"ஊருணி வாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லூம் பழுதுபார்த்துக் கட்டினான்..."( நெகே 3: 15).
ஊருணி வாசல் எருசலேம் அலங்கத்தின் தென்கிழக்குப் பகுதியில் தாவீதின் நகரத்தின் கீழ்முனையிலிருந்த ஒரு வாசல். எருசலேம் மதிலுக்கு வெளியே என்ரொகேல் (En-rogel) என்னும் ஊற்று இருந்தது. நகரத்து ஜனங்கள் இந்த வாசல் வழியாகவே தண்ணீர் கொண்டு வரும்படி அவ்வூற்றுக்குச் சென்றுவந்தபடியால் இது ஊருணிவாசல் என்று அழைக்கப்பட்டது.
ஊருணி வாசல் என்பது தேசத்தின் ஊற்றுக்கண்களையும் வளங்களையும் குறிக்கிறது.
இந்த நாட்டில் இல்லாத வளங்களென்ன? நீர் வளமா? நில வளமா? நதி வளமா? கடல் வளமா? கனிமவளமா? மலை வளமா? மனித வளமா?
அறிவுக்குப் பஞ்சமா? அனுபவத்துக்குப் பஞ்சமா? திறமைக்குப் பஞ்சமா? புலமைக்குப் பஞ்சமா? வளமைக்குப் பஞ்சமா? கலைக்குப் பஞ்சமா? வீரத்துக்குப் பஞ்சமா?
■ NRI என்றழைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நல்ல ஊதியமும் மதிப்பும் கெளரவமும் பொறுப்பும் அளிக்கப்பட்டு, அரசியலும் ஊழலும் இல்லாத சூழல் உருவாக்கிக் கொடுக்கப்படுமானால் அவர்களது திறமையும் அறிவாற்றலுமான வளங்கள் தாய்நாட்டுக்கு உதவாதோ? - ஜெபிப்போம்!
■ நிலக்கரிச் சுரங்க வளங்களும், விவசாய நில வளங்களும், கனிம நில வளங்களும், இரும்புத்தாது வளங்களும், கடலின் மீன்பிடி வளங்களும், மலைகளின் இயற்கை வளங்களும் யாரோ ஒரு தனியாருக்குத் தாரைவார்க்கப்படும் அவலங்கள் நீங்காதோ? - ஜெபிப்போம்!
■ உள்நாட்டு வளங்கள், உள்நாட்டுக்குப் போக மீதியானவைகளாய் அந்நியச்செலாவணியாகி, உள்நாட்டுக்கே வளங்கொண்டு திரும்புமானால் இந்நாட்டில் வளமும் செல்வமும் கொழிக்காதோ? - ஜெபிப்போம்!
■ ஆபிரகாம் காலத்தில் தோண்டப்பட்டு எதிரிகளால் தூர்த்துப் போடப்பட்ட கிணறுகளைத் தூர்வார்த்துத் தோண்டினான் ஈசாக்கு. தேசத்திலே இன்று தூர்த்துப் போடப்பட்ட நீரூற்றுக்களை ஜெபத்தில் ஆவியில் தூர்வார்த்துத் தோண்டி ஊருணி வாசல்களைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவோம் வாருங்கள்! தேசத்துக்குச் க்ஷேமத்தைக் கொடுப்பேன் என்றவர், இன்றைய அரசியல் வனாந்தரத்திலே ஆசீர்வாத ஆறுகளையும், வளங்கள் வறண்ட அவாந்தர பூமியிலே நீரூற்றுகளையும் திரும்பவும் வரவிடமாட்டாரோ? - ஜெபிப்போம்!
■ எங்கள் தேசத்தின் ஊற்றுக்கண்கள் அயல்நாட்டு அந்நியருக்கும் உள்நாட்டுக் கொள்ளையருக்கும் உரியவைகளாயிராமல், தேச ஜனமாகிய எங்களுக்கே உரியவைகளாய் இருப்பதாக! எங்கள் தேசத்து வளமான எங்கள் கிணற்றின் தண்ணீரையும் , உள்நாட்டுத் துரவில் ஊறுகிற ஜலத்தையுமே நாங்கள் பானம் பண்ணட்டும்! (நீதி 5:15, 17)
■ இவைகள் போக, இந்தியத் திருச்சபைகளிலே ஆவிக்குரிய வளங்களுக்கும், வரங்களுக்கும், வெளிப்பாட்டு வசனங்களுக்கும் பஞ்சமுண்டோ? குழந்தைச் செல்வங்களுக்கும் வாலிபச் செல்வங்களுக்கும், தேவன் அவர்கள் மேல் பொழிந்தருளியிருக்கும் இயற்கை வரங்களுக்கும் ஆவியின் வரங்களுக்கும் குறைவுண்டோ? மேய்ப்பர்களென்ன? போதகர்களென்ன? சுவிசேஷகர்களென்ன? தீர்க்கதரிசிகளென்ன? அப்போஸ்தலர்களென்ன? சபைக்கு உண்டானவைகளில் நாம் பெற்றுக்கொள்ளாதது இன்னும் யாது?
■ அப்படியிருக்க, உலக மனிதன் தன் திறமையைப் பணமாக்கத் துடிக்க, இன்றைய ஆவிக்குரியவனும் தன் ஆவிக்குரிய வரங்களையும்,வளங்களையும், வல்லமையையும் காசாக்கப் பறப்பதென்ன? இன்றைய சபையின் ஊற்றுக்கண்கள் அடைபட்டு, ஊருணி வாசல்கள் சுட்டெரிக்கப்பட்டுக் கிடப்பதென்ன?
■ ஊற்றுத்தண்ணீரே, எங்கள் தேவ ஆவியே, ஜீவநதியே எங்கள் தேசத்திலும் சபையிலும் பொங்கிப் பொங்கி வாரீரோ? எங்கள் ஊற்றுக் கண்களையும் மனக்கண்களையும் திறக்கமாட்டீரோ? தூர்த்துப்போடப்பட்ட எங்கள் ஊற்றுக்கண்கள் தூர்வாரப்பட்டு, சிதிலமடைந்த எங்கள் ஊருணிவாசல்கள் திரும்பக் கட்டப்படுவதாக! ஆவிக்குரிய தேவ ஆசீர்வாத நீரூற்றுகள் வறண்டுபோன எங்கள் சபைகளில் கரைபுரண்டு ஓடுவதாக! தேசம் தண்ணீரால் நிரம்பட்டும் ஐயா! சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல தேசம் தேவனை அறியும் அறிவினாலே நிரம்புவதாக! எங்கள் தேசத்தையும் சபைகளையும் தேவரீர் ஆசீர்வதிப்பீராக! ஆமென்!
Author: Pr. Romilton