"குப்பைமேட்டு வாசலை பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்துக் கட்டி...(நெகே 3:14)
இது எருசலேம் அலங்கத்தின் தென்கோடியில், சீலோவாம் குளத்தருகே இன்னோம் பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வழியிலே இருந்தது. நகரத்தின் குப்பை இன்னோம் பள்ளத்தாக்கிற்கு இந்த வாசல் வழியாகவே வண்டிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இது "சாம்பல் குவியலின் வாசல்" என்றும் அழைக்கப்பட்டது.
வளர்ந்த மேலை நாடுகளை ஒப்பிடும்போது நம் தேசம் சுத்த சுகாதாரமற்ற தேசம் தானே!
* நகர்ப்புறங்களிலே காணப்படும் சுத்த சுகாதாரமும் காற்றோட்டமும் அற்ற நெருக்கம் நெருக்கமான சேரிப் பகுதிகளைப் பாருங்கள்!
* ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைக் குடியிருப்புகளின் அணிவகுப்பு இங்கு தானே!
* எத்தனை குடிசை மாற்று வாரியங்கள் வந்தாலும் புற்றீசலாய்ப் பெருகிக்கொண்டே போகும் குப்பைமேட்டுக் குடியிருப்புகள்!
இங்கே...
- சுவாசிக்கும் காற்றிலே மாசுக் கழிவுக் குப்பை!
- குடிக்கும் நீரிலே அசுத்தக் கழிவுக் குப்பை !
- நதியிலே கலக்கும் தொழிற்சாலைக் கழிவுக் குப்பை !
- மருத்துவக் கழிவுகள்!
- இரசாயனக் கழிவுகள்!
- அணுமின் உலைக் கழிவுகள்!
- வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு கொட்டப்படும் கழிவுகள்!
- உள்நாட்டில் மலை போல் தேங்கி நிற்கும் கழிவுகள்!
- மென்பொருள் கம்ப்யூட்டர் கழிவுகள்!
- அரசியல் குப்பைகள்!
- ஊழல் குப்பைகள்!
- சினிமாக் குப்பைகள்!
- பாவக் குப்பைகள்!
- சபையின் கள்ள உபதேசக் குப்பைகள்!
- நமக்கு லாபமாயிருக்கும் படிப்பு, பணம், புகழ்,பெருமை மேன்மைகளை நஷ்டமும் குப்பையுமாக எண்ணிக் கழித்துப்போடாமல், சேர்த்துக்கூட்டி, இச்சையும் நாற்றமுமாய், குப்பையும் கூளமுமாய் நமக்குள்ளே மண்டிக்கிடக்கும் தேவன் அருவருக்கும் குப்பைகள்!
அன்று எருசலேமின் இந்தப் பள்ளத்தாக்கின் வாசல் தகர்க்கப்பட்டுப் போனதினாலேயே நகரத்தின் வெளியே கொண்டுபோய்க் கொட்டப்படவேண்டிய குப்பைகள் உள்ளேயே மலையாய்க் குவிந்து பரிசுத்த நகரமே தீட்டுப்பட்டுப்போயிருந்தது. இன்று நம் தேசத்திலும் சபையிலும் ஆங்காங்கே குவியல் குவியலாய் மலைபோல் குவிந்து கிடக்கும் சகலவிதக் குப்பைகளையும் காண்கிறோமே! நமது தேவன் பரிசுத்தத்தில் வாசம் செய்கிறவரல்லவா?
நாம் உட்கொள்வதற்கும் வெளியேற்றுவதற்கும் பிரத்தியேக வாசல்களை தேவன் உண்டாக்கி வைத்திருப்பதுபோலவே, தேசத்திலிருந்தும் நம் வாழ்விலிருந்தும் வேண்டாத குப்பைகளையும் கழிவுகளையும் வெளியேற்றி ஜெபிக்க வேண்டிய காலமல்லவோ இது? ஆகவே வெளியேற்ற வேண்டியவைகளை தேசத்திலிருந்தும் சபையிலிருந்தும் வெளியேற்றி சிதைந்துபோன இந்தக் குப்பைமேட்டு வாசலை ஜெபத்தால் எழுந்து கட்டுவோம் வாருங்கள்!
Author: Pr. Romilton