கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குருத்தோலை ஞாயிறு அன்று கழுதையின் மீது ஊர்வலமாக எருசலேமுக்குள் நுழைந்தார் (மத்தேயு 21:1-11; மாற்கு 11:1-11). அவர் ஆலயத்திற்குள் அகற்ற வேண்டிய காரியங்களை அகற்றி சுத்தம் செய்து விட்டு, நகரத்தை விட்டு பெத்தானியா சென்றார். அடுத்த நாள் அவர் எருசலேமுக்கு திரும்ப வரும் போது பசி உண்டானது, தூரத்திலிருந்து அத்தி மரத்தைப் பார்த்தார், எனவே அந்த மரத்தின் கனிகளை சாப்பிடலாம் என நினைத்தார் (மாற்கு 11:13). பசுமையான இலைகளுடன் கவர்ச்சியாக இருந்தது, ஆனால் அருகில் சென்று பார்த்த போது பழங்கள் இல்லை, ஆண்டவர் அந்த அத்தி மரத்தை சபித்தார் (மத்தேயு 21:18-22; மாற்கு 11:12-14).
ஆண்டவரின் பசி:
மரியாள், மார்த்தாள், லாசரு ஆகியோரின் வீட்டிலிருந்து வரும்போது, கர்த்தருக்கு பசித்திருக்கக் கூடாது. அதிவேக விருந்தோம்பல் நிபுணர் மார்த்தாள் ஒருவேளை காலை உணவை வழங்க மறந்துவிட்டாரா என்ன!?
இலைகள்:
இலைகள் பச்சையாக இருந்தால், பழங்கள் இருக்க வேண்டும். பங்குனி (மார்ச்) மாதத்தில், பாலஸ்தீனப் பகுதியில் உள்ள அத்தி மரங்களில் இலைகள் மற்றும் சிறிய பழங்கள் விளைகின்றன. பன்னிரண்டு மாதங்களில் பத்து மாதங்களும் அத்திப்பழம் காய்க்கும்.
பாசாங்கு:
வெளிப்புறமாக இஸ்ரவேல் பலி, தூப, காணிக்கை, திருவிழாக்கள் மற்றும் ஆலய வழிபாடு கொண்ட ஒரு மதமாக இருந்தது. ஆனால் பலனளிக்க வேண்டும் என்ற உண்மையான விசுவாசமோ ஆவிக்குரிய பலமோ இல்லை.
கனியின்மை:
இந்த மரம் ஏழை மற்றும் பசியுள்ள மக்களுக்கு தவறான நம்பிக்கையை அளித்தது. எதிர்பார்ப்புடன் வந்தவர்களை ஏமாற்றியது.
எதிர்கால ஏமாற்றம்:
அந்த மரத்தை சபிக்கவில்லை என்றால், அது எதிர்காலத்தில் இன்னும் பலரை ஏமாற்றிக்கொண்டே இருக்கும்.
அதிசயம்:
கர்த்தர் அந்த மரத்தில் அதிசயமான பலன்களைச் செய்திருக்க முடியுமா? அவர் பழங்களைச் சாப்பிட்டு பசியை போக்கியிருக்க முடியுமா? ஆம், முடியும்; ஆனால் ஆண்டவர் தனக்காக ஒருபோதும் அற்புதங்களைச் செய்யவில்லை, கற்களை கூட அப்பமாக மாற்ற மறுத்துவிட்டாரே. ஆனால் கர்த்தர் அந்த மரத்தை சபிக்கத் தேர்ந்தெடுத்தார். பொதுவாக மரங்கள் மேலிருந்து கீழ் நோக்கி அல்லவா காய்ந்து பட்டு போகும், ஆனால் இந்த மரம் வேர்களிலிருந்து காய்ந்துவிடும்; என்ன ஒரு ஆச்சரியம்.
இஸ்ரவேலுக்கு செய்தி:
ஆலயத்தை சுத்தப்படுத்துதல் என்பது பாசாங்குத்தனமான வழிபாட்டிற்கும், நம்பிக்கை, அன்பு, உண்மை மற்றும் நீதியை நிராகரித்ததற்குமான தேவனின் கண்டனம். அத்தி மரத்தை சபித்தது என்பது, தேவனுக்கு மகிமையைக் கொண்டுவரும் நீதியுள்ள தேசமாக இல்லாமல் போன இஸ்ரவேல் தேசத்திற்கு கர்த்தரின் கண்டனமாகும்.
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:
கர்த்தர் தம்முடைய சீஷர்கள் செத்த வேலைகளில் ஈடுபடாமல், கனிகளைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் (யாக்கோபு 2:26). எல்லா சீஷர்களும் மனந்திரும்புதலின் கனி, உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப்பலி மற்றும் ஆவியின் மிகுதியான மற்றும் நீடித்த கனியைக் கொண்டிருக்க வேண்டும் (யோவான் 15:5-8, மத்தேயு 3:8, எபிரெயர் 13:15, கலாத்தியர் 5:22-23).
நான் கனியுள்ள நபரா அல்லது பாசாங்கு உள்ள நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்