பெரும்பாலான கலாச்சாரங்களில், எழுதப்படாத சட்டங்கள், விதிமுறைகள் அல்லது நெறிமுறைகள் உள்ளன. ஒரு நாட்டின் அரசாங்கத்தின் தலைவர் உல்லாச ஊர்தியில் (limousine) வரும்போது, அவர் இறங்குவதற்குக் கதவைத் திறக்க காவலர்கள் இருப்பார்கள்; அவர்கள் ஓடோடி வந்து திறப்பார்கள். மற்றொரு உதாரணமாக, ஒரு மனைவி தன் கணவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும், உணவை பறிமாறி விட்டு, பிறகு அவள் உணவை உட்கொள்ள வேண்டும். இப்படியாக, பண்டைய இஸ்ரவேலில், நீண்ட நடைப்பயணத்திற்குப் பிறகு, விருந்தினர்கள் வீட்டிற்குள் நுழையும் போது, அடிமைகள் அவர்களின் கால்களைக் கழுவுவார்கள். பன்னிரண்டு சீஷர்களும் கர்த்தராகிய ஆண்டவரும் கடைசி இராப்போஜனத்திற்குத் தயாராக இருந்த அறைக்குள் நுழைந்தனர். அனேகமாக, தண்ணீர் மற்றும் துண்டுகள் இருந்தன, ஆனால் கழுவுவதற்கு யாரும் இல்லை. சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, தங்கள் கால்களைக் கழுவுவதற்கு ஏன் அடிமை இல்லை? என்பதாக நினைத்தனர். ஒரு பணிவிடைக்காரன் தன் வேலையைச் சரியாகச் செய்யவில்லை; அது ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடு (யோவான் 13:1-7).
வேலைக்காரனின் வடிவம்:
அந்தச் சூழலில், ஆண்டவர் துண்டைக் கட்டிக்கொண்டு, பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் நிரப்பி, சீஷர்களின் பாதங்களை ஒவ்வொன்றாகக் கழுவத் தொடங்குகிறார். பன்னிரண்டு பேரில், ஒருவர் தன்னார்வத் தொண்டு செய்திருக்கலாம், ஆனால் யாரும் செய்யவில்லை.
பணிவு:
ஒரு அடிமையின் சேவை ஒரு தாழ்மையான பணி மற்றும் ஒரு சராசரி வேலை. இந்த வேலையைச் செய்வது தங்களுடைய கண்ணியத்திற்கும் அந்தஸ்துக்கும் குறைவானது என்று சீஷர்கள் நினைத்தார்களோ தெரியவில்லை. அவர்கள் இந்த வேலையைச் செய்யத் தேர்ந்தெடுத்தால் அவர்களின் மரியாதை மற்றும் கௌரவம் பாதிக்கப்படும் என நினைத்திருக்கலாம். ஆயினும்கூட, பிறருக்குச் சேவை செய்வதும், அதனால் கைகளை அழுக்காவதும் அற்பமானதல்ல, உன்னதமான சேவை என்பதை கர்த்தராகிய ஆண்டவர் எடுத்துக் காட்டினார். தேவராஜ்ய மதிப்புகள் மனித, கலாச்சார அல்லது உலக மதிப்புகளுடன் முரண்படுகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
போட்டி இல்லை:
அத்தகைய சேவைக்கு போட்டி இல்லை. தனித்து நின்று செய்து கர்த்தராகிய ஆண்டவர் வெற்றி பெற்றார். உயர் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள், தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதை ஏன் தெரிவு செய்ய வேண்டும்? நல்ல பாதுகாப்பான மற்றும் சொகுசாக வாழ்ந்தவர்கள், எவ்வித வசதியும் இல்லாத, தண்ணீர் அல்லது மின்சாரம் இல்லாத தொலைதூர இடங்களுக்கு மக்களுக்கு ஊழியம் செய்ய செல்கிறார்கள். சேவை செய்ய சபையோடு போட்டிப்போட எந்த ஸ்தாபனமோ அல்லது இயக்கமோ அல்லது அரசாங்கமோ இல்லை.
அழைப்பு:
பசியுள்ளவர்களுக்கு உணவளிக்கவும், தாகமுள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவும், அந்நியர்களுக்கு விருந்தளிக்கவும், வஸ்திரம் இல்லாதவர்களுக்கு ஆடைகளை வழங்கவும், நோயாளிகள் மற்றும் சிறையில் இருப்பவர்களைப் பார்க்கவும் தேவன் தம் சீஷர்களை அழைக்கிறார் (மத்தேயு 25:35-46). இவையெல்லாம் சாதாரணமாக செய்யக்கூடிய பணிகளே, ஆனால் பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கவும், மறக்கவும், கண்டு கொள்ளாமல் இருக்கவுமே விரும்புகிறார்கள்.
எனது எஜமானனைப் போல் நான் சேவை செய்ய விரும்புகிறேனா? சிந்திப்போம், செயல்படுவோம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்