நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்
ஏசாயா 1 அதிகாரத்தை ஒவ்வொரு வசனமாக தியானிப்போமாக.
ஏசாயாவின் புத்தகம் தான் முதலாவது தீர்க்கதரிசன புத்தகம். இதில் எழுதியிருக்கிற ஒவ்வொரு எச்சரிப்பும் கிறிஸ்துவின் சரீரமான சபைக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.
கிறிஸ்துவின் சரீரமான சபையிலுள்ள மக்களாகிய நாம் நமது எஜமானின் குரலை கேட்காமால் இந்த அழிவின் காலத்தில் உணர்வில்லாமலும் இருக்கிறோம். மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும். நாமோ, நமது சபைகளின் தலைவர்களோ, சுவிசேடகர்களோ, தங்களுக்கு வருமானம் குறைந்ததனால், தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படாமல் இருக்கும்போது, எப்போது சபைகள் திறக்கப்படும், தாங்கள் சபை மேடைகளிலிருந்தும், அல்லது சுவிசேட கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற ஆவலோடு இப்போது online மூலமாக தேவமக்களை ஜெபிக்க தூண்டி வருகின்றார்கள். நாம்தான் இந்த தேவ நியாயத்தீர்ப்புக்குக் காரணம் என்று இதுவரை அறிந்துக்கொள்ளவில்லை. அறிந்துக்கொள்ளவும் விரும்புவது இல்லை. தாங்கள் செய்துவரும் ஊழியங்கள் புதிய ஏற்பாட்டின் சத்தியத்திற்கு உட்பட்டதா என்று ஆராய்ந்து பார்க்காமலே, தேவ மக்களை ஜெபம் பண்ணச்சொல்ல ஏவுகிறார்கள்
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; என்று 15ம் வசனத்தில் கூறுகிறார்.
"ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்
"இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது" என்று கூறுகிறார்
நாம் எவ்வளவு கத்தி கூக்குரல் இட்டாலும், நமது ஜெபத்தை ஆண்டவர் ஏற்றுக்கொள்ளமாட்டாராம். ஏனெனில் நமது கைகள் இரத்தத்தினால் கறைபட்டு இருக்கிறதாம். நாம் கொலை செய்திருக்கமாட்டோம். ஆனால் இரத்தம் வேர் வடித்து ஏழை மக்கள் சம்பாதித்த பணத்தையும், திக்கற்ற பிள்ளைகளுடமிருந்தும், விதவைகளிடமிருந்தும் தசம பாகம், ஊழியத்திற்கு உதவி என்று வற்புறுத்தி வாங்கி, கட்டிடங்கள், வெளிநாடு ஊழியம், television ஊழியம், உல்லாச வாழ்கை, சொகுசு வாகனங்கள், தேவன் படைத்த மலையை மக்களின் பணத்தின் மூலம் வாங்குவது போன்ற காரியங்களுக்கு செலவழித்து இருந்தால் தண்டனைக்கு எப்படித் தப்பிக்கொள்வோம்?
தேசத்தின் நன்மையை புசிக்கிறோமா. அல்லது தேசத்தின் கொடூரங்களை அனுபவிக்கிறோமா...
நமது பாவக்கறையுள்ள கைகளை கழுவிச் சுத்திகரிப்போமாக. இனிமேலாவது பிறரது பணத்தையோ சொத்தையோ இட்சியாமல் இருப்போமாக
நமது கிரியைகளின் பொல்லாப்பை தேவனின் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயவேண்டுவோமாக;
எதிர்த்து நின்றால் கர்த்தரின் பட்டயத்திற்கு இறையாவோம். ஜாக்கிரதை. மனம் திரும்புவோம்.
இன்று ஒரு சிறு கூட்டத்தாரையே சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியாக வைத்திருக்கிறார். இல்லாவிட்டால் நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
தேவ வசனத்திற்கு கீழ்ப்படியாமல் தங்கள் சுயசித்தத்தில் சபைகளை அல்லது ஊழியங்களை ஆரம்பித்து தேவமக்களை வழிநடத்துகிற தலைவர்களை ஆண்டவர் "சோதோமின் அதிபதிகளே" என்று அழைக்கிறார், "கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்" என்று தேவ வசனத்தை தியானிக்காமலே, தங்கள் தலைவர்கள் நடத்தும் பாதைகளில் நடக்கும் ஆயிரமாயிரம் மக்களைப்பார்த்து தேவன் இவ்விதம் கூறுகிறார்.
தேவ வசனத்திற்கு நேராக திரும்புவோம். தொலை காட்சிகள், யூடியூபில் வரும் செய்திகளை தேவசனத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கவும். அப்படியே நம்பவேண்டாம்.
நம்மை இந்த #கொரானா__தொற்று நோய்களிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்க ஒரே வழி தேவ வசனத்தின் சத்தியத்திற்கு கீழ்ப்படிவதுதான். கிறிஸ்தவ தலைவர்களோடு இணைந்து ஜெபிப்பதானால் அல்ல.
கடைசிநாட்களில் நடக்கும் தீர்க்கதரிசனம்
ஏசாயா 2 அதிகாரத்தை தியானிப்போம். இது கடைசிநாட்களில் நடக்கும் தீர்க்கதரிசனம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப்பின் நடக்கும் அல்லது ஆயிரம் வருட இறை ஆட்சியில் நடக்கும் காரியம் அல்ல.
கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
உலகத்தையே ஒரு #கொரானா__தொற்று வியாதி தலைகீழாக மாற்றிவரும் இந்த கடைசி காலத்தில், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படுகிறது.
எல்லா நாடுகளிலும் மக்கள் கிறிஸ்துவை நோக்கி ஓடி வருகின்றார்கள். சீயோனிலிருந்து வேதம் (Law) வருகிறது. தேவனின் வாசஸ்தலம் தான் சீயோன் நகரம். தேவ வசனமாகிய கட்டளைக்கு மேல் எந்த மனிதன் ஏற்படுத்திய சடங்காச்சரமோ. கொள்கையோ நிலை நிற்காது. பரிசுத்தமில்லாத மாய்மாலம் நிறைந்த ஆராதனைகளாக இருக்கட்டும். தசமபாகம், காணிக்கைகளின் மேல் கட்டப்பட்ட சபைகளாக இருக்கட்டும். தேவமக்களின் பணத்தை வைத்து தேவனின் பெயரில் நடந்துவரும் மாய்மாலம் காணப்படும் ஊழியங்களாக இருக்கட்டும். இவைகள் எல்லாம் சீயோனிலிருந்து புறப்படுகிற வேதத்திற்கு உட்பட்டதாக இருக்கிறதா?
எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனம் வெளிப்படுகின்றது. கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு எருசலேம் மூலம்தான் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இன்று ஆயிரமாயிர மக்கள் கள்ள போதகர்களைத் தேடி அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு ஓடுகிறார்கள். தொலை காட்சிகளின் பெட்டிகளுக்கு முன்பு உட்கார்ந்து "எருசலேமிலிருந்து" வரும் கர்த்தரின் வசனங்கள் என்று நம்பி ஏமாந்து போகும் காலமிது! சீயோனிலிருந்து தேவனின் சட்டதிட்டங்களின் படிதான் ஊழியங்கள் அமைய வேண்டும். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன புத்தகங்களில் எவ்விதம் தேவ ஆலயம் கட்டப்படவேண்டும் என்று சட்டதிட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல புதிய ஏற்பாட்டின் ஊழியங்களுக்கான சட்டதிட்டங்களை அப்போஸ்தலர்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.
கிறிஸ்து தன் ஜனத்தை நியாயம் விசாரிக்கும் காலமிது. கிறிஸ்துவ ஜனங்களோ தங்களுக்குள் வாதாடி தர்க்கம் பண்ணி தங்களைத்தாமே அழித்துக்கொள்ளாமல், தேவ வசனத்திற்கு மாத்திரம் நடுங்கி தங்களது பட்டயங்களை, ஈட்டிகளை தூர எறிந்து "கர்த்தரின் வெளிச்சத்திலே” நடக்கவேண்டும்.
'கீழ்த்திசையாரின் போதகத்தால்" யாக்கோபின் வம்சத்தாராகிய நாம் குறிகள் சொல்லி வரும் காலத்தில் நடக்கும் காரியங்களை தீர்க்கதரிசனம் என்ற பெயரில் அறிவித்து, நாள் பார்த்து, இந்து மத தலைவர்களை பின்பற்றி வருகிறோம். கர்த்தர் நம்மை கைநெகிழ்ந்து ஒரு அணுவிற்கு Virus ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
நமது தேசத்தில் எல்லாவிதமான உலகப்பிரகானமான, பொன் தங்கத்தால் நிறைந்துஇருக்கிறது. இந்த பொன்னெல்லாம் எப்படி சம்பாதித்தோம். நமது சொந்த வேர்வையால் சம்பாதித்தோமா அல்லது பிறரின் நெற்றிவேர்வையால் சம்பாதித்த பணத்தால் வாங்கிய பொருட்களா? "பொக்கிஷங்களுக்கு முடிவில்லை" உல்லாசமான கார்கள் (குதிரைகள், இரதங்கள்) ! விதம்விதமான ஆடைகள்!
நமது தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு ஊழியனும் ஒரு விக்கிரமாக காட்சியளிக்கிறான். "தங்கள் கைகளின் கிரியையையும் தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்து கொள்கிறார்கள்". தங்களது ஊழியங்களைக் குறித்து மேன்மை பாராட்டி தேவமக்களை தங்களது விக்கிரங்களுக்கு முன் பணிய வைக்கிறார்கள். "சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்"!
இந்த ஊழியர்கள் தேவனுக்கு அல்ல உலகப்பொருட்களுக்கு ஊழியம் செய்கிறார்கள். அந்தந்த ஊழியர்களின் கோட்டைகளுக்குள்ளே அடைபட்டு எல்லா தேவமக்களும் குனிந்து பணிகிறார்கள். இந்த ஊழியர்களின் வாய்களிலிருந்து வரும் வார்த்தைகளை எருசலேமிலிருந்து வந்த தேவனின் வாக்காக எண்ணி இந்த ஊழியர்களை தொழுது கொள்கிறார்கள்.
இதை வாசிக்கும் நீ "கர்த்தரின் பயங்கரத்துக்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்". "நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்”. எல்லாம் தாழ்த்தப்பட்டு, சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்" உயர்ந்து இருக்கும். கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். எந்த கோபுரமோ, ஒரு பெரிய கூட்டத்தை ஆளும் பர்வத மலையைப்போல காட்சியளிக்கும் எந்த ஊழியமோ தாழ்த்தப்பட்டு "கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்". "விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்". தனக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கும் எந்த ஊழியமும் தாழ்த்தப்படும்.
"பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்" இப்போது நடப்பது என்ன? பூமியோ தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கர்த்தர் எழும்புகிறார். இன்று அவரின் கோபத்திலிருந்து தப்பிக்கொள்ள நாம் எத்தனையோ ஜெபக்கூட்டங்களை ஏற்படுத்தி நாம் அடைக்கலம் புகுந்து கொள்ள விரும்புகிறோம். உலகம் எங்கும் கன்மலைகளின் கெபிகள், குகைகள் எற்படுத்தப்படுகிறது. நமக்கு அடைக்கலம் இந்த ஜெபக்கூட்டங்களில் கலந்து ஜெபிப்பதினால் ஒருக்காலும் கிடைக்காது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தேவனை முழு இருதயத்தோடுத் தேடி அவரது வேதத்திற்கு கீழ்ப்படிந்து கிறிஸ்துவை பின்பற்றுவோமானால் இந்த நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கொள்ளலாம்.
"மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான். நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்". நாம் எல்லா விக்கிரங்களையும் நமது மனத்திரையிலிருந்து அகற்றிவிட்டு தேவ வசனத்திற்கு திரும்புவோமாக. "அந்த ஊழியன் ஜெபித்தால் தான் எனக்கு விடுதலை கிடைக்கும்" என்று எண்ணி அந்த ஊழியனை ஒரு விக்கிரமாக வைத்திருந்தால் அந்த விக்கிரத்தை அகற்றிவிடவும். எந்த நாசியிலே சுவாசமுள்ள மனிதனையும் அவனது கள்ள தீர்க்கதரிசனத்தையும் நம்பி ஏமாந்து போகவேண்டாம்.
சீயோன் குமரத்திகளின் மேல் நியாயத்தீர்ப்பு......
ஏசாயா 4ம் அதிகாரத்தை தியானிப்போம். முந்தின அதிகாரத்தில் சீயோன் குமரத்திகளின் மேல் நியாயத்தீர்ப்பு எதற்காக வருகிறது என்றும் எப்படி வருகிறது என்றும் படித்தோம்.
இந்த கடைசி நாட்களில் சீயோன் குமரத்திகளில் "ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்". ஆண்டவரால் நியாயம் தீர்க்கப்பட்டு தண்டிக்கப்பட்ட சீயோன் குமாரத்திகளில் ஏழு தேவபிள்ளைகள் அவர்கள் தங்களின் நிந்தை நீங்க ஒரு ஊழியனை தெரிந்துக்கொண்டு "நாங்கள் இனி யாருடைய போதகத்தை நம்பி மோசம் போகாமல் எங்களுக்கு ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொண்டு நடப்போம். நீ எங்களை வழிநடத்தினால் போதும்" என்பார்கள். அதாவது ஒரு (ஏழு பேர்கள்) சிறிய கூட்டமாக ஆண்டவரைத் தேடி ஒரு கறைபடாத ஊழியனை தலைவனாக ஏற்படுத்திக்கொள்வார்கள்.
இந்த மனம்திரும்பிய சிறிய கூட்டத்தார் தான் இஸ்ரவேலிலிருந்து தப்பினவர்கள். இவர்கள் கறைபட்டிருக்கும் பாபிலோனிய ஊழியங்களிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டு, ஒரு சிறிய குழுவாக ஜெபித்து, வேதத்தை ஆராய்ந்து பார்த்து அவர்களின் மத்தியிலிருந்து ஒரு தாழ்மையுள்ள ஊழியனை தெரிந்தெடுத்து தேவ பணி செய்வார்கள். எல்லா அங்கத்தினரும் சமமாக இருந்துகொண்டு ஊழியம் செய்வார்கள். தங்களுக்கென்று பதவிகளை வைத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களே ஒருவரை தெரிந்தெடுத்து அந்த ஊழியனின் பெயரில் ஊழியம் செய்வார்கள். இவர்கள்தான் கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருப்பார்கள்; இவர்களின் வாழ்க்கை இயேசுவின் மகிமையை வெளிப்படுத்தும். பூமியின் கனி இவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். இவர்களின் பணிகளின் மூலம் பூமி தன் கனியைக் கொடுக்கும்.
இந்த (remnant) தப்பிக்கப்பட்ட கூட்டத்தார் தங்களுக்கென்று பெயர்களையோ புகழையே தேடமாட்டார்கள். அவர்கள் நடத்தும் சபைகளும், பலவிதமான ஊழியங்களும் தேவனுக்கு மாத்திரம் மகிமை கொண்டு வரும். ஏழு பெயர்கள் என்பது ஒரு சிறிய சரீர வடிவத்திலுள்ள கூட்டு ஊழியம் (body ministry). அந்த குழுவில் உள்ளவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒருங்கிணைந்து ஒரு மகிமையான ஊழியத்தை செய்வார்கள். அவர்களை வழிநடத்தும் ஊழியனின் பேர்மாத்திரம் அந்த தேவ பணியாளர்களின் மேல் இருக்கும். அந்த leadership பொறுப்பில் இருக்கும் ஊழியனும் அந்த ஏழு எண்ணை கொண்ட குழுவில் ஒரு அங்கத்தினர்தான். இது ஒரு சபையாகவோ அல்லது சுவிசேஷ ஊழியமாகவோ இருக்கலாம்.
ஏழு என்ற எண் பூரணத்தைக் குறிக்கிறது. இது ஒரு ஏழு நபர்கள் கொண்ட குழுவோ சபையோ கிடையாது. ஆனால் முகம் முகம் அறிந்து தங்களை ஒவ்வொருவரும் நன்கு அறிந்து கொண்ட ஒரு கூட்டம்.
"அப்பொழுது, ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது
சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்".
இந்த கூட்டத்தார்கள் தான் சீயோனிலிருந்து மீட்கப்பட்ட மீதியான தேவமக்கள். இவர்களின் குடியிருப்பு ஆவிக்குரிய எருசலேமில் இருக்கும். இவர்கள் ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவர்கள் என்றும் பரிசுத்த கூட்டார் என்றும் அறியப்படுவார்கள்.
இந்த சிறிய குழுக்களின் மூலம்தான் சபைகள், ஊழியங்கள் சுத்திகரிக்கப்படும். சபைகளின் ஊழியங்கள், சுவிசேஷ ஊழியங்களின் மூலமாக உண்டான கறைகள், அக்கிரமங்கள், மன்னிக்கப்பட்டு ஒரு பெரிய சுத்திகரிப்பு நடக்கும்.
"அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும் அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்".
இந்த அடையாளங்கள் தான் ஒரு உண்மையான எழுப்புதலுக்கு நம்மை வழிநடத்தும். சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும் அதின் சபைகளின்மேலும் ஒரு கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தைக் காண்போம்.
நாம் இஸ்ரவேலின் சரித்திரத்தைப் படித்துப் பார்ப்போமானால் தேவன் கடைசியாக ஒரு சிறு கூட்டத்தாரையே கானான் தேசத்திற்கு வழி நடத்தினார். ஆயிரமாயிரம் ஆண்டவரை பின்பற்றிய மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு சிறிய 120 பெயரின் குழுதான், மேல் அறையில் பரிசுத்தாவியானவருக்கென்று காத்திருந்தனர்.
இவர்கள் மேல் எந்தவிதமான குற்றங்கள் காணமுடியாது. பணத்தை நம்பி ஊழியம் செய்யமாட்டார்கள். வெறும் "நல்ல செய்திகள்" அல்லது பேச்சு சாமர்த்தத்தினால் ஊழியம் செய்பவர்கள் அல்ல. வெறும் அற்புதங்களை காண்பித்து தங்களை மேன்மை பாராட்டமாட்டார்கள். சாட்சிகளை வைத்து தங்கள் ஊழியங்களை மிகப்படுத்தமாட்டார்கள். மறைந்திருந்து ஊழியங்கள் செய்து தேவனுக்கு மாத்திரம் மகிமையை கொண்டுவருவார்கள்.
இந்த கூட்டத்தார்கள் மூலம்தான் உலக மக்களுக்கு ஆத்துமாவை சுட்டெரிக்கும் பாவ வெயிலுக்கு கிறிஸ்துவின் நிழல் கொடுப்பார்கள். உலக துன்பங்கள் மழை போல வந்தாலும் ஒரு பாதுகாப்பு கூடாரம் கொடுக்கிறார்கள்.
இவர்களே தங்களின் ஊழியர்களின் எல்லா காரியங்களையும் செய்வார்கள். இவர்களுக்கு உதவும் மனிதர்கள் இவர்களுடன் சக ஊழியர்களாகவே இருப்பார்கள்
வேலி எடுக்கப்படும் நேசரின் தோட்டங்கள்.......
ஏசாயா 5 அதிகாரம் வசனங்கள் 1 – 10 வரை தியானிப்போம். நேசரின் திராட்சத்தோட்டத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் என்பது தேவன் நேசராக தெரிந்துக்கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் வம்சமே. தீர்க்கதரிசன புத்தகமாவது இப்போது புதிய ஏற்பாட்டின் படி, கிறிஸ்து நேசிக்கும் தன் சரீரமே.
தீர்க்கதரிசனத்தை சரித்திரத்திலிருந்து பிரித்து எடுத்து, அதை நமது சபைகளுக்கும் சுவிசேஷ ஊழியங்களுக்கும் (apply) பிரயோகிக்கலாம். சரித்திரம் நிறைவேறினாலும், தீர்க்கதரிசனம் இந்த உலகம் முடியும்வரை நிலைநிற்கும்.
நேசரின் ஒரு திராட்சத்தோட்டம் தோட்டம் மகா செழிப்பான மேட்டிலே உண்டு.
தேவனுடைய பிள்ளைகளை தேவன் இந்த திராட்ச தோட்டத்தில் (கிறிஸ்துவாகிய சரீரத்தில்) நடுகிறார். அவர் நம்மை "வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருக்கிறார்.
நமது ஜீவன்களிலுள்ள பாவங்களை சுற்றிக்கரித்து பரிசுத்த ஆவியானவரைக்கொடுத்து நம்மை நற்குல திராட்சச்செடிகளாக நடுகிறார். நமக்கென்று ஒரு சபையைக் கொடுத்து நம்மை தேவ பணியில் ஈடுபடும்படி ஒரு ஊழியத்தையும் கொடுக்கிறார். பின்பு நாம் நல்ல திராட்சப்பழங்களைத் கொடுக்கும்படி காத்திருக்கிறார்.
நமது வாழ்க்கையின் மூலம் கிறிஸ்துவின் கனிகள் வெளிப்படும்படி அநேக ஆண்டுகள் காத்திருக்கிறார். பின்பு நமது பணிகளின் மூலமாக நல்ல திராட்சப்பழங்களைத் தேடி வருகிறார்.
கிறிஸ்துவுக்கு சீடராக்குவது தான் தேவனின் முக்கியமான தரிசனம். இந்த தரிசனத்தை நிறைவேற்ற நாம் பலவிதமான பணிகளை செய்கின்றோம். இந்த பணிகளை அவரின் சித்தத்தின்படி செய்யும்போது நாம் அநேக ஆத்துமாக்களை நல்ல திராட்சப்பழங்களாக கொடுக்கிறோம். இன்று நாம் இதுபோல நல்ல திராட்சப்பழங்களைக் நமது வாழ்க்கையின் மூலமாகவும் , பணிகளின் மூலமாகவும் ஆண்டவருக்கு கொண்டுவருகிறோமா?
இன்று ஆண்டவர்களுக்கு சீடர்களை உருவாக்காமல் அநேக ஊழியர்கள் தங்களை பின்பற்றி அவர்களுக்கே சீடர்களாக மாற்றிவிடுகிறார்கள். அவர்களே ஆண்டவருக்கும் மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தர்களாக விளங்கி ஆண்டவருக்கென்று நல்ல திராட்சப்பழங்களைக் கொடுக்காமலிருக்கிறார்கள்.
நமது தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்துவின் கனிகளை வெளிப்படுத்தாமல் ஜீவிக்கும்போது, நமது ஊழியங்கள் மூலம் நல்ல திராட்சப்பழங்களை உருவாக்க முடியாது.
"அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது". இன்று ஆண்டவருக்கென்று சீடர்களை உருவாக்கி ஜான் வெஸ்லி, வில்லியம் கேரி, ஜட்ஸன், சாது சுந்தர் சிங், போன்ற நல்ல நல்ல திராட்சப்பழங்களை உருவாக்காமல் ஆராதிக்கும் விசுவாசிகளை உருவாக்கி நமது சபைகளை நிறைத்திருக்கிறோம். ஆராதனை வீரர்கள், ஜெப வீரர்கள் என்று பட்டங்கள் கொடுத்து அவர்களை அப்போஸ்தலர்களாகவோ, தீர்க்கதரிசிகளாகவோ, சுவிசேடர்களாவோ உருவாக்கவில்லை. நமது கூட்டங்களுக்கு வந்து தலையாட்டும் பொம்மைகளாகவே மாற்றியிருக்கிறோம். வேதத்தை படிக்க வைத்து அவர்களை சிந்திக்க வைத்து போதகர்களாக மாற்றாமல் நாமே எல்லா ஓய்வு நாட்களிலும் போதகர், டாக்டர் என்ற பட்டங்களில் செய்திகள் கொடுக்க விரும்புகிறோம்.
"நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?"
கசப்பான பழங்களை நாம் உண்டுபண்ணி ஆண்டவரின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறோம்
“இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்”.
இன்று கோடிக்கோடியாக திராட்சத்தோட்டங்கள் ஆண்டவரின் மெகா தோட்டத்தில் நடப்பட்டிருக்கிறது. அந்த திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை முன்னமே தோட்டக்காரர் அறிவிக்கிறார். அதின் வேலியை எடுத்துப்போடுகிறார், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்த்தெறிகிறார், அது மிதியுண்டுபோம். அதைப் பாழாக்கிவிடுவார்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவார்.
இன்று "எழுப்புதல் தாரும் தேவா" என்று உச்சக்கட்டத்தில் கத்தி வருகிறோம். ஆனால் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் ஆண்டவர் கட்டளையிடுகிறார். இன்று நமது ஊழியங்களின் மேல் மழை பெய்யாமலிருக்கிறது. ஜெபிக்கிறோம். ஆனால் எழுப்புதல் வரவில்லை.
நமது செடிகளின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் இருக்கிறது. நமது தோட்டம் நல்ல கனிகள் கொடுக்கவேண்டுமானால், செடிகளின் கிளைகள் நறுக்கப்படவேண்டும். இன்று கிளைகள் நறுக்கப்படாத பெரிய ஊழியங்களை ஆண்டவர் நியாயம் விசாரித்து வருகின்றார். ஊழியங்களிலும் தனிப்பட்ட வாழ்க்கைகளிலும் களைகள் பெருகிவிட்டன. களைகளை எடுக்கும் தீர்க்கத்தரசிகளை கல்லெறிகின்றோம்.
ஜாக்கிரதை! கர்த்தர் வேலியை எடுத்துப்போட்டால், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்த்தால் , அது மிதியுண்டுபோம்.
சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவின் சரீரமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று இந்த சரீரத்தில் அங்கமாகயிருக்கும் தேவ மக்களே!
"அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு".
"தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!"
கிராமத்திலும் கிறிஸ்துவை அறியாத இடங்களில் பலவிதமான இன்னல்களுடன் ஊழியம் செய்துவரும் ஊழியர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், இன்று அநேக தேவ ஊழியர்கள் கிறிஸ்தவ உலகத்தில் தங்களுக்கென்று சாம்ராஜ்ஜியங்களை கட்டி வருகிறார்கள். இன்று தேவமக்கள் தங்களது பொருளுதவிகளை இந்த பிரபலமான ஊழியங்களுத்தான் அதிகம் கொடுத்துவருகிறார்கள். அந்த பிரபலமான ஊழியர்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகள்தான் லாசரு போன்ற ஊழியர்கள் உண்டுவருகிறார்கள். Marketing மூலம் இந்த பிரபலமான ஊழியர்கள் வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்கள். இவர்களுக்கு ஐயோ!
"சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்". இதுதான் பரிசுத்தாவியானவர் கொடுக்கும் எச்சரிப்பு!
இன்று அநேக ஊழியங்களின் நிலங்கள் தேவன் விரும்புமளவு பலனை கொடுக்காமலிருக்கிறது. ஆவிக்குரிய தேவ வசனத்தின் பஞ்சம் உண்டாகியிருக்கிறது. ஆண்டவரின் சித்தத்தின்படி செய்யாத ஊழியங்கள் தேவன் எதிர்பார்த்த படி பலன்கள் கொடுக்காமலிருக்கிறது. மக்கள் சத்தியங்களை அறிந்துக்கொள்ளாமல் அற்புதங்களையும் தெய்வீக சுகத்தை மாத்திரம் பெற்று செல்கின்றனர்.
எழுப்புதலின் விளைவுகள்.....
இன்று ஏசாயா 5 அதிகாரம் வசனங்கள் 11 – 20 வரை தியானிப்போம்.
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
நாம் ஆவிக்குரிய ஜீவிதத்தில் மதுபானம் குடித்து போதை வெறியில் மதிமயங்கி காணப்படும் மக்களைப்போல காணப்படுகிறோமா? மேலறையில் சீடர்கள் பரிசுத்தாவியானவரால் நிரப்பப்படும்போது "மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்" (அப் 2:13). அன்று முதன்முதலாக தேவன் பரிசுத்தாவியானவரை வெளிப்படுத்தி கிறிஸ்துவாகிய சபைக்கு அவரை அருளப்பட்டபோது இதுபோல ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது. இன்றும் நாம் இதுபோல ஒரு அடையாளத்தை மிகைப்படுத்தி இதுதான் ஆவிக்குள்ளாகும் அனுபவம் என்று கூறி ஆராதனையில் தேவமக்களை மெய் மறக்க செய்கிறோமா? இதுதான் ஆவிக்குரிய அனுபவம் என்று போதித்து மக்களை அவர்கள் பாவ ஜீவியத்திலிருந்து விடுதலை பெற வழிநடத்தாமல் இருக்கிறோமோ? அவர்களை சீடர்களாக்கி ஊழியங்களில் நிலைநிறுத்துகிறோமா? ஆராதனையில் உணர்ச்சிவசப்படுத்தி மக்களை சந்தோஷமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கிறோமா?
"அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை". பரிசுத்தாவியானவர் எப்படி கிரியை செய்கிறார் என்றும் அவரின் கரத்தின் செய்கையைச் சிந்திக்க வைக்காமல், சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும் உபயோகித்து ஒரு உணர்ச்சி வசப்படுத்தலின் அனுபவத்திற்கு தேவமக்களை வழிநடத்துகிறோமா?
"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கடினமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள், அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்".
அவர்களில் கடினமுள்ள தேவமக்கள் (men of rank) இவ்விதம் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்களே! ஆவிக்குரிய ஆகாரத்தின் பஞ்சம் ஏற்பட்டு பட்டினியினால் தொய்ந்துபோகிறார்களே! நல்ல படித்த மக்கள் கூட இவ்விதம் வேத அறிவில்லாமையினால் ஆவிக்குரிய பஞ்சத்தில் வாடிப்போகிறார்கள். திரளான கூட்டத்தார் கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் அரவணைப்பு இல்லாமல் ஆவிக்குரிய தாகத்தால் நாவறண்டு போகிறார்கள். இயேசுவோடு தனிப்பட்ட உறவும் ஐக்கியமும் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அநேகர் பாவ விடுதலை கிடைக்காமல் பழைய ஜீவிதத்திலே வாழ்ந்து வருகின்றார்கள்.
"அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்".
கடைசியாக இந்த மக்கள் பாதாளத்திற்கு நேராக போகும்படி வழி நடத்தப்படுகிறார்கள். சிலுவையின் அருகாமையில் வந்தும் சிலுவையின் மூலம் இரட்சிக்கப்படாமல் பரலோகத்தை இழந்துவிடுகிறார்கள். அவர்களின் போதகர்கள் கிறிஸ்து மூலமாக கிடைக்கும் உலக ஆசீர்வாதங்களை தள்ளிவிட்டு ஒரு ஆடம்பர வாழ்க்கை நடத்தும்படி வழிநடத்துகிறார்கள். இந்த போதகர்களும் இவ்விதமான ஆடம்பர வாழ்க்கையை நடத்திவருகிறார்கள்.
சிறியவன் (mean men) தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோம்.
அற்பமான மனிதன் தாழ்த்தப்படுவான். வல்லமையான மனிதனும் தாழ்ச்சியடைவான். மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோம். தேவனின் மகிமை விளங்கும்போது இவ்விதமான காரியங்கள் நடக்கும். "சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார்".
"அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள்".
அப்போது உண்டாகும் எழுப்புதலில் கிறிஸ்துவின் மந்தையின் ஆட்டுக்குட்டிகள் ஆவிக்குரிய ஆகாரத்தை ஒரு குறைவும் இல்லாமல் உண்பார்கள். இந்த உலகத்தில் பரதேசிகளாக வாழும் தேவமக்கள், உலகத்தில் அதிகாரமுள்ள செல்வந்தர்கள் உபயோகித்து பாழாய்ப்போன சொத்துக்களை தேவனனின் ஊழியங்களுக்குப் பிரயோஜனம் படுத்துவார்கள்.
"மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டில் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டுவந்து, நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!"
பாவத்தில் ஜீவித்துக்கொண்டும், தேவனின் சித்தத்தின்படி ஊழியம் செய்யாத மனிதர்கள் தேவன் தமது கிரியையைச் சீக்கிரமாய் தங்களின் கைகளின் மூலம் நடப்பிப்பார் என்றும், கிறிஸ்துவின் வெளிப்படுத்தல்கள் தங்களுக்கு சமீபித்து கிடைத்துவிட்டது என்று சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!
"தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!"
இன்று கள்ள போதகர்கள் உலகத்தின் செல்வத்தை நன்மையென்றும், சாதாரண ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையையும், உலக பாடுகளையும் தீமையென்றும் சொல்லி பிரசங்கித்து வருகிறார்கள். பாவத்தை பலவீனம் என்று போதித்து கசப்பைத் தித்திப்பு என்று சாதிக்கிறார்கள். பரிசுத்தத்தை கசப்புமென்று சாதிக்கிறார்கள். பரிசுத்தம் இல்லாத ஆராதனையை வெளிச்சமாக பாவிக்கிறார்கள். மாயமால ஜெபத்தை வெளிச்சமாக பாவிக்கிறார்கள்
பரிதானமும் நியாயத்தைப் புரட்டுவதும்
ஏசாயா 5 அதிகாரம் வசனங்கள் 21 – 30 வரை தியானிப்போம்.
தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!
இன்று நாம் சற்று யோசித்தித்துப் பார்ப்போம். நமது பார்வைக்கு நாம் ஞானிகளாக தோன்றுகிறோமா? மற்றவர்கள் தான் நம்மை ஞானிகள் என்று தீர்ப்பு கூறவேண்டும். அபிஷேகம் பெற்று வரம் பெற்றவர்கள் என்று விளம்பரம் செய்கிறோமா? நாம் தான் வேத அறிவு பெற்றவர்கள் என்று புகழுகிறோமா? நமக்கு ஐயோ!
"சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!"
நாம் இந்த வசனங்களை புற ஜாதியினருக்கோ அல்லது ஆண்டவரை அறியாத மக்களுக்கு பொருந்தும் என எண்ணுகிறோம். இவைகள் நமக்குத்தான் முதலாவது பொருந்தும். இன்று நமது கிறிஸ்தவ மத தலைவர்களான பிஷப்புக்கள் ஆயர்மார்கள் மதுபானத்திற்கும் பரிதானம் வாங்குவதற்கும் குற்றவாளிகளாக இருக்கிறார்களா? நமது டயோசீசன்களின் கீழ் அநேக பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கின்றன. இவைகளில் பணிகளில் அமர்த்துவதற்கு பரிதானங்கள் நன்கொடைகள் என்ற பெயரில் வாங்கப்படுகிறதா? கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிகளிலுள்ள கிறிஸ்தவர்களுக்கான ஒதுக்கீடத்தில் லஞ்சம் வாங்கப்படுகிறதா? பள்ளிகளில் இட மாற்றம் கிடைப்பதற்கும் டயோசீசன் secretary ஐ அணுகி "நன்கொடை" கொடுக்கவேண்டுமாம்.
நமது கிறிஸ்தவ நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்கிறதா? எத்தனை பேர்கள் நீதிமன்றத்திற்கு போய் நீதிக்காக போராடுகிறார்கள். அவர்களின் நியாயத்தை தடுக்க அதிகாரிகளுக்கும் வக்கீல்களுக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்து குற்றவாளிகளான நிறுவனத்தாரை நீதிமான்களாக தீர்க்கிறோமா?
"இதினிமித்தம் அக்கினிஜுவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள வசனத்தை அசட்டைபண்ணினார்களே.
ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது".
நாம் எங்கே நியாயத்தை புரட்டுகிறோமா அங்கே தேவக்கோபம் வெளிப்படுகிறது. இன்று பெந்தேகோஸ்தே சபைகளிலும் பணிபுரியும் போதகர்களுக்கு அந்த சபைகளின் தலைவர்கள் நியாயம் செய்வது கிடையாது. அந்த பணியாளர்களை சபைகளிலிருந்து நீக்கம் செய்து அந்த குடும்பங்களை தெருவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்? அவர்களின் குற்றங்களை மன்னிக்க மனதில்லாமல் அவர்களை dismiss செய்திருக்கின்றார்கள்?
இன்று இந்த கிறிஸ்தவ தலைவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள வசனத்தை அசட்டைபண்ணினார்களே! அவரது கைகள் இவர்களுக்கு விரோதமாய் நீட்டி இவர்களை தண்டிக்கின்றார். இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
26 - 30 வசனங்கள் வரை கர்த்தர் அவரின் வேதத்தை அசட்டை பண்ணிய தலைவர்களை எப்படி தண்டிக்கிறார் என்பதை அறியலாம். பெலமான அந்நிய ஜாதி மக்களின் மூலம், அதாவது கெர்ச்சிப்பு சிங்கம், பாலசிங்கங்கள் இரையைப் பிடித்து தப்புவிக்கிறவன் இல்லாமலிருப்பதுபோல , தனது ஜனங்களை அந்த பொல்லாத மனிதர்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார்.
பின்வாங்கிப்போன சீயோனின் குமாரத்திகளை தேவன் அவர்களின் எதிரிகளின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். இன்று ஒரு தேவ மனிதனுக்கு அநியாயம் விளைவித்த எந்த ஸ்தாபனமும் நிலைத்து இருக்காது. ஆண்டவர் ஒரு தப்பிப்போன ஆட்டை தேடிவந்து அந்த ஒரு ஆட்டிற்கு நியாயம் வழங்குகிறார். ஆண்டவரின் கோபம் அந்த ஆட்டிற்கு நீதி வழங்கும்வரை தணியாது. இன்று நமது கிறிஸ்தவ இயக்கங்கள் சபைகள் எல்லாம் அரசாங்கத்தின் scanner க்கு கீழே வருகிறது. ஒரு கிறிஸ்தவ NGO தனது ஊழியர்களுக்கு தீங்கு விளைவித்திருந்தால் ஆண்டவர் அந்த ஊழியர்களுக்காக போராடுவார்.
சேராபீன்கள், ஏசாயா தீர்க்கன் மூலம் எழுப்புதல் ...
எழுப்புதல் எப்போது வரும்? எழுப்புதல் என்றால் என்ன? ஏசாயா 6 அதிகாரத்தை தியானிப்போம். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் அரசன் உசியா ஆண்டவரால் தண்டிக்கப்பட்டு மரணம் அடைந்தவுடன் தான் ஏசாயாவின் தீர்க்கதரிசன கண்கள் திறக்கப்பட்டது. உசியா பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான். அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ஆனால் "மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்" ( II இராஜாக்கள் 15:2-5). இந்த மேடைகள் அகற்றப்படத்தலால் ஆண்டவர் உசியாவை குஷ்டரோகத்தால் தண்டித்தார். "கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்".
இன்றும் ஆண்டவர் தான் தெரிந்துக்கொள்ளப்பட்ட அநேக ஊழியர்கள் விக்கிர மேடைகளை அகற்றாமல் ஊழியம் செய்ததால் அவர்களை ஆவிக்குரிய குஷ்டரோகத்தால் தண்டிக்கிறார். இவர்கள் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தாலும், தங்களுக்கென்று சாம்ராஜ்ஜியங்களை கட்டி தங்களின் பெயர்களை பிரபலப்படுத்தி கட்டிடங்களையும், ஆராதனை கோபுரங்களையும் கட்டி அங்கே தேவமக்களை பலி செலுத்த வைக்கிறார்கள். கோடிக்கணக்கான பணத்தில் இவைகளை கட்டி வருகிறார்கள். ஆண்டவர் வழிநடத்தித்தான் இவ்விதம் செய்கின்றோம் என்றும் கூறுகின்றார்கள்.
ஆண்டவரின் "வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது". சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்".
பெயரில்லாத சேராபீன்கள் தேவனுக்கு மேலாக நிற்கின்றார்கள். இந்த சேராபீன்களின் (கூப்பிடுகிறவர்களின்) சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. ஆலயம் தேவனின் மகிமையால் நிரம்பும்போதுதான் எழுப்புதல் உண்டாகிறது.
சேராபீன்களில் "ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்".
இந்த சேராபீன்கள் தங்களின் முகங்களை தங்களின் இரண்டு செட்டைகளால் மூடி “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று ஆராதிக்கிறார்கள். பலவித வாத்திய கருவிகளை வைத்து ஆராதிக்கவில்லை.
இந்த சேராபீன்கள் ஒரு தீர்க்கதரிசன புத்தகத்தை எழுதவில்லை. அவர்களின் ஓரே செய்தி இதுதான் "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது”. சாத்தானை விரட்டியோ அல்லது அவனின் வல்லமையை குறித்தோ எந்த செய்தியும் கொடுக்கவில்லை. இவர்களின் இடமோ தேவனின் சிங்காசனத்தில் மேலிருந்தது.
ஏசாயா யேசுவைக்குறித்து அநேக தீர்க்கதரிசனங்கள் உரைத்த ஒரு பெரிய தீர்க்கன்! தேவனின் மகிமை வெளிப்பட்டவுடன் அவன் "நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே" என்கிறான்.
எழுப்புதலில் தேவ மகிமை வெளிப்படும்போது நாம் அசுத்த உதடுகளுள்ள மனிதர்கள் என்ற வெளிப்பாடு கிடைக்கிறது. "அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது" என்கிறான்.
ஒரு பெயரில்லாத சேராபீன் ஒரு பெரிய தீர்க்கதரிசியின் வாயைத் தொட்டு உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்று சொல்கிறார்.
இன்று எழுப்புதலுக்கு ஆண்டவர் அழைப்பது பெயர் அறிமுகம் இல்லாத சேராபீன்கள் தான். ஏசாயா போன்ற தீர்க்கத்தரசிகளை அல்ல.
இந்த எழுப்புதலில் நடப்பது என்ன? "பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று ஏசாயா தீர்க்கன் கூறுகிறான்.
கடைசி காலத்தின் ஆண்டவரின் மகத்தான தீர்க்கதரிசன ஊழியம் இந்த கட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
ஆண்டவர் இப்போதுதான் ஏசாயாவிடம் பேச ஆரம்பிக்கிறார். நான் யாரை அனுப்ப என்று கேட்கும்போது சுத்திகரிக்கப்பட்ட ஏசாயா முன்வருகிறார். அநேக ஏசாயாக்கள் எழும்பி முன் வருவார்கள். பழைய ஏசாயா அல்ல. இயேசுவின் ரத்தத்தால் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசன கூட்டத்தார் எழும்புவார்கள். இவர்கள் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தை திர்க்கதரிசனத்தால் எச்சரித்து நல்வழி படுத்துவார்கள். எலியாவை போல ஊழியம் செய்வார்கள்.
வசனங்கள் 9-13 ஒரு பெரிய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. இந்த ஜனங்கள் ஆண்டவரின் சத்தத்திற்கு கீழ்ப்படியாமல், மனம்திரும்பாத பட்சத்தில் தேவன் இவர்களை தண்டித்து ஒரு பெரிய நியாயத்தீர்ப்பிற்குள் உட்படுத்துவார்.
தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும் இருக்கும் கல்லான இதயமுள்ள மக்களை தேவன் அவர்களின் இருதயத்தை மிகவும் கல்லாக்கி அவர்களின் காதுகளை மந்தப்படுத்தி அவர்கள் கண்களை மூடிப்போகும் வரை செய்கிறார். அநேகந்தரம் கள்ள தீர்க்கத்தரசிகளை குறித்து எச்சரித்தும் மோசம் போகும் மக்களை ஆக்கினை தீர்ப்பிற்கு தேவன் ஒப்புக்கொடுக்கிறார்.
இது ஒரு மிகவும் கடினமான தீர்க்கதரிசன ஊழியம். தேவனனின் சித்தத்தின்படி கட்டப்படாத ஊழியங்களை ஒரு மனிதனும் அவைகளில் பங்குகொள்ளாதபடி அழித்துவிடுவார். எல்லா ஆவிக்குரிய குடியிருப்பின் இடங்களை நிர்மூலமாக்கி அவாந்தரவெளியாக்குவார்.
"கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்". மனிதர்களை இந்த ஊழல், அக்கிரமம் நிறைந்த ஊழியங்களிலிருந்து விலக்கி கிறிஸ்தவ உலகத்தை நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்படி செய்வார்.
“அதில் இன்னும் பத்திலொரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்” தண்டனையை அனுபவித்த பத்திலொரு பேர் மீண்டும் தண்டிக்கப்படுவார்கள். இப்படி வடிகட்டி எடுக்கப்பட்ட மக்கள் அடிமரமாக மாறி பரிசுத்த வித்தாயிருப்பார்கள். கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப் போனாலும் அவைகளின் அடிமரம் நிலைத்திருந்து ஆசீர்வாதமாக இருக்கும். அதேபோல நம்மை ஆண்டவர் ஒரு பரிசுத்த ஜனமாக மாற்றுவார்.
நியாயத்தீர்ப்பின் மூலமாக கிறிஸ்துவின் சரீரம் சுத்திகரிக்கப்பட்டு ஒரு பரிசுத்த வித்து உருவாகும். இந்த பரிசுத்த வித்து கர்வாலி, அரச மரங்களாக இந்த உலகத்திற்கு ஒரு ஆவிக்குரிய எழுப்புதலை கொண்டுவரும்இந்த ஊழியர்கள், மனிதர்களால் கட்டப்பட்ட ஊழியங்களையும் இருப்பிடங்களையும் அழித்து தேசத்தை அவாந்தரவெளியாகி, முதல் நூற்றாண்டில் நடந்த ஊழியங்களை போல கிறிஸ்துவின் சரீரத்தை மகிமையுள்ள சபையாக (Glorious church without spot) மாற்றுவார்கள். "கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்". (எபேசியர் 5: 27).
இந்த பரிசுத்த வித்துதான் கடைசி காலத்தின் "கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபை".
தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும்
ஏசாயா 8 அதிகாரம் 13-15 வசனங்களை தியானிப்போமாக.
இப்போது நாம் சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணவேண்டும். அவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நம்மை பரிசுத்தமாக காத்துக்கொள்ளவேண்டும். கள்ள தீர்க்கத்தரசிகளைப் பின்பற்றி நமது பரிசுத்தத்தை இழந்து போக வேண்டாம்.
அவரே நமக்கு பயமும் அவரே நமது அச்சமுமாயிருப்பார். அவருக்கு பயந்து அவரின் பாதைகளில் நாம் நடப்போமாக!
"இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்து" மக்களைப்போலிருந்தால் ஆண்டவர் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
நீங்கள் வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் கோத்திரத்தை சேர்ந்தவர்களா? அல்லது மீட்கப்பட்ட சீயோனின் குமாரத்திகளாக இருக்கறீர்களா? நீங்கள் அசத்தியத்தை நம்பினால் ஆண்டவரே உங்களுக்கு தடுக்கலின் கல்லாக இருப்பார். இடறுதலின் கன்மலையாக இருப்பார். குடிகளான உங்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். ஆசீர்வதிக்கும் தேவன் என்று ஏமாந்து போகவேண்டாம். சாத்தானையும் குற்றப்படுத்தவேண்டாம். தேவனே உங்களுக்கு சத்துருவாக மாறி உங்களை அழிப்பார். நீஙகள் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவீர்கள்.
இஸ்ரவேலில் அடையாளங்களும் அற்புதங்களும்....
ஏசாயா 8 அதிகாரம் 16-18 வசனங்களை தியானிப்போமாக.
“16. சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.
17. நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
18. இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்”.
ஆண்டவரின் சாட்சியான வார்த்தை தான் நமக்கு அருளிய வேதம். இதை பாதுகாத்து விசுவாசிகளுக்கு சரியான முறையில் விளக்கி போதிக்கவேண்டும். இந்த வேதத்தை புரட்டுவதை வேடிக்கைப் பார்த்து சும்மா இருக்கக்கூடாது. இந்த வேதம் நமக்கு முத்திரையிட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முத்திரையை நீக்கிவிட்டால் பொய்யாகிவிடும். பரிசுத்தாவியானவர் இதற்கு முத்திரை வைத்திருக்கிறார். அவர் மூலமாகத்தான் இந்த வேதத்தை விளக்கி கூறவேண்டும். இன்று அநேகர் தங்களின் சபைகளில் பரம்பரையாக போதித்த கொள்கைகளை போதித்து வருகின்றனர்.
யாக்கோபின் குடும்பத்துக்கு ஏன் ஆண்டவர் தம் முகத்தை மறைக்கவேண்டும். வணங்கா கழுத்துள்ளவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள். கள்ள போதகத்தால் வஞ்சிக்கப்பட்டு அழிவை நோக்கி போய் கொண்டிருப்பவர்கள்! ஆனால் தீர்க்கதரிசியோ ஆண்டவருக்காக தன்னை தாழ்த்தி ஆண்டவரிடமிருந்து வரும் வார்த்தைக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.
தானும் அவனுக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் ஆவிக்குரிய பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறார்களாம். பின் வாங்கிப்போன மொத்த இஸ்ரவேல் சமூகம் அல்ல.
சீயோன் குமாரத்திகளிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறிய கூட்டத்தார் இன்றும் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருந்து வருகிறார்கள். நீங்கள் ஒரு பெரிய அழிந்துபோகும் கூட்டத்தில் இருக்கிறீர்களா அல்லது இரட்சிக்கப்படும் ஒரு சிறிய கூட்டத்தில் இருக்கிறீர்களா?
அஞ்சனம்பார்க்கிறவர்கள் அஞ்சனம் சொல்கிறவர்கள் முணுமுணென்று ஓதுகிற குறிகாரர்கள்
ஏசாயா 8ம் அதிகாரத்தில் 20-22 வசனங்களை தியானிக்கவும்...
இன்று கிறிஸ்தவர்களில் அநேகர் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் வருங்காலத்தை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். உண்மையாகவே தீர்க்கதரிசனம் வரத்தை பெற்றுக்கொண்ட ஊழியர்களும் ஒரு நிமிடத்தில் வஞ்சிக்கப்பட்டு அஞ்சனம்பார்க்கிறவர்களாயும் முணுமுணென்று ஓதுகிற குறிகாரர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இவர்களை இப்படி கள்ள தீர்க்கத்தரசிகளாக மாற்றுவது அஞ்சனம் பார்க்கின்ற தேவ மக்கள்தான். உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? இப்படி தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் ஆண்டவரின் பார்வையில் ஆவிக்குரிய ஜீவனில் செத்தவர்கள். வரப்போகும் காரியங்களை தீர்க்கதரிசனம் என்ற பெயரில் அறிவிப்பவர்கள் ஆவிக்குரிய ஜீவனில் செத்தவர்கள். இன்று கொரோனா தொற்று வியாதியை குறித்து வரும் தீர்க்கதரிசனங்கள் அஞ்சனம் அறிவிப்பவர்களுக்கு ஒத்தாகும்.
நாம் தேவனிடத்தில் போய் அவருக்கு சித்தமானால் நடக்கயிருக்கும் சில முக்கியமான காரியங்களை வெளிப்படுத்த சொல்லி ஜெபிக்கலாம். ஆண்டவர் தமக்கு சித்தமானால் வெளிப்படுத்தி நாம் என்ன செய்யவேண்டும் என்று நமக்கு தெளிவாக காண்பிப்பார்.
நாம் எப்போதும் வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் மாத்திரம் கவனிக்கவேண்டும். ஆண்டவரின் சாட்சியான வார்த்தை தான் நமக்கு அருளிய வேதம். இதை பாதுகாத்து விசுவாசிகளுக்கு சரியான முறையில் விளக்கி போதிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. அப்படி சரியாக விளக்கி கூறாமல் புரட்டி பிரசங்கித்தால் பிரசங்கிப்பவர்களுக்கும் அவைகளை கேட்பவர்களுக்கும் ஆவிக்குரிய ஆசிர்வாதம் கிடைக்காது.
இப்படி செய்கின்றவர்கள் இடுக்கண் அடைந்து ஆவிக்குரிய பட்டினியால் வாடுவார்கள். அவர்கள் ஆவிக்குரிய பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்களை ஆளுகின்ற ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள். இவர்களுக்கு திருப்தி இல்லாமல் அங்கும் இங்கும் ஆசிர்வாதங்களுக்காக அலைமோதுவார்கள். தீர்க்கத்தரசிகளை தேடி அலைவார்கள். தங்களுடைய இடுக்கண்களுக்கு தங்களை சரியான நீதியின் பாதையில் வழிநடத்தாத ஊழியர்களை அடையாளம் கண்டுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ஆளுனர்களையும் தேவனையும் குறை சொல்வார்கள்.
அவர்கள் அண்ணாந்து தேவனை நோக்கிப் பார்ப்பார்கள், ஆசிர்வாதத்தை கொடுக்காத பூமியிலுள்ள தங்களது தொழிலையும் வியாபாரத்தையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, ஆவிக்குரிய அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.
இருளில் தோன்றும் பெரிய வெளிச்சத்தின் ஆசிர்வாதமும், நியாத்தீர்ப்பும்
ஏசாயா 9ம் அதிகாரத்தை தியானிப்போம்.
ஆண்டவர் புற ஜாதி மக்களை மகிமைப்படுத்தும் நாட்கள் இப்போது நடக்கின்றது. யூத மக்கள் இயேசுவை ஏற்றுகொள்ளவில்லை. ஆனால் நாமோ அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.
இருளில் நடக்கிற நாம் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காண்கின்றோம். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது. "அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்".
ஆவிக்குரிய இருளானது நம்மை சூழ்ந்து கொண்டிருக்கையில் நாம் இப்போது பெரிய வெளிச்சத்தைக் காண்கின்றோம். நாம் குடியிருக்கும் மரண இருளின் தேசத்தில் தேவனின் மகிமை வெளிப்படுகின்றது. நாம் எப்படி ஆசிர்வதிக்கப்படுகிறோம் என்று காணலாம்.
நாம் அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது அவரின் மகிமை வெளிப்பட்டு அசிர்வதிக்கப்படுகிறோம். அதே சமயம் தேவனின் வழிகளில் நடக்காமல் கள்ள தீர்க்கதரிசிகளால் ஏமாற்றப்பட்டு இருக்கும் மக்களின் மேல் தேவனின் கோபம் வெளிப்படுகின்றது.
நாம் சுமந்த நுகத்தடியையும், நமது தோளின்மேலிருந்த மிலாற்றையும், நம்மை தப்பான பாதையில் நடத்திவந்த கள்ள ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போடுகிறார்.
நமக்கு விரோதமாக அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படுகிறது. நமக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவது தேவன் தான். இதே சமயத்தில் நமக்கு இரட்சிப்பு கொடுக்க நமக்கு ஒரு பாலகனை கொடுத்திருக்கிறார்.
"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்". இந்த பாலகன் நமக்காகத்தான் கொடுக்கப்பட்டார. இன்று நாம் எவ்வாறு போதிக்கப்பட்டு இருக்கிறோம். நமக்காக மற்றவர்கள் ஜெபிக்கும்போதுதான் அவர் ஆசிர்வதிக்க இறங்கி வருவார் என்று போதிக்கப்படுகிறது. நமக்கு இந்த உலகில் ஆளுகை பண்ணுவதற்கு கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கிறது. அவருடைய அதிசயமான நாமத்தை நாம் அறியவேண்டும்.
நமக்கு ஆலோசனைக் கொடுப்பவர் அவர்தான். தேவ ஆலோசனையை அவரிடமிருந்து பெறாமல், தீர்க்கதரிசன வார்த்தைகளுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிய அவசியமில்லை.
அவர் வல்லமையுள்ள தேவன். அவரின் வல்லமையை தேட எந்த கூட்டத்திற்குப் போய் உட்கார அவசியமில்லை.
தீர்க்கதரிசனமாக தாவீதின் சிங்காசனம் என்பது ஏசுகிறிஸ்துவின் ஆளுகையின் சிங்காசனமாகும். இது இனி வரப்போகும் ஆயிர வருட ஆளுகையை குறித்து அல்ல. நியாயத்தினாலும் நீதியினாலும் ஏற்படும் ஆளுகையை நாம் நிலைப்படுத்தும்படி முயற்சி எடுக்கும்போது, அங்கே கிறிஸ்துவின் ஆளுகையின் சிங்காசனத்தைக் கொண்டு வருகின்றோம். அது ஒரு அரசியலாக இருக்கலாம். அது ஒரு ஸ்தாபனமாக இருக்கலாம். இன்றைக்கு நமது கிறிஸ்துவ ஸ்தாபனங்களிலும், ஆலயங்களிலும் நியாயமும் நீதியும் நிறைந்து காணப்படுகிறதா?
நியாயத்தினாலும் நீதியினாலும் ஏற்படும் கிறிஸ்துவின் ஆளுகையை நாம் ஏற்படுத்தாமல் வெறும் வாய்கள் மூலம் ஆராதிக்கும் கூட்டங்களை மாத்திரம் உருவாக்கி கொண்டுவருகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயத்திற்காக குரல் கொடுக்கிறோமா? அநேக வேத கல்லூரிகளை உண்டாக்கி அநேக வாலிபர்களை ஊழியம் என்ற பெயரில் மக்களுக்கு சேவை செய்யாமலே, வெறும் பிரசங்கம் செய்யும் போதகர்களாக உருவாக்கி வருகிறோம். இன்று தேவ ஊழியம் என்ற பெயரில் நமது வயிற்றுப் பிழைப்பிற்காக சபைகளை நிறுவி மக்களிடமிருந்து பணம் வாங்கி அதை ஊழியம் என்று சொல்லுகிறோமா?
இந்த அதிகாரத்தில் கர்த்தத்துவத்தின் பெருக்கத்தை குறித்து பேசப்படுகின்றது. கர்த்தத்துவத்தை பெருக்குகிறோமா? அல்லது நமது சுய ராஜ்ஜியங்களை பெருக்குகிறோமா? நாம் இந்த கர்த்தரின் ஆதிக்கத்தை நிலைப்படுத்தும்போது தேவன் தாமே நமக்கு உதவுகிறார்; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும். அதின் ஆளுகையின் சமாதானத்துக்கும் முடிவிருக்காது.
ஆண்டவர் யாக்கோபு போன்றவர்களுக்கு இதுபோன்ற வார்த்தையை அனுப்புகிறார்; அவை தேவ ஜனங்களின் இஸ்ரவேலின்மேல் இறங்குகிறது. இந்த தேவ மக்களின் மூலமாக்கத்தான் ஆண்டவரின் சிங்காசனம் இந்த பூமியில் ஸ்தாபிக்கப்படுகிறது.
தேவனது ராஜ்யத்தை காட்டுவோம் என்று அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற கள்ள ஊழியர்களை தேவன் தண்டிப்பார். அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. கர்த்தரிடத்தில் திரும்பாத தேவ ஜனத்தை நடத்துகிற கிறிஸ்தவ தலைவர்களும் , பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசிகளும் தண்டிக்கப்படுவார்கள். இன்று தப்பான வழிகளில் நடத்தப்படும் நமது வாலிப சமூகத்தின் மேலும், நமது திக்கற்ற பிள்ளைகள் விதவைகள் மேலும் அவர் இரங்குவதுமில்லை.
தேவனுடைய பார்வையில் அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
கர்த்தருடைய சினத்தால் தேவ மக்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான். நமது சத்துருக்களின் கைகளில் நம்மை தண்டிப்பதற்கு தேவன் ஒப்புக்கொடுக்கிறார்.
அசிரியனின் தண்டாயுதத்தால் தேவ கோபம்
ஏசாயா 10ம் அதிகாரத்தை தியானிப்போம்.
ஏழைகள், தேவ சிறுமையானவர்கள், திக்கற்ற பிள்ளைகள் - இவர்களை நாம் ஆதரிக்கிறோமா? இவர்களுக்காக குரல் கொடுக்கிறோமா? இவர்களுக்கு விரோதமாக கட்டளைகளை எழுதுகிறோமா?
நாம் இவர்களுக்கு உதவாத பட்சத்தில், ஆண்டவரின் கோபாக்கினை நம்மேல் வரும். உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவோம்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்? உங்களுடைய மகிமை உங்களுக்கு உதவாது.
அசீரியனைப்போல நமது சத்துருக்கள் கைகளில் ஒப்படைக்கப்படுகிறோம். அவர்கள் தான் தேவனின் சினத்தின் தண்டாயுதம். நமது விக்கிரகங்களாகிய பணம், புகழ் போன்றவைகளை உடைத்தெறியும் தண்டாயுதம்.
ஆனால் தேவன் நமக்கு விரோதமாக எழும்பிய அசிரியனை தண்டியாமல் விடார்.
அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார். இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து, அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
“அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்”.
ஆண்டவரின் தண்டனைகளிலிருந்து தப்பியிருக்கும் ஒரு சிறு கூட்டத்தாரே கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.
"மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்".
“தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும்”.
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.
"ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்."
"அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோம்".
இந்த கடைசி நாட்களில் மீட்கப்பட்ட சிரிய கூட்டத்தார் ஆண்டவரை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவேண்டும்.
"சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினால் வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்".
ஆண்டவர் தன் தோட்டத்தை சுத்திகரிக்கும் நாட்கள் இது. மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும். காட்டின் அடர்த்தியைக் கோடரியினால் வெட்டிப்போடுவார். லீபனோனை போன்ற மேட்டிமையான ஊழியங்கள் விழுந்துபோகும்.
இன்று நமது கண்களுக்கு முன்பாக அநேக பிரசித்தி பெற்ற ஊழியர்களின் அந்தரங்கங்கள் வெளிப்பட்டு, அவர்களை அசிரியனின் தண்டாயுதத்தால் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் மக்களிடம் பணம் வாங்கி சேர்த்த சொத்துக்கள் அம்பலமாகிக்கொண்டிருக்கிறது. அவர்களின் ஆடம்பர வாழ்க்கையும், வேத வார்த்தையை ஒரு கோணலாக பிரசங்கித்து சத்தியத்தை மறைத்து, பண்ணும் போதனைகளும் வெளிச்சத்தில் கொண்டுவரப்படுகின்றது. மேடைகளில் புகழ் சம்பாதித்து தங்களை இஸ்ரவேலின் விக்கிரகங்களாக காட்டி வருகின்றார்கள்.
அசிரியன் என்றால் எந்த மதத்தையும் சார்ந்திராத ஒரு secular குழுவாக இருக்கலாம். அரசாங்க துறையாக இருக்கலாம். அல்லது ஒரு மதவாத கூட்டமாக இருக்கலாம்.
கர்த்தரின் மகிமையான தாபரஸ்தலம்
ஏசாயா 11ம் அதிகாரத்தை தியானிப்போம்.
ஆண்டவர் தனக்கென்று ஒரு சிறிய கூட்டத்தாரை இரட்சித்து நடக்கையில், ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். தாவீதின் வம்சத்தின் வழி வந்த கிளையாகிய இயேசு கிறிஸ்துவை இங்கே குறிப்பிடப்படுகிறது. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். பரிசுத்தாவியானவர் இவர் மேல்தான் தங்கியிருக்கிறார். எப்போது இயேசுவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கிறோமோ, கர்த்தரின் பரிசுத்தாவியானவரையும் ஏற்றுக்கொள்கிறோம். இதுதான் சத்தியம். இயேசுவின் குணாதிசயங்களை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்.
"கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்".
நாம் தேவனுக்கு பயந்து பாவத்தை விட்டு விலகுகிறோமா? நமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்கிறோமா. கிறிஸ்துவின் சரீரம் நாம்தான். ஏழைகள் சிறுமையானவர்கள் போன்றவர்களுக்காக நாம் வழக்காடி நீதி வாங்கிக்கொடுக்கிறோமா? அவரது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை ஏந்தி அவரின் வாக்கின் கோலால் அடித்து சத்தியத்தை உரைக்கிறோமா? எங்கே அவரின் நாமம் தூஷிக்கப்படுகிறதோ அங்கே நாம் சத்தியத்திற்காக யுத்தம் செய்கிறோமா? அவரின் வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். நாம் இன்று அவரின் இடைக்கச்சையுமாயிருக்கும் சத்தியத்தை நிலைப்படுத்த முயற்சி செய்கிறோமா? இல்லாவிட்டால் கள்ள போதகர்கள் வேதத்தை புரட்டும் போது சும்மா இருந்துகொண்டு "நாம் ஜெபிப்போம். நியாயம் விசாரிக்க அவசியமில்லை " என்று வேதத்திலிருந்து சில வசனங்களை சுட்டிக்காட்டி, ஓடி ஒளிந்துகொள்கிறோமா?
"அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.
பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்".
இந்த வசனங்களை தீர்க்கதரிசன கண்ணோட்டத்தில் ஆராயவேண்டும். மேசையாவாகிய இயேசுவின் காலத்தில் நடக்கும் காரியங்கள். நாம் இந்த சஞ்சலம், சண்டைகள், கலவரம் நிறைந்த உலகத்தில் ஜீவித்தாலும், நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் மூலம் கிறிஸ்துவின் ஆளுகைக்கு கீழ் வந்திருக்கின்றோம். அந்திக்கிறிஸ்துவின் ஆளுகைக்கு கீழே அல்ல.
பட்சிக்கும் ஓநாய் போன்ற கள்ளஊழியர்களால் நமது மகிமையான சபையில் உள்ள ஆட்டுக்குட்டிகள் போன்ற தேவ மக்களை சேதப்படுத்த முடியாது. அதே போல கட்டவிழ்க்கப்பட்ட புலி, பாலசிங்கம் போல பொல்லாத சாத்தானின் சேனைகளினால் கிரியை செய்யும் எந்த விதமான அரசியல் கட்சிகளோ, நாடுகளை ஆளும் மனிதர்களோ செயலிழந்து போவார்கள். பால சிங்கம்,புலி, ஓநாய், கட்டு விரியன்பாம்பு போன்ற வல்லமை உள்ள சாத்தானின் கொடூர சேனைகள் நம்மை தாக்கி நம் மேல் அதிகாரம் செலுத்தமுடியாது.
ஒரு சிறு பையன் போல நாம் நமது ஆடுகளை ஓநாய்கள், சிங்கங்கள் வாய்களிலிருந்து தப்புவித்து வழி நடத்துவோம். ஏனென்றால் அந்த சிறு பையனை வழிநடத்துவது நல்ல மேய்ப்பனாகும். இந்த உலகத்தில் பொல்லாத மக்களோடு வசித்தாலும் நாம் காக்கப்படுவோம். இந்த மகிமையான கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு விரோதமாக எழும்புவர்கள் மாட்டைப்போல் வைக்கோல் தின்பார்கள். நமது ஆவிக்குரிய குழந்தைகளை அந்திகிறிஸ்துவின் ஆவியோ, மற்ற சாத்தானின் சேனையோ வஞ்சிக்க முடியாது. பொல்லாத தொற்று நோய்களை பரப்பும் அணுக்களின் பிடிகளிலிருந்து தப்பி செல்லலாம்.
தேவனின் பரிசுத்த பர்வதத்தில் நாம் தாபரிக்கும் போது இந்த பாதுகாப்பு கிடைக்கிறது. நமது வாழ்க்கையில் தேவ வார்த்தையை உதாசீனப்படுத்துகிறோமா அங்கே பரிசுத்தம் காணப்படாது. பாவம் இல்லாமல் ஜீவித்தால் மட்டும் போதாது. பிரசங்கம் பண்ணிவிட்டு அதன்படி நடக்காவிட்டால், நமது பரிசுத்தம் போய்விடும். எங்கே நீதிக்காகவும் சத்தியத்திற்காகவும் யுத்தம் செய்து கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தை நிறுவுகின்றோமே அங்கே தான் இந்த பரிசுத்த பர்வதம் இருக்கிறது. இந்த பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை. சாத்தானால் கூட தீங்கு செய்யமுடியாது. கேடுசெய்வாருமில்லை. செய்வினை, மந்திரம் இங்கே பலிக்காது.
பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். கிறிஸ்துவின் தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும். நமது மத்தியில் அவர் வல்லமையோடு வீற்றிரிப்பார். நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்த உலகத்தார் அல்லவே.
இன்று நமக்கு கள்ள ஊழியர்கள் காண்பிப்பது சாத்தான் ஆளுமை செய்கிற இந்த உலகத்தை தான். இந்த கள்ள தீர்க்கத்தரசிகள் தான் நமக்கு பாதுகாப்பு சாத்தானின் பிடியிலிருந்து கொடுப்பவர்களாக காட்சி அளிக்கிறார்கள். தேவனது ஆளுகையை மறைத்து தங்களை விக்கிரகங்களாக காண்பிக்கிறார்கள்.
இந்த காலத்தில், கிறிஸ்து அவருடைய சரீரமாகிய சபைக்கு கொடியாக நின்று காப்பார். உலக மக்கள் அவரை நோக்கி வருவார்கள். அவரின் தாபரஸ்தலம் நமது மத்தியில் மகிமையாயிருக்கும்.
இந்த காலத்தில், கிறிஸ்து அவருடைய சரீரமாகிய சபைக்கு கொடியாக நின்று காப்பார். உலக மக்கள் அவரை நோக்கி வருவார்கள். அவரின் தாபரஸ்தலம் நமது மத்தியில் மகிமையாயிருக்கும். இந்த உலகத்தின் நாடுகளிலிருந்து தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி, அவருடன் சேர்த்துக்கொள்கிறார். பழைய ஏற்பாட்டின் துரத்துண்டவர்களையும், சிதறடிக்கப்பட்டவர்களையும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் மூலம் பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுகிறார். கிறிஸ்துவின் ஒரே சரீரத்தில் மீட்கப்பட்ட தேவமக்கள் மேலும் புடமிடப்பட்டு உலகத்தோடு விபச்சாரம் பண்ணும் பாபிலோனிய மதத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு remnant என்று ஆங்கிலத்தில் குறிப்பிடலாம். பழைய ஏற்பாட்டில் இடிக்கப்பட்ட தேவாலயம் கிறிஸ்துவின் மூலம் திரும்ப கட்டப்படுகிறது. ஜாதிகளுக்கு ஒரு கொடியாக இந்த மகிமையாக்கப்பட்ட சபை (Glorious Church) விளங்கும்.
Author: Dr. Job Anbalagan