வெளிப்படுத்தின விசேஷம் 8- விளக்கவுரை

அதிகாரம்- 8

‘7 எக்காளங்கள் ஊதப்படுதல்’
(முதல் நான்கு எக்காளங்கள்)

‘Sounding of 7 Trumpets (First 4 Trumpets)
‘அப்பொழுது ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளங்களை ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.’ (வச 6)

வச: 1, 2 ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையை உடைக்கிறார். அப்பொழுது பரலோகத்தில் அரை மணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பூமியிலே தேவனுடைய மகாபயங்கர நியாயத்தீர்ப்பு செலுத்தப்படப்போவதால் உண்டாகப்போகும் மிகுந்த நாசங்களினிமித்தம் பரலோகமே அரைமணிநேரம் ஸ்தம்பித்து நின்றது.
இந்த ஏழாவது முத்திரை உடைத்தது ஏழு தூதர்களுக்கு எக்காளத்தை ஊத கட்டளையிட்டது போன்று அவர்கள் எக்காளங்களோடு ஆயத்தப்பட்டார்கள். 

வச:3- 5 பரலோகத்தின் பலிபீடத்தில் ஒரு தூதன் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களால் நிரப்பபப்ட்ட பொற்கலசத்தை பிடித்து நிற்பது யோவானுக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஜெபங்கள் பூமியல் அந்த காலக்கட்டத்தில் இருந்த பரிசுத்தவான்களுடையதா அல்லது அதுவரை பூமியிலிருந்த எல்லா பரிசுத்தவான்களுடைய ஜெபமா என்று யோவானுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. எனினும், பூமியிலிருந்து ஏறெக்கப்பட்ட பரிசுத்தவான்களின் ஜெபம் என்ன ? 1) தாங்கள் இந்த பூமியின் நியாயக்கேட்டினின்றும், துன்மார்க்கரிடத்திலுமிருந்து விடுதலையடைவதும் 2) பூமியிலுள்ள ஜனங்கள் பிசாசினின்றும், பாவத்தினின்றும் விடுதலை பெற வேண்டும் என்பதுமேயாகும். யாத் 30: 1. சங்கீதம் 141: 2, 9. ரோமர் 10: 1, 2 தெச 3: 2, 1 தீமொத் 2: 1, 2.

பூமியிலிருந்து பரலோகத்திற்கு எழும்பின இந்த ஜெபங்களுக்கு பதில் தேவனிடமிருந்து எப்படி பூமிக்கு வருகிறதென்று பாருங்கள். இவ்விதமாக பூமியிலிருந்து பரலோகத்திற்கு தூபமாக எழும்பிய எல்லா ஜெபங்களோடு, பரலோக பலிபீடத்திலிருந்த அக்கினியை இந்த தூதன் கலக்கிறான். அதை திரும்ப பூமியிலேயே கொட்டுகிறான். தேவனுடைய பதில் ப10மிக்கு வருகிறது. மனந்திரும்பாத பொல்லாத தேசங்கள்மேல் தேவ கோபம் கொட்டப்படுகிறது. அதையே சத்தங்களும், இடிமுழுக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சிகளுமாக யோவான் காண்கிறான்.   2 சாமுவேல் 22: 7, 8. சங் 46 8, 9.

எக்காளம் ஒரு ஆயத்தத்திற்காகவும், எச்சரிப்பிற்காகவும் ஊதப்படுகிறது. எண்ணாகமம் 10 ஏழு எக்காளங்களில் முதல் நான்கு எக்காளங்கள் ஊதப்படுவதும் அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் இந்த அதிகாரத்தில் பதிவாக்கப்பட்டிருக்கிறது. அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு ஆட்சியின் இரண்டாவது பாகமாகிய 3 ½ ஆண்டு மகாஉபத்திரவ காலத்தில் ஊதப்படும் இந்நான்கு எக்காளங்கள், தேசங்களுக்கு தேவ கோபம் ஊற்றப்படப்போவதை எச்சரிக்கிறதாக இருக்கும். ஆனால், எச்சரிப்பைக் கேட்டு தேசங்கள் மனந்திரும்புமா ? பார்வோனைப்போல மனதை கடினப்படுத்துமா ? எசேக்கியேல் 33: 3 ஆனாலும் இந்த வெளிப்பாடு நமக்கு நிச்சயம் ஒரு எச்சரிப்பு.

வச- 7 : முதலாம் எக்காளத்தின் அழிவு.
-    தாவரங்கள் அக்கினியால் எரிந்து அழிவு. எகிப்தில் தேவன் அனுப்பிய வாதைக்கு ஒப்பானது யாத் 9: 22- 26

வச-  8, 9 : இரண்டாம் எக்காளத்தின் அழிவு.
-    எரிபந்தம் போன்ற மலை(அநவநழச) யால் சமுத்திரத்தில் அழிவு. சமீபத்தில் ரஷ்யாவில் ப10மியில் விழுந்தது போன்றது.

வச- 8: 10 : மூன்றாம் எக்காளத்தின் அழிவு.
-    தீவட்டியைப்போன்ற நட்சத்திம் ஒன்று நீர்நிலைகளில் விழுந்து தண்ணீரை குடிக்க தகுதியில்லாதபடி எட்டியைப்போன்று கசப்பாக்கிற்று. தண்ணீரில்லாத பூமி. குடிநீர் தட்டுப்பாட்டுடைய நிலமைக்கு இப்பூமி தள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

வச- 8: 12 : நான்காம் எக்காளத்தின் அழிவு.
-    சூரியனும் சந்திரனும் இருளடையும். இரவும பகலும அந்தகாரமாகவே இருக்கும். மத் 24: 29, 30.

வச- 13 : மற்றொரு தூதன் மத்திய வானில் பறந்து வந்து அடுத்து ஊதப்போகும் எக்காளங்களால் வரும் கொடிய அழிவுகளைப்பற்றி எச்சரித்தான்.

 Author: Rev. Dr. R. Samuel 


வெளிப்படுத்தின விசேஷம் 8- விளக்கவுரை

8 ம் அதி: 7ம் முத்திரை உடைத்தல் ; எக்காள நியாயத்தீர்ப்பு

வ 1 அவர் ஏழாம் முத்திரையை உடைத்த போது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று.

பரலோகத்தில் அமைதியென்பது ஒரு அசாதாரணமான காரியம் , ஏதோ முக்கியமானதொன்று நடப்பதற்கான அறிகுறியாயிருக்கலாம் ; புயலுக்கு முன் அமைதி, ஒருவேளை கீழ்க்கண்டவை காரணமாக இருக்கலாம் :

1. பரிசுத்தவான்களின் ஜெபங்கள் தேவனிடத்தில் சேருவதற்காக, பரலோகத்தில் உள்ளவர்களின் ஆர்ப்பரிப்பும், துதியும்,தோத்திரங்களும் நிறுத்தப்பட்டிருக்கலாம். ஏனென்றால் தேவன் தூதர்களின் துதியைவிட, பூமியிலுள்ள பரிசுத்தவான்களின் ஜெபத்தையே அதிகம் விரும்புகிறார். காரணம், தூதர்கள் பாவமில்லாத பாடுகளற்ற பரலோகத்திலிருந்து துதிக்கிறார்கள். பரிசுத்தவான்களோ பாவமும், சாபமும், பாடுகளும் நிறைந்த பூமியிலிருந்து தேவனோடு பேசுகிறார்கள். தேவன் அதைக் கேட்பதற்கு ஏதுவாக மற்றவர்கள் அமைதலாயிருந்திருக்கலாம். பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்பது தேவனுக்குப் பிரியம் 

2. மேசியாவை புறக்கணித்தவர்கள்மேல் தேவன் அனுப்பப்போகும் பயங்கரமான ஏழு நியாயத்தீர்ப்புகளையும். நினைத்துப் பரலோகம் மலைத்துப் பேச்சற்றுப் போயிருக்கலாம் .

வ 2 தேவனுக்கு முன்பாக நிற்கிற...

1. ராஜாக்களின் கொலு மண்டபத்திலிருப்பது விசேஷித்த கடமையும் கனமுமானது. (தானி. 2: 49) அப்படியானால் ராஜாதி ராஜாவாகிய தேவனுக்கு முன்பாக நிற்பது எவ்வளவு மேன்மை!

2. தேவனுக்கு முன்பாக நிற்பதென்றால், “நான் அவருடைய வேலைக்காரன்! என்று அர்த்தம் . (எலியா 1ரா. 17:1; எலிசா 2ரா. 3:14) எஜமான் தன்னை ஒரு வேலைக்கு அனுப்புகிறதற்கு எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிற ஊழியக்காரனே, எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக நிற்கிறவன் 

வ 2 ஏழு தூதர்கள் இவர்கள் 7 சபைகளுக்குள்ள தூதர்களல்ல. இவர்கள் தேவனுக்கு முன்பாக நிற்கிற. முக்கிய தூதர்கள். இவர்கள் பெயர் எழுதப்படவில்லை, ஆனால் தள்ளுபடியாகமத்திலுள்ள தோபித் (10511) என்கிற புத்தகத்தில் இவர்களது. பெயர் காணப்படுகிறது,

அரியேல் (Uriel) ரஃபேல் (Raphael) ரகுவேல் (Raguel‌) மிகாவேல் (Michael) சாரியேல் (Sariel) காபிரியேல் (Gabriel) ரெமியேல் (Remiel) 
வ 2 ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

தேவன் பூமியிலுள்ளவர்களோடு இடைபடும்பொழுதெல்லாம் எக்காள சத்தம் கேட்கும் (யாத் . 19:16, 19; ஏசா. 27:13; 1 கொரி. 15:52, 53; 1தெச. 4:16; மத் , 24:31)

சாதாரணமாக எக்காளம் ஏன் தொனிக்கப்படுகிறது? எண் 10ம் அதிகாரத்தில் சில காரணங்கள் காணப்படுகின்றன

1 சபையைக் கூடிவரச்செய்ய (ரகசிய வருகையில் மணவாட்டி சபையை மத்திய ஆகாயத்தில் கூட்ட)

2. எச்சரிப்பு கொடுக்க (எண் 10:5) கொடிய காலங்கள், சம்பவங்கள் குறித்து எச்சரிக்க

3.யுத்தத்திற்குப் புறப்பட (10:9) அந்திக்கிறிஸ்துவுடனான யுத்தத்திற்குப் புறப்பட.

4 (மணவாளன் )ராஜா வருவதை அறிவிக்க (1தெச. 4:16)

5. வெற்றியின் மகிழ்ச்சியினால் ஆரவாரித்து ஊதப்படுகிறது (எண் . 10:10).

வ 3,4 வேறொரு தூதன் வந்து .......... தூப வர்க்கத்தின். புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்கு முன்பாக எழும்பிற்று, நம்முடைய ஜெபத்தை ஆசையாய் கேட்கிறார். ஜெபித்த தானியேல் பிரியமானவன் எனப்பட்டான்.

ஜெபம் தேவனுக்கு மிகவும் பிரியம், என்னுடைய நாமத் திலே எதைக் கேட்டாலும் செய்வேன் என்றவர் நிச்சயம் பதிலளிப்பார், இந்த உறுதி வெளி. 6:10ல் பலிபிடத்தின் கீழிருந்த ஆத்துமாக்களுக்கிருந்தது. அதனால்தான் எதுவரைக்கும் நீதி செய்யாதிருப்பீர்? என்றார்கள், அவர்கள் கேள்விக்கு தேவன் நீதி செய்து பதிலளித்தார்.

வ 5 பின்பு அந்த தூதன் தூப கலசத்தை எடுத்து, அதை பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடி.முழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின, இவையனைத்தும் ஒன்று சேர்ந்து திடீரென பூமியில் உண்டானால் எப்படியிருக்கும்? பலமாடிக் கட்டடங்கள் நொடியில் அழியும்; அணு ஆலைகள் வெடிக்கும்; வெள்ளம் வீதிகளில் புரண்டோடும். மக்கள் பீதியடைவார்கள். என்ன செய்வதென்று அறியாமல் அங்கும் இங்கும் அடைக்கலம் தேடி ஓடுவார்கள் . பெருங்குழப்பம் உண்டாகும் ,
வ 6 இந்த சூழ்நிலையில் ஏழு தூதர்களும் எக்காளம் ஊதி ஏழு நியாயத் தீர்ப்புகளையும் பூமியின்மேல் அனுப்ப ஆயத்தம் பண்ணினார்கள் .

வ 7: முதலாம் தூதன் எக்காளம் ஊதினான் - முதலாம் நியாயத்தீர்ப்பு இரத்தங்கலந்த கல்மழையும் , அக்கினியும் உண்டாகி பூமியிலே கொட்டப்பட்டது. அதனால் மரங்களில் மூன்றிலொரு பங்கு வெந்து போயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்து போயிற்று, இது பூமியின்மேல் வந்த நியாயத்தீர்ப்பு. இது யோவானுக்கு எ௫ப்தின் மேல் வந்த வாதையை நினைவுபடுத்தியிருக்கும் .

யாத் , 9:24ல் கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது. (கிபி.1901ம் ஆண்டு இத்தாலியில் ஒரு ரத்தமழை பெய்தது, உண்மையில் அது ரத்தமழையல்ல: சஹாரா பாலைவனத்திலிருந்து செம்மண்ணை காற்று கொண்டு வந்து அது மழையோடு கலந்ததினால் அது ரத்த மழைபோலிருந்தது) இந்த நியாயத்தீர்ப்பினால் முழு உலகமும் அழியவில்லை. மூன்றிலொரு பங்குதான் பாதிக்கப்பட்டது. ஆனால் அது பூமியின் தோற்றத்தை மாற்றப் போதுமானது. மரங்கள் வெந்து புல் எரிந்துபோனால் ஆகாரப் பஞ்சம் உண் டாகும் ஆபத்துண்டு! இது பூமியின் மீது வந்த நியாயத்தீர்ப்பு.

வ 8,9: இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான் - இரண்டாம் நியாயத்தீர்ப்பு, அது சமுத்திரத்தின் மேல் வந்தது. அக்கினியால் எரியும் மலைபோன்ற ஒன்று சமுத்திரத்தில் போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொரு பங்கு ரத்தமாயிற்று, சமுத்திரத்திலுள்ள ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொரு பங்கு செத்துப்போயிற்று, கப்பல்களில் மூன்றிலொரு பங்கு சேதமாயிற்று, மலை போன்றது ஒரு குழம்பைக் கக்கிக்கொண்டிருக்கும் எரிமலையாக இருக்கலாம் ,

“போடப்பட்டது?” (Thrown into) என்றிருப்பதால் ஒரு தூதன் இதைப்போட்டிருக்கலாம். திடீரென்று ஏற்பட்ட அழுத்தத்தினால் மீன்கள் செத்திருக்கலாம். இப்பொழுதும் கைக்குண்டுகளைத் தண்ணீருக்குள் எறிந்து மீன்களைக் கொன்று பிடிக்கிறவர்கள் இருக்கிறார்கள். கப்பல்கள் சேதமானதில் ஆச்சரியமொன்றுமில்லை. அழுத்தத்தால் சுனாமி அலைகள் தோன்றி கப்பல்கள் சேதமாயிருக்கலாம். இது சமுத்திரத்தின் மீதுள்ள நியாயத்தீர்ப்பு

வ 10, 11: மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான். மூன்றாம் நியாயத்தீர்ப்பு .

ஒரு பெரிய நட்சத்திரம், தீவட்டியைப்போல எரிந்து வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொரு பங்கின் மேலும், நீரூற்றுகளின் மேலும் விழுந்தது. அந்த நட்சத் தரத்திற்கு 'எட்டி' என்று பெயர், அதினால் தண்ணீரில் மூன்றிலொரு பங்கு எட்டியைப்போல கசப்பாயிற்று; இப்படி கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.

யோவானுக்கு இதை விளங்கிக் கொள்வது கடினம். ஆனால் நாம் எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் அணுமின் நிலையங்கள் வெடித்த போதுதண்ணீர்கதிர்வீச்சினால்மாசுபட்டது. அதை அறியாமல் அந்தத் தண்ணீரைக் குடித்த அநேகர் மாண்டு போனார்கள். கடைசிக்காலங்களில் இது அடிக்கடி பல இடங்களில் நடக்கலாம், இது மனிதருக்கு வந்த நியாயத்தீர்ப்பு!

கசப்பு துக்கத்தையும் வேதனையையும், சாபத்தையும் குறிக்கும், உபா. 29:18-20வரை வாசியுங்கள். அந்நிய தேவர்களை சேவிப்பதும், கர்த்தரை விட்டு விலகுவதும் விக்கிரக வணக்கமும் சாபத்தையுண்டாக்கும். சாலமோனும் நீதி, 5:4,5ல் விபச்சாரத்தின் முடிவு எட்டியைப்போல கசப்புண்டாக்கி மரணத்துக்குள்ளாக்கும் என்று எச்சரித்தான் .

வ 12: நான்காம் தூதன் எக்காளம் ஊதினான் நான்காம் நியாயத்தீர்ப்பு

சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கும் சேதப்பட்டது. அவற்றவற்றில் மூன்றிலொரு பங்கு இருளடைந்தது; பகலும் மூன்றிலொரு பங்கு பிரகாசமில்லாமல் போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று,

புறஜாதியார் சூரிய சந்திர நட்சத்திரங்களை வணங்கி வந்தார்கள். இன்றும் வணங்கி வருகிறார்கள், அவற்றின் மகிமையை அழிப்பதினால் தாமே மெய்யான தேவன் என்று வெளிப்படுத்தி, தம்மை மட்டுமே வணங்க வேண்டுமென்று உணர்த்துகிறார். இது இயேசுவானவர் லூக்கா 21:25 - 27ல் சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் போலக் காண் கிறது.

வ 13 வானத்தின் மத்தியில் பறந்து வந்த தூதன் ஐயோ! ஐயோ! ஐயோ!

இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களின் எக்காள சத்தத்தினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்து வரும் ) என்று சொல்லக்கேட்டேன் இந்த நான்கைவிட வரப்போகிறவைகள் கொடியதாயிருக்கும் .

இந்த நான்கு நியாயத்தீர்ப்புகளும் சிருஷ்டியின் மேலேயே உள்ளது. மனிதன் பூமியை பலவிதங்களில் கெடுத்துக்கொண்டே இருக்கிறான். தேவன் சிருஷ்டியின் ஒரு பங்கை அழித்தாலே தாங்க முடியாது என்பதை இந்த நான்கும் உணர்த்துகின்றன.

Author: Rev. S.C. Edison



Topics: Tamil Reference Bible Revelation Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download