பெண்ணே! நீ தேவசாயல்
பின்பு தேவன் நமது சாயலாகவும். நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். ( ஆதி: 1: 26, 27 )
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். மனிதன் என்ற சொல்லுக்கு எபிரேய மொழியில் ஆதாம் (Adam) என்று சொல்லப்படுகிறது. ஆணையும், பெண்ணையும் சேர்த்து சொல்லப்படுகின்ற ஒரு வார்த்தை ஆதாம் ( Adam) தேவன் நமது சாயலாக உருவாக்கினார் என்றால், அவருடைய உருவ அமைப்பை அது குறிக்கவில்லை. தேவாதி தேவன் ஆவியாய் இருக்கிறார். ( யோவான்: 4:24 ) அவருக்கு ரூபம் ஒன்றுமில்லை. தேவசாயல் என்பது விலங்குகளில் இருந்து மனிதனை பிரித்து காட்டுகிறது. அவர் சாயல் என்பது அவருடைய குணாதிசயங்களையும், தன்மைகளையும் குறிக்கிறது. அவரைப் போல் யோசிக்கக்கூடியவனாக, உணரக்கூடியவனாக, தீர்மானிக்கக்கூடியவனாக ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்பவனாக, பரிசுத்தமுள்ளவனாக மனிதன் உருவாக்கப்பட்டான். அது மாத்திரமல்ல அவர் அவன் நாசியில் ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான். அவருடைய ஜீவன் மனிதனுக்குள் வந்தது. அவருக்குள் ஆணுக்குரிய தன்மைகளும், குணாதிசயங்களும், பெண்ணுக்குரிய தன்மைகளும், குணாதிசயஙகங்ளும். காணப்பட்டன. தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதனுக்குள் ஆணுக்குரிய குணாதிசயங்களும், பெண்ணுக்குரிய குணாதிசயங்களும் இருந்தன.
தேவன் பூமியின் மண்ணிணாலே மனிதனை உருவாக்கினார் ( ஆதி: 2:7 ) தேவன் சகல மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவித பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கினார் (ஆதி: 2: 19 ) தேவன் ஒன்றை புதிதாக உருவாக்கும்போது அதை மண்ணினால் உண்டாக்கினார். ஏற்கெனவே தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதனுக்குள் பெண்ணுக்குரிய குணாதிசயங்கள் அடங்கியிருந்தது. ஆணுக்குள் சிறைப்பட்ட பெண் என்று சொல்லலாம். ஆதாமின் விலா எலும்பை எடுக்கும் போது ,அவனுக்குள் இருந்த தேவசாயலின் பகுதியான பெண்ணின் தன்மைகளையும் குணாதிசயங்களையும் எடுத்து ஒரு பெண் உருவத்தை உருவாக்கினார். அப்பொழுது ஆதாம் இவள் மனுஷனில் எடுக்கப்பட்டப்படியினால் மனுஷி எனப்படுவாள் என்றான் (ஆதி: 2: 23 ) முழுமையாக மனிதனுக்குள் இருந்த தேவ சாயலின் பாதியை எடுத்து மனுஷியாக உருவாக்கினார். மனுஷி தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவள். மனிதனின் சாயல் அல்ல. மனிதனிலிருந்து எடுக்கப்பட்டவள். ஆகவேதான் ஆண்கள் மட்டும் தனிமையாக இருந்தால் முழுமைப் பெறுவதில்லை. அது போலவே பெண்கள் மட்டும் தனியாக இருந்தாலும் முழுமைப்பெறுவதில்லை. திருப்தி ஏற்படுவதில்லை. தேவன் பெண்ணையும், ஆணையும் தனித்தனியேப் பார்க்கவில்லை. அவர்களை ஒன்றாகவேப் பார்க்கிறார். ஆதாமோடு துணையாக இருப்பதற்காக பெண்ணை உருவாக்கினாலும், உடனே அவர்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்தார்.
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாய் இருப்பார்கள். இருவரும் ஒன்றாக சேரும் போது தான் தேவ சாயலை முழுமையாக பிரதிபலிப்பவர்களாக இருக்கிறார்கள். அநேகர் பெண்களைக் குறித்து சொல்லும்போது, பெண் ஆண்டவரின் எண்ணத்திலேயே இல்லை. ஏதோ ஆதாமுக்கு ஒரு துணை வேண்டுமே என்பதற்காக படைக்கப்பட்டவள் (After thought ) ) என்று நினைக்கிறார்கள். பெண்களும் தன்னைக்குறித்து நினைக்கும் போது தான் இரண்டாம் பட்சமானவள், ஆண்களைவிட மட்டமானவள் , மதிப்பில்லாதவள் என்று நினைத்து தாழ்மை உணர்வோடு இருக்கிறார்கள்.ஆகிலும், கிறிஸ்துவுக்குள் ஸ்திரீ இல்லாமல் புருஷனும் இல்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயும் இல்லை. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றினது போல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான். சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது என்று 1 கொரிந்தியர்: 11: 11,12 வசனங்களில் உள்ளது. ஆகவே, சகோதரியே நீ கர்த்தரின் பார்வையில் இரண்டாம் பட்சமானவள் அல்ல.
சகோதரியே நீ தேவ சாயலில் உருவாக்கப்பட்டவள். உனக்கென்று தேவன் ஒரு நோக்கத்தை வைத்துள்ளார். நீ விலையேறப்பெற்றவள். கிறிஸ்த்துவுக்குள் ஆணெண்றும் இல்லை, பெண் என்றும் இல்லை. (கலாத்தியர் 3: 28) உன்னை அவர் பார்க்கும் போது தன்னுடைய பிரதிபலியாகவேப் பார்க்கிறார். உனக்குள் தேவனுடைய குணாதிசயங்களாகிய அன்பு ( 1 யோவான்: 4: 8, 16 ) இரக்கம் ( லூக்கா: 6: 36 ) பொறுமை. ஆறுதல் அளித்தல் ( ரோமர் 15: 6 ) நீதி ( சங்கீதம் 11: 7 ) சாந்தம் ( மத்தேயு 11: 29 ) பரிசுத்தம் ஆகிய குணங்கள் நிறைந்திருக்கின்றது.
தேவசாயலில் உருவாக்கப்பட்ட உன்னைக் கொண்டுதான் தேவன் தன்னுடைய அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அரவணைத்து ஆறுதல் அளிக்கும் குணம் உள்ள உன்னைக் கொண்டுதான் தேவன் அநேகரை
ஆறுதல்படுத்தப்போகின்றார். உன்னால் தான் அநேகப் பிள்ளைகள் ஆறுதல் அடையப்போகின்றார்கள். தேவசாயலில் படைக்கப்பட்ட நீ தேவ இராஜியம் கட்டுவதில் முக்கியப் பங்குவகிப்பவள். உன்னை சமுதாயம் ஏதாவது சொல்லலாம் உன் கணவர் உன்னை ஏளனமாகப் பார்க்கலாம், உன் வீட்டார் உன்னை அற்பமாக எண்ணலாம், சபையாரும் உன்னை நிந்திக்கலாம். ஆனால், சகோதரியே உன்னுடைய தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுப்பட்டு தேவனின் பார்வையில் நீ யார் என்பதை அறிந்து எழும்பிப் பிரகாசி!
Author: Mrs. Helen Jacob