முக்கிய கருத்து :
- சிருஷ்டி கர்த்தாவின் மகத்துவம்
- சிருஷ்டிப்பில் மனிதனின் ஸ்தானம்
சிருஷ்டி கர்த்தாவின் மகத்துவம்
1. கர்த்தர் பூமியையும் வானத்தையும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் அண்ட சராசரங்களையும் படைத்தவர். தேவ தூதர்களையும், மனிதர்களையும், ஜீவராசிகளையும் படைத்தவரும் அவரே. தேவனாகிய கர்த்தருடைய படைப்பின் விவரங்களை வேதத்தில் ஆதியாகமம் 1,2 அதிகாரங்களிலும் யோவான் 1 ஆம் அதிகாரத்திலும், எபிரேயர் 11:3 ஆம் வசனத்திலும் வாசிக்கிறோம். ஆகவே, தேவன் வானங்களுக்கும் மேலாக உயர்ந்தவர். அவருடைய மகத்துவம் எல்லா சிருஷ்டிப்புகளிலும் எல்லா இடங்களிலும் நிரம்பியுள்ளது (வச.1,9).
2. சகலத்தையும் படைத்த தேவன் மனித அவதாரமாக, மனித குமாரனாக பூமியில் அவதரித்து வாழ்ந்த நாட்களில் பூமியிலுள்ள அறிவில் முதிர்ந்த ஞானிகள் அவருடைய மேன்மையை மறுதலித்தபோது குழந்தைகளும், பாலகருமான சிறியவர்கள் அவருடைய மேன்மையை புகழ்ந்தார்கள் என்ற நிகழ்ச்சி மத்தேயு 21:15,16ஆம் வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 1 கொரிந்தியர் 1:27ஆம் வசனத்திலும் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. இதை சங்கீதக்காரன் 2 ஆம் வசனத்தில் தீர்க்கதரிசனமாக எழுதியுள்ளார்.
சிருஷ்டிப்பில் மனிதனின் இடம்
1. அண்ட சராசரங்களையும் எல்லா ஜீவராசிகளையும் படைத்த கர்த்தருடைய சிருஷ்டிப்பைப் பார்க்கும்போது மனிதனின் இடம் மிக அற்பமாக, சிறியதாக உள்ளது என்று 4ஆம் வசனத்தில் பார்க்கிறோம். ஆனால் தேவன் மனிதனை எல்லா ஜீவராசிகளையும் ஆண்டு ஆள பூமியில் வைத்திருக்கிறார் (வச.3-8). தேவன் தந்த இந்த பொறுப்பும் அதிகாரமும் ஆதியாகமம் 1:28,29,30ஆம் வசனங்களில் வாசிக்கலாம். இந்த நாட்களில் நாம் பார்க்கும்போது மனிதன் எல்லா ஜீவராசிகளையும் சிருஷ்டிப்புகளையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதைப் பார்க்கிறோம். தேவன் அளித்த விஞ்ஞானம் என்ற கருவிதனை (வீலிலியி) வைத்து மனிதன் அண்ட சராசரங்களையும் ஆராய்ச்சி செய்வதையும் பார்க்கிறோம்.
2. ஆனால், இந்த பூமியில் மனிதனை தேவதூதர்களுக்கு சற்று சிறியவனாக வைத்திருக்கிறார். தேவதூதர்கள் மனிதனை விட பெலமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று 2 பேதுரு 2:11 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவதூதர்கள் மனிதர்களுக்கு தேவனிடமிருந்து பலவித ஒத்தாசை உதவிகளைக் கொண்டுவந்தும், மனிதர்களைப் பிசாசின் வல்லமைக்கும் பாதுகாக்கிறார்கள் என்று வேதத்தின் பல பகுதிகளில் வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 28:12,13; யாத்திராகமம் 32:1,2; தானியேல் 10:10-12; மத்தேயு 1:20; லூக்கா 2:10, 22:42-44; அப்போஸ்தலர் 12:7-10; வெளி.7 முதல் 11 அதிகாரங்கள் தேவதூதர்களின் செயல்பாட்டை காண்பிக்கிறது.
ஆனாலும், மனிதன் தேவதூதர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரைதான் கீழ்பட்டு இருப்பான் என்பது (கலாத்தியர் 4:13) வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு பிதாவாகிய தேவன் குறித்துள்ள ஸ்தானம் எபேசியர் 2:7இல் பார்க்கலாம்.
"கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழும்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும்செய்தார்' என்பது தேவதூதர்களுக்கும் இல்லாத மனிதர்களுக்கே கொடுக்கப்பட்ட உயர்ந்த ஸ்தானமாகும்.
3. தேவன் மனிதனை பூமியில் எல்லா படைப்புகளையும்விட மேலான ஸ்தானத்தில் வைத்திருப்பதைக் குறித்து பெருமைப்படுவது அல்ல. ஆனால், மனிதனை தேவன் ஒரு விசேஷ நோக்கத்துடன் அந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கு தகுதியாக நடந்து கொள்ளவேண்டும் என்று எபேசியர் 4:1,2 வசனங்களில் வாசிக்கிறோம்.
Author: Rev. Dr. R. Samuel