அதிகாரம்- 12
சூரியனை அணிந்த ஸ்திரீ
Sun clad woman
‘…ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள்.’ (வச 1)
வெளிப்படுத்தல் புத்தகத்திற்கு விளக்கம் கொடுக்கும்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், யோவானுக்குக் காண்பிக்கப்பட்ட தரிசனங்கள் இனி நடக்கப்போகின்ற, அதாவது, உலகத்தின் கடைசிகாலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளைப்பற்றியதாகும்.
‘சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளை தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.’ வச 1: 1
இந்த அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக காத்திருக்கும் ஒரு பகுதியான சபை எடுத்துக்கொள்ளப்படுவது வர்ணிக்கப்பட்டுள்ளது.
மூன்று அற்புதமான பாத்திரங்கள் இந்த தரிசனத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
1. ஒரு சூரியனை அணிந்த ஸ்திரீ
2. ஒரு பெரிய வலுசர்ப்பம்
3. ஒரு ஆண்பிள்ளை.
மேலும், இந்த மூன்று பாத்திரங்களையும் கொண்ட சுவாரசியமான ஒரு நிகழ்வு நடந்தேறுதலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரங்களைப்பற்றியும் இவைகளைக்கொண்டு நடக்கும் நிகழ்வுகளைப்பற்றியும் கொடுக்கப்படும் விளக்கம், வருங்காலத்தில் நடக்கப்போகும் காரியங்களாக இருக்க வேண்டுமேயன்றி நடந்து முடிந்தவைகளாக இருக்கக்கூடாது.
1. சூரியனை அணிந்த ஸ்திரீ
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் சபை ஸ்திரீயாக வர்ணிக்கப்பட்டுள்ளது. மத்தேயு 25: 1, 2 கொரி 11: 2, எபே 5: 25- 32.
ஆகவே, இங்கு காணப்பட்ட ஸ்திரீ உலகளாவிய கிறிஸ்துவின் சபையேயாகும்.
இந்த ஸ்திரீ சூரியனை அணிந்திருக்கிறாள். சபையானது நீதியின் சூரியனாகிய கிறிஸ்துவை தரித்துக்கொள்ளும்படியாக அறிவுருத்தப்பட்டுள்ளது. சங் 84: 11, மல்கியா 4: 2, ரோமர் 13: 14, 1 கொரி 15: 49.
மேலும், சந்திரன்மேல் நிற்பதாக இந்த ஸ்திரீயைப் பார்க்கிறோம். சபையானது தேவ கிருபையில் நிற்கிறது. சந்திரன் சூரியனிடமிருந்து தனது ஒளியை பெற்றக்கொள்வது போல சபையும் நீதியின் சூரியனாகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்து கிருபையைபெற்றுக்கொள்கிறது. ரோமர் 5: 2, 1 கொரி 15: 10.
ஸ்திரீயானவளுடைய சிரசில்; 12 நட்சத்திரங்களைக்கொண்ட கிரீடம் உள்ளது. நட்சத்திரங்கள் கர்த்தருடைய மேலான ஊழியர்களைக் குறிக்கிறது. தானி 12: 3, எபி 1: 7. வெளி 1: 20. இந்த அடிப்படையில் ஸ்திரீயின் சிரசின்மேலுள்ள கிரீடத்தில் காணப்படும் 12 நட்சத்திரங்கள் புதிய ஏற்பாட்டு சபையின் 12 அப்போஸ்தலர்களே ஆவர். அதுமட்டுமன்றி சபையானது அப்போஸ்தலர்களின் உபதேசத்தை உறுதியாய் கடைபிடிக்காவிட்டால் முடிசூட்டப்பட முடியாது. எனவே, சபை சூடியுள்ள கிரீடம் அப்போஸ்தல உபதேசத்தில் தரித்திருந்து தனது பலனை பெற்றிருக்கிறாள் என்பது தெளிவாகிறது. அப் 2: 4, 2 தீமொ 2: 5.
2. வலுசர்ப்பம்
பரிசுத்த வேதாகமத்தில் சாத்தான் வலுசர்ப்பமாகவும் பழைய பாம்பாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி 3: 1, சங்கீதம் 74: 13, வெளி 16: 13, வெளி 20: 2.
3. ஆண்பிள்ளை
ஸ்திரீயானவள் பிரசவவேதனைப்பட்டு ஒரு ஆண்பிள்ளையைப்பெறுகிறாள். இந்த ஆண்பிள்ளை, உலகத்தின் எல்லா சோதனைகளையும் எதிர்ப்புகளையும் மேற்கொண்டு ஜெயஜீவியம் நடத்தி ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் எடுத்துக்கொள்ளப்படும் கிறிஸ்தவர்களை. அதாவது, ஆயத்தமாகக் காத்திருக்கும் சபையை குறிக்கிறது.இந்த ஆண்பிள்ளை கிறிஸ்துவோடு சேர்ந்து புதிய உலகத்தை ஆளுகை செய்யும். பின்வரும் வசனங்கள் இவ்விளக்கங்களைக் குறித்து கூறுகிறது. பிரசவ வேதனை: ரோமர் 8: 19- 23, 2 கொரி 5: 1- 4.
இரண்டாம் வருகையில் வானத்திற்கு தேவனிடம் ஆண்பிள்ளை எடுத்துக்கொள்ளப்படுதல்: மத் 25: 10, 1 கொரி 15: 51- 53. ஆண்பிள்ளை புதிய உலகத்தை ஆளுகை செய்தல்: 2 தீமொ 2: 12, வெளி 2: 26- 29.
(வச 4) வலுசர்ப்பமாகிய பழைய பாம்பு ஆண்பிள்ளை வானத்திற்கு தேவனிடம் எடுத்துக்கொள்ளப்படுவதை தடுக்க மத்திய ஆகாயத்தில் காத்திருக்கும். சாத்தானும் அவனுடைய சேனைகளும் தேவ ஜனத்திற்கு எதிராக வானமண்டலத்தில் தங்கள் போராட்டத்தை நடத்துவதாக வேதம் நமக்குச் சொல்லுகிறது. எபே 6: 12. ஆனாலும், ஆண்பிள்ளை தேவனிடம் எடுத்துக்கொள்ளப்படுவதை வலுசர்ப்பத்தினால் தடுக்க முடியாது. ஏனெனில்,அந்த நிகழ்வு மிக இரகசியமாக வைக்கப்பட்டிருப்பதுமல்லாமல், அது இமைப்பொழுதில் நடந்தேறிவிடுவதால் ஆண்பிள்ளை பறந்து சென்றுவிடுவதை சர்ப்பம் காணத்தவறிவிடும். மத் 24: 36, 44. 1 கொரி 15 : 51
(வச 6) ஜெயங்கொண்ட விசுவாசிகள் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டபிறகு, சாத்தான் அந்திக்கிறிஸ்துவுக்கு 7 வருடம் இந்த உலகத்தை ஆட்சி செய்ய தனது அதிகாரத்தைக் கொடுப்பான். (முதல் 3 ½ வருடம் மாத்திரம் இந்த 12 ஆம் அதிகாரத்தில் 1260 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.). ஆமோஸ் 8: 11 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டதுபோல இந்த உலகம் வேத வசனம் பிரசங்கிக்கப்படாத நிலமையில் வானாந்திரமாகக் காணப்படும்.வேத வசனத்தின்படி தங்கள் வாழ்க்கையை நடத்தாத கிறிஸ்தவ விசுவாசிகள் அந்திக்கிறிஸ்துவின் இந்த முதல் பகுதியில் கைவிடப்பட்ட சபையாக இருப்பார்கள்.இக்கைவிடப்பட்ட சபையின் அடையாளமாக இருக்கும் ஸ்திரீ அந்திக் கிறிஸ்துவினால் துன்புறுத்தப்படும் இந்தகாலம் உபத்திரவ காலம் என்றும் அழைக்கப்படும்.
ஆயினும், கைவிடப்பட்ட இச்சபைக்கு மீட்கப்படும்படியாக தேவ கிருபை வழங்கப்பட்டு மற்றொரு தருணம் கொடுக்கபபடும். இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள சபையானது இரத்தசாட்சியாக மரிக்க நேரிட்டாலும் அந்திக்கிறிஸ்துவுக்குப் பணியாமல்; இருக்க வேண்டும்.
(வச 7- 17)- ஆண்பிள்ளை(ஜெயங்கொண்டவர்கள்) அதாவது, கிறிஸ்துவின் மணவாட்டி சபை மத்திய ஆகாயத்திற்கு தங்கள் ஆண்டவரோடு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு; பெலமுள்ள தூதனாகிய மிகாவேலும் ; அவனோடு இணைந்து மற்ற தூதர்களும், மத்திய ஆகாயத்திலிருந்து கிரியை செய்து கொண்டிருந்த சாத்தானையும் அவன் சேனைகளையும் பூமிக்குத் தள்ளிப்போடுவார்கள். அந்திக்கிறிஸ்துவோடு இந்த உலகத்தில் ஆட்சிசெய்ய தனக்கு சொற்ப காலமே உள்ளது என்று சாத்தான் அறிந்தவனாக உக்கிர கோபத்துடனும் தனது சகல வல்லமையுடனும் கைவிடப்பட்ட சபையாகிய ஸ்திரீயை துன்பப்படுத்துவான்.ஆனாலும், பூமியிலுள்ள தமது சபையை பாதுகாக்க கர்த்தர் கிருபை அருளுவார்.
வெளிப்படுத்தல் புத்தகத்திற்கு பல விளக்கங்கள் இருந்தாலும், நமது தியானத்தின் நோக்கம் கிறிஸ்துவின் சபையானது வெகு சமீபமாயிருக்கும் கிறிஸ்துவின் வருகைக்கு எப்போதும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான். நம்முடைய கர்த்தர் யோவானுக்கு இந்த வெளிப்படுத்தல்களை மகிமையான தரிசனங்களோடு கொடுத்ததும் அதே நோக்கத்தில்தான்.
Author: Rev. Dr. R. Samuel
அதி. 12. பெரிய அடையாளம்,
வேறொரு அடையாளம், வானத்தில் யுத்தம்.
இந்த அதிகாரம் வெளிப்படுத்தின விசேஷத்தின் மிக முக்கிய அதிகாரமாகும், இதைத் தவறாகப் புரிந்து விட்டால் தேவன் வெளிப்படுத்தின கடைசிக்கால சம்பவங்கள் எல்லாமே விளங்க முடியாத குழப்பமாகி விடும், ஏனென்றால் இந்த அதிகாரத்தில் எல்லா செய்திகளுமே அடையாளங்களின் மூலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (வ1, 3) பெண்ணென்றால் அது பெண்ணைக் குறிக்காமல் வேறொன்றிற்கு அடையாளமாயிருக்கும். பாம்பென்றால் அது வேறொன்றைக் குறிக்கும், எனவே இந்த அடையாளங்களின் அர்த்தத்தை மிகச் சரியாக விளங்கிக் கொள்வது மிக அவசியம்.
பெரிய அடையாளம்:- வ1, 2: அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரி சூரியனை அணிந்திருந்தாள்; அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன, அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். யார் இந்த ஸ்திரி? இவள் எதற்கு அடையாளம்?
இன்று அநேகர் இந்த வசனத்தைத் தங்களுக்கேற்ற வழியில் இஷ்டம்போல் திரித்து வியாக்கியானம் செய்து இதுதான் சரியான விளக்கம் என்று சாதிக்கின்றனர். மூன்று விதமான விளக்கங்கள் பெரும்பாலும் பேசப்படுகின்றன. அந்த ஸ்திரி கன்னி மரியாளென்றும், கிறிஸ்துவின் இருச்சபையென்றும், இஸ்ரவேல் தேசமென்றும் கூறுகின்றனர். எது மிகப்பொருத்தமானது?
அந்த ஸ்திரி பெற்ற ஆண்பிள்ளை மேசியாவாகிய இயேசுகிறிஸ்து என்று எல்லோருமே ஏற்றுக்கொள்ளுகிறார்கள். ஒரு சில பெந்தேகோஸ்து வியாக்கியானர்கள் அந்த ஆண் பிள்ளை கிறிஸ்துவல்ல, 1,44,000 இரட்சிக்கப்பட்ட யூதர்களையே குறிக்கிறது என்பார்கள், ஆனால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல, ஏனென்றால் அவர்கள் சிங்காசனத்திற்கு எடுத்துக்
கொள்ளப்படவில்லை!
அது இயேசுவின் தாயாகிய மரியாளா?
ரோமன் கத்தோலிக்க சபை அப்படித்தான் நம்புகிறது. அப். யோவான் இயேசுவின் பிறப்பையோ, இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கையையோ, சிலுவை மரணத்தையோ குறிப்பிடாமல் அவர் நேராகப் பிதாவின் சங்காசனத்திலமர்ந்ததையே எழுதியுள்ளான். இதற்குப்பின்னும் மரியாளைக் கர்ப்பவதியாகக் காண்பிப்பதேன்? சந்திரனோ, சூரியனோ, 12 நட்சத்திரங்களோ மரியாளுக்கோ, சபைக்கோ உரியதாக முழு வேதாகமத்திலும் குறிப்பிடப்படவேயில்லை. ஆகவே அந்த ஸ்திரி மரியாளல்ல,
அந்த ஸ்திரி கிறிஸ்துவின் சபைக்கு அடையாளமா?
வலுசர்ப்பம் அந்த ஸ்திரியைத் துன்பப்படுத்தினது போல சபை பாடுகளுக்குட்பட்டதால் அந்த ஸ்திரி சபைக்குத்தான் அடையாளம் என்று சாதிப்பவர்களுண்டு, ஆனால் சபை கிறிஸ்துவைப்பெற்றெடுக்கவில்லையே!கிறிஸ்துதான் சபையை உருவாக்கினார்! தமது சொந்த ரத்தத்தால் சபையை சம்பாதித்தார். ஆகவே அந்த ஸ்திரி சபைக்கு அடையாளமில்லை .
அந்த ஸ்திரி இஸ்ரவேல் தேசத்திற்கு அடையாளமா?
ஆம். அந்த ஸ்திரி இஸ்ரவேல் தேசத்திற்குத்தான் அடையாளம், இதற்கான ஆதாரத்தை நாம் ஆதியாகமத்தில்தான் தேடவேண்டும், சூரியன், சந்திரன், 12 நட்சத்திரங்கள் இவையெல்லாம் ஒரு ஜாதிக்கும், ஒரு தேசத்திற்குமே உரிய அடையாளங்கள் ஆதி, 37ம் அதிகாரத்தில் இதைக் காண்கிறோம். இஸ்ரவேல் எனப்பட்ட யாக்கோபுக்கு 12 புத்திரர்களிருந்தார்கள். இவர்களே 12 கோத்திர பிதாக்கள். இவர்களில் யோசேப்பு இஸ்ரவேலின் பதினோராவது குமாரன். இவன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன், ஆதி, 37:7, 9ல் அவனுக்குத் தேவனருளிய சொப்பனம் சொல்லப்பட்டிருக்கிறது. சூரியனும் சந்திரனும், 11 நட்சத்திரங்களும் என்னை வணங்கின என்றான். எகிப்தில்தான் இஸ்ரவேலர் 400 வருஷங்களாகப் பெருகி இஸ்ரவேல் தேசமானார்கள்... மோசே அவர்களை எகிப்திலிருந்து விடுவித்து கானான் தேசத்தில் இஸ்ரவேல் ராஜ்யத்தைக் கட்டினார்கள். எண். 24:17-19ல் “ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும், யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்?” இயேசு இஸ்ரவேலின் கோத்திரங்களிலொன்றான யூதா கோத்திரத்திலிருந்து தோன்றினபடியால் வெளி, 12:1ல் காணப்படும் ஸ்திரி இஸ்ரவேல் தேசமே என்று தெளிவாக விளங்குகிறது.
இயேசு தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலைப்பற்றி 3 காரியங்களை அறிகிறோம். இந்த ஜனத்தினின்று இயேசு தோன்றினார் அது பாக்கியமுள்ளது. இதற்கு எதிராக வான மண்டலத்திலும் பூமியிலுமுள்ள தீய சக்திகள் செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தேவ ஜனங்கள் தேவனுடைய பாதுகாப்பில் இருப்பதால் தீய சக்திகள் ஒருநாளும் அவர்களை மேற்கொள்ள முடியாது.
வ 2: அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவ வேதனையடைந்து பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். இயேசு பிறந்த பொழுது இஸ்ரவேல் ரோம ஆட்சியில் இருந்தது இஸ்ரவேலர்கள் ரோமருக்கு அடிமைகளாயிருந்தார்கள். ரோமர்கள் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினார்கள். அதிக வரி விதித்தார்கள். இயேசுவைக்கொல்லும்படியாக பெத்லகேமைச்
சுற்றியிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளையெல்லாம் ஏரோது கொலை செய்தான். ரோம ஆட்சியினின்று விடுவிக்க மேசியா வரவேண்டுமென்று அதிகமாய் ஜெபித்தார்கள். இந்த சூழ்நிலையில்தான் மேசியா பிறந்தார்,
வ 3: அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது. ஏழு தலைகளையும்,தன் தலையின்மேல் ஏழு முடிகளையும் உடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் உடையது.7 தலைகளும் சாத்தானின் அதிகாரத்திற்குட்பட்ட 7 வல்லரசுகளைக் குறிக்கும்
1. எகிப்து 2. அசீரியா 3. பாபிலோன் 4 மேதியா, பெர்சியா 5. கிரேக்கு 6. ரோம 7. அந்திகிறிஸ்துவின் ராஜ்யம்.
இந்த 7 தலைகளையும் வெளி. 17ம் அதிகாரத்தில் பழங்கால ரோமாபுரி கட்டப்பட்டிருந்த ஏழு மலைகள் அல்லது குன்றுகளைக் குறிக்கிறது என்றும் சொல்வார்கள் .
1. காபிடோலின் 2. குரினால் 3. விமினால் 4. எஸ்குலின் 5. கேலியன் 6. அவென்டின் 7. பாலடின் இவைகளே அந்த 7 மலைகள்.
7 தலைகளும் 10 கொம்புகளும் தானியேல் 7ம் அதிகாரம் உதவுகிறது, அதில் 10 கொம்புகளும், 10 ராஜாக்கள் (தானி. 7:24 ) தலைகள் ராஜ்யங்களைக் குறிக்கிறது.
வ 4: வலுசர்ப்பத்தின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று, வெளிப்படுத்தலில் எல்லாமே அடையாளங்கள் தான். பாம்பென்றால் பாம்புமல்ல வாலென்றால் வாலுமல்ல. வால் யாரென்று அறிய ஏசாயா 9:15ஐ வாசிக்க வேண்டும். மூப்பனும், கனம்பொருந்தினவவனுமே தலை. பொய்ப்போதகம் பண்ணுகிற தீர்க்கதரிசியே வால், அக்கிரமத்தின் திரித்துவமாகிய சாத்தான், அந்திக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி ஆகிய இம்மூவரில் ஒருவனான கள்ளத் தீர்க்கதரிசியே அந்த வால், தன் பொய்ப் போதகத்தினால் ஆத்தும ஆதாயம் செய்யும் ஊழியக்காரரில் மூன்றிலொரு பங்கை வஞ்சித்து கெடுத்துப் போடுவான்.
“அந்த ஸ்திரி பிள்ளை பெற்றவுடன் அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது”, சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகை செய்யப் பிறந்த பிள்ளை (சங். 2:9) மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவே, இந்தப் பிள்ளையே தன் தலையை நசுக்கி தன்னை அழிக்கப்போகிறது என்றறிந்து (ஆதி, 3:15) அதைக் கொலை செய்ய சாத்தான் சகல முயற்சிகளையும் மேற்கொண்டான். ஆனால் தேவனுடைய திட்டத்திற்கு எதிராக சாத்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை: செய்யவும் முடியாது, இயேசு பிறந்து வளர்ந்து தேவனுடைய ராஜ்ஜியத்தை பூமியிலே நிலைநிறுத்தி, சிலுவையில் சாத்தானின் தலையை நசுக்கி, மரித்து, உயிர்த்தெழுந்து பரலோகத்தில் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அல்லேலூயா!
வ 6: பிள்ளை பெற்ற ஸ்திரி ஆயத்தமாக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட இடமிருந்த வனாந்தரத்திற்கு (தானி, 11:41) ஓடிப்போனாள். 1260 நாளளவும் அங்கு போஷிக்கப்பட்டாள்.
வ 7-9: வானத்திலே யுத்தம் எபேசியர் 6:12 மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அவனைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயிக்கவில்லை. பிசாசு, சாத்தான், வலுசர்ப்பமும் அவனோடு சேர்ந்த தூதரும் தோற்கடிக்கப்பட்டு பூமியிலே தள்ளப்பட்டார்கள். வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற் போயிற்று, லூசிபர் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட நாள் முதல் இந்தப்பிசாசுகள் வானத்தைக் கறைப்படுத்திக்கொண்டிருந்தன .ஜெபங்களையும், தேவனுடைய பதில்களை தடுத்துக் கொண்டும் இருந்தன. (தானி. 10:12,13) இப்பொழுது அவை கீழே தள்ளப்பட்டபடியால் வானமண்டலம் விடுதலையாகி சுத்திகரிக்கப்பட்டது. இது ஒரு சுத்திகரிக்கும் யுத்தம், (இது நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்க வேண்டிய, நாம் நடத்த வேண்டிய யுத்தம்.) இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர். நம்மைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே. நாம் சாத்தானைத் துரத்த முடியும், பிசாசு பிடித்தவர்களை விடுவிக்க முடியும், சாத்தானை ஜெயிக்க முடியும்,
வ 10: சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்பட்டபடியால், வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி இப்பொழுது இரட்சிப்பும், வல்லமையும், நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது, இரவும், பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர் மேல் குற்றஞ்சுமத்தும் பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப் போனான்.
வ 11: சாத்தானை ஜெயிக்க தேவையான மூன்று காரியங்கள்
1. அப் 20:24 என் பிராணனையும் அருமையாக எண்ணேன் என்று பவுல் கூறினான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள்(நம்) ஜீவனையும் பாராமல் யுத்தம் பண்ண வேண்டும்.
2 ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால் ஜெயித்தார்கள் (இரத்தத்தில் வல்லமையுண்டு)
3... சாட்சியின் வசனத்தால் ஜெயித்தார்கள். அது தேவனுடைய வார்த்தை, அது தேவ வல்லமையுடையது. சாத்தான் இயேசுவை சோதித்த போது, அவர் இந்த வசனத்தாலேயே சாத்தானை ஜெயித்தார்.
வ 12: சாத்தான் தோல்வியடைந்து தள்ளப்பட்டதனால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம், ஏனென்றால் இனி சாத்தான் ஒருபோதும் பரலோகத்திற்குள் வரவே முடியாது! ஆனால் பூமியில் வாசம் பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! பிசாசு தன் அழிவு நெருங்கினதை நன்றாகத் தெரிந்து கொண்டான். இயேசுவைத்தொட முடியவில்லை, ஆகவே விசுவாசிகளான
தேவபிள்ளைகள்மேல் தன் கோபத்தைக்காட்டுவான்.. ஆகையால் பூமியிலும், சமுத்திரத்திலும் வாசம் பண்ணுகிறவர்களுக்கு. மிகுந்த ஆபத்து உண்டாகும் உபத்திரவ காலம் வரும்,
வ 13: அந்த பிள்ளைபெற்ற ஸ்திரியை (இஸ்ரவேல் தேசத்தை) துன்பப்படுத்தினது.
வ 14: ஆனால் அந்த ஸ்திரியையும் சாத்தானால் தொட முடியவில்லை. இந்த வசனங்களில் தேவன் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாப்பதை வாசிக்கிறோம். உபத்திரவத்திலும் நம்மோடிருந்து நம்மைக் காக்கும் தேவன் நமக்கு உண்டு என்பது நமக்குப் பெரிய ஆறுதல், நாமே தேவனுடைய இஸ்ரவேலர், பெருங் கழுகின் இறக்கைகளைக் கொடுத்து இஸ்ரவேலைக் காத்தார். பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் தேவன் கழுகைப்போல இஸ்ரவேலைக் காத்ததைப் பார்க்கிறோம்.
யாத், 19:4; உபா. 32:11,12; ஏசா, 40:31). உன்னைத் தொடுகிறவன் என் கண்ணின் மணியைத் தொடுகிறான் என்றவர், சாத்தான் தொட முடியாத இடமொன்றை இஸ்ரவேலுக்கு ஆயத்தம் பண்ணி பாதுகாத்தார் (தானி. 11:41). துன்ப காலத்தில் மூன்றரை ஆண்டுகள் (அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் முதற்பாதியில்) போஷித்து, பராமரித்து பாதுகாத்தார்.
வ 15.16: அப்பொழுது அந்த ஸ்திரியை வெள்ளங்கொண்டு போகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதி போன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றி விட்டது. பூமியானது ஸ்திரிக்கு உதவியாகத் தன் வாயைத்திறந்து வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது. இந்த வெள்ளம் என்ன என்று விளக்குவது மிகவும் கடினம். சிலர் கொடுத்துள்ள விளக்கங்களைப் பார்க்கலாம்.
1 சாத்தான் நதிகளையும், நீரூற்றுகளையும் வனாந்தரத்திற்குத் திருப்பி இஸ்ரவேலை அழிக்கப் பார்க்கலாம்.
2. எல்லாமே அடையாளங்களாயிருப்பதால், வெள்ளமும் ஏதோ ஒன்றிற்கு அடையாளமாக இருக்கலாம், ஏசாயா 59:19ல் வெள்ளம் போல சத்துரு வரும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் என்கிறது, அந்திக்கிறிஸ்து ஒரு பெரும் படையுடன் வனாந்தரத்திலிருக்கும் இஸ்ரவேலுக்கு விரோதமாய் வரலாம், ஆனால்
எண்.16:32ல் பூமி தன் வாயைத்திறந்து கோராகையும் அவன் கூட்டத்தாரையும், வீடுகளையும் விழுங்கினது போல அந்திக்கிறிஸ்துவின் சேனையை விழுங்கி இஸ்ரவேலைக் காப்பாற்றலாம்,
3. சங், 124லிலும் வெள்ளத்தை மனுஷருடைய கோபத்திற்கு ஒப்பிட்டிருக்கிறது. வடல் நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாஇருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 5ம் வசனத்தில் கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டு போயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக, எதுவானாலும் நாம் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவின் அடைக்கலத்தில் இருப்பவர்களை ஒன்றும் சேதப்படுத்த முடியாது.
வ 17: அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரியின்மேல் கோபங்கொண்டு தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக்குறித்துச் சாட்சி உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப் போயிற்று. தேவனுக்கு விரோதமாக சாத்தானால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவே பரலோகத்தோடு இணைந்து நாமும் களிகூறுவோமாக.
Author: Rev. S.C. Edison