வெளிப்படுத்தின விசேஷம் 2- விளக்கவுரை

அதிகாரம் - 2

‘ஏழு சபைகளுக்கு ஆவியானவரின் செய்தி’                                                                              ‘Message of the Spirit to seven Churches’

முன்னுரை:-

*  கர்த்தருடைய ஆவியானவர் யோவானுக்கு தரிசனங்கள் மூலம் 7 சபைகளுக்கும் அனுப்பும்படியாக கொடுத்த செய்திகளில் முதல் நான்கு சபைகளுக்கான செய்திகள் இந்த 2 ஆம் அதிகாரத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது.      
*  7 சபைகளுக்கும் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட ஆலோசனைகள் இந்த நாட்களிலும் ஒவ்வொரு சபைக்கும் அவசியமானது.
*  7 சபைகள் என்பது 7 வித சபைகளின் நிலமைகளையும் 7 காலங்களில் சபைகளின் நிலமையும் குறிக்கிறது.
                                                            
சபைகளுக்கு ஆவியானவர் கொடுத்த செய்திகளை கூர்ந்து கவனிக்கும்போது ஒவ்வொரு செய்தியிலும் ஆறு முக்கிய கூறுகள் (Important Elements) இருப்பதைக் காணலாம்.
அவையாவன:-

1) வாழ்த்துரை   - Greetings – நாம் ஒருவரை சந்திக்கும்போது அவரை வாழ்த்துவது நல்ல மனித நேயம். இதை ஆண்டவர் இயேசு சபைகளுக்கான தமது செய்தியின் துவக்கத்திலேயே கடைபிடித்திருப்பது சபைகள் மேல் அவர் வைத்துள்ள அன்பையும், சபைகளுக்கு தரும் முக்கியத்துவத்தையம் தெரிவிக்கிறது.

2) பாராட்டுரை   -  Appreciation – ஆண்டவர் இயேசு விசுவாசிகளுடையநம்பிககையை முதற்கண் பாராட்டுகிறார். பேற்றோர்கள்கூட தங்கள் பிள்ளைகளுடைய நன்னடத்தையை பாராட்டுமபோது அவர்கள் மேலும் தொடர்ந்து நல்ல பிள்ளைகளாக இருக்க ஊக்கமளிக்கும்.

3) குறை       - Deficiancy-  அடுத்தது, ஆண்டவர் இயேசு, சபைகள் தங்களை திருத்திக்கொள்ளும்படியாக அவர்களுடைய குறைகளை எடுத்துக்கூறுகிறார்.நம்முடைய பிள்ளைகளின் தவறுகளை கண்டிக்காவிடில் அவர்கள் திருந்தி வாழமாட்டார்கள்.

4) புகழ்ச்சி      - Commendation – ஆண்டவர் இயேசு சபைகளுடைய அர்ப்பணிப்பை புகழ்கிறார். ஒவ்வொரு ஸ்தாபனமும் தங்கள் பணியாளர்களுடைய நற்பணிகளுக்காக அவர்களுக்கு நற்சான்றும், பரிசும் கொடுத்து புகழ்வதை பார்க்கிறோம்.

5) எச்சரிக்கை    - Warning– சபைகளுக்கு தவறுகளை சுட்டிக்காட்டியபிறகு, தங்கள குற்றங்களை திருத்திக்கொள்ளாவிட்டால் வரும் கடுமையான பின்விளைவுகளை குறித்தும் ஆண்டவர் இயேசு எச்சரிக்கிறார்.

6) வாக்குத்தத்தம் -Promise – கடைசியாக, ஆண்டவர் இயேசு சபைகளுடைய விசுவாசத்திற்காக, சாட்சியான வாழ்க்கைக்காக, தகுந்த சன்மானத்தை தருவதாக வாக்களிக்கிறார்.அந்த சன்மானம் நித்திய ஜீவன். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய சாமர்த்தியமான செய்கைகளுக்காக வெகுமதிகளை கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். 

1. எபேசு சபைக்கு செய்தி.

•  வாழ்த்து : சபையின் தூதனுக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி துவங்குகிறது (1) 2 கொரி 8: 23
•  புகழ்ச்சி : கிரியை, பிரயாசம், இளைப்படையாமைகளை குறித்துப் புகழ்கிறார். (2) யாக் 4: 17, 3: 14,17. மத் 5: 16, 2 தீமொத் 2: 6.
•  சோதனைகளை சகிப்பதையும், பொறுமை கையாளுவதையும், துன்மார்க்கங்களை சகியாமையும் கூட பாராட்டுகிறார் (3) யாக் 1: 2, 3, 12. அப் 2: 40, ஆபகூக் 1: 13
•  குறை : அதே நேரத்தில், ஆதி அன்பை இழந்தது நிற்கும் நிலைமை, ஐக்கியமின்மை, சோதனை, உலக இச்சை, சுய திருப்தி இவற்றை குறை என்று எடுத்துச்சொல்கிறார் (4). 2 தீமொத் 4: 10, எபி 10: 25, 12: 15
•  பாராட்டு : நிக்கொலாய மதத்தினரின் வேசித்தன கிரியைகளை; வெறுப்பதையும் பாராட்டுகிறார் (6)
2  கொரி 11: 13, 14. 1 கொரி 12: 10 பிலி 2: 5, அப் 15: 28, சங் 101: 3
•  எச்சரிப்பு : விசுவாசியே மனந்திரும்பு, இல்லையேல் கடும்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறார். (5)
எபி 3: 7, 8.
•  வாக்குத்தத்தம் : ஆகவே, அசுத்தத்தை வெறுத்து பரிசுத்தததை கைக்கொள்வதில் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு ஜீவ விருட்சம் அளிக்கப்படும் என்று ஆண்டவர் வாக்குத்தத்தம் கொடுக்கிறார். இந்த நற்செய்தியை கேட்கக்கூடியவன்தான் காதுள்ளவன். அசட்டை செய்கிறவன் காது அற்றவனுக்குச் சமம் என்று ஆவியானவர் திருவுளம் பற்றியிருக்கிறார். (7) ஜீவ விருட்சத்தை புசித்தல் நித்திய ஜீவனைத் தரும். லூக்கா 22: 30, யோவான் 10: 10

2. சிமிர்னா சபைக்கு செய்தி.

•  வாழ்த்து : நான் முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவர் என்று தன்னை அறிடுகப்படுத்தி சபைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். (8) யோவான் 8: 57, 58, 1: 2,  10: 8- 10, எபிரேயர் 12: 2                                                     
•  புகழ்ச்சி : சிமிர்னா சபையாரின் நற்கிரியைகளுக்காகவும், அவர்கள் பொருளாதாரத்தில் தரித்திரராக இருந்தாலும் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஐசுவரியவான்களாக இருப்பதை புகழ்ந்தார்.(9) லூக்கா 16: 20, 22
கர்த்தர் நம் நிலமையை அறிவார். 1 பேதுரு 3: 12
•  குறை : சாத்தான் கூட்டத்தில் சேர்ந்து தேவனை தூஷிக்கும் யூதர்கள் இந்த சபையில் உள்ளது குறையாக ஆண்டவர் கூறுகிறார். (9)
உண்மையுள்ளவனையும் உண்மையற்றவனையும் கர்த்தர் அறிவார். மத்தேயு 3: 12
•  எச்சரிப்பு : இந்த சபையார் படப்போகும் பாடுளில் மரணபரியந்தம் உண்மையாயிருக்கும்படி முன்கூட்டியே எச்சரிப்பை கொடுக்கிறார். (10) மத் 10: 16, 17. ரோமர் 8: 17, 18.
•  வாக்குத்தத்தம் : தங்களுடைய விசுவாச ஓட்டத்தில் ஜெயங்கொள்ளுகிறவர்களாக காணப்பட்டால் ஜீவ கிரீடத்தை தருவதாகவும், அவர்களை இரண்டாம் மரணமாகிய நரக ஆக்கினை சேதப்படுத்துவதில்லை என்றும் வாக்குத்தத்தம் கொடுக்கிறார். (11) மத் 10: 22, 2 தீமொத் 4: 7

3. பெர்கமு சபைக்கு செய்தி.

•  வாழ்த்து : இருபுறமும் கருக்குள்ள பட்டயமுடையவராக தன்னை அறிமுகப்படுத்தி வாழ்த்துகிறார் (12) பட்டயம்- வேத வசனம் எபே 6: 10, 17, எபி 4: 12
•  புகழ்ச்சி : சாத்தான் கோட்டையில் இருந்துகொண்டும் விசுவாசத்தில் உறுதியாக இருப்பதை வெகுவாக புகழ்கிறார். அனேக நேரங்களில் நாம் சூழ்நிலைகளையும், சாத்தான் சோதனைகளையம் நமது வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லுகிறோம். இது சர்வ வல்லவருடைய புகழ்தலை பெற்றுத்தராது(13) எபே 4: 27, 1 பேதுரு 5: 9
•  குறை : ஆகிலும், இவர்களுக்குள் சிலர் இஸ்ரவேலரை வீழ்த்த பிலேயாம் பாலாக்குக்குக் கொடுத்த வஞ்சக போதனைகளையும், நிக்கொலாய் மதத்தருடைய அசுத்த போதனைகளையும் சார்ந்து இருப்பவர்கள் உண்டு என்ற குறையை தெளிவாக ஆவியானவர் சுட்டிக்காட்டுகிறார். (14,15)
பிசாசு நம் பெலவீனத்தை பயன்படுத்தி எளிதில் வீழ்த்திவிடுவான். எண் 24, 25, 31 அதிகாரங்கள்
•  எச்சரிப்பு : ஆகவே, விசுவாசிகள் உடனே மனந்திரும்ப வேண்டும், இல்லையெனில் தமது வாயிலுள்ள இருபுறமும் கருக்கான வசனத்தால் நியாயம் தீர்க்கப்படுவார்கள் என்று எச்சரிப்பையும் தவறாமல் கொடுத்துவிட்டார். (16) யோவான் 12: 48
•  வாக்குத்தத்தம் : ஆனாலும், சோதனைகளையும் துர்போதனைகளையும் ஜெயித்துவரும் விசுவாசிக்கு பல வெகுமதிகளை கொடுக்க வாக்குத்தத்தம் செய்கிறார். (17)

1.மறைவான மன்னா – யோவான் 6: 58
2.வெண்கல்          -  மன்னிப்பு, வெற்றி
3.புதிய நாமம்        -  ஏசாயா 62: 2, 65: 5. எபி 1: 4

தியத்தீரா சபைக்கு செய்தி.

1. வாழ்த்து : தியத்தீரா சபைக்கு தேவ குமாரனாக தம்மை வெளிப்படுத்தி, அக்கினிஜுவாலைபோன்ற தமது கண்களுக்கு மறைவானது ஒன்றும் இலலையென்றும், தாம உறுதியாக செயல்படக்கூடியவர் என்பதை காட்டும் வெண்கலம்போன்ற பாதங்கள் கொண்டவர் என்றும் கூறி வாழ்த்துகிறார் (18) எபிரேயர் 4: 13, வெளி 1: 11 , 2 கொரி 5: 11, சங் 18: 7- 9

2. புகழ்ச்சி : அன்பு, ஊழியம்,விசுவாசம், பொறுமை இப்படிப்பட்ட நற்பண்புகளுக்காகவும், தங்கள் நற் கிரியைகளில் பெருகுகிறவர்களாயிருப்பதையும் அறிந்து இவர்களை புகழ்கிறார்.(19) 
நம்முடைய நற்கிரியைகள் பெருகிக்கொண்டு போகவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
2 நாளா 17: 4,5, 12. 1 கொரி 15: 58. 2 கொரி 9: 6- 8, பிலி 1: 9, கொலோ 2: 7, 2 பேதுரு 1: 5- 8,எபே 4: 11

3. குறை : யேசபேலின் வஞ்சக போதகங்களாகிய வேசித்தனம், விக்கிரங்களுக்குப் படைத்ததைப் புசித்தல் இவற்றிற்கு இடம்கொடுககும் ஊழியர்களும் உங்களுக்குள் உள்ளனர் என்ற  குறையை கண்டிப்படன் உணர்த்துகிறார்.(20) யேசபேல் என்ற பெயருள்ள ஸ்திரீ இந்த சபையில் இருந்நதாக ஒரு கருத்தும், பழைய ஏற்பாட்டில் உள்ள யேசபேலின் ஆவி கிரியை செய்வதாக ஒரு கருத்தும் உண்டு. 1 இராஜா 16: 31, 18: 4, 2 இராஜா 9: 22
உலக இச்சைகளுக்கு அடிமைபட்ட வஞ்சக ஊழியர்களுக்கு இடம்கொடுக்கக்கூடாது- விழிப்பாயிருக்க வேண்டும். 2 பேதுரு 1: 9, 10, யூதா 11- 13

4. எச்சரிப்பு : மனந்திரும்பும்படியான எச்சரிப்பு தியத்தீரா சபையாருக்கு மாத்திரமன்றி, இச்சபையை கெடுக்கும் யேசபேல் ஸ்திரீக்கும் கொடுக்கப்பட்டதாக காண்கிறோம். மனந்திரும்பாவிட்டால் அழிவு – மத் 3: 8, 10- 12
சாத்தானின் ஆழம் ;(தீய உபதேசம்) விட்டு சத்தியத்தை பற்றிக்கொண்டிரு(21- 25) ரோமர் 5: 20, 6: 1. கலா 2: 4, 5, எபி 3: 6.

5. வாக்குத்தத்தம் : ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அதிகாரமும் ஆளுகையும நிச்சயம் கொடுக்கப்படும் என்று வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருப்பதை வாசிக்கிறோம்.(26- 28) 
-  அதிகாரம் - மத் 28: 18, 10: 1, சங் 47: 3
-  ஆளுகை – தானி 7: 18
-  விடிவெள்ளி நட்சத்திரம் - ஓசியா 6: 3, லூக்கா 1: 7
Author: Rev. Dr. R. Samuel 


வெளிப்படுத்தின விசேஷம் 2- விளக்கவுரை

1-7 எபேசு சபை; 8-11 சிமிர்னா சபை 12-17 பெர்கமு சபை 18-29 தியத்தீரா சபை 
எபேசு சபை
“ஏழு நட்சத்திரங்களைத் தன்வலது கரத்தில் ஏந்திக் கொண்டு ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிற இயேசு சொல்லுகிறதாவது;
இயேசு ஏன் குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவுகிறார்?காரணம் என்னவென்றால், சபைகள் இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்தை உலகிற்குப் பிரதிபலிக்க வேண்டுமென்பதற்காகவே, வேத அறிஞர்கள் புதிய ஏற்பாட்டுக்கால சபைகளிலேயே எபேசுதான் மிகப்பெரியதும், மிக அழகானதுமான ஆலயம் உடையதும் என்கிறார்கள்.

இது பவுல் அப்போஸ்தலனால் பல எதிர்ப்புகளின் மத்தியில் உருவாக்கப்பட்ட சபை, இது உருவான விதத்தை அப். 18.20 அதிகாரங்களிலிருந்து நன்றாக அறிந்து கொள்ளலாம். எபேசு பட்டணம் ஒரு பொல்லாத விபச்சாரம் நிறைந்த பட்டணம். அங்கேயுள்ள தியானாளின் ஆலயம் உலக ஏழு அதிசயங்களில் ஒன்று. அந்த ஆலயத்தில் ஆயிரம் ஆலய விபச்சாரிகள் இருந்தனர். அதனால் தான் பவுல் மூன்று வருடங்களாய், வீடு வீடாய்ச் சென்று கண்ணீரோடு புத்திசொல்லி திடப்படுத்தினான்.. அதன் விளைவாய் எபேசு சபை ஆவியில் வல்லமையுள்ள சபையாயிருந்தது., இதிலிருந்த யூதர்கள் சுவிசேஷத்தை எங்கும் அறிவித்து அநேகரை சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தனர்.

வ 2: சபைக்கு வாழ்த்து

உன் கிரியைகள்: தேவனுக்குக் கீழ்ப்படிந்து செய்கிறார்களா? அன்பினால் செய்கிறார்களா? அவருடைய வழிநடத்துதலின்படி, அவருடைய பெலத்தால், அவருடைய மகிமைக்காக செய்யப்படுகிறதா? கிரியைகளின் நோக்கமென்ன?

பிரயாசம்: சபை ஒழுங்குகளைக் கடைப்பிடித்தல், சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் சுவிசேஷம் அறிவித்தல், ஆத்தும ஆதாய முயற்சி - இந்தப் பிரயாசம் உண்டு. காரணம்: யூத விசுவாசிகள் அநேகர் இருந்தபடியால் இந்தப்பணிகள் தீவிரமாய் நடந்தன. (மத். 25:15)

பொறுமை: இயேசுவினிமித்தம் வரும் உபத்திரவம், நிந்தை, அவமானம் இழப்பு ஆகியவற்றைப் பொறுமையோடு சகித்தனர்.

பொல்லாதவர்களை சடுக்கக்கூடாமலிருத்தல்; ஒழுங்கற்று நடக்கிறவர்களை என்ன செய்ய வேண்டும்? ஜெபிக்க வேண்டும், இரண்டொருதரம் புத்தி சொல்ல வேண்டும், கேளாவிட்டால் விலக வேண்டும்.

அப்போஸ்தலரல்லாதவர்களை சோதித்துபொய்யர் என்றறிந்தது. பவுலின் புத்திமதியையும், யோவானின் புத்திமதியையும் (2 யோ. 10; 1 தெச. 5:21, 22) அப்படியேக் கடைப்பிடித்தனர்

வ 3: சகத்துக்கொண்டிருப்பதும், பொறுமையோடிருப்பதும், சபையினரிடத்திலுள்ள அன்பைக் காட்டுகிறது. (1 கொரி13; 7) இந்த அன்புதான் இளைப்படையாமல் பிரயாசப்படுவதற்கான பெலத்தையும், ௨க்கத்தையும் தருகிறது (2 கொரி 5:14)

வ 4: ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்ந அன்பைவிட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறையுண்டு.
இந்த வசனம் தேவன் நம் அன்பை எவ்வளவாய் எதிர்பார்க்கிறாரென்று காட்டுகிறது. எத்தனை நற்குணங்களிலிருந்த போதும் அன்புத்தாழ்ச்சி தேவனைக் குறைவுபடச் செய்கிறது. வேதனைக்குட்படுத்துகிறது. “எனக்குக் குறைவுண்டு” என்கிறார். இது நாம் அன்பில்லாமல் பல காரியங்களைத் தேவனுக்கென்று செய்கிறோம். அவையெல்லாவற்றையும் விட, நாம் அவரிடத்தில் அன்புகூர்ந்து அவரோடிருப்பதையே அதிகம் விரும்புகிறார். அயல்நாட்டில் வேலை செய்யும் ஒருவன் தன் தகப்பனுக்குப் பெரிய வீடு, கார் வாங்கிக்கொடுக்கலாம். தேவைக்கு அதிகமான பணம் அனுப்பலாம், பிறந்த நாளுக்கு மிகச்சிறந்த பரிசு கொடுக்கலாம். இவற்றினால் தகப்பனுடைய மனம் திருப்தியடையுமா? ஒருநாளும் ஆகாது, பின் எதை விரும்புகிறார்? மகன் சில நாட்கள் தன்னோடு தங்கி தன்னோடு பேசி மகிழ்வதையே விரும்புவார், நமது பரம தகப்பனும் அப்படியே நமது கிரியைகளையோ, காணிக்கையையோவிட, நாம் அவரை நேசிப்பதையும், அவரோடு தங்கியிருப்பதையும், பேசி மகிழ்வதையுமே அதிகமாய் விரும்புகிறார். அவரது ஏக்கத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்? தேவனிடத்தில் முழு "இருதயத்தோடும், முழு பெலத்தோடும், முழு ஆத்துமாவோடும் மனதோடும் அன்பு கூற வேண்டும். அன்பு கீழ்ப்படிதலைக் கேட்கிறது.

இன்று நீங்கள், உங்கள் அன்புக்காக ஏங்கும் தேவனின் ஏக்கத்தை நீக்க அவரிடத்தில் அன்புகூர்ந்து கீழ்ப்படிவீர்களா?

ஆதியில் கொண்டிருந்த அன்பு என்ன? தேவனிடத்தில் அன்பு பரிசுத்தம் கீழ்ப்படிதல், பரிசுத்தவான்களிடத்தில் அன்பு (எபே. 1:15) இதில் எதில் குறைந்தாலும் அன்பில் குறைகிறோம்.

வ 5: ஆதி அன்பின் நிலைக்குத்திரும்ப என்ன செய்யவேண்டும்?

1) எந்தநிலையிலிருந்து விழுந்தோமென்பதைநினைத்துப் பார்க்க வேண்டும்.

2) மனந்திரும்ப வேண்டும்

3) ஆதியிலே செய்த கிரியைகளைச் செய்ய வேண்டும் இரட்சிக்கப்பட்ட பொழுது தேவனோடுள்ள தனிப்பட்ட
உறவை எவ்வளவாய் விரும்பி நாடினாய்? படுக்கச் செல்லும் பொழுதே அதிகாலையில் மற்றவர்கள் எழும்பும் முன்னே எழும்பி தேவனுடைய செல்லப்பிள்ளை போல அவரிடம் பேச வேண்டும் எனும் வாஞ்சையோடுபடுத்தாய், காலையில் எழுந்தவுடன் வேதத்தை நேத்து வாசித்தாய், அந்த நாளுக்குரிய ஆலோசனையை அப்பாவிடம் கேட்டாய். சந்தித்த ஒவ்வொருவரோடும் இயேசுவைப்பற்றிக் கூறினாய். துண்டுப் பிரதிகளை எப்பொழுதும் வைத்திருந்தாய், தேவைப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தாய், நேரம் இடைத்த பொழுதெல்லாம் ஜெபித்தாய், அந்த அன்பு எங்கே?

மனந்திரும்பாத பட்சத்தில் உன் விளக்குத்தண்டை நீக்கிப்போடுவார். நீ வெளிச்சம் கொடுக்க முடியாது (மத்.5:15-16) தேவனோடுள்ள தொடர்பை இழப்பாய். உனக்குள் சந்தோஷமிராது, துக்கத்தோடு வாழ்வாய், சாட்சியை இழந்து போவாய்.

வ 6: நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. யார் இந்த நிக்கொலாய் மதஸ்தினர்? இவர்கள் கொள்கையென்ன? 
நிக்கொலாஸ் என்பவன் தோற்றுவித்தது. இந்த நிக்கலாயைப் பற்றி யாருக்கும் திட்டவட்டமாகத் தெரியாது.
ஆனால் அவனுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களுண்டு. இவர்கள் ஒன்றும் எனக்குரியதல்ல. எனக்குரியவைகள் யாவும் எல்லாருக்கும் உரியது. என் மனைவியும் எல்லாருக்குமுரியவள். வேண்டுபவர்கள் உறவு கொள்ளலாம். விக்கிரகம் ஒன்றுமில்லை. ஆகவே அதற்குப் படைத்ததைப் புசிக்கலாம். இது இறிஸ்தவனின் சுதந்திரம், சுதந்திரம் என்ற போர்வையில் சகல அருவருப்புகளையும் நடப்பித்தார்கள், இவர்களே நிக்கொலாய் மதஸ்தினர். இவர்களைப்பற்றிய இன்னொரு கருத்து இவர்கள் மனிதர்களை அடக்கி ஆள்பவர்கள். எபேசு சபையினர் இவர்களை வெறுத்ததை இயேசு அங்கீகரித்துப் பாராட்டினார்.

வ 7: தேவனளிக்கும் பலன்

காதுள்ளவன் கேட்கக்கடவன். காதுகளிருந்தாலும், பரிசுத்தாவியானவர் உள்ளே இருந்தால் மட்டுமே தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும், ரகசிய வருகையில் எக்காள சத்தம் விசுவாசிகளுக்கு மட்டுமே கேட்கும், உங்களிடம் இந்த ரிஸீவர் இருக்கிறதா? இல்லையென்றால் தேவனிடம் கேட்டு இலவசமாய்ப் பெற்றுக் கொள்ளலாம்.

ஜெயம் கொள்ளுகிறவன்: முடிவுபரியந்தம் நிலைத்திருந்து ரட்சிக்கப்பட்டவனே உலகம் மாமிசம் பிசாசை ஜெயித்தவன் பாவம் செய்த ஆதாமுக்கும் அவன் சந்ததிக்கும் ஏதேனில் தடை செய்யப்பட்ட ஜீவ விருட்சத்தின் கனியை வெற்றிப்பரிசாக தேவன் பரலோகத்தில் கொடுப்பார். பவுல் நமக்குக் கூறும் ஆலோசனை என்னவென்றால் “நல்ல போராட்டத்தைப் போராடு; விசுவாசத்தைக் காத்துக்கொள். பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடு?”

முக்கிய ஆலோசனை

இந்த 7 சபைகளுக்குப் பதிலாக உங்கள் குடும்பத்தை வைத்து தேவன் காணும் நிறைகளென்ன, குறைகளென்ன
என்று ஆராய்ந்து சரி செய்யுங்கள்,

சிமிர்னா சபை: சிமிர்னா பட்டணம் கிமு300ல் மகா அலெக்சான்டரால் திட்டமிட்டு கட்டப்பட்ட அழகிய நகரம்,

இந்தப்பெயருக்கு நறுமணம், கசப்பு என்று அர்த்தம், நறுமணம் அன்பையும், கசப்பு உபத்திரவத்தை சகிப்பதையும் குறிக்கும், இன்று இந்த ஊருக்கு 'இஸ்மிர்' என்று பெயர். 14000 ஜனத்தொகையென்றும் அதில் 3000 பேர் கிறிஸ்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. பெர்கமு சபையில் ஆராதனை நடத்த இங்கிருந்து ஒருவர் போவதுதான் இன்றைய வழக்கமாயிருக்கிறது. ஏழு சபைகளிலே இந்த சபையில் தான் இன்றுவரை ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு உண்மையான சபையின் முதற்குணம் அன்பு. இரண்டாவது நற்பண்பு உபத்திரவத்தைச் சகித்தல். இந்த இரண்டும் இந்த சபையில் இருந்ததால்தான் இது இன்றுவரை நிலைத்திருக்கிறது. யோவானின் பிரதம சீடனான போலிகார்ப் என்பவர்தாம் இந்த சபைக்கு பிஷப்' உபத்திரவத்தை சகிப்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. இவரது வயதான காலத்தில் நீரோ மன்னன் இவரை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து அடியில் கட்டைகளை அடுக்கி, “இயேசுவை மறுதலித்து விடு, இல்லையேல் எரிந்து சாம்பலாவாய்” என்றான். அதற்கு போலிகார்ப், “இந்த எண்பத்தாறு (86) வருடங்கள் என்னை நேசித்துக் காப்பாற்றி எனக்கு உண்மையாயிருந்த இயேசுவை எப்படி மறுதலிப்பேன்? மறுதலிக்க மாட்டேன்” என்றார், இரத்தச் சாட்சியாய் மரித்தார். இன்றும் சபைத்தலைவர்கள் மண், பெண், பொன்னாசைக்கு மயங்காமல், தேவனுக்கென்று எல்லாவற்றையும் இழக்கஆயத்தமாயிருந்தால் தேசம் இயேசுவை அறிந்து கொள்ளும்; திருச்சபைகளும் பரிசுத்தமாகும், சிமிர்னா சபையில் தேவன் ஒரு குறையையும் காணவில்லை!

வ 8: சிமிர்னா சபையின் தூதன் பிஷப் போலிகார்ப் யோவானின் சீடன்.

இயேசு ஓவ்வொரு சபைக்கும் தன்னைப்பற்றி வித்தியாசமாகவே அறிமுகப்படுத்துகிறார். சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவரும், சிருஷ்டியை பாவத்தினின்று மீட்க மனிதனாகி சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறவராகிய இயேசு சிமிர்னா சபைக்குச் சொல்லுவது.

வ 9: 1, வளரும் சபை 
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உண்மையும், உத்தமுமாய் தேவனிடத்தில் அன்பு கூறுவதாலும், வாஞ்சையுடன் சுவிசேஷ ஊழியம் செய்வதாலும் கிறிஸ்துவை வாழ்ந்து காட்டுவதாலும் அநேகர் கிறிஸ்துவுக்குள் வந்ததை அறிந்திருக்கிறேன் .
 
2. உபத்திரவப்படும் சபை 
ரோம அரசாங்கத்தாலும், யூத விசுவாசிகளாலும் உபத்திரவப்பட்ட சபை, ரோம ராயனை வணங்காததால் அரசாங்கத்தாலும், நியாயப்பிரமாணத்தையும், விருத்தசேதனத்தையும் புறக்கணித்ததால் யூதராலும் உபத்திரவப்படுத்தப்பட்டனர். 

3. தரித்திரப்பட்ட சபை,
உலகப்பிரகாரமாக தரித்திர நிலையிலுள்ள சபை, ஆனால் ஆவிக்குரிய காரியங்களாகிய விசுவாசம், இருபை, இரட்சிப்பு அன்பு, ஐக்கியம் தேவபக்தி ஆகியவற்றில் மிகுந்த ஐசுவரியவான்௧ளாயிருந்த சபை, அதனால்தான் சபை இன்றுவரை நிலைத்திருக்கிறது, அங்கு ஆராதனையும் தொடர்ந்து நடக்கிறது, சிமிர்னா சபை உலகப்பிரகாரமாக தரித்திரமும் ஆவிக்குரியபிரகாரமாக ஐசுவரியமும் உடையதாயிருந்தது, அதனால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது, வளர்ந்தது. ஆனால் இன்றைய சபைகளோ பொருளாதாரத்தில் ஐசுவரியவான்களும் ஆவிக்குரிய காரியங்களில் தரித்திரருமாய் இருப்பதால்தான் வளர்ச்சியில்லை, போட்டி, பொறாமை, பிரிவினைகள், ஒழுக்கக்கேடுகள் பெருகியுள்ளது. மனந்திரும்பாமல் விமோசனம் இல்லை.

4,நெருக்கப்பட்ட சபை
ரோ. 2:28-29ன்படி உள்ளத்தில் யூதர்களாயிராமல் புறம்பான யூதர்கள் விருத்தசேதனம் செய்ய நெருக்கிய நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, ராயனை வணங்காததால் சிறைக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி; விசுவாசத்தில் நிலைத்திருக்க சாத்தானோடுள்ள போராட்டத்தால் விசுவாச ஜீவியத்தில் நெருக்கடி போன்றவற்றால் நெருக்கப்பட்ட சபை, ஆனாலும் தேவபெலத்தால் போராடி ஜெயம்பெற்ற சபை. இது வாழ்க்கையில் நம்முடைய நம்பிக்கையையும், தைரியத்தையும் பலப்படுத்துகிறது.

வ 10: நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே, நம் விசுவாசத்தை சோதிக்கும்படி சாத்தான் நம்மைப் பாடுகளுக்குட்படுத்துவான். சிறைச்சாலையில் போடுவான். பாடுகள் பத்துநாள்தான் நீடிக்கும். “பத்துநாள் என்பது எண்ணி பத்து நாட்களல்ல; கொஞ்சக்காலம் என்பதே அர்த்தம். பாடுகள்தான் பரலோகத்திற்குப் போகும் படிகள் (அப்.14:22). விசுவாசிக்குக் கர்த்தர் கொடுத்த தீர்க்கதரிசனம் "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" யோவான் 16:33 இந்தப் பத்தாம் வசனத்தில் உண்மையுள்ள சபைக்கு இயேசு கொடுக்கும் ஆலோசனை
1. பயப்படாதே 2. மரணபரியந்தம் உண்மையாயிரு.

இந்த இரண்டு ஆலோசனைகளையும் கடைப்பிடிக்கிறவன் இரண்டாம் மரணத்தால் சேதப்படுவதில்லை, அதாவது, நரகவேதனைக்கு உட்படுவதில்லை.

ஆவியானவர் சொல்லுகிறது என்னவென்றால் ' ஜெயம் கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை'. இது ஒரு நம்பிக்கையூட்டும் உற்சாகமூட்டும்வார்த்தை. வேறுவிதமாய்ச் சொன்னால், நரகம் எனக்காக உள்ளதல்ல, ஆகவே நான் நிச்சயமாய் அதற்குத் தப்பி மோட்சம் சேருவேன். சகோதரனே உமக்கு இந்த நிச்சயம் உண்டா? இல்லையேல் இன்றே மனந்திரும்பும்.

வெளி. 2: 12- 17 பெர்கமு சபை 

பொர்கமு சபையின் தூதன் 3 யோ. 1:1ல் சொல்லப்பட்ட காயுவாக இருக்கலாம்,

வ 12: இயேசு ஒவ்வொரு சபைக்கும் தம்மை வித்தியாசமாகவே அறிமுகம் செய்கிறார். அந்த சபைக்கு இயேசுவின் எந்த ஒரு செயல் அல்லது தன்மை அதிக நன்மையாயிருக்குமோ அந்தவிதத்தில் தம்மை அறிமுகம் செய்கிறார். வெளி 1:16ல் யோவான் 'அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டதைக் கண்டான், வாயிலிருந்து பட்டயம் புறப்படுவது தேவனுடைய வாயின் வார்த்தையின் வல்லமையைக் குறிக்கிறது. சாத்தானின் சிங்காசனம் இருக்கும் இடத்திலிருக்கும் இந்த சபைக்கு தேவ வார்த்தையின் வல்லமையை விளங்கப் பண்ணவே இந்த அறிமுகம் வ 12-17.

பெர்கமுஆசியாவின் தலைநகரம், மகாஅலெக்சான்டரால் கட்டப்பட்டது, கிரேக்கக் கலாச்சாரமும், தேவதைகளின் சிலைகளும் நிறைந்த பட்டணம், இங்கு 2,00,000 புத்தகங்களைக் கொண்ட நூலகமுண்டு இது ஒரு வியாபார மையம், செல்வம் கொழுத்த நகரம், இது ரோமர்களின் கைகளுக்கு மாறியது. அவர்கள் ராயனை வணங்க வற்புறுத்தினர்.

வ 13 இது சாத்தானின் சிங்காசனம் இருந்த இடமென்று சொல்லுகிறது, முதன்முதலில் பாபிலோனில் தான் சாத்தானின் சிங்காசனம் இருந்தது. அங்குதான் விக்கிரக வணக்கம் தோன்றியது, பாபிலோன் அழிந்து மண்மேடான பொழுது சாத்தான் தனது சிங்காசனத்தை செல்வச்செழிப்பான பெர்கமுவுக்கு மாற்றிக் கொண்டான்.

ஆதியிலே சாத்தானின் சிங்காசனம் பாபிலோனில்தான் இருந்தது. பாபிலோன் அழிந்து மண்மேடான பொழுது
சாத்தான் தன் சிங்காசனத்தை, செல்வத்தில் திளைத்த பெர்கமுவுக்கு மாற்றிக்கொண்டான், ஏனெனில் வெளி. 12:11ல் சாத்தானை சாட்சியின் வசனத்தினால் ஜெயித்தார்கள், இந்த வல்லமையையே பவுலும் எபே, 6:17ல் வலியுறுத்தி ஆவிக்குரிய போராட்டத்தில் வெற்றிபெற ஆவியின் பட்டயத்தை (வசனத்தை) பயன்படுத்துங்கள் என்றான். எபி. 4:12ல் “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும், வல்லமையும், உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கான தாயும் ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும், வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று எழுதியுள்ளது. இந்த ஆயுதமும், இந்த வல்லமையும் பெர்கமு சபைக்குத் தேவை என்பதாலேயே இயேசு தம்மை வாயில் பட்டயமுடையவராக வெளிப்படுத்தினார்
வசனத்தின் வல்லமை என்ன?

சங், 107:20ல் அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

எபி, 1:3ல் சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறார்.

பாவத்தின் மேலும் (சங், 119:11) சாத்தானின் மேலும் வசனத்தால் வெற்றியுண்டு,

யோவான் 12:48 வசனமே கடை சிநாளில் நியாயந்தீர்க்கும், வசனத்தின்படி நடக்கிறவர்கள், வசனத்தின் வல்லமையால் பாவத்தையும் சாத்தானையும் ஜெயித்து வெற்றி வாழ்க்கை வாழுவார்கள்.

வ 13: இயேசு பெர்கமு சபையில் காணப்பட்ட நற்குணங்களைப் பாராட்டுகிறார்.

1. சாத்தானின் சிங்காசனம் இருக்கிற இடத்தில் இருந்தாலும் கிறிஸ்துவுக்கு உண்மையாயிருந்து அவருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டிருந்த சபை, பாதகமான சூழ்நிலைகளிலும் சத்தியத்தைப் பற்றிக்கொண்ட சபை, சகோதரனே ஆலயத்திற்குள் தேவ பிரசன்னத்தை உணர்ந்து பரிசுத்தமாயிருக்கிறீர் சந்தையிலும், சமுதாயத்திலும் தேவப் பிரசன்னத்தில் இருக்கிறேன் என்ற உணர்வோடு சிந்தை, செயல், சொல்லில் பரிசுத்தமாயிருக்கிறீரா?

2. விசுவாசத்தில் உறுதி, தேவனுக்கு உண்மையான சாட்சியான அந்திப்பாஎன்பவன் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டான். கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவ காலம். அந்தக் காலத்திலும் சபையினர் இயேசுவை மறுதலியாமல் விசுவாசத்தில் உறுதியாய் இருந்தனர்,

நம்மால் அப்படி இருக்க முடியுமா? அல்லது உயிருக்கு பயந்து இயேசுவை மறுதலித்து விடுவோமா? அநியாயத்தை சகிக்கவும், உபத்திரவத்தில்பொறுமையாயிருக்கவும் ஆவியானவரின் பெலனை நாடுவோம். கர்த்தர் ஒரு நாளிலே நம்மையும் உண்மையும், உத்தமுமான ஊழியக்காரனே! உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேச! என்பார். பின்வாங்கிப் போகிறவன்மேல் கர்த்தர் பிரியமாயிரார்.

வ 14: ஆனாலும் சபையில் எல்லாரும் விசுவாசத்தில் உறுதியாயிருக்கவில்லை, மாமிச இச்சைக்கு அடிமையானவர்களும் சபையில் இருந்தனர். வனாந்தரத்தில் இருந்த இஸ்ரவேலரை அழிக்க பிலேயாம் கொடுத்த போதனைகளானவிக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை புசிப்பதும் வேசித்தனம் செய்வதுமானவைகளைக் கடைப்பிடித்தவர்கள் சபையிலிருந்தனர். அப். 4:32ல் “சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருத்தது” என்ற வசனத்தைத் திரித்து பிறன் மனைவியும் பொது என்று சொல்லிய நிக்கொலாய் மதப்போதனைகளையும் கடைபிடித்து பாவத்தில் துணிந்து வாழ்ந்தார்கள்,

வ 15,16: இச்சையாகிய பாவத்தில் வாழ்பவர்களை தேவன் வெறுக்கிறார். தேவனண்டைக்குத் திரும்ப இன்னொரு தருணம் தந்து, “மனந்திரும்பு” என்கிறார். 

இச்சையை வெறுத்து மனந்திரும்பி பரிசுத்தமாகும். இல்லையேல் இயேசு தம் வாயின் பட்டயத்தால் உம்மோடு போராடி உம்மை அழித்துப்போடுவார்.

வ 17: பெர்கமு சபையில், பிலேயாமுடைய போதனைகளுக்கும், நிக்கொலாய் மதப் போதனைகளுக்கும் இடங்கொடாமல் ஜெயங்கொண்டவர்களுக்கு “மறைவான மன்னாவை” புசிக்கக் கொடுப்பேன், மன்னா என்பது தேவன் இஸ்ரவேலருக்கு வனாந்தரத்திலே கொடுத்த உணவு. அது தேவன் தம்முடைய வார்த்தையினால் நம்மை போஷிக்கும் ஆவிக்குரிய உணவைக் குறிக்கிறது, இது மொத்தமாக இருச்சபைக்குக் கொடுக்கப்படவில்லை. ஜெயங்கொள்ளுகிற ஒவ்வொருவனுக்கும் கொடுக்கப்படுகிற ஒரு பலன்.

ஜெயங்கொள்ளுகிறவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக்கல்லின்மேல் எழுதப்பட்டதும், அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தைக் கொடுப்பேன்.

இந்த வெண்மையான குறிக்கல்லைப்பற்றி அது என்னவென்று ஒருவருக்கும் நிச்சயமாய் தெரியாது. பழங்கால
நீதிமன்றங்களில், தீர்ப்புக் கொடுக்குமுன் இரண்டு கற்களிருக்குமாம். ஒன்று வெள்ளை, மற்றது கறுப்பு. தண்டிக்கும் தீர்ப்பு கொடுக்குமுன் கறுப்புக்கல்லை வைப்பார்களாம். விடுதலையாக்கும் தீர்ப்பு வழங்கும் பொழுது வெண்மையான கல்லை வைப்பார்களாம். ஆகவே ஜெயங்கொள்ளுகிறவனை தேவன் இரண்டாம் மரணத்தினின்று விடுவித்து வெண்மையான கல்லை அவனுக்குக் கொடுக்கிறார்,

புதிய நாமம்: புதிய நாமம் என்றது புதிய அந்தஸ்தை ஆக்டேவியஸ் ரோமப் பேரரசனான போது அவனது பெயரை அகுஸ்துராயன் என்றுமாற்றினார்கள். நம்மையும் தேவன் விடுவிக்கும் போது பரிசுத்தவான் எனும் புதிய அந்தஸ்தைக் கொடுக்கிறார்.

தியத்தீரா சபை

இந்தப் பட்டணம் மகா அலெக்சான்டரால் கிமு 300ல் கட்டப்பட்டது. பெர்கமுவிலிருந்து லவோதிக்கேயா செல்லும் சாலையில் அமைந்த நகரம், பல தொழில்கள் நடந்த இடம். இதிலுள்ள சாயப்பட்டறைகளும், நெசவு தொழிலும் பிரபலமானவை, இந்த ஊரைச் சேர்ந்த லீதியாள் என்பவள் பிலிப்பி பட்டணத்தில் இரத்தாம்பரம் விற்றுக்கொண்டிருந்தாள் என்று அப். 16ல் வாசிக்கிறோம்.பவுலால் இரட்சிக்கப்பட்டபின் இந்த சபை வளர்ச்சிக்கு ஒரு காரணமாயிருத்திருக்கலாம். தியத்தீரா எந்த ஒரு புறஜாதிக் கடவுளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காத நகரம், இங்கே குறிசொல்லுகிற ஒரு ஆலயமுண்டு. “சம்பாத்தி' என்றொரு பெண் குறிசொல்லிக் கொண்டிருந்தாள். வேறு விக்கிரக கோவில்களும் இருந்தன. அநேகந் தொழில்கள் இருந்தபடியால் பல தொழிற்சங்கங்கள் இருந்தன, வேலை செய்பவர்கள் இந்த சங்கங்களில் சேரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இது கிறிஸ்தவர்களுக்குப் பெரும் இடையூறாக இருந்தது. ஏன்? இறிஸ்தவர்கள் சங்கங்களில் சேரக்கூடாதா? இந்தசங்கங்களில் அடிக்கடி விருந்துகள் நடக்கும். இந்த விருந்துகள் பெரும்பாலும் விக்கிரகக் கோவில்களிலேயே நடக்கும், வேறு இடங்களில் நடந்தாலும் விக்கிரகங்களுக்குப் பலியிட்டு அவைகளுக்குப் படைத்தவைகளையே புசிப்பார்கள். விருந்து முடிந்தவுடன் குடித்து வெறிப்பார்கள். இது கிறிஸ்தவர்களால் செய்ய முடியாத ஒன்று, எனவே நெருக்கப்பட்டார்கள். சபையினருக்கு சோதனை சபைக்குள்ளிருந்தே வந்தது, யேசபேல் என்பவள் சபையில் முக்கியத்துவம் வாய்ந்தவள், கள்ளத் தீர்க்கதரிசி, வியாபாரம் செய்பவர்கள், சங்கங்களில் சேர்ந்து, அவர்களோடு இணைந்து, தங்கள் வியாபாரத்திற்காய் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதும், வேசித்தனம் பண்ணுவதும் பாவமில்லையென்று போதித்தாள். அநேகரை வழிவிலகப் பண்ணினாள். ஊழியக்காரரும் வேசித்தனம் செய்தார்கள், இந்தப்பின்னணியில் தான் இந்தக் கடிதத்தைப் படிக்க வேண்டும்,

ஏழு சபைகளுக்கும் எழுதிய கடிதங்களிலேயே தியத்தீரா சபைக்கு எழுதின கடிதம்தான் நீளமான கடிதம், அது தேவன் இந்த சபையின்மேல் அதிக பாரம் கொண்டதைக் காட்டுகிறது.

இயேசு தன்னைத் தேவகுமாரனென்று அறிமுகப்படுத்துகிறார். புதிய ஏற்பாட்டில் இந்த ஒரு இடத்தில்தான் இயேசு தன்னைத் “தேவகுமாரன்” என்று அழைத்திருக்கிறார்.

அக்கினி ஜுவாலை போன்ற கண்கள்: தேவன் கிரியைகளைப்பார்த்துத் தீர்ப்புச்செய்யாமல் உள் நோக்கத்தை அறிந்து தான் தீர்ப்பு செய்கிறார், இந்த சபைக்குப் புதிதாக வருகிற எவனும் இதைப்போன்ற நல்ல சபை கிடையாதென்றே சொல்லுவான். ஆனால் இயேசுவோ மறைவான பாவங்களை அறிந்தபடியினால் சபையைக் கண்டிக்கிறார்.

கிரியைகள்:

அன்பு பிறரிடத்தில் காட்டிய அன்பு- மருத்துவமனைகள், ஆதரவற்றோர் ,விதவைகள் காப்பகங்கள் போன்றவற்றை சபை நடத்தினது, ஊழியம் விக்கிரகங்களை வணங்காமல் தேவனையே வணங்கினர். விசுவாசம் சடங்காச்சாரங்களுக்கும் கட்டுக்கதைகளுக்கும் இடங்கொடாமல் தேவனைப்பற்றும் விசுவாசத்தில் உறுதியாயிருந்தனர். பொறுமை மற்றவர்களின் குறைகளைப் பொறுமையாய் சகித்தனர். பிந்தின கிரியைகள் அதிகம். சபையின் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி.

வ 20 ஆகிலும் உன்பேரில் எனக்குக் குறையுண்டு, கள்ளத்தீர்க்கதரிசியாகிய யேசபேலை ஏற்றுக்கொண்டு மற்றவர்களை அவள் வஞ்சிக்க இடம் கொடுக்கிறாய். மனந்திரும்ப அவளுக்குத் தவணை கொடுத்தேன். அவளுக்கோ மனந்திரும்ப மனதில்லை. ஆகையால் அவளைத் தண்டிப்பேன்.

கட்டில் கிடையாக்கி, போதனை செய்வதற்கு நடமாட முடியாதபடி செய்வேன். அவளோடு விபச்சாரம் செய்தவர்களை: இது எவ்வித விபச்சாரமென்று தெளிவாக இல்லை. யாத், 34:15, 16; உபா. 31:16; ஓசி, 9:1: மாற், 8:38; மத்,16:4,12:39 ஆகிய வசனங்களில் இஸ்ரவேலின் ஆவிக்குரிய விபச்சாரம் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்தச் சபையிலும்விக்க வணக்கமாகிய விபச்சாரம் இருந்திருக்கலாம்,

வ 23: பிள்ளைகளைக் கொல்லவே கொல்லுவேன். பிள்ளைகள் யார்? கள்ளத்தீர்க்கதரிசியைப் பின்பற்றினவர்களே அவளுடைய பிள்ளைகள் , அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் அவர்களை இரண்டாம் மரணமாகிய நரகத்தில் தள்ளிவிடுவேன், இந்தத் தண்டனையின் மூலம் மற்றவர்கள் அறிந்து கொள்வதென்ன? இயேசு உள்ளந்திரியங்களையும், இருதயங்களையும் ஆராய்கிறவறென்று எல்லா சபைகளும் அறிந்து கொள்ளும், உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன் என்கிறார்.

வ 24: சாத்தானின் ஆழங்கள் :- (1) குறிசொல்லுதல், பில்லிசூனியம், காம விகாரம் மாந்த்ரீகம் போன்ற எல்லாப் பாவங்களையும் செய்து அதைப்பற்றி அறிந்துகொள்.

(2) சரீரம் பாவம் செய்து கொண்டே இருக்கட்டும், ஆத்துமாவைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள், இது தவறான உபதேசம்; பிசாசின் தந்திரம்.

இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது (மத். 6:24), 1 கொரி, 2:10 தேவனுடைய ஆழங்கள் சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், இரட்சிப்பு, பாவி நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல்

'இந்தப்போதகத்தைப்பற்றிக்கொள்ளாமலும்சாத்தானின் ஆழங்களை அறியாமலுமிருக்கிறவர்களுக்குத் தேவன் தரும் ஆலோசனை என்னவென்றால் “உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள், இதுவே ஜெயம் கொள்ளுதல், ஜெயம் கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் பலன்கள்:

1. ஜாதிகளின்மேல் அதிகாரம், சத்துருக்களை நொறுக்கும் இருப்புக்கோல்,

2. விடிவெள்ளி நட்சத்திரம் இதற்கு சில விளக்கங்கள்

* ஏசா. 14:12ல் சொல்லப்பட்ட விடிவெள்ளியாகிய சாத்தானின்மேல் ஜெயம்.

* விடிவெள்ளியாகிய இயேசுவை சுதந்தரித்துக் கொள்ளுதல் அதாவது எப்பொழுதும் கிறிஸ்துவோடிருக்கும் பாக்கியம்,

* தானி. 12:3 அவனே நட்சத்திரமாய் ஜொலிப்பான்.

வெளிப்புறமாக உயிருள்ள நல்ல சபை, ஆனால் உள்ளேயோ பாவம் நிறைந்த சபை,

சகோதரனே! உம்முடைய உள்ளமும் இப்படித்தான் இருக்கறதோ? மனந்திரும்பும்,

Author: Rev. S.C. Edison



Topics: Tamil Reference Bible Revelation Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download