மீன் வாசல்!

எருசலேமின் அலங்கத்தில் நெகேமியா இரண்டாவதாகப் பழுதுபார்த்துக் கட்டியது மீன்வாசல். கலிலேயா கடலிலிருந்தும் யோர்தான் நதியிலிருந்தும் பிடித்து வந்த மீன்களை நகரத்துக்குள் கொண்டுவர இந்த வாசல் தான் பயன்படுத்தப்பட்டது.

"என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்" என்றார் இயேசு..

வேதத்தின்படி மீன்பிடித்தல் என்பது சுவிசேஷம் அறிவித்து ஆத்தும ஆதாயம் செய்வதைக் குறிப்பது என்பது நாம் அறிந்ததே! இன்று நம் தேசத்தில் அரசாங்க ஆணையின்படி இல்லாவிட்டாலும், ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலுமே சுவிசேஷத்திற்கு திறந்த வாசல் இல்லை என்பதும், முன்போல சுதந்திரமாக சுவிசேஷம் அறிவிக்க இயலாமல் இந்த சுவிசேஷ மீன்வாசல் சுட்டெரிக்கப்பட்டதாகக் கிடப்பதையும் காண்கிறோம். 

"இதோ நான் உனக்கு முன்பாகத் திறந்த வாசலை வைத்திருக்கிறேன். ஒருவனும் அதைப் பூட்டமுடியாது" என்பதே கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தம்.

தேசத்தின் ஆத்தும ஆதாய சுவிசேஷ மீன்வாசலை ஜெபத்தால் எழுந்து கட்டுவோம் வாருங்கள்! 

ஜெபம் :

■ மதமாற்றத் தடைச்சட்டம் அமலாக்கப்பட்டு ஏற்கனவே சுவிசேஷ வாசல்கள் மூடப்பட்டுவிட்ட மாநிலங்களின் வாசல்களைத் தேவன் திறக்கும்படியாக ஜெபிப்போம்..

■ வாசல்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கிற மாநிலங்களுக்காக ஜெபிப்போம்.

■ சுவிசேஷ எதிர்ப்பாளர்களுக்காக ஜெபிப்போம்.

■ சுவிசேஷ எதிர்ப்பு அலை காணப்பட்டாலும், சுவிசேஷம் அறிவிக்கும் முறைகளில் சபைகள் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு, சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷப்பணியை வெளிப்படையாய்ச் செய்ய முடியாவிட்டாலும், வேறு வகைகளில் செய்துகொண்டே இருக்க தேவன் சபைகளுக்குத் தைரியம் அளிக்கும்படி ஜெபிப்போம்.

■ ஆத்தும ஆதாயமே சபைகளின் உயிர்மூச்சாய் இருக்கும்படி ஜெபிப்போம்.

■ சுவிசேஷ வாசல்கள் பழுதுபட்ட நிலையிலும்கூட, ஆட்சியில் உள்ளவர்களுக்கும் அதிகாரமட்டத்தில் உள்ளவர்களுக்கும், தேசத்தின் எல்லாத்துறை அதிகாரிகளுக்கும் சுவிசேஷம் சென்றடையும்படியாகவும், கர்த்தர் தமது அடையாள அற்புதங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தும்படியாய் ஜெபிப்போம்.

■ தேசம் அடைக்கப்பட்டிருந்தபோதிலும் "கர்த்தரே தேவன்" என்று ஆட்சியாளர்களுக்கும் அடக்குமுறையாளர்களுக்கும் நிரூபித்து நின்ற எலியாக்களை தேவன் இன்று எழுப்பும்படியாய் ஜெபிப்போம்.

■ சுவிசேஷப்பணியின் போர்முனையில் மலைகளிலும் காடுகளிலும் கிராமங்களிலும், ஆபத்தான இடங்களிலும் ஊழியம் செய்யும் முன்னணி மிஷினரிகளை நினைத்துக்கொள்வோம். 

■ இந்தியாவின் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கும் சுவிசேஷ மீன்வாசலை ஜெபத்தில் எழுந்து பழுதுபார்த்துக் கட்டுவோம் வாருங்கள்!

Author: Pr. Romilton



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download