வேதாகமத்திலும் பண்டைய உலகத்திலும், முதற்பேறானவர்களுக்கு சில சிறப்பு உரிமைகள், முன்னுரிமை, முக்கியத்துவம், சலுகைகள் மற்றும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.
முதல் பிறப்பின் முக்கியத்துவம்
முதலில் பிறந்த ஆண் குழந்தை மனித வலிமை மற்றும் உயிர்ச்சக்தியின் பிரதானத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது (ஆதியாகமம் 49:3; சங்கீதம் 78:51). முதற்பேறானவர் 'கர்ப்பப்பையைத் திறப்பவர்' என்று அழைக்கப்படுகிறார்கள் (யாத்திராகமம் 13:2,12,15; எண்ணாகமம் 18:15; லூக்கா 2:23). குடும்பத்தின் முதன்மை வாரிசு என்றால் முதலில் பிறந்த குழந்தை சொத்துக்களில் இரட்டைத்தனையாகவும் மற்றும் குடும்பத்தின் தலைமை என்ற பொறுப்பையும் பெறுகிறது (உபாகமம் 21:17).
தேவனுக்கு பரிசுத்தமானது
முதல் குழந்தை தேவனுக்கு பரிசுத்தமானதாக கருதப்பட்டது (ஆதியாகமம் 4:4; யாத்திராகமம் 3:1-2; லேவியராகமம் 27:26; எண்ணாகமம் 3:11-13; உபாகமம் 15:19-23). இஸ்ரவேலை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த பிறகு, எகிப்தைத் தேவன் தண்டித்ததால் அவர்களுடைய முதற்பேறான பிள்ளைகள் மற்றும் விலங்குகள் அனைத்தும் இறந்துவிட்டன; பின்பு ஒவ்வொரு முதற்பேறான ஆண் பிள்ளையையும் முதற்பேறான விலங்கையும் தனக்குப் பிரதிஷ்டை செய்யும்படி இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டார் (யாத்திராகமம் 22:29-30).
இஸ்ரவேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட லேவியர்கள்
வனாந்தரத்தில், இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களின் முதற்பேறான ஆண்களுக்குப் பதிலாக, லேவி கோத்திரம் தேவனுடைய கூடாரத்தில் ஊழியம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் ஆண் லேவியர்களின் எண்ணிக்கை எல்லா முதற்பேறையும் விட குறைவாகவே இருந்தது. அதிகப்படியான முதற்பேறான ஆண், பலி செலுத்துவதன் மூலம் மீட்கப்பட்டது. சுத்தமான விலங்குகளில் முதற்பேறான அனைத்தும் பலியிடப்பட்டன, அதே சமயம் அனைத்து அசுத்தமான விலங்குகளும் சுத்தமான விலங்குகள் அல்லது பணத்தால் மாற்றப்பட்டு மீட்கப்பட்டன (யாத்திராகமம் 34:20; எண்ணாகமம் 18:14-16; 3:46-48).
அனைத்து தேசங்களிலும் முதன்மையான இஸ்ரவேல்
இஸ்ரவேல் தேசம் தேவனால் அவரது 'முதற்பேறான' என்று அழைக்கப்பட்டது (யாத்திராகமம் 4:22; எரேமியா 31:9). இஸ்ரவேல் நாடு தேசங்களுக்கு மத்தியில் சிலாக்கியம் மற்றும் ஆசீர்வாதத்தின் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது. எண்ணிக்கையில் பெரியது என்பதால் தேசம் தேர்ந்தெடுக்கப்படவில்லை; கொஞ்சமாக இருந்ததால் தான் தேவன் தெரிந்தெடுத்தார் (உபாகமம் 7:7). தேவன் ஆபிரகாமை அழைத்தார், அவருடைய அழைப்பிற்கு ஆபிரகாம் கீழ்ப்படிந்தான், அவருடைய சந்ததியினர் இஸ்ரவேல் தேசம் ஆனார்கள்.
கிறிஸ்து முதற்பேறானவர்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முதற்பேறானவர் என்று பலமுறை விவரிக்கப்படுகிறார். முதலாவதாக, மரியாளின் முதல் குழந்தை (லூக்கா 2:7). இரண்டாவதாக, பல சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் முதற்பேறானவர் (ரோமர் 8:29). மூன்றாவதாக, சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர் (கொலோசெயர் 1:15); அவர் எல்லா படைப்புகளிலும் முதற்பேறானவர் என்பது அவருடைய முன்னுரிமையையும் முதன்மையையும் குறிக்கிறது (கொலோசெயர் 1:15). நான்காவதாக, முதற்பேறான குடும்பத்தின் தலைவர், கர்த்தராகிய இயேசு சபையின் தலைவர். அனைத்து விசுவாசிகளும் முதற்பேறானவரின் சபையின் அங்கத்தினர்கள் (எபிரெயர் 12:23).
மீண்டும் பிறந்ததன் சிறப்புகள் மற்றும் பொறுப்புகளை நான் உணர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்