ஜூன் 15ம் தேதி, 2024 அன்று லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க்கிற்குச் சென்ற, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஃபீனிக்ஸ் நகரில் பெண்ணின் தலைமுடியில் பேன் இருப்பதைக் கண்டதால் அவசரமாக தரையிறங்கியது. ஒரு பெண்ணின் தலைமுடியில் பேன் ஊர்ந்து செல்வதைக் கண்டதாக விமானப் பணிப்பெண்களிடம் இரண்டு பயணிகள் தெரிவித்ததாக சாட்சிகள் தெரிவித்தனர். அந்த இரண்டு சிறுமிகளும், அந்தப் பெண்ணின் தலைமுடியில் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு விமானப் பணிப்பெண்ணை எச்சரித்தார்கள் (CNBC TV18, ஆகஸ்ட் 5, 2024). பேன் என்பது சிறிய, இறக்கையற்ற பூச்சிகள், அவை மனித இரத்தத்தை உண்ணும். நெருங்கிய தொடர்பு மற்றும் உடமைகளைப் பகிர்வதன் மூலம் பேன் ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது.
எகிப்தில் பிளேக்:
தேவன் தனது ஊழியர்களான மோசே மற்றும் ஆரோன் மூலம் இஸ்ரவேல் புத்திரரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க பார்வோனுக்கு கட்டளையிட்டார். இருப்பினும், பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு, அந்தக் கடவுள் யார் என்பதை அறியக் கோரினான். தேவன் எகிப்தின் மீது தொடர்ச்சியான தீர்ப்புகளை அனுப்பினார். பத்து வாதைகள் மூலம் இறுதியில் பார்வோன் தனது சக்தியற்ற தன்மையையும் தேவனின் நீதியையும் உணர்ந்து தேவ ஜனங்களை போக அனுமதித்தான். பேன் எகிப்தில் வந்த மூன்றாவது வாதையாகும் (யாத்திராகமம் 8:17). முந்தைய இரண்டு வாதைகளைப் போலல்லாமல், இது அறிவிக்கப்படாமலும் அல்லது எச்சரிக்கையின்றியும் வந்தது.
தண்டனை:
தேவன் பேனை எகிப்தில் தண்டனைக் கருவியாகப் பயன்படுத்தினார். பொதுவாக மற்ற மனிதர்களை சுரண்டுபவர்களை இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் என்று விவரிக்கப்படுவதுண்டு. உண்மையில், எகிப்து இஸ்ரவேல் புத்திரரின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. எனவே, ஒடுக்குகிற எகிப்தியர்களின் இரத்தத்தை உறிஞ்சும் சிறிய பூச்சிகளாக தேவன் பேன்களை ஒரு வாதையாக அனுப்பினார்.
சுகாதாரமும் பீதியும்:
செழிப்பு உள்ள பல நாடுகளில், சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எகிப்தின் பூசாரிகள் சுகாதாரத்தில் மிகவும் கவனமாக இருந்தனர். பேன் காரணமாக அவர்களால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு மிருகத்தின் மீதும் பேன்கள் இருந்தன. எகிப்து கோவிலில் பாரம்பரிய பலிகள் மற்றும் தினசரி சடங்குகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தெய்வங்களால் ஊழல் மற்றும் மாசுபாட்டிலிருந்து தங்களைத் தூய்மையாக வைத்திருக்க சக்தியற்றதாக இருந்தது துயரமே.
தேவனுடைய விரல்:
மந்திரவாதிகளும் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தி அவ்வாறே செய்ய முயன்றனர். தூசியிலிருந்து பேன்கள் வரும்படியாகச் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. பேன்கள் மிருகங்களின் மீதும், ஜனங்களின் மீதும் தங்கின. தேவனின் வல்லமையால் இவ்வாறு நிகழ்ந்தது என்று மந்திரவாதிகள் பார்வோனுக்குக் கூறினார்கள். ஆனால் பார்வோன் தன் மனதைக் கடினமாக்கி அவர்கள் கூறியதைக் கேட்க மறுத்தான். (யாத்திராகமம் 8:19), பார்வோன் தனது மந்திரவாதிகளுக்கு செவிசாய்க்கவோ, யெகோவாவை கடவுளாகவும் ஆண்டவராகவும் அங்கீகரிக்கவோ விரும்பவில்லை.
பயமும் பீதியும்:
சிறிய பூச்சி போன்ற பேன்களைக் கண்டு மக்கள் பயப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் உணர்ந்து, மனந்திரும்பி, தேவனிடம் திரும்பிடத் தவறுகிறார்கள். இவை அனைத்தும் மனிதர்களுக்கு தேவன் தேவை என்பதை நினைவூட்டும் தேவனின் வழிகள் ஆகும்.
நான் வெறுமனே பீதியடைகிறேனா அல்லது தேவனைத் தேடி மனந்திரும்பி வாழ விரும்புகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்