பணக்காரர்களில் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்காக 5000 கோடி இந்திய ரூபாயை (600 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவிட்டுள்ளார். ஏறக்குறைய 30 சதவீத இந்தியர்கள் வெறும் வயிற்றில் தூங்கச் செல்லும்போது, அத்தகைய ஆடம்பரத்தை எப்படி நியாயப்படுத்த முடியும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படியாக போதித்துள்ளார்; “இயேசு தன்னை அழைத்த பரிசேயனை நோக்கி, “நீ பகலுணவோ, இரவுணவோ அளிக்கையில், உன் நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், செல்வந்தர்களாகிய அக்கம் பக்கத்தார் ஆகியோரை மட்டும் அழைக்காதே. மற்றொரு முறை அவர்கள் உன்னைத் தம்மோடு உண்ணுவதற்காக அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு உன் பலன் கிடைத்துவிடும். அதற்கு மாறாக, நீ விருந்தளிக்கும் போது, ஏழைகளையும், முடமானவர்களையும், நொண்டிகளையும், குருடர்களையும் அழைத்துக்கொள். அந்த ஏழைகள் உனக்கு மீண்டும் எதுவும் அளிக்க முடியாததால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நல்லோர் மரணத்திலிருந்து எழுகையில் உனக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்” என்றார்” (லூக்கா 14:12-14).
செல்வத்தைக் குறித்ததான விளம்பரம்:
தாங்கள் பெரும் செல்வந்தர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த திருமணம், மேலும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது இடம்பிடிக்குமே.
அநேகரைக் கவருவதற்கான விளம்பரம்:
ஆடம்பரச் செலவுகள் மற்றும் களியாட்டங்களால் செல்வத்தின் மீது ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது சில சுயநலவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
முன்னுரிமையைக் குறித்ததான விளம்பரம்:
திருமணம் மற்றும் குடும்பத்தின் மதிப்புகளை உலகிற்கு எடுத்துரைக்க அவர்கள் விரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விருந்து, நடனங்கள், கச்சேரிகள் மற்றும் பிற பொழுதுபோக்குகளில் எந்த தார்மீக மதிப்புகளையும் காட்டியதாக தெரியவில்லை.
போலி பெருந்தன்மையின் வெளிப்பாடு:
அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு லட்சக்கணக்கான மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. பணக்காரர்களுக்கு தாராள மனப்பான்மை என்பது திருப்பித் தரப்படும் என்ற எதிர்பார்ப்புடன் கூடியது, இது வெறும் போலியானது. உண்மையான தாராள மனப்பான்மை என்பது ஏழைகளை ஊக்குவித்து உயர்த்துவதும் திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்லாமல் செயல்படுவதுமாகும்.
புனித உடன்படிக்கை:
இது ஒரு பரிசுத்தமான உடன்படிக்கை என்று வேதாகமம் போதிக்கிறது. தேவன் ஆதாமை உருவாக்கினார், மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர். தேவன் ஆதாமைப் படைத்தார், ஏவாள் ஆதாமிலிருந்து படைக்கப்பட்டாள். ஆக, இருவரும் ஒரே மாம்சமாக ஆனார்கள், இது ஆச்சரியம் ஆனால் ஒரு மர்மமான ஒருமைப்பாடு, ஆம், இது ஒரு உடன்படிக்கை (ஆதியாகமம் 2:24). இது இரண்டு செல்வந்தர்கள் மற்றும் வணிகம் சார்ந்த குடும்பங்களின் கூட்டணி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
புரிந்துக் கொள்ள வேண்டிய நிஜம்:
வாழ்நாள் முழுவதற்குமான திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல், திருமண நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது சரியானது அல்ல. துரதிர்ஷ்டவசமாக, பல குடும்பங்கள் அத்தகைய ஆடம்பர திருமணத்தை தான் விரும்புகின்றன; பின்பு கடனில் மூழ்கியுள்ளன. ஆனால் உண்மையான தேவை என்னவென்றால் கர்த்தராகிய இயேசு தம்பதியினரின் ஒவ்வொரு செயலிலும் மற்றும் வாழ்நாள் முழுவதும் உடன் இருக்க வேண்டும், அவர் பிரசன்னத்தை உணர்ந்து தேவ சித்தத்தின் படி வாழ வேண்டும்.
திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை என்று நான் புரிந்துகொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்