1 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.

2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

3 திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.

4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.

5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.

6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.

7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.

8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.

9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:

10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

12 அதன்பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாள் தங்கினார்கள்.

Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.