டார். மத்தேயு 14:22-33.
இயேசுவும் அவரது சீடர்களும் படகில் பயணம் செய்தபோது, இயேசு சற்று இளைப்பாறினார். அப்போது ஏற்பட்ட காற்றையும் புயலையும் கண்ட சீடர்கள் நாங்கள் மடிகிறோம் என்று அலறினார்கள். இயேசு அவர்களின் விசுவாசமின்யையும் அவர்களின் அவிசுவாச கிரியைகளையும் கண்டு வேதனை அடைந்தார். மாற்கு 4:35-41.
சீடர்கள் இயேசுவிடம் நாங்கள் எப்பொழுதும் உம்முடனே இருப்போம், உம்மைக் காட்டிக்கொடுக்க மாட்டோம், நாங்கள் உம்மோடேகூட மரிக்கவும் ஆயத்தமாயிக்கிறோம் என்றார்கள். ஆனால் அவர்களின் விசுவாசக் கிரியைகள் அவர்களுடைய சொல்லுக்கு மாறாக இருந்தது. அதனால் இயேசுவின் உயிர்த்தெழுதலை அவர்கள் முதலாவது காணமுடியவில்லை. பயந்து ஒளிந்துகொண்டிருந்தார்கள்.
நல்லப் போதகரே என்று அழைத்து, நித்திய ஜீவனுக்கு வழி கேட்ட வாலிபன் தனது விசுவாசத்திற்கேற்ற கிரியை செய்யாமல் சென்றதால் துக்கத்துடனே சென்றான். லூக்கா18:18-30.
அனனியா சப்பிராள் தங்களது விசுவாசத்திற்கேற்ற கிரியை செய்யாமல், தங்களுடைய சொத்துக்களை விற்றப்பின்பு அவைகளை தங்களுக்கென ஒளித்துவைத்ததினால் அவர்கள் சாபத்திற்கான மரணத்தை அடைந்தார்கள். அப்போஸ்தலர் 5: 1-11.
விசுவாசத்திற்கேற்ற கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது. அந்த விசுவாசத்தால் எந்த நன்மையும் பலனும் இல்லை. நமது விசுவாசத்திற்கு ஏற்ற கிரியையை நாம் செய்ய வேண்டும். நான் கடன் வாங்கமாட்டேன், கடவுள் என் தேவையை சந்திப்பார், நான் அதுவரை யாரிடமும் போய் நிற்கமாட்டேன் என்று விசுவாசித்தால் அப்படியே கடைசிவரை காத்திருக்க வேண்டும். கடவுள் கடைசி நிமிடம் வரை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவிற்கு பொறுமை காத்ததுபோல பல நேரங்களில் நமது விசுவாசத்தின் கிரியையில் நாம் பூரணப்படுகிறோமா அதில் நிலைத்திருக்கிறோமா என்று நமக்காக காத்திருக்கிறார். அநேக நேரம் அந்த காத்திருப்பில் பொறுமை இழந்ததினால் அரும்பெரும் காரியங்களை இழந்திருக்கிறோம். கடவுளின் அற்புதங்களை பெறாமல் இருந்திருக்கிறோம். ஒரு விநாடி தவறுதலுக்காக பல காலமாக அதன் கஷ்டத்தை அனுபவிக்கிறோம். விசுவாசம் பொறுமையை உண்டாக்க வேண்டும். விசுவாசம் என்பது ஒரு பயிற்சி. அப்பயிற்சி சாதாரணமாக வந்துவிடுவதில்லை. அதற்கு கடினமாக பாடுபடவேண்டும். பாடுகள் நமக்கு பொறுமையை உண்டாக்குகிறது என்று பவுல் கூறுகிறார். ரோமர் 5:3-4. விசுவாசத்தை பல பாடுகள் ஊடே வென்றவர்களே விசுவாச வீரர்கள். நாமும் விசுவாசத்தில் வீரர்களாக விசுவாசத்தைப்பற்றி பேசுகிறவர்களாக மட்டுமல்ல விசுவாசத்திற்கேற்ற கிரியைகளையும் செய்து விசுவாசத்தில் பூரணப்படுவோம். விசுவாசத்தை முடிக்கிறவர் நம்முடன் இருக்கிறார். அவர் நமக்கு அப்படியே உதவிசெய்வார். நீங்கள் விசுவாசிப்பதே கிரியையாக இருக்கிறது என்று இயேசு கூறுகிறார் (யோவான் 6:27). நமது விசுவாசத்தையே கிரியையாக கடவுள் ஏற்றுக்கொள்கிறார்.
Author: Rev. Dr. C. Rajasekaran