"பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்" ( 1யோவான் 3:12) என்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் எச்சரிக்கிறார். ஆம், ஆதாமும் ஏவாளும் தங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி மற்றும் வீழ்ச்சியைப் பற்றி தவனமாய் இருந்து கற்பித்திருக்க வேண்டும். தேவனுடனான உறவு, ஆராதனை மற்றும் சரியான நடத்தை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் காயீனுக்கும் ஆபேலுக்கும் மற்றும் பிற குழந்தைகளுக்கும் அறிவுறுத்தியிருக்க வேண்டும். இருப்பினும், காயீன் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
1) விசுவாசமின்மை:
ஆபேலுக்கு இருந்த விசுவாசம் காயீனுக்கு இல்லை. எல்லா துதிக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியான தேவனை அவன் நம்பவில்லை, எனவே அவரை வழிபடுவதற்கான பாணியை தானே தேர்ந்தெடுத்தான்.
2) அன்பின்மை:
ஆபேல் மீதான இயல்பான அன்பிற்குப் பதிலாக, காயீன் அவனை வெறுக்கத் தேர்ந்தெடுத்தான். அன்பு மற்றவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறது: ஆம், அவரகள் தாழ்ந்திருக்கலாம் அல்லது உயர்ந்திருக்கலாம்; திறமையானவராக இருக்கலாம் அல்லது திறமையற்றவராக இருக்கலாம். சிறந்திருந்த ஆபேலை காயினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
3) பெருமை:
பெருமையுடைய காயீன் தன் சகோதரனை வெறுத்தான் (ஆதியாகமம் 4:5). பெருமை ஒரு நபரின் சுயத்தை அதிகரிக்கிறது மற்றும் மற்றவர்கள் அனைவரும் தாழ்ந்தவர்கள் என்றும் சார்ந்து வாழ்பவர்கள் அல்லது போட்டியாளர்கள் மற்றும் மகிழ்ச்சியைக் கொல்லுபவர்கள் என்றும் எண்ண வைக்கிறது.
4) வெறுப்பு:
காயீன் ஆபேலை வெறுத்தான், ஏனென்றால் தேவனுடன் அவனுக்கு சரியான உறவுமுறை இல்லை. அவன் வெளிச்சத்தில் அல்ல இருளில் நடந்தான் (1 யோவான் 2:11). சுயநலம் வெறுப்பையும் பெருமையையும் வளர்க்கிறது.
5) நிராகரிப்பு:
விசுவாசமின்மை, கீழ்ப்படியாமை, அன்பின்மை ஆகியவை தேவன் கொடுத்த எச்சரிக்கையை நிராகரிக்க வழிவகுத்தது (ஆதியாகம4ம் :6-7). உண்மையாகவே தேவன் தன்னைத் தண்டிப்பார் அல்லது நியாயந்தீர்ப்பார் என்று காயீன் நம்பவில்லை. தேவனுக்கு தண்டிக்கும் வல்லமையோ அதிகாரமோ இல்லாதவரைப் போல அவன் தவறாக புரிந்து கொண்டான்.
6) வன்முறை:
காயீன் ஆபேலின் மீது கொண்ட வெறுப்பு கசப்பாக மாறி இறுதியில் கொல்லுமளவு வந்தது (ஆதியாகமம் 4:8). ஆம், சக்தி வாய்ந்த உணர்ச்சியான வெறுப்பு ஒழுக்கக்கேடான வன்முறைச் செயல்களுக்கும் கொலைகளுக்கும் வழிவகுக்கிறது. மற்றவர்களின் உரிமைகள் மீதான ஆதிக்கம், பழிவாங்கும் எண்ணம் மற்றும் இரக்கமற்ற மனோபாவத்தால் மிதிக்கப்படுகின்றன.
7) பாவத்தை மறைத்தல்:
தேவன் அவனை எதிர்கொண்டபோது, காயீன் தன் பாவத்தை மறைக்க முயன்றான். ஆபேல் எங்கே என்று தேவன் கேட்ட போது; "என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?" (ஆதியாகமம் 4:9-10) என்றான். தேவன் எல்லாம் அறிந்தவராக இருப்பதால் அவரிடம் மறைப்பது சாத்தியமற்றது. "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதிமொழிகள் 28:13).
வருத்தமான விஷயம் என்னவெனில், இந்த பூமியில் பிறந்த முதல் குழந்தை ஒரு கொலைகாரனாக மாறியது (யோவான் 8:44).
நான் காயீனைப் போல இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokara