முக்கியக் கருத்து
- தேவனை கீர்த்தனம்பண்ண என் இருதயத்தின் ஆயத்தம்.
- கட்டப்பட்ட தேவ ஜனம் விடுவிக்கப்பட்ட ஜெபம்.
- தேவனாலே பராக்கிரமம் செய்து இழந்துபோன சுதந்திரங்களை திரும்பப் பெற்றுக்கொள்வோம்.
1. (வச.1-5) என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது
பூமிக்கும் வானத்திற்கும் மேலாக உயர்த்திருக்கும் தேவனுடைய மகிமையையும், தேவனையும் குறித்து ஜனங்களுக்குள்ளே துதித்து கீர்த்தனம் செய்து பாட என் இருதயமும், என் மகிமையும், என் இசைக் கருவிகள் அனைத்தும் அதிகாலையில் விழித்து ஆயத்தமாக இருக்கிறது என்று தாவீது அறிக்கையிடுகிறான்.
தேவ ஜனமே, நமது ஆயத்தம் எப்படி இருக்கிறது என்பதை சிந்திக்கவேண்டும். சங்கீதம் 119:147,148, 145 மத்தேயு 22:37 ஆயத்தமில்லாமல் கடமைக்காக உதாசீனமாக மகிமையுள்ள தேவனை தொழுது கொள்ள முடியாது.
2. (வச.6) தேவ மக்கள் விடுவிக்கப்பட்ட ஜெபம்
தேவ ஜனமாகிய இஸ்ரவேலர் கட்டப்பட்ட சிறையிருப்புக்குள் சென்றிருந்த காலத்தில் தேவ மக்கள் ஜெபித்து விடுதலைப் பெற்றுக்கொண்டார்கள். இந்த நாட்களிலும் கூட கட்டுண்ட நிலமையிலுள்ள விசுவாசிகள், தேவ ஊழியர்களுக்காக சபை ஜெபிக்கவேண்டும். கர்த்தர் விடுவிப்பார். அப்.12:5,7 எபேசியர் 4:1, பிலமோன் 1, வெளி.1:9.
3. (வச.7-9) - தேவ ஜனத்திற்கு தேவன் தந்த சுதந்திரம்
பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தில் தேவன் தமது ஜனங்களுக்கு செழிப்பான சுதந்திரத்தைக் கொடுத்தார். ஒன்றுமில்லாமல் தன் தகப்பன் வீட்டிலிருந்து ஓடிப்போன யாக்கோபை கர்த்தர் ஆசீர்வதித்தார். அவன் திரும்ப தகப்பன் வீட்டிற்கு வந்தபோது வழியில் சீகேம், சுக்கோத் இவற்றை அளந்து கொண்டான். ஆதி.12:6, 33:17-20 பின்னர் இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் யோசுவா தலைமையில் வந்தபோது கர்த்தர் மனாசே, எப்பிராயீம், யூதா கோத்திரங்களுக்கும் கீலேயாத் போன்ற செழிப்பான பிரதேசங்களையும் சீகேம், சுக்கோத் என்ற இடங்களையும் மீண்டும் சுதந்திரமாகக் கொடுத்தார். ஆதி.49:10, உபாகமம் 33:17 (யூதா. மனாசே .எப்பிராயீம்) யோசுவா 13:25,27
தாவீது இஸ்ரவேலருக்கு இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பிறகு இந்த சுதந்திரங்களை மீண்டும் தனக்காக தேவனுடைய நாமத்தில் உரிமையாக்கிக் கொண்டதை சாட்சியாக அறிக்கையிடுகிறான். விசுவாசிகளாகிய நாமும் கர்த்தர் நமக்கு வாக்குப்பண்ணின அனைத்து சுதந்திரங்களையும் உரிமையோடும், விசுவாசத்தோடும் அறிக்கையிட்டு திரும்ப பெற்றுக்கொள்ளவேண்டும்.
4. (வச.10-13) - மனித உதவி விருதா. தேவனாலே சத்துருக்களை மேற்கொள்வோம்
தேவ ஜனம் தேவனை விட்டு வழிவிலகிப்போன நேரத்தில் தேவன் தமது ஜனத்தின் சேனைகளை புறக்கணித்தார். சத்துருக்கள் அவர்களை மேற்கொண்டார்கள். ஆனால், தாவீது தேவனிடம் மீண்டும் நெருங்கியபோது கர்த்தரின் நாமத்தில் அரணான பட்டணங்களாகிய தங்கள் தேசத்திற்குள் சென்று தேவனாலே பராக்கிரமம் செய்து சத்துருக்களை மேற்கொண்டு எல்லா சுதந்திரங்களையும் பெற்றுக்கொண்டார்கள். இக்கட்டு நேரங்களிலும் மிகவும் தேவைப்படும் சமயங்களிலும் மனித உதவி விருதாவாகிறது. ஆனாலும். தேவனுடைய உதவியோ நம்பத்தகுந்தது என்பதை இஸ்ரவேல் மக்கள் அறிந்து கொண்டார்கள்.
Author: Rev. Dr. R. Samuel