முக்கியக் கருத்து
- கர்த்தருடைய ஊழியர்கள் மாத்திரமல்ல, பூமியின் எல்லா திசைகளிலுமிருந்தும் அவருக்கு துதி செலுத்தப்பட வேண்டும்.
- மகா உன்னதமான தேவன் தமது சிருஷ்டிப்பைப் பார்க்கத் தம்மையே தாழ்த்தி இறங்க வேண்டியதாயிருக்கிறது.
- எளியவனுக்கு இரங்கி உதவி செய்து அவனை பிரபுக்களுக்கு சமமாக உயர்த்துகிறார்.
1. (வச.1-3) துதிக்கும் பாத்திரர்
கர்த்தருடைய மகத்துவத்தை அறிந்து அவருடைய ஊழியர்கள் கர்த்தரை துதிக்கவேண்டும். அதுமாத்திரம் போதாது, எல்லா திசைகளிலுமிருந்தும் அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் செலுத்தப்படவேண்டும். ஏனென்றால், அவருடைய நாமம் வல்லமையுள்ளது, துதிக்குப் பாத்திரமானது.
துதிபாடல்
இயேசுவின் நாமம் ஓங்கிடவே
நேசமுடன் புகழ் பாடிடுவோம்
காசினியில் நிகர் வேறதற்கில்லை
தாசர்கள் நாம் துதி சாற்றிடுவோம்
அனுபல்லவி
வானமும் பூமி யாவையுமே
வார்த்தையினால் உண்டாக்கினார்
என்னை மண்ணென்று நினைவாக்கினவர்
எனக்கென்றும் சொந்தமவர்
சரணம்
1. அற்புதமாம் அதிசயமாம்
ஆண்டவர் இயேசுவின் நாமமதே
பேய் நடுங்கும் கடும் நோய் அகலும் - நல்
பேர் புகழ் ஓங்கிடுமே நாமமதே
பாட்டு - சகோதரி சாராள் நசரோஜி
2. (வச.4-6) தன்னிகரற்ற உன்னத தேவன்
கர்த்தர் எல்லா ஜாதிகளுக்கும் மேலாக உயர்ந்தவர். மேன்மை பொருந்திய சிருஷ்டிப்புகள் அனைத்துமே அவரால் படைக்கப்பட்டவை. இந்த படைப்புகளை பார்க்க வேண்டுமானால் அவர் தமது உன்னத வாசஸ்தலத்திலிருந்து தம்மையே தாழ்த்தி இறங்கி வர வேண்டிய அளவுக்கு அவர் மகா மேன்மையுள்ளவராயிருக்கிறார். இந்த பூமியைத் தமது உன்னத ஸ்தலத்திலிருந்து பார்க்க பலமுறை இறங்கி வந்தார் என்று பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம்.
ஆதி.6:12. 7:1, 11:5-8, 12:1-4, ஆதி.18:20, 28:11-13
கடைசியாக மனிதனை பாவத்திலிருந்து மீட்க பூமிக்கு இறங்கி வந்து மனுஷகுமாரனாகவே பிறந்தார்.
மத்தேயு 1:21, பிலிப்.2:6-8
3. (வச.7-9) தாழ்ந்தவர்களின் தேவைகளை தருகிறவர்
வாழ்க்கையில் தாழ்ச்சியடைந்து தேவைகளில் வாடும் மக்களின் குறைவை நிறைவாக்குவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். மலடியை பிள்ளைத்தாச்சியாக்கும் மகிழ்ச்சியை போன்ற அதிசயமான விதத்தில் எளியவர்களை தூக்கி எடுத்து, பிரபுக்களோடே சமமாக நிறுத்த வல்லவர் நம் தேவன். அன்னாளின் வாழ்க்கையில் இந்த அற்புதத்தை தேவன் செய்ததால் இந்த வார்த்தைகளால் அன்னாள் தேவனைத் துதித்தாள்.1 சாமுவேல் 2:1-8
நாமும் தேவனை இவ்விதமாக துதிக்க முடியும். விசுவாசிப்பீர்களா?
Author: Rev. Dr. R. Samuel