முக்கியக் கருத்து
- தேவனுக்குத் துதி செலுத்தப்படவேண்டியதே மிக முக்கியமானது.
* எதற்காக, எங்கெல்லாம் அவரைத் துதிக்கவேண்டும்?
* யாரெல்லாம், எப்படியெல்லாம் அவரைத் துதிக்கவேண்டும்
1. வச.1-2 - தேவனை எதற்கு, எங்கு துதிக்கவேண்டும்
தேவனைத் துதிப்பது மிக முக்கியமானது, கர்த்தரைத் துதித்தலே சங்கீத புத்தகத்தின் மையப் பொருளாகவும் காணப்படுகிறது. 'அல்லேலூயா' என்ற எபிரெய மொழியின் விளக்கத்தை நாம் பார்க்கலாம்.
அல்லேலூ + யா
ஸ்தோத்தரி (துதி) + யேகோவாவை
Hallelu + Jah
You Praise + Jehovah
அல்லேலூயா என்ற வார்த்தையில் ஆரம்பித்து அல்லேலூயா என்ற வார்த்தையிலே இந்த சங்கீதம் முடிகிறது. சர்வமும் கர்த்தரைத் துதிப்பதில் ஆரம்பித்து, துதிப்பதில் முடிகிறதாக காணப்படுகிறது. ஏனென்றால் அவரே ஆதியும் அந்தமுமாயிருக்கிறார். வெளி.1:8 பூமியிலே கர்த்தரைத் துதிக்க எல்லா மொழியினரும் உபயோகப்படுத்தும் இந்த வார்த்தையே, பரலோகத்திலும் பயன்படுத்தப்படும் என்பதை யோவான் தனது தரிசனத்திலே கண்டு எழுதியிருக்கிறான். வெளி.19:3,4. கர்த்தரை முதலில் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதிக்கவேண்டும். ஒருவரும் சேரக்கூடாத காணக்கூடாத மகா பரிசுத்தமுள்ள தேவன், மனு மக்களை மீட்டு இரட்சித்து தமது பரிசுத்த ஸ்தலத்தில் சேர்த்துக்கொண்டார். ஆகவே, பாவ நிவிர்த்தி செய்யப்பட்டு பரிசுத்தம் கிடைக்கும் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் அவரை துதிக்கவேண்டும். லேவி.16:15,17,; எபிரெயர் 9:11,12
இரண்டாவது, அவருடைய மகத்தான சிருஷ்டிப்புகளினிமித்தம் ஆகாய விரிவுக்குக் கீழே, பூமியின் மீதெங்கும் அவரைத் துதிக்கவேண்டும். ஏனென்றால் பூமியின் மீதெங்கும் அவருடைய இரக்கமும் கருணையும் வல்லமையான செயல்களும் காணப்படுகிறது. அதுமாத்திரமல்ல காலம் நிறைவேறும்போது ஆகாய விரிவுக்குக் கீழே பூமி மீதெங்கும் அவர் பரிசுத்தமே நிறைந்திருக்கும், அசுத்தமானதை நடப்பிக்கின்ற சாத்தானின் சந்ததி அழிக்கப்படும். சர்வ லோகத்திலும் அவருக்கு துதி செலுத்தப்படும். யாத்.15:1,2; அப்.4:12; ஏசாயா 11:9.
வச.3-5 - எப்படி தேவனை துதிக்கவேண்டும்
நம்முடைய இருதயத்தின் மகிழ்ச்சி, நன்றி, கர்த்தரோடு நெருங்கி தொடர்புகொள்ள வாஞ்சை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் பாடல்களோடும், பல நேர்த்தியான இசைக்கருவிகளோடும், உள்ளான களிகூறுதலான நடனத்தோடும் சாத்தான் மேல் பெறும் வெற்றியோடும் துதிக்கவேண்டும். நமது வாயின், குரலின் சத்தத்துடன் நமது பரிசுத்தமான சாட்சியுள்ள வாழ்க்கை எழுப்பும் பேரோசையான சத்தத்துடன் அவரைத் துதிக்கவேண்டும்.அவருடைய வார்த்தைகளை தியானிப்பதோடு, நமது இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கும் தேவ அன்போடு அவரைத் துதிக்கவேண்டும். மேலும், அவருடைய சுவிசேஷத்தை அறிவிக்கும் பேரோசையுடனும் அவருடைய வருகையை எதிர்பார்க்கும் வாஞ்சையுடனும் அவரைத் துதிக்கவேண்டும். ரோமர் 1:16, 5:5; தீத்து 2:13.
வச.6 - யாரெல்லாம் அவரைத் துதிக்கவேண்டும்
அவரால் படைக்கப்பட்ட சுவாசமுள்ள அனைத்து ஜீவ ராசிகளும் அவரைத் துதிக்கவேண்டும். மரம், செடி, கொடிகள், மலைகள், சமுத்திரங்கள், ஆறுகள் இவைகளும் சுவாசிக்கின்றன. பறவை, நீர்வாழ்வன, பிராணிகள், மனிதர்கள் அனைத்தும் சுவாசிக்கின்றன. இவையெல்லாம் அவரைத் துதிக்கவேண்டும். காலம் வரும்போது எல்லா ஜீவராசிகளும் சேர்ந்து அவருடைய ராஜ்ஜியத்தில் அவரைத் துதிக்கும். வெளி.5:11-14.
'அல்லேலூயா'
Author: Rev. Dr. R. Samuel