முக்கியக் கருத்து
- மேசியா கிறிஸ்து - தேவன், ராஜா, நியாயாதிபதி.
- மேசியா கிறிஸ்துவின் சத்துருக்கள் அவருடைய பாதபடியாக்கிப் போடப்படும்வரை அவர் பிதாவின் வலது பாரிசத்தில் பொறுமையோடு உட்கார்ந்திருப்பார்.
- மேசியா கிறிஸ்து இந்த உன்னத நிலையை அடைவதற்குமுன் .வழியில் பாடுகளை அனுபவித்த பிறகே தனது தலையை உயர்த்துவார்.
இது ஒரு தீர்க்கதரிசன சங்கீதம்.
1. (வச.1) மேசியா கிறிஸ்து - தேவன்
"கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: ... என்றார்' என்ற வார்த்தைகள் யெகோவா தேவனுடைய வார்த்தைகளாக இருக்கிறபடியால், மேசியா கிறிஸ்துவை தேவனாகவும், அவருடைய சத்துருக்கள் அனைவரும் அவருடைய பாதபடியாக்கப்படுவார்கள் என்பதையும் உறுதிப்படுத்தும் வல்லமை பொருந்திய வார்த்தைகளாகவும் உள்ளது. மேசியா கிறிஸ்துவை எதிர்ப்பவர்கள் அவருடைய பாதபடியாக்கப்படும்வரை குமாரனாகிய கிறிஸ்து பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்து பொறுமையுடன் காத்திருப்பார். மத்தேயு 22:44,45, எபிரெயர் 10:12,13, வெளி.20:13,14, 1 கொரி.15:25.
தேவ மக்களாகிய நம்மை எதிர்க்கும் சத்துருக்களை கர்த்தர் தாழ்த்தி நம்மை உயர்த்தும்வரைக்கும் நாமும்கூட பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். 1 பேதுரு 5:6,7.
2. (வச.2,3) மேசியா கிறிஸ்து - இராஜா
மேசியா கிறிஸ்து இந்த பூவுலகை தமது சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்வார். அவர் ஆளுகை செய்யும்போது அவரை எதிர்த்த எல்லா சத்துருக்களும் அவருடைய பாதப்படியாக்கப்பட்டிருப்பார்கள். சீயோன் என்ற ஆவிக்குரிய பரலோகத்திலிருந்து பிதாவாகிய தேவன் அவருக்கு வல்லமையின் செங்கோலை அனுப்ப, குமாரனாகிய கிறிஸ்து எழுத்தின்படியான சீயோனை தலைநகராகக் கொண்டு ஆயிரம் வருட அரசாட்சி செய்வார்.
ஏசாயா 2:2-4, யோவேல் 3:16, சகரியா 14:9 தானியேல் 7:13, வெளி.20:4.
மேசியா கிறிஸ்துவின் வல்லமையான ஆயிர வருட அரசாட்சியில் எழுத்தின்படியான இஸ்ரவேலரும், ஆவிக்குரிய இஸ்ரவேலருமான மீட்கப்பட்ட அவருடைய ஜனங்களாகத் தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தவர்கள். வாலிபத்தின் பெலன் கொண்டவர்களாக அவரிடம் சேர்க்கப்படுவார்கள்.நியாயாதிபதிகள் 5:2, சங்கீதம் 96:9, வெளி.19:7-9.
3. (வச.4) மேசியா கிறிஸ்து - ஆசாரியன்
மேசியா கிறிஸ்து ஒரு தனிப்பட்ட, விசேஷ ஆசாரியன். அவர் மோசே, ஆரோன், லேவி கோத்திரத்தின் முறைப்படி ஆசாரியத்துவம் பெற்றவரல்ல. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய ஆசாரியத்துவம் பெற்று ஆபிரகாமும்கூட தசமபாகம் கொடுத்த அநாதியான ஆசாரியன். இவர் சர்வ லோகத்தின் பாவத்திற்காக ஒரே தரம், தமது சொந்த இரத்தத்தையே பலியாக செலுத்தி பலிகளை நிறுத்திய பிரதான ஆசாரியன்.
ஆதியாகமம் 14:18,19, 49:10, யோவான் 8:56-58, எபிரெயர் 5:6, 6:20, 7:1,2.
4. (வச.5,6) மேசியா கிறிஸ்து - நியாயாதிபதி
பூமியின்மீது கிறிஸ்து வெற்றி சிறக்கும் யுத்த வீரனாக வந்திறங்கி நீதியை எதிர்க்கும் எல்லா ராஜாக்களையும் அதிகாரங்களையும் மடங்கடித்து, நியாயந்தீர்க்கவும் தமது இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கவும் போகிறார்.
மத்தேயு 25:31-46, தானியேல் 2,7,8 அதிகாரங்கள் வெளி.19:11-21, 20:11.
5. (வச.7) மேசியா கிறிஸ்து - பாடுகள் வழியே உன்னதங்களில் உயர்ந்திருப்பவர்.
மேசியா கிறிஸ்து இவ்விதமாக தேவனாகவும், இராஜாவாகவும், நியாயாதிபதியாகவும் உன்னதங்களில் உயர்த்தபடுவதற்கு முன், வழியிலே, அவர் பல பாடுகளை அனுபவித்து அதற்குப் பிறகுதான் தமது தலையை உயர்த்துவார்.
ஏசாயா 53:12, எபிரெயர் 2:9,10 பிலிப்பியர் 2:6-11, எபேசியர் 1:19-23.
கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாமும்கூட அவரைப்போலவே பாடுகளின் வழியாகச் சென்றால்தான் உன்னதத்திற்கு உயர்த்தப்படுவோம். ஆகவே, இவ்வுலகப்பாடுகளை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு நல்ல போராட்டத்தைப் போராடவேண்டும்.
ரோமர் 8:17, 2 தீமோத்.2:12, 2 கொரி.5:17, வெளி.7:13,14,15.
Author: Rev. Dr. R. Samuel