எசேக்கியா சந்தித்த சத்துருவின் சவால்கள் மூன்று

1. மலம் தின்று நீர் குடிக்கச் சொன்ன ரப்சாக்கே!

2. நீ மரித்துப் போவாய்!

3. என்னைப் பார்! என் அழகைப் பார்!

ஒரு குடும்பத்தைக் கர்த்தருக்குள் கொண்டுவருவது தேன்கூட்டைக் கலைப்பதற்கும், ஊரின் ஒரு பகுதியைத் தேவனிடம் திருப்புவது பாம்புப் புற்றுக்குள் கைவிடுவதற்கும், ஒரு ஊரையே தேவனை நோக்கித் திசைதிருப்புவது சிங்கக் குகைக்குள் இறங்குவதற்கும், ஒரு விக்கிரக ஆராதனை தேசத்தையே தேவன் வசமாக்கும் முயற்சியில் இறங்குவது, தலைவனின் தாகம் தீர்க்க எதிரியின் பாளயத்திற்குள் துணிந்து புகுந்து போய், தன் உயிரோடு தானே விளையாடுவதற்கும் சமம்.

■ 430 வருடம், தான் அடிமையாக்கி வைத்திருந்த இஸ்ரவேல் ஜனத்தை பார்வோன் அவ்வளவு எளிதில் தன் கைவிட்டுப்போக விட்டுவிடுவானோ?

"தொடருவேன், பிடிப்பேன்,கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் பட்டயத்தை உருவுவேன்.. என் கை அவர்களைச் சங்கரிக்கும்..." (யாத் 15:9) என்று சொல்லி அவர்களைப் பின் தொடர்ந்த அதே பகைவன், இன்றும் ஜெபவீரர்களைத் தன் மிகுதியான சேனையோடும் படையோடும் பின்தொடராமல் விடுவானோ?

■ ஏலா பள்ளத்தாக்கின் போர்க்களத்திலே கோலியாத்தை ஒரு கல்லாலே வெற்றி கண்ட தாவீதை உப்பரிகையிலிருந்து தலைகுப்புறத் தள்ளிவிட அவன், அவனுக்கு நாள் குறிக்கவில்லையோ?

■ ஆவிக்குரிய மகாபெலன் கொண்ட சிம்சோன்களைக் கட்டிச் சிறுமையாக்கி, அவர்களது ஆவிக்குரிய கண்களைப் பிடுங்கி, அவர்கள் கதையையே முடிக்க, இதோ பெலிஸ்தரின் அதிபதிகள் நவீன தெலீலாக்களின் அறை வீடுகளுக்குள்ளே இன்றும் பதுங்கிப் பதிவிருக்கவில்லையோ?

ஒரு வேளை எசேக்கியா ஒரு வருடத்துக்குள்ளாகவே தேசத்தைத் தேவனிடம் திருப்பி விக்கிரகத் தோப்புகளையும், மேடைகளையும் ஒன்றுமில்லாமல் போகப்பண்ணியிருக்கலாம். ஆனால் அதின் மூலம் அந்த விக்கிரக ஆவிகளின் உலகத்திலே, தளத்திலே (Spirit realm) ஏற்பட்ட அடியும், சலசலப்பும், தாக்கமும் கொஞ்சநஞ்சமல்ல. இதோ அவைகள் அவன் கதையை முடிக்க நாள் குறிக்கத் தொடங்கிவிட்டன. முதல் அட்டாக் அவனது ஆவியில்...இரண்டாவது அவனது சரீரத்தில்.. மூன்றாவது அவனது ஆத்துமாவில் ! 

"இந்தக் காரியங்கள் நடந்தேறி வருகையில்" மூன்று மிகப்பெரிய தாக்குதல்களைத் தனது ஆவி, ஆத்துமா, சரீரத்துக்கு விரோதமாய்ச் சந்தித்தான் எசேக்கியா.

எப்பேர்ப்பட்ட மிகப்பெரிய தேவமனிதனானாலும், ஜெபவீரனானாலும், ஆத்தும ஆதாய ஜாம்பவானானாலும், சிறையாக்குபவன் கையிலிருந்து சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோகும் பணியில் தப்புவிக்கப்படும் ஆத்துமாக்களின் கொள்ளைக்கு ஏற்ப பிசாசு அந்த ஊழியனுக்கு நாள் குறித்து, பதிவிருந்துகொண்டே தான் இருப்பான்.

யோவான் ஸ்நானகனின் தலையை வாங்க ஏரோதியாளுக்கு "சமயம் வாய்க்கும் வரை" (மாற் 6:21) அவள் அவனது தலைக்குக் குறி வைத்துக்கொண்டேதான் இருந்தாள். போத்தியார் வீட்டில் யோசேப்பு ஓரளவு செட்டில் ஆகி" சில நாட்களுக்குள்ளாகவே" அவனது எஜமானின் மனைவி அவன் மேல் கண்போட்டுவிட்டாள் (ஆதி 39.7).

தேவ மனிதர்களின் ஒவ்வொரு அசைவையும் பிசாசு கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான் - அவர்கள் மரித்து சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அதின் மேல் கடைசி ஆணி இறுக்கப்படும் வரை!

1. சனகெரிப் என்னும் அசீரியப் பேய் :

-  "இந்தக் காரியங்கள் நடந்தேறி வருகையில்.." அசீரிய அரசன் சனகெரிப் தன் படையோடு வந்து எருசலேமை முற்றிகை போட்டான்.

-  அவனது சேனாதிபதி ரப்சாக்கேயின் வார்த்தைகளைச் சற்று உற்றுக்கேளுங்கள்! அவன் எசேக்கியாவைப் பார்த்துச் சொல்லுகிறான்.."நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன், நீ அவைகள் மேல் ஏறத்தக்கவர்களை சம்பாதிக்கக் கூடுமானால் அசீரிய ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு. கூறாதே போனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய் ?

யுத்தத்துக்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்லுகிறாயே, அது உன் வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல... உன்னோடே கூடத் தங்கள் மலத்தைத் தின்று தங்கள் நீரைக் குடிக்கும் உன் ஜனத்தோடு நான் பேசுகிறேன்.." என்று ஆணவமும் அகங்காரமுமாய்க் கொக்கரித்தான் ரப்சாக்கே! (ஏசா 36:4 - 20)

தன் ராஜ்யத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதம், முதலாம் நாளில் தொடங்கிய, தேசத்தை தேவன் பக்கம் திருப்பும் வேலையில் வெற்றி கண்ட எசேக்கியா எதிர்கொண்ட முதல் தாக்குதல் இது!

"இந்தக் காரியங்கள் நடந்தேறி வருகையில் ...." என்றே சனகெரிப்பின் சரித்திரம் துவங்குகிறது. (2 நாளா 32:1)

"எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்று சன்பல்லாத்தும் தொபியாவும் அரபியரும் அம்மோனியரும் அஸ்தோத்தியரும் கேட்டபோது..." என்றே அவர்கள் கதையும் விரிகிறது.

" நீ என் தலைவனாகிய ஆண்டவனோடே சபதங்கூறு.. அவனுடைய படைத்தலைவர்களில் மிகச்சிறிய ஒருவனைக் கூட வெல்ல உன்னால் ஆகுமோ?" என்று சவால்விடுகிறான் ரப்சாக்கே. அதாவது, என் ராஜாவின் சரித்திரத்தைக் கவனித்துப் பார்! அவன் கால்வைக்காத இடமும், வெல்லாத ஜாதி ஜனமும் இல்லாதிருக்க, எசேக்கியா என்ற தனியொரு மனிதனாகிய நீ என் ராஜாவுக்கு எம்மாத்திரம்?"

சாத்தானின் இதே கொக்கரிப்பு தான் இன்றும் கேட்கப்படுகிறது.

● "இந்த தேசம் என் தேசம்! இந்த மண் என் சொந்த மண்!"

● காலாகாலமாய் நானே இதை ஆண்டு வருகிறேன்..

● இந்த மண்ணில் வடக்கு முதல் தெற்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரை இரத்தஞ்சிந்தப்படாத ஸ்தானமும் சமஸ்தானமும் ஒன்று உண்டோ?

● அந்நிய படையெடுப்புகளையும், ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்களையும் நானல்லவோ முன்னின்று அனுப்பினேன்?,"

● "இத்தேசத்தின் கிமு கிபி எல்லாம் என் பாக்கெட்டிலே!

● அப்படியிருக்க, தோமா காலம் முதல் இன்று வரை 2000 வருடமாக நீ சாதித்துவிட்டது தான் என்ன?

● இந்த நாட்டில் என் நெட்வொர்க்குக்கு முன்னால் உன் ஜெபமந்திரமும் ராஜதந்திரமும்  பலித்துவிடுமோ?

ரப்சாக்கேயின் வார்த்தைகளைக் கேட்ட எசேக்கியா தன் ஜனத்தைப் பார்த்து, "நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்..அசீரிய ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள். அவனோடு இருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம். நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய கர்த்தர் தாமே!" என்றான். (2 நாளா 32:7,8)

மிஷன் '24 போன்ற ஆவிக்குரிய வேலைகள் தேசத்தில் நடந்தேறி வருகையில் சிதறடிக்கிறவன் நமது முகத்துக்கு முன்பாக நிச்சயமாய் வருவான். ஆகவே அரணைக் காத்துக்கொண்டு, வழியைக் காவல்பண்ணி, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொண்டு நம் ஆவிக்குரிய பெலனை அபிஷேகத்திலும் தேவவார்த்தையிலும் ஸ்திரப்படுத்திக் கொண்டே செல்லுவோம். (நாகூம் 2:1)

தனி ஒருவனாய் சனகெரிப்பின் சேனையை எதிர்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த எசேக்கியாவுக்கு ஏசாயா என்ற தீர்க்கனை தேவன் பக்கபலமாய்க் கொடுத்தார். தேவ வார்த்தையினால் அவன் இவனை அவ்வப்போது திடப்படுத்திக்கொண்டே இருந்தான். அவனுக்குக் கீழ்ப்பட்டிருந்த அவனது தேச ஜனமும் அவனது சொல்லை அப்படியே கேட்டது.

முதலாவது சனகெரிப் தன் படைத்தளபதி ரப்சாக்கேயை அனுப்பினான். அடுத்தது தன் மிரட்டல் கடிதத்தை அனுப்பினான். கடைசியாகத் தானே நேரடியாக யுத்தகளத்தில் வந்து இறங்கினான்!

இது எசேக்கியாவின் ஆவிக்கு எதிராக எழும்பி வந்த சத்துருவின் சவால். இது அவனது ஆவியைப் பயமுறுத்திக் கலங்கடிக்க சத்துருவால் எய்யப்பட்ட முதல் அக்கினியாஸ்திரம். இப்படிப்பட்ட காரியங்கள் இன்றும் ஜெபவீரர்களுக்கு விரோதமாய் சம்பவிக்க நேரிடும்போது, அன்று எசேக்கியாவிடமிருந்த அதே மிகப்பெரிய ஆயுதமாகிய ஜெபம் என்னும் தண்டாயுதமும் அஸ்திராயுதமும் இன்றும் நம்மிடம் உண்டே! 

அவனைப் போலவே தேவ சமூகத்துக்குச் செல்லுவோம். பயமுறுத்தல்களை தேவனுக்கு முன்பாகத் தெரியப்படுத்துவோம். உபவாசங்களை நியமிப்போம். விசேஷித்த ஆசரிப்பைக் கூறுவோம். ஜனத்தைக் கூட்டுவோம். சபையைப் பரிசுத்தப்படுத்தி முதியோரையும் பிள்ளைகளையும் கூட்டுவோம்..ஆசாரியர்களான ஊழியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது தேவ சமூகத்தில் இராத்தங்குவார்களாக ! (யோவேல் 2:15 - 17)

பின்னாட்களில் ஆதிசபை இதைப் போன்ற பயமுறுத்தல்களைச் சந்தித்தபோது ஜெபித்த ஜெபத்தால் அவர்கள் கூடியிருந்த இடமே அசைந்துவிட்டதை இன்னும் ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொள்வோம்! (அப் 4:24 - 31)

சனகெரிப்பின் பாளயத்தில் ஒரே ஒரு தூதனையனுப்பி ஒரே இராத்திரியிலே இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைச் சடலமாக்கிப் போட்டு, அந்தச் சனகெரிப்பின் மூக்கிலும் வாயிலும் துறடுபோட்டு அவன் வந்த வழியே அவன் தேசத்துக்கு அவனை இழுத்துச் சென்று, அவனது பிள்ளைகளின் கையாலேயே அவனைப் பட்டயத்தால் கொன்று சரித்த சேனைகளின் கர்த்தர் இன்றும், நம் மத்தியில் உயிரோடே இருக்கவே இருக்கிறாரே! ஆம். எசேக்கியாவின் தேவன் நம்முடைய தேவனல்லவா?

2. "நீ மரித்துப் போவாய் !"

(எசேக்கியா சந்தித்த புற்றுநோய் என்னும் இரண்டாவது சவால்)

இது அவனது சரீரத்துக்கு விரோதமான அடுத்த அஸ்திரம்!

"அந்நாட்களிலே... எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்குச் சமீபமாயிருந்தான். "உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்.." என்று அவனுக்குச் சொல்லப்பட்டது.

ஜெபவீரர்களின் ஆவியைக் கலங்கப்பண்ணி, அதிலே அவன் தோற்றுப்போகும்போது, அடுத்து அவர்கள் சரீரத்தை பெலவீனப்படுத்தி வியாதியில் விழவைக்கவோ அல்லது சரீர ரீதியான பாவத்தில் விழவைக்கவோ அவர்களது சரீரத்துக்கு விரோதமாகவே அவன் வருவான்.

ஜெபவீரனின் சரீரத்தில் அவன் கை வைக்கும்போது, தன்னிலே தானே எதுவும் செய்யத் திராணியற்ற நிலைக்குத் தள்ளப்படும் அந்த ஜெபவீரன் சுவர்ப்புறமாய்த் திரும்பி தேவனை நோக்கி, "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும்.." என்று விண்ணப்பம்பண்ணி அழுவதைத் தவிர வேறு வழியின்றி நிற்கிறான். அப்போதும் அவனது விண்ணப்பத்தைக் கேட்டு அவனது கண்ணீரைக் காணும் தேவன், ஏசாயா போன்றவர்களைப் பக்கபலமாக அவனுக்குக் கொடுக்கவே செய்கிறார்.

தன் மரணப்படுக்கையிலிருந்து மீண்டு எழுந்து வருகிறான் எசேக்கியா. ஜெபவீரர்களுக்கும் எழுப்புதல் வீரர்களுக்கும் எதிரான பலத்த அஸ்திரமான சரீர நோயினால் பல வீரர்கள் பாதிக்கப்படும்போது, எசேக்கியாவுக்கு வாக்குத்தத்தம் பண்ணி அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்ட கர்த்தர், விசுவாசமுள்ள ஜெபத்தால் பிணியாளியான ஜெபவீரனை இரட்சித்து மீண்டும் எழுப்பி நிறுத்தி அவனது படுக்கையை மாற்றிப்போட்டு, தமது வசனத்தை அனுப்பி அவனைக் குணமாக்குகிறார்.

3. "என்னைப் பார்! என் அழகைப் பார்!"

(எசேக்கியா சந்தித்த மூன்றாவது சவால்)

முதலாவது எய்யப்பட்டது அவனது ஆவிக்கு எதிராக !

இரண்டாவது தாக்குதல் அவனது சரீரத்துக்கு விரோதமாக !

மூன்றாவதோ அவனது ஆத்துமாவைக் குறி வைத்தது !

"அக்காலத்திலே" (ஏசா 39:1,2)

"அக்காலத்திலே" பலாதானின் குமாரனாகிய மெரோக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.."  

இங்கே வேதம் சொல்கிறது...
"எசேக்கியா மனமேட்டிமையாகி..." (2 நாளா 32: 25, 26) அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும் பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளில் உள்ளது எல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான். எசேக்கியா தன் அரண்மனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றுமில்லை.."(ஏசா 39:1, 2)

ஜெபவீரர்களுக்கு விரோதமாக அவர்களது ஆவியைக் கலங்கடித்து மனமடியப்பண்ண அவர்களது ஆவிக்கு விரோதமாய் வரும் எதிரியின் முதல் ஆயுதம் தோற்றுப்போகவே, அடுத்து அவர்கள் சரீரத்துக்கு விரோதமாய் அவன் வந்து அதை நோயினால் வாதிக்கவும், பாவ நோயினாலும் இச்சைகளினாலும் சாகடிக்கவும் தனது அடுத்த அஸ்திரத்தை அவர்களது சரீரத்துக்கு விரோதமாய்த் எய்கிறான்.

எசேக்கியாவின் விஷயத்திலே இந்த இரண்டும் வாய்க்காமல் போகவே, அவனது ஆத்துமாவுக்கு  விரோதமான தனது கடைசி ஆயுதத்தை எடுக்கிறான் பிசாசு. எசேக்கியா பிசகிப்போனது இங்கே தான்! 

தேவன் ஒரு மனிதனை வல்லமையாய் உபயோகிக்கும்போது அவனுடைய மனதின் ஏதோ ஒரு மூலையில் தன் ஊழியத்தின் வெற்றியைக் குறித்த ஒருவிதப் பெருமிதமும் இதமியமும் எழுந்து, அது அவனைக் கொஞ்சங்கொஞ்சமாய் மேட்டிமையான எண்ணங்களுக்குள் இட்டுச்சென்று, கடைசியாக ஆவிக்குரிய பெருமையிலும் மனமேட்டிமையிலும் அவனை வஞ்சித்து வீழ்த்துகிறது.

"என்னைப்பார், என் அழகைப்பார்!" என்று தன்னைக் காண வருபவர்களுக்கெல்லாம் அவற்றை மனந்திறந்து வெளிப்படுத்தியும் காட்டுகிறான் - "மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறது போல..." (நீதி 29: 11). 

அதுவே அவனுக்கு விரோதமாக வன்கண்களின் ஆவிகளுக்கும், பொறாமையின் ஆவிகளுக்கும், வயிற்றெரிச்சலும் ஏக்கப் பெருமூச்சுகளுமான ஆவிகளுக்கும், ஆச்சரியப் பிரமிப்பின் ஆவிகளுக்கும் இடங்கொடுத்து, அவைகள் உடனடியாகவோ அல்லது நாளொன்று வரும்போதோ, அவனுக்கு விரோதமாய்ப் படையெடுத்து வந்து, பொக்கிஷமாய் அவனுக்கு அருளப்பட்ட அனைத்தையும் ஒன்றுமில்லாமல் வாரிக்கொண்டு போய்விடுகிறது - எசேக்கியாவுக்குப் பின் பாபிலோனியர் படையெடுத்து வந்து யூதாவிலே கண்ட சகலத்தையும் வாரிக்கொண்டு போனது போல!

இவைகளெல்லாம் திருஷ்டாங்களாக எசேக்கியாவுக்குச் சம்பவிக்க, உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கோ இவைகள் எச்சரிப்புண்டாகும்படியாகவே எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு ஜெபவீரன் எப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு உள்ளானாலும், இவை எல்லாவற்றிலும் அவனில் அன்புகூருகிற அவராலே அவன் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவனாகவே தன் தேவனுக்கு முன்பாக நிற்பான்!

"என் சத்துருவே, எனக்கு விரோதமாய் சந்தோஷப்படாதே! நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்..நான் இருளிலே உட்கார்ந்தால், என் தேவன் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.." (மீகா 7.8).

அல்லேலூயா!

Author : Pr. RomiltonTopics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download