2:18 தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
2:19 உன் கிரியைகளையும் உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
2:20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
2:21 அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்த்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
2:22 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
2:23 அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
2:24 தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தனுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
2:25 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
2:26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
2:27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
2:28 விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்
2:29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.