"பற்றாக்குறையை விட உபரியை நிர்வகிப்பது எளிதானது என்பதால், உபரி இருப்பது நல்லது” என்பதாக ஒரு ஞானி கூறினார். ஆம், உபரியைக் கொண்டிருக்கும் போது, அது சரியாக நிர்வகிக்கப்பட்டால், பற்றாக்குறையின் காலத்தை சரி செய்ய முடியும். யோசேப்பின் காலத்தில் ஏழு வருடங்கள் உபரி அல்லது மகத்தான அறுவடையின் போது தானியங்களை சேகரித்து அடுத்த ஏழு வருட பஞ்சத்திற்கு சேமித்து வைக்கும் பணி நடைப்பெற்றது (ஆதியாகமம் 41:8). சோம்பேறித்தனம், வந்தபின் காப்போம் மனப்பான்மை, மந்தமான மனநிலை, அர்ப்பணிப்பு இல்லாமை ஆகியவற்றால் தேவனுடைய ராஜ்யப் பணிக்கு அதிக பற்றாக்குறை உள்ளது. இப்படியாக குறைந்தது ஏழு பற்றாக்குறைகளை வகைப்படுத்தலாம்.
தொழிலாளர் தட்டுப்பாடு:
அறுவடை மிகுதி, ஆனால் அதற்கான வேலையாட்கள் குறைவு என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார் (மத்தேயு 9:37-38). ஆட்கள் தட்டுப்பாடு திருச்சபையின் ஊழியத்திலும் நற்செய்தி அறிவிக்கப்படாத பிராந்தியங்களிலும் ஒரு நிரந்தர பிரச்சினையாகும், எனவே மாபெரும் ஆணையின் நிறைவேற்றம் தாமதமாகிறது.
தேவ வார்த்தைக்கு தட்டுப்பாடு:
கடைசி நாட்களில் தேவனுடைய வார்த்தைக்கு பஞ்சம் ஏற்படும் (ஆமோஸ் 8:11-12). இது வேதாகமம் கிடைப்பது அல்லது டிஜிட்டல் பதிப்புகளில் வேதாகமத்தை அணுகுவது பற்றியது அல்ல, மாறாக உண்மை, நேர்மை மற்றும் சத்தியத்தைப் பிரசங்கிப்பவர்கள், கற்பிப்பவர்கள் மற்றும் அறிவுறுத்துபவர்கள் என ஒரு தட்டுப்பாடு நிலவுகிறது.
நம்பிக்கைக்கான தட்டுப்பாடு:
கடைசி நாட்களில், கர்த்தர் தம்முடைய இரண்டாம் வருகையின் மகிமையில் வரும்போது, விசுவாசமுள்ள மக்கள் போதுமானவர்களாக இருப்பார்களா அல்லது தேவ பிள்ளைகள் விசுவாசமுள்ளவர்களாக இருப்பார்களா? (லூக்கா 18:7-8) என்பதே சந்தேகமாக உள்ளது.
நீதிக்கான தட்டுப்பாடு:
தேவனுடைய பரிசுத்த தராதரங்களின்படி, நீதிமான்கள் யாரும் இல்லை, ஒருவரும் கூட இல்லை (ரோமர் 3:10). நோவா தனது சமகாலத்தவர்களில் நீதியுள்ளவனாக இருந்ததைப் போல, ஒப்பீட்டளவில் சிலர் மட்டுமே மற்றவர்களை விட சிறந்தவர்களாக இருக்கிறார்கள் (ஆதியாகமம் 6:19).
பரிந்துரையாளர்களான தட்டுப்பாடு:
அழிந்துபோகும் நம்பிக்கையற்ற மக்களுக்காக திறப்பில் நின்று பரிந்து பேசக்கூடியவர் எவரும் இல்லை (எசேக்கியேல் 22:30) என்பதும் வருத்தத்திற்கு உரியதே.
ஆயத்தத்திற்கான தட்டுப்பாடு:
திருமண விழாவிற்கு அழைக்கப்பட்ட கன்னிப் பெண்களில் ஐம்பது சதவீதம் பேர் கடைசி வரை வர முடியவில்லை. ஆயத்தமின்மை அவர்களை விருந்தில் சேர தகுதியற்றதாக்கியது (மத்தேயு 25:1-13).
முன்னுரிமைக்கான தட்டுப்பாடு:
தேவ ராஜ்ஜியத்திற்காக உழைக்கிறோம் என்று சொல்பவர்கள் திருச்சபையில் ஏராளம். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ராஜ்யத்தை முன்னுரிமையாகக் கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
அவருடைய ராஜ்யப் பணிக்கு தட்டுப்பாடு இருப்பதற்கு நானும் ஒரு காரணமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்