எப்பிராயீம் வாசல் !

(நெகே 12:38, 39)

(சிறுமையைத் தொடரும் உயர்வு)

"நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்திலே தேவன் என்னைப் பலுகப்பண்ணினார்.." (ஆதி 41:52)

நெகேமியா பழுதுபார்த்துக் கட்டின எருசலேமின் நான்காவது வாசல் இது. எருசலேமிலிருந்து எப்பிராயீமின் எல்லைகளுக்குப் போகும் வழியாகப் பயன்படுத்தப்பட்டதால் இது "எப்பிராயீம் வாசல்" என்று அழைக்கப்பட்டது. யோசேப்பு எப்பிராயீமுக்கு "நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்திலே தேவன் என்னைப் பலுகப்பண்ணினார்" என்று அவனுக்கு இந்தப் பெயரை இட்டிருந்தான்.

"நாம் இருக்கும் சிறுமையைப் பார்க்கிறீர்களே!" (நெகே 2:17) என்று எருசலேமிலுள்ள மீதியானவர்களைப் பார்த்துக் கேட்டார் நெகேமியா.

ஜெபம்

■ இந்தத் தேசத்தில் நாமிருக்கும் சிறுமையைப் பார்க்கிறோமே! தேவன் இந்தச் சிறுமையை நீக்கி, நம்மைப் பெருகப்பண்ண வேண்டி, தேசத்தின் எப்பிராயீம் வாசலை ஜெபத்தில் கட்டியெழுப்புவோம்!

■ "தேசத்திலே நாம் பலுகும்படி தேவன் நமக்கு இடமுண்டாக்கினார்" என்று சொல்லி ரெகொபோத் என்று பேரிட்டான் ஈசாக்கு (ஆதி 26:22). தேவ மகிமை நம்மைவிட்டு விலகியிருக்கும் "இக்கபோத்" என்ற இன்றைய இழிநிலை நமது சபைகளை விட்டு மாறி, "ரெகோபோத்" என்னும் ஆவிக்குரிய பெருக்கம் சபைகளிலும் தேசத்திலும் உண்டாக ஜெபிப்போம்.

■ சபையின் சிறுமையான நிலையையும், தேசத்தின் சிறுமையான நிலையையும், "சிறுபான்மை" என்ற நிலையையும் மாற்றி, தேவன் சபைக்கும் தேசத்துக்கும் பெருக்கம் தந்து ஆசிர்வதிக்கும்படியாய் இந்த எப்பிராயீம் வாசலை ஜெபத்திலே கட்டியெழுப்புவோம்..

■ தேசத்திலே பல வகைகளில் அரசியல்வாதிகளாலும், அதிகாரவர்க்கத்தாலும், ஜமீன்தார்களாலும், முதலாளிகளாலும், உயர்ஜாதிகளாலும் அடிமைப்படுத்தப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டுள்ள ஜனங்களின் வாழ்க்கையின் வாசல்களை ஜெபத்தால் கட்டியெழுப்புவோம்!

■ இந்திய சிறைச்சாலைகளிலே இன்று யோசேப்பைப் போல குற்றமற்று சிறுமையோடு நாட்களைக் கழிப்பவர்களுக்காகவும், குற்றமற்றவர்களின் சிறைச்சாலை மரணங்களுக்காகவும், நீதிமன்றத்தில் நீதி கிடைக்காமல் வேதனையோடும் கண்ணீரோடும் வாழ்பவர்களுக்காகவும் ஜெபிப்போம்..

■ யோசேப்பைப் போல விற்றுப்போடப்படுபவர்களுக்காகவும் (Human Trafikking), பெண்களையும் குழந்தைகளையும் விபச்சாரத்திற்காகவும் பிச்சையெடுக்கும் தொழிலுக்காகவும் விற்றுப்போட்டு அதிலே தள்ளிவிடப்படும் அபலைகளுக்காகவும், அரவாணிகளுக்காகவும் ஜெபிப்போம்..

■ சிறுமைப்பட்ட குடும்பங்களிலிருந்து படித்து முன்னேறப் போராடும் மாணவர்களுக்காக ஜெபிப்போம். அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்கள் சமூகத்தின் இப்படிப்பட்டவர்களைச் சரியாய்ச் சென்றடைய ஜெபிப்போம்...

■ யோசேப்பைப் போல PIT - PRISION - PALACE என்ற பாதையையே தேவன் சபைகளையும் விசுவாசிகளையும் முன்னேற்றத்துக்கு நடத்தும் பாதையாய் நியமித்திருப்பதால், இன்றைய சபை இந்த அடிப்படை உண்மையை அறிந்து கொண்டு சிலுவையின் பாதையையே தெரிந்தெடுத்து முன் செல்ல ஜெபிப்போம்..

யோசேப்பின் தேவன் நம்முடைய தேவனாயிருக்கிறாரே!

Author: Pr. RomiltonTopics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download