அதிகாரம் - 11
‘இரண்டு சாட்சிகளும் ஏழாம்(கடைசி) எக்காளமும்’
‘Two witnesses and the seventh (last) trumpet.’
‘ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்;;அப்பொழுது “உலகத்தின் ராஜ்ஜியங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்ஜியங்களாயின”…என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.’(வச 15)
இங்கு உபத்திரவகாலத்தின் இரண்டாவது பகுதியின் (3 ½ வருடம்;) முடிவு உண்டாகிறது. தேவன் தமது இரண்டுசாட்சிகளை முத்திரிக்கப்பட்ட யூதர்களுக்கு புத்திசொல்லி தைரியமூட்டவும் புறஜாதி மக்களையும்கூட அந்திக்கிறிஸ்துவுக்குப் பணியாமல் மெய்த்தேவனையே தொழுது கொள்ளும்படி அழைக்க பிரசங்கிக்கவும் அனுப்புகிறார். அவர்களுடைய ஊழிய நாட்கள் முடிந்தவுடன் அவர்களும் இரத்த சாட்சிகளாக மரித்து தங்கள் தேவனிடம் அழைத்துக் கொள்ளப்படுவார்கள்.
தேவனுடைய ஆலயம் எருசலேமில் கட்டப்பட்டிருக்கிறது, அங்கு தேவனை தொழுதுகொள்ளுகிறவர்களும் காணப்படுகிறார்கள். பின்னர் புறஜாதிகள் பரிசுத்த நகரத்தை தீட்டுப்படுத்துவார்கள். இறுதியாக, ஏழாம் தூதன் எக்காளம் ஊதும்போது அந்திக் கிறிஸ்துவின் ஆட்சி முடிவுக்கு வந்து கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி இந்த பூமியில் துவங்குகிறது.மரித்தவர்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள். பரிசுத்தவான்களுக்கு அவர்களுடைய பலன்கள் கொடுக்கப்படுகிறது. பாவிகள் அழிக்கப்படுகிறார்கள். இந்த நிகழ்வுகளின் தொகுப்பு இந்த அதிகாரத்தில் விவரிக்கப்படவில்லை, ஆனால், பின்வரும் அதிகாரங்களில் விளக்கப்படுகிறது.
வச 11: 1 ஆலயத்தின் உட்புறம் அளக்கப்படுகிறது. ஆலயம் கட்டப்பட்டிருககிறதை இது உறுதி செய்கிறது. தற்போது சாலொமோன் தேவாலயம் இருந்த இடத்தில் ஒரு மசூதி உள்ளது. கடைசி நாட்களில் தேவன் தமது மக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி தேவாலயம் இங்கு மீண்டும் கட்டப்படும்.சகரியா 6: 15. அந்தி கிறிஸ்து இங்கு தேவாலயத்தை கட்டுவதற்காக இஸ்ரவேலருடன் தந்தி உடன்படிக்கை செய்து கொண்டு பின்னர் அதை மீறுவான்.
ஆலயத்தினுள்; தேவனை தொழுதுகொள்ளுகிறவர்களும் அளக்கப்படுகிறார்கள். யூதர்களில் ஒரு பகுதி கர்த்தரை உண்மையாய் தேடி மேசியா இயேசுவையும் ஏற்றுக்கொள்ளுவார்கள். இவர்களே ஆதி 7: 3, 4 இல் முத்திரிக்கப்பட்ட 1,44,000 யூதர்கள் ஆவர்.எசேக்கியேல் அதி 40 இலும் சகரியா 2: 1- 5 இலும் கூட ஆலயம் அளக்கப்படுவதை குறித்து எழுதப்பட்டுள்ளது. கர்த்தருக்கு சொந்தமானது இங்கே அவருக்காக அளந்து கொள்ளப்படுகிறது.
வச 11: 2 - ஆலயத்தின் வெளிப்பறம் அளக்கப்படாமல் விடப்படுகிறது, ஏனென்றால், அதை புறஜாதிகளால் 42 மாதங்கள்(3 ½ வருடம்) மிதிக்கப்படுவதற்கு தேவன் அனுமதித்திருக்கிறார்.அந்தி கிறிஸ்து தனது முதலாம் 3 ½ ஆண்டு ஆட்சியின் இறுதியில் இஸ்ரவேலருடன் சமாதான உடன்படிக்கையை முறித்துக்கொள்வதுமல்லாமல் பரிசுத்த நகரத்தை தீட்டுப்படுத்துவான். தானியேல் 9: 27, மத்தேயு 24: 15, 2 தெச 2: 4.
• புறஜாதியார் பரிசத்த நகரத்திற்குள் சென்று 42 மாதங்கள் (3 ½ வருடங்கள்;) இஸ்ரவேலரை துன்பப்படுத்த தேவன் அனுமதிப்பார்.
• யூதர்கள் தங்கள் தேவனை நோக்கிப்பார்த்து இயேசுவிடம் திரும்பும்படியாக இந்த காரியம் தேவனால் அனுமதிக்கப்பட்டது. சகரியா 12: 10, 14: 2.
வச 11: 3- 6 - இந்த காலங்களில் தேவன் தமது இரண்டு சாட்சிகளை இஸ்ரவேலர் அந்திக் கிறிஸ்துவின் பயமுறுத்துதலுக்கு அடிபணியாமல் கர்த்தருக்காக உறுதியாய் நிற்க உற்சாகப்படுத்தும்படியாக அனுப்புவார். புறஜாதிகளும்கூட மெய்த்தேவனையே அண்டிக்கொள்ளும்படியாக பிரசங்கிப்பார்கள். அவர்கள் 1260 நாட்கள்(3 ½ வருடம்) தீர்க்கதரிசனம் உரைத்து, அந்திக்கிறிஸ்துவுக்கு உண்மையாய் இருக்கும் பூமியின் குடிகளை சகல வாதைகளாலும் வாதித்து வேதனைப்படுத்த அதிகாரம் உள்ளவர்களாயிருப்பார்கள்.
வச 11: 7- 9- இவர்கள் தங்கள் சாட்சிகளையும் தீர்க்கதரிசனங்களையும் உரைத்து முடிக்கும்போது பூமியின் பாதாளத்திலிருந்து ஒரு மிருகம் ஏறிவந்து இவர்களைக் கொன்றுபோடும்..இவ்விதமாக அவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்து தேவனிடம் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
ஆனால், அதற்கு முன்பதாக அவர்களுடைய மரித்த சரீரங்கள் எருசலேமின் வீதியில் 3 ½ நாட்கள் விழுந்து கிடக்கும.எருசலேம் நகரம் சோதோமைப்போலவும் எகிப்தைப்போலவும் பாவம் நிறைந்ததாய் மாறியிருக்கும்;. உலகத்தின் அனைத்து தேசங்களிலுமுள்ள மக்கள் அவர்களுடைய செத்த பிரேதங்களைப்; பார்த்து தங்களை அவர்கள் துன்பப்படுத்தினதினிமித்தம் மிகுந்த சந்தோஷப்படுவார்கள். இது எப்படி சாத்தியமாகும்? அவரவர் தங்கள் தொலைக்காட்சிப்பெட்டி( டி.வி) மூலமாகவோ அல்லது கைபேசி சாதனம் (மொபைல் ஹேண்ட் செட்) மூலமாகவோ பார்க்க முடியும். வேதத்தில் இந்த தீர்க்கதரிசனம் எழுதப்பட்ட நாட்களில் வானொலிப்பெட்டி(ரேடியோ)கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு சாட்சிகள் யார், அவர்கள் தோன்றியதின் பின்னனி சத்தியம் என்ன ?
• இவ்விரண்டு சாட்சிகளும் பழைய ஏற்பாட்டில் தங்கள் ஊழியத்திற்குப்பிறகு தேவனிடம் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டவர்களாகிய ஏனோக்கும் எலியாவுமாவார்கள். ஆதி 5: 24, 2 இராஜா 2: 11.
ஆனால், எபி 9: 27 ஆம் வசனத்தின்படி ஒரேதரம் மரிப்பது மனுஷருக்கு நியமித்திருக்கிறது. ஆகையால் அவர்கள் தங்கள் ஊழியததை நிறைவேற்றி மரிக்க அனுப்பப்பட்டார்கள்.
• இவர்கள் தங்கள் ஊழியத்தின் முடிவில் அந்தி கிறிஸ்துவின் ஆட்சிகாலத்தில் ( வச 7) இரத்த சாட்சிகளாக மரித்து தேவனிடம் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
• இவர்கள் ஆண்டவருக்கு முன்பாக நிற்கும் இரண்டு ஒலிவமரங்களாகவும் இரண்டு விளக்குத் தண்டுகளாகவும் அழைக்கப்படுகிறார்கள்.( வச 4). சகரியா 4 ஆம் அதிகாரத்தில் இதே விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் இந்த இரண்டு சாட்சிகளும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் என்பது தெளிவாகிறது.
வச 11: 11, 12 – பிறகு 3 ½ நாட்களின் முடிவில் இவர்கள் உயிர்த்தெழுந்து தங்கள் கால்களில் நிற்பார்கள். இவர்களுடைய மரணத்தினிமித்தம் சந்தோஷப்பட்ட சத்துருக்கள் இந்த அற்புதத்தைக் கண்டு நடுங்குவார்கள். ஆனாலும் அவர்கள் மனந்திரும்பமாட்டார்கள். சிலரோ நிச்சயமாக மனந்திரும்பி தேவனுக்கு மகிமை செலுத்துவார்கள். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக்கேட்டு இவ்விரண்டு சாட்சிகளும் தேவனிடம் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
வச 11: 13 - இந்த சம்பவம் நடக்கும்போதுதானே தேவனால் அனுப்பப்பட்ட ஒரு பூமியதிர்ச்சி எருசலேம் நகரத்தின் பத்தில் ஒரு பகுதியை குலுங்கச்செய்து அதினால் ஏழாயிரம் பேர் மடிவார்கள். இதைக்கண்டு மீதமுள்ளவர்கள் கர்த்தருக்கு பயந்து, மனந்திரும்பி கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சிக்கு பாதுகாக்கப்பட்டு வைக்கப்படுவார்கள். சகரியா 14: 16 ஆம் வசனத்தில் இதைக்குறித்து எழுதப்பட்டுள்ளது.
வச 11: 14 - இவ்விதமாக இரண்டாம் ஆபத்து கடந்து விட்டது. முதலாம் ஆபத்து ஐந்தாம் எக்காளம் ஊதியபோதே கடந்துவிட்டது.( ஆதி 9: 12)
மூன்றாம் ஆபத்து ஏழாம் (கடைசி) எக்காளம் ஊதப்படும்போது வரும்.
வச 11: 15- 19 – ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்பொழுது பின்வரும் சம்பவங்கள் நிறைவேறின:-
• அந்தி கிறிஸ்துவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
• ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சி இப்பூமியில் துவங்கியது. இதினிமித்தம் இருபத்தி நான்கு மூப்பர்களும் பரலோகத்தில் மிகுந்த ஆச்சரியத்தோடு நன்றியறிதலின் மனப்பான்மையில் முகங்குப்புற விழுந்து தொழுது கொண்டார்கள்.
• தேவனை எதிர்க்கும் தேசங்கள் கோபம் கொண்டார்கள். தேவ கோபம் அவர்கள்மேல் ஊற்றப்பட்டது.பாவிகள் அழிக்கப்பட்டார்கள். பரிசுத்தவான்களுக்கு அவர்களுடைய பலன்கள் கொடுக்கப்பட்டது. மரித்தவர்ள் நியாயம் தீர்க்கப்பட்டார்கள்.
• பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. அங்கே தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி காணப்பட்டது. இதன் ஞானார்த்தமாக அவருடைய உடன்படிக்கையின்படி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்டது.
• அப்பொழுது உண்டான மின்னல்களும்,சத்தங்களும், இடிமுழுக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் மேலே கூறப்பட்ட நிகழ்வுகளை விளக்கும் காட்சிகளும் சகலத்தின் முடிவையும் தெரிவிப்பதாகும்.
• அந்திக் கிறிஸ்துவின் ஆட்சி முடிவும், கிறிஸ்துவின் ஆட்சியின் துவக்கமும் எவ்விதமாக நடந்தேறின என்ற விளக்கத்தின் தரிசனம் யோவானுக்கு இந்த ( 11ஆம்) அதிகாரத்தில் காண்பிக்கப்படவில்லை. அவை பின்வரும் அதிகாரங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
Author: Rev. Dr. R. Samuel
அதிகாரம் 11: இரண்டு சாட்சிகள்
ஆறாம் தூதன் எக்காளம் ஊதினபின், ஏழாம் தூதன் எக்காளம் ஊதுமுன் நடந்த கடைசி நிகழ்ச்சிகளை இந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம். இதுவே விசுவாசிகளுக்கு மிக நல்ல காலம்; இதுவே அவிசுவாசிகளுக்கு மிக மோசமான காலமுமாகும்.
சாத்தான் கட்டப்பட்டு பாதாளத்தில் தள்ளப்பட்டு இயேசுவின் ஆயிரம் வருட ஆட்சி பூமியில் வரப்போவதால் விசுவாசிகளுக்கு இது நல்ல காலம், இயேசு நியாயாதிபதியாக வந்து அவிசுவாசிகளைப் பாதாளத்தில் தள்ளிப்போடுவதால், அவர்களுக்கு இது மிக மோசமான காலம், இதுவே வெளி 10:10ல் யோவான் புசித்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த மதுரமும் கசப்புமான செய்தி,
இந்த அதிகாரத்தில் இரண்டு தேவனுடைய சாட்சிகளைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
வெள்ளத்திற்குமுன் தேவன் ஏனோக்கையும், நோவாவையும் சாட்சிகளாக எழுப்பினார். இஸ்ரவேல் தேவனை விட்டு விலகிபாகாலைவணங்கின இருண்ட காலத்தில் எலியாவையும்,எலிசாவையும் எழுப்பினார். உலகத்தின் நியாயத்தீர்ப்புக்கு முன்னதாக இரண்டு சாட்சிகளை அனுப்பினார். இந்த சாட்சிகள் யாரென்று கூறப்படவில்லை, எபி, 9:27ல் ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவ தும் மனிதருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்றிருப்பதால், மரிக்காமல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எலியாவும், ஏனோக்குமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. (நம்மையும் எச்சரியாமல் தேவன் தீங்கை அனுமதிப்பதில்லை)
வ 1 பின்பு கைக்கோலுக்கு ஒப்பான அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் என்னை நோக்கி நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதிலே தொழுது கொள்ளுகறவர்களையும் அளந்து பார் என்றான். கைக்கோல் என்பது இஸ்ரவேலிலே அளப்பதற்குப் பயன்படுத்துமொன்று. அடி. மீட்டர் போன்ற அளவுகோல், 6 முழ நீளம் (9௮டி), இதை வைத்து எந்த ஆலயத்தை அளப்பது?
இஸ்ரவேலர் வனாந்தரத்திலும், கானானைச் சுதந்தரித்த பின்னும் மோசே உண்டுபண்ணின ஆசரிப்புக்கூடாரத்திலேயே தேவனை ஆராதித்துக் கொண்டிருந்தார்கள். உடன்படிக்கைப் பெட்டியும் கூடாரத்திலேயே இருந்தது, தாவீது கர்த்தருக்கு ஒரு ஆலயம் கட்ட விரும்பினான். கர்த்தர் ஆலயம் கட்ட ஒரு இடத்தைத் தாவீதுக்குக் காட்டினார், அது மோரியா மலையிலுள்ள ஓர்னானின் களம் (2 நாளா. 3:1) சாலமோன் விலையுயர்ந்த கற்களினாலும், பொன்னினாலும்,வெள்ளியினாலும்,கேதுருமரப் பலகைகளினாலும் கட்டினான். ஆலயத்தின் உட்புறம் முழுவதும் பொன்னினால் இழைக்கப்பட்டிருந்தது. மகா பரிசுத்தஸ்தலம் முழுவதும் பசும்பொன்னினால் கட்டப்பட்டது, அதற்குள் உடன்படிக்கைப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஒரு திரையினால் அது மறைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் அதற்குள் போகவும் கூடாது,பார்க்கவும் கூடாது, பிரதான ஆசாரியன் மட்டும் வருடத்திற்கு ஒருமுறை பாவ நிவாரண பலியின் இரத்தத்தோடு போகலாம். இந்த ஆலயம் இருக்கும் வரை தங்களுக்கு ஒரு தீங்கும் வராது; வரமுடியாது என்று இஸ்ரவேலர் நினைத்திருந்தனர். ஆனால் கிமு,587ல் நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலை சிறைபிடித்து பாபிலோனுக்குக் கொண்டுபோகும் பொழுது, சாலமோன் கட்டின தேவாலயத்தைக் கொள்ளையிட்டு, இடித்துத் தரைமட்டமாக்கனான். இது முதல் ஆலயம்,
கோரேஸ் ராஜாவின் ஆட்சிக்காலத்தில், யூதர்கள் தங்கள் தேவனின் ஆலயத்தைத் திரும்பக் கட்டியெழுப்பி ஆராதனை செய்ய செருபாபேலையும் அவனோடு எருசலேமுக்குப் போக விரும்பியவர்களையும் அனுப்பினான். யோசுவா எனும் பிரதான ஆசாரியனும் செருபாபேலுக்கு ஆலயம் கட்டுவதில் உதவி செய்தான். நெகேமியா எருசலேம் நகரத்தின் அலங்கத்தைக் கட்டி, திறப்புகளையெல்லாம் அடைத்தான். முந்தின ஆலயத்தின் மகிமையைக் கண்ட முதியவர்கள், புதிய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்படும் பொழுது, அழுதார்கள். அவர்களின் பார்வைக்கு இது ஒன்றுமில்லாதது போல தோன்றியது. ஆனாலும் தேவன் செருபாபேலின் கையிலிருந்த தூக்குநூலைச் சந்தோஷமாகப் பார்த்தார். இந்த ஆலயத்தைக் கட்டுங்கள்; இதின்மேல் பிரியமாயிருப்பேன் என்றார்,
இந்த ஆலயத்தில் மகாபரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கைப் பெட்டி இல்லை! சாலமோனின் ஆலயத்திலிருந்தது எங்கே போயிற்று?
1. தங்கத்திற்காக நேபுகாத்நேச்சார் அதை உடைத்திருக்கலாம். ஆனால் பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்ட தேவாலயப் பொருட்களில் இது குறிப்பிடப்படவில்லை,
2.எத்தியோப்பியாவின் ஷேபா ராஜஸ்திரி சாலமோனிடத்திற்கு வந்து போனபின்பு, அவளுக்கு மனெக்லின் என்றொரு மகன் பிறந்தான். (அவன் சாலமோனுக்கும், ராஜஸ்திரிக்கும் பிறந்தவன் என்று சொல்லப்படுவதுண்டு.)
அவன் எருசலேம் தேவாலயத்தைப் பார்க்க வந்தான். பார்த்தபின் அவன் சாலமோனிடம் தானும் இந்த தேவனை ஆராதிக்க விரும்புவதாகவும், அதற்குச் சில ஆசாரியரையும் யூதர்களையும் தன்னோடு அனுப்பும்படி கேட்டுக்கொண்டான். அவன் கேட்டுக்கொண்டதை, சாலமோன் அவனுக்கு அருளினான். அப்படிப் போன ஆசாரியர்களில், பிரதான ஆசாரியனாகிய சாதோக்கின் மகனாகிய அசரியாவும் உண்டு. இவர்கள் எத்தியோப்பியாவுக்குப் போனபின், மகா பரிசுத்த ஸ்தலத்திலே, உடன்படிக்கைப்பெட்டியைக் காணவில்லை! சாதோக்கு சாலமோனிடம் சொன்னபோது அவன் அதைக்குறித்து விசாரியாமல் இருந்து விட்டான். எனவே ராஜாவின் அனுமதியோடுதான், எத்தியோப்பியன் அதைக்கொண்டு போய் விட்டான் என்று சாதோக்கும் சும்மா இருந்து விட்டான்.
உடன்படிக்கைப்பெட்டி எத்தியோப்பாவில் இன்றும் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. ஏதோ ஒரு ரகசியக்குகையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும், அதைக் காப்பதே தங்கள் லட்சியம் என்று அர்ப்பணித்த ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்களென்றும், யாராவது ஒருவன் அதைப்பார்க்க விரும்பினால் அவனுக்குக் காண்பித்தபின் அவனைக் கொலை செய்துவிடுவார்கள். 1 சாமு, 6:19ன்படி அதைச் செய்கிறார்கள் என்று நினைக்க ஏதுவுண்டு, இதையும் நம்ப முடியாது. ஒன்று உண்மை, சாலமோனின் ஆலயம் இடிக்கப்பட்ட பொழுது உடன்படிக்கைப்பெட்டி அதில் இல்லை.தேவாலயத்திலிருந்து
நேபுகாத்நேச்சார் கொண்டுபோன பொருட்களின் பட்டியலில்,உடன்படிக்கைப்பெட்டி இல்லை!
ஏரோதின் ஆலயம்
ஏரோது கிமு 38ல், அதாவது இயேசு பிறப்பதற்கு 38 ஆண்டுகளுக்கு முன், செருபாபேல் கட்டின இந்த ஆலயத்தை விரிவுபடுத்தக் கட்டளையிட்டான். அதற்கு தேவையானவைகளைச் சேகரிக்க எட்டு(8) ஆண்டுகள் ஆனது. சாலமோன் ஆலயம் கட்ட ஏழு வருடங்களானது. மிகவும் யோசனைபண்ணி இந்த ஆலயத்தை ஏரோது 46 வருடங்களாகக் கட்டினான். அக்காலத்தில் எருசலேமின் ஜனத்தொகை இரண்டு லட்சம், ஆனால் பண்டிகை நாட்களில், யூத ஆண் மக்கள் வருடத்திற்கு மூன்றுமுறை வருவது கட்டாயமானதால், அந்த நாட்களில் எருசலேமின் ஜனத்தொகை பத்து லட்ச முதல் இருபது லட்சம் வரையிருக்கும், அவர்களுக்கு பலியிடத் தேவையான பலிபீடங்கள், மிருகங்கள், பறவைகள், காசுக்காரரின் அறைகள் (Banks/வங்கிகள் ), உபதேசம் கேட்க விரும்புகிறவர்களுக்கான அறைகள். விருத்தசேதனம் பண்ணும் இடங்கள், உணவு விடுதிகள், குளிக்கும் அறைகள், இந்தத் தண்ணீர் வெளியேற பாதாளச் சாக்கடைகள், இப்படி சகலமும் திட்டமிட்டுக் கட்டப்பட்டது இது மோரியா மலையின் முகப்பொன்றின்மேல் கட்டப்பட்டது. இந்த இடத்தைத்தான் தேவன் ஆபிரகாமுக்கு ஈசாக்கைப் பலியிடக் குறித்தார். அந்த இடத்தில்தான் மகா பரிசுத்த ஸ்தலம் அமைத்திருந்தார்கள்.
இத்தனை அடித்தள ஆதாரங்களும் ஆலயத்தில் கட்டப்படாமல் ஆலய சுற்றுச்சுவரின் மேல் கட்டப்பட்டிருந்தது. இந்த சுற்றுச்சுவர் கட்டப் பயன்படுத்தப்பட்ட கற்களின் சராசரி எடை 10 டன்னாகும், சுவரின் உயரம் 20 மாடிக்கட்டத்தின் உயரமாகும், இதில் விசேஷமென்னவென்றால் ஒரு கல்லோடு ஒரு கல்லை இணைக்க சாந்து பயன்படுத்தப்படவேயில்லை. அத்தனை நுட்பமாக கற்கள் இழைக்கப்பட்டிருந்தன, ஒரு கல்லுக்கும் இன்னொன்றிற்கும் இடையில் ஒரு காகிதத்தைக்கூட நுழைக்க முடியாது! வியத்தகு தொழில்நுட்பம்!
ஆலயம் இன்னும் மகிமையானது. வெள்ளைப்பளிங்கினால் கட்டப்பட்டது, அதன் கும்பம் பொன்னினாலானது. பகலில் பார்த்தால் கண்கூசும்! இதன் உச்சியில் பறவைகள் உட்கார்ந்து எச்சமிட்டு அசிங்கப்படுத்தாதபடி சிறுசிறு தங்கமுட்கள் போன்றவை பதிக்கப்பட்டிருந்தன. ஆராதனை முடிந்தவுடன் மொத்தமாக வரும் கூட்டம் நெரிசலிராதபடி வாசல்கள் அமைக்கப்பட்டிருந்தன
அதன் உப்பரிக்கை கிட்டத்தட்ட 400' உயரம் இதன் உச்சிக்குத்தான் சாத்தான் இயேசுவைக்கொண்டு போய் கீழே குதிக்கச் சொன்னது! சுவிசேஷங்களில் சொல்லப்பட்ட அனைத்தும் இந்த ஆலயத்தில்தான் நடந்தது! இந்தபிரம்மாண்டமான கற்களைத்தான் சீஷர்கள் இயேசுவுக்குக் காட்டினார்கள். இந்த ஆலயம்தான் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி இடிக்கப்பட்டுப்போம் என்று இயேசு சொன்னார். அப்படியே கிபி, 70ல் தீத்து ராயனால் இடிக்கப்பட்டு தரைமட்டமானது. அதிக பொன் கிடைக்கும் என்று மகாபரிசுத்த ஸ்தலத்துள் நுழைந்த போது மிகுந்த ஏமாற்றமடைந்தான் ஏனென்றால் அங்கே உடன்படிக்கைப்பெட்டியும் இல்லை; பொன்னும் இல்லை! ஆலயத்தைத் தீக்கொழுத்தித் தரைமட்டமாக்கி விட்டான். அப்பொழுது ஆலயத்தின் பொன்னிலான கூரை உருதி சுவர்களின் வழியாய் வடிந்தது. அது கற்களின் இணைப்புகளிலும் வடிந்தது, வடிந்த பொன்னை எடுக்க. அத்தனை கற்களையும் ஒன்றின்மேல் ஒன்றிராதபடி இடித்துத் தகர்த்தார்கள், அதன்பின் ஆலயமுமில்லை, ஆசாரியனுமில்லை, ஆராதனையுமில்லை, பண்டிகையுமில்லை, பலி செலுத்துதலுமில்லை. யூதர்கள் சிதறடிக்கப்பட்டனர், இந்தப் பேரழிவிற்குத் தப்பியது மேற்குச்சுற்றுச்சுவரின் ஒரு பகுதியே. இது ஆலயச் சுவரல்ல, சுற்றுச்சுவரே. யூதர்கள் இன்றும் இதை புனிதச்சுவராக நினைத்து இதில் முட்டிமுட்டி அழுது விண்ணப்பம் செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தையா யோவானை அளக்கச்சொன்னார்? "அள" என்ற கட்டளை யோவானுக்குக் கொடுக்கப்பட்ட போது ஆலயம் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதே! எதை அளப்பது? பூமியில் தேவாலயமில்லை. பரலோகத்திலுள்ள ஆலயத்தை (வெளி.11:9) அளந்தானா? எப்போது? அளந்து கண்டதென்ன? இதைப் பரலோகம் சென்றபின்தான் அறிய முடியும், விசுவாசிகள்தான் தேவனின் ஆலயம். வெளி, 7:14ல் ஒருவனும் எண்ணக்கூடாத விசுவாசிகள் பரலோகில் இருக்கிறார்கள். இவர்களையா யோவான் எண்ணினான்?
அப். 17:24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர், வானத்திற்கும், பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை !
1 கொரி. 3:16, 17 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாறென்றும் அறியாதிருக்கிறீர்களா? .... தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.
1 கொரி. 6:19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியுமிருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும் அறியீர்களா? தேவாலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுகிறவர்களையும் அள. எந்த ஆலயத்தை அள என்றார் என்பது தெளிவாக இல்லை, இடிக்கப்பட்ட ஆலயத்தை அளப்பது வீண், அளப்பதென்றால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு அளவோடு ஒப்பிட்டு எத்தனை மடங்கு பெரியது அல்லது சிறியது என்று கண்டறிவதாகும். மனிதர்களை அளக்க எந்த அளவு கொடுக்கப்பட்டுள்ளது? அது தேவனுடைய வார்த்தையே, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து,அதைக் கைக்கொண்டு நடப்பவர்களே பூரண மனிதர்கள்.
வ 2 புறஜாதியார் நகரத்தை நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள். இது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் இரண்டாம் பகுதியான கொடுந்துன்ப காலத்தில் நடக்கும், அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் இரண்டாம் பகுதியான கொடுந்துன்ப காலத்தில் நடக்கும். அந்திக் கிறிஸ்துவின் ஏழு வருட ஆட்சியை மூன்றரை மூன்றரை ஆண்டுகளாக இரண்டாகப் பிரித்து, முதல் பாதியை "துன்பகாலமென்றும்" மற்றதை "கொடுந்துன்பகாலமென்றும்" குறிப்பிடுவார்கள். முதல் பாதியை 1260 நாட்களென்றும், பின்பகுதியை 42 மாதங்களென்றும் அழைப்பார்கள்.
வ 3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய் 1200 நாளளவும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
இந்த அதிகாரத்தில் இரண்டு தேவனுடைய சாட்சிகளைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
வெள்ளத்திற்குமுன் தேவன் ஏனோக்கையும், நோவாவையும் சாட்சிகளாக எழுப்பினார். இஸ்ரவேல் தேவனை விட்டு விலகி பாகாலை வணங்கின இருண்டகாலத்தில் எலியாவையும், எலிசாவையும் எழுப்பினார். உலகத்தின் நியாயத்தீர்ப்புக்கு முன்னதாக இரண்டு சாட்சிகளை அனுப்பினார். இந்த சாட்சிகள் யாரென்று கூறப்படவில்லை. எபி 9:27ல் ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்றிருப்பதால், மரிக்காமல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எலியாவும் ஏனோக்குமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. (நம்மையும் எச்சரியாமல் தேவன் தங்கை அனுமதிப்பதில்லை) பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவ மரங்களும், இரண்டு விளக்குத் தண்டுகளும் இவர்களே. (ச௧. 4:14)
வேதபண்டிதர்களிடையே இந்த இரண்டுபேர் யாரென்பதைக் குறித்து ஒன்றுபட்ட கருத்து கிடையாது., ஏனோக்கு, எலியா, மோசே. இம்மூவரில் இருவர் என்பதில் கருத்து வேற்றுமை கிடையாது. ஒரு சாட்சி, மரிக்காமல் சுழல்காற்றில் ஏறிப் பரலோகம் போன எலியா என்று அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். இரண்டாவது சாட்சி தண்ணீரை இரத்தமாக எகிப்தில் மாற்றிய மோசே என்று அநேகர் நம்புகிறார்கள். ஆனால் மரணத்தைக் காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்ட ஏனோக்கு என்பதே வசனத்தின்படி பொருத்தமானதாக இருக்கும்.
அந்திகிறிஸ்துவின் ஆட்சி ஆரம்பிக்கும் பொழுதே தேவன் தம்முடைய சாட்சிகளை பூமிக்கு அனுப்பி அவனுக்கு விரோதமாக தீக்கதரிசனம் சொல்ல அனுப்புகிறார். சாத்தானும் இரண்டு சாட்சிகளை ஏற்படுத்தியுள்ளான். ஒன்று, அந்திக்கிறிஸ்து: இரண்டாவது கள்ளத்தீரக்கதரிசி. தேவனுடைய சாட்சிகளுக்கு அவர் 1260 நாட்களுக்கு அதாவது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் துவக்க முதல் பாதிவரை, அளித்த வல்லமைகள் என்னவென்றால்:
1. ஒருவன் அவர்களை சேதப்படுத்த நினைத்தாலே, அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும் அவன் அப்படியே கொல்லப்பட வேண்டும்.
2. மழை பெய்யாதபடி வானத்தை அடைக்க அதிகாரமுண்டு.
3. தண்ணீர்களை இரத்தமாக மாற்றும் வல்லமையுண்டு,
4, வேண்டும் போதெல்லாம் பூமியை சகலவித வாதைகளினால் வாதிக்க அதிகாரமுண்டு.
இப்படிக் கண்டித்து தண்டித்து உணர்த்துகிற தீர்க்கதரிசிகளை ஜனங்கள் விரும்புவார்களா? வெறுத்தார்கள்.
வ 7-10 அவர்கள் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றி முடிக்கும் பொழுது பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களை ஜெயித்து அவர்களைக் கொன்று போடும். அது உண்மையிலே மிருகமல்ல, அவ்வளவு கொடிய மனிதனே! இவர்களுடைய உடல்கள் எருசலேம் நகரத்து வீதியிலே மூன்றரை நாட்கள் கடக்கும், முழு உலகமும் அவர்களைப் பார்த்து, சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். எருசலேம் நகர வீதியில் கடப்பவர்களை முழு உலகமும் பார்க்கும் என்பது யோவானுக்கோ, அக்கால மனிதருக்கோ விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று, ஆனால் ஊடகங்களால் சூழப்பட்டிருக்கிற நமக்கும், வரப்போகிற அந்திக் கிறிஸ்துவின் காலத்திலுள்ளவர்களுக்கும் இது சாதாரண விஷயம், 757 இருக்கிறதே! இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் சாட்சி சொல்லி முடித்தவுடன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வல்லமை (வ5) எடுக்கப்பட்டு விட்டபடியால் மிருகத்தால் அவர்களைக்கொல்ல முடிந்தது. தங்களை வாதித்தவர்கள் கொல்லப்பட்டதால் ஜனங்கள் அவர்களைப் பழிவாங்குவதற்காக அவர்களைப் புதைக்க விடாமல் முக்கிய தெருவொன்றில் எறிந்துவிட்டார்கள். இனி தங்களை வாதிப்பாரில்லை என்ற எண்ணத்தால், பண்டிகை கொண்டாடுவது போல, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளைக் கைவிட்டது போலத் தோன்றினாலும், மூன்றரை நாட்களுக்குப்பின்தான் அவர்கள் கைவிடப்படவில்லை என்பது முழு உலகத்திற்கும் தெரிய வந்தது.
வ 11: மூன்றரை நாட்களுக்குப்பின் தேவன் அனுப்பின ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களை வேடிக்கை பார்த்த யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று, இவர்கள் கொல்லப்பட்ட போது ஜனங்கள் சாத்தானின் வல்லமையைப் பெரிதாக நினைத்தார்கள். இவர்கள் உயிரோடு எழுந்த போதோ, தேவனுடைய வல்லமையே பெரிதென்று கண்டு பயந்தார்கள்.
வ 12: இங்கே ஏறி வாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தைக் கேட்டார்கள். தேவன் அனுப்பிய மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள். இவர்களுக்கென்று தேவன் ஒரு திட்டம் வைத்திருந்தது போல நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். அவர்களை வானத்திற்கு அழைத்துப்போக ஒரு மேகம் வந்தது போல, நம்மையும் பரலோகத்திற்கு அழைத்துச்செல்ல இயேசுகிறிஸ்து வருவார். ஆனால் நாம் அதற்குப் பாத்திரவான்களாவதற்கு, அவருடைய சாட்சிகளாய் வாழ வேண்டும் (அப். 1:8).
வ 13: தன் தீர்க்கதரிசிகளை அவமதித்தவர்களைத் தேவன் தண்டியாமல்விடார்
1. அந்நேரத்திலே பூமி அதிர்ந்தது.
2. நகரத்தில் பத்திலொரு பங்கு இடிந்து விழுந்தது.
3. மனுஷரில் ஏழாயிரம் பேர் பூமியதிர்ச்சியினால் அழிக்கப்பட்டார்கள். மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
வ 14: இத்தோடு இரண்டாம் ஆபத்து கடந்து போயிற்று. மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.
வ 15 ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின: அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
அது ஒரு அற்புதமான செய்தி! உலகத்தின் ராஜ்யங்கள் கிறிஸ்துவுக்குரியவைகளாயின, இயேசு கிறிஸ்து சகலத்தின் ஆளுகையையும்தம்முடையகரத்தில் எடுத்துக்கொண்டார் என்பதே இதன் முக்கியத்துவம், அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் மத்தியில், அதாவது கொடுந்துன்பக்காலத்தின் ஆரம்பத்தில் இயேசு ஆளுகையைத் தம் கையில் எடுத்துக்கொண்டார், சகலமும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது; அவரை மிஞ்சி ஒன்றும் நடக்க முடியாதென்பது விசுவாசிகளுக்கு ஆறுதலும் ம௫ழ்ச்சியுமான நற்செய்தி இந்தக் கெம்பீர சத்தம் வானமண்டலத்திலுள்ள வானோரின் பாடலே. தேவன் பூமியிலே சதாகாலமும் ஆளுகைசெய்வார் என்ற செய்தியால் வானவர்கள் ஆர்ப்பரித்து முழங்கின சத்தம் அது.
வ 16-18: இந்தச் செய்தியைக் கேட்ட 24 மூப்பர்களும் தாழவிழுந்து தேவனை ஸ்தோத்தரித்தார்கள். அவர்கள் நடக்கப்போகிற காரியங்களாகிய மரித்தோரின் நியாயத் தீர்ப்பையும், தேவனிடம் பயபக்தியாய் ஜீவித்தவர்களுக்கு பலனளிப்பதையும், பூமியைக் கெடுத்தவர்கள் கெடுக்கப்படப் போவதையும் சொல்லி தேவனைத் தொழுது கொண்டார்கள். காலாகாலமாய்ப் பழைய ஏற்பாட்டுப் பக்தர்களும், சர்வ சிருஷ்டியும் வருமென்று ஏங்கிக்கொண்டிருந்த தேவனுடைய ஆளுகையின் நாள் வந்தபடியினால் கெம்பீர சத்தத்தோடு ஆர்ப்பரித்தார்கள்.
அவர்கள் துதித்ததற்கான சில காரணங்கள்:
1. தேவனுடைய வல்லமை வெளிப்பட்டது
2. தேவனுடைய திட்டம் நிறைவேறின படியினால்
3. தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறினதினால்
4. துன்மார்க்கருக்குத் தேவன் நீதியான தண்டனை வழங்கப் போவதால்
வ 19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும். பூமியதிர்ச்சியும், கல்மழையும் உண்டாயின.
பரலோகத்தில் தேவனுடைய ஆலயம்:
இது பல கேள்விகளை எழுப்புகிறது. சீனாய் மலையில் தேவன் மோசேக்கு ஆசரிப்புக்கூடார மாதிரியைக் காட்டினாரே, அது பரலோக ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியா? பரலோகத்தில் ஆசரிப்புக்கூடாரமோ, ஆலயமோ கட்டப்படவேயில்லை. தேவனே பரலோகத்திற்கு ஆலயம், பிதாவானவர் மகாபரிசுத்த ஸ்தலத்திற்கும், ஆவியானவர் ஆசாரியர் மட்டும் போகும் பரிசுத்த ஸ்தலத்திற்கும், இயேசு ஜனங்கள் ஆராதிக்கும் பிரகாரத்திற்கும் ஒப்பாயிருக்கிறார்கள். தேவன் மோசேயிடம் இந்த சாயலாகத்தான் ஆசரிப்புக்கூடாரத்தை உண்டுபண்ணச் சொன்னார். பூமியிலுள்ள தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலமும், மகாபரிசுத்த ஸ்தலமும் மறைக்கப்பட்டிருந்தன. ஆனால் பரலோகத்தில் அது திறக்கப்பட்டேயிருந்தது. அர்த்தம் என்னவென்றால், பிதாவை ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்கிற ஒவ்வொருவருக்கும் பிதாவின் சமூகம் எப்பொழுதும் திறந்தேயிருக்கும், கிட்டிச்சேர தடையேயில்லை! இயேசுவின் சிலுவை மரணத்தினால் திரை இழிந்து நாம் தைரியமாய்க் கிருபாசனத்தைக் இட்டிச்சேரும் சிலாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது!
தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. இந்த தேவாலயத்தைக் குறித்து வெளிப்படுத்தலில் சொல்லப்பட்ட சில வசனங்களைப் பார்ப்பது பிரயோஜனமானது. இயேசுவே வாசல். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரானென்றார். எபி, 10:19-20ல் நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது
வெளி. 14: 15, 17 தூதர்கள் தேவாலயத்திலிருந்து வந்தார்கள், ஒரு தூதன் கையில் அரிவாளிருந்தது என்றால் பரலோக ஆலயத்தில் ஆயுதசாலை இருந்ததா? இல்லவேயில்லை. நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறதென்பதின் அடையாளமேயன்றி வேறில்லை.
வெளி. 15:5-8 ஏழு தூதர்களும், ஏழு கோபாக்கினையின் கலசங்களும் தேவன் நீதியான தீர்ப்பு செய்கிறவர் என்பதற்கு அடையாளமாக தேவதூதர்கள் தேவ சமூகத்தினின்று (அவர் சமூகமே ஆலயம்) புறப்பட்டனர். வெளி, 16:1 நியாயத் தீர்ப்பைத் துவக்க ஆலயத்திலிருந்து கட்டளை பிறந்தது. உடன்படிக்கைப் பெட்டிக் காணப்பட்டது. இது தேவன் உண்மையுள்ளவர் என்பதையே காட்டும்,
16:17 பரலோகத்திலுள்ள ஆலயத்திலுள்ள சிங்காசனம் எந்த ஆலயத்திலும் சிங்காசனம் இருந்ததே கிடையாது. அப்படியென்றால் இது எப்படிப்பட்ட ஆலயம்? கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமானவர் இருக்கும் இடமே தேவனுடைய ஆலயம்.
வெளி. 21:22 இதைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் கூறுகிறது. அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும், ஆட்டுக்குட்டியானவருமே “அதற்கு ஆலயம்” தேவ பிரசன்னத்தை நாம் உணர முடியும். ஆனால் பார்க்க முடியாது. அதுபோலவே, பரலோக ஆலயம் நாம் கண்ணால் காணக்கூடிய ஒன்றல்ல. ஆவியிலே உணர்ந்து களிகூறுகிற ஒன்று, தேவன் இருக்கும் இடமே தேவாலயம், உடன்படிக்கைப்பெட்டி தேவன் தாம் சொந்த உடன்படிக்கையில் உண்மையுள்ளவர் என்பதை காட்டுகிறது.
வெளிப்படுத்தின விசேஷத்தில் சில முக்கியமான காரியங்கள் நடக்கும் பொழுது இடிமுழக்கம் உண்டானதாக வாசிக்கிறோம். அப்படிப்பட்ட எழு(7) சந்தர்ப்பங்களைப் பார்க்கலாம்.
1. 4:5 யோவானை தேவன் பரலோகத்துக்கு ஏறிவரச் சொன்னார். அங்கு அவன் கண்ட முதல் காட்சி சிங்காசனத்தில் வீற்றிருந்த தேவனைக் கண்டதுவே, அந்த சிங்காசனத்தினின்று இடிமுழக்கங்களும், சத்தங்களும் புறப்பட்டன. யாத், 20:18ல் இடிமுழக்கம் தேவனுடைய வல்லமையையும்,மகிமையையும் காட்டுகிறதாயிருந்தது, இங்கும் யோவான் அதே வல்லமையையும், மகிமையையும் கண்டான்.
2. 6:1 ஆட்டுக்குட்டியானவர் ஒரு முத்திரையை உடைக்கும் போது நான்கு ஜீவன்களில் யோவானை வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொன்னான். இது புத்தகத்தை வாங்கவும், முத்திரைகளை உடைக்கவும் பாத்திரரான ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தைத் திறந்து இறுதிக்கால சம்பவங்களை வெளிப்படுத்துகிறார் என்ற சந்தோஷ முழக்கம்.
3. 8:5 தூதன் பலிபீடத்து நெருப்பை பூமியிலே கொட்டினான். உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின, இது முத்திரைகளின் நியாயத் தீர்ப்பு முடிந்து ஏழு எக்காளத் தீர்ப்பு ஆரம்பிக்கப் போவதை அறிவிக்கும் முழக்கம்,
4. 10:3,4 பலமுள்ள தூதன் மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான். அப்பொழுது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரை போடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், இந்த தூதன் கிறிஸ்துவே. ஏழு இடிமுழக்கங்களும் அவர் யோவானுக்கு பூரணமாய் வெளிப்படுத்தினவை., அவை வெறும் சத்தமல்ல, “சொன்னவை” என்றிருப்பதால் அது யோவானுக்கு. சொல்லப்பட்ட ரகசியங்கள், தானி, 12:4ல் சொல்லப்பட்டு முத்திரை போடப்பட்டவையாக இருக்கலாம். அதை வெளியே சொல்வதற்கான காலம் இன்னும் வராததால் 'முத்திரைபோடு” என்ற கட்டளை பிறந்திருக்கலாம். அப்,1:6,7ஐ வாசித்துப் பாருங்கள், சீஷர்கள் “இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்” என்று கேட்டதற்கு “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும், வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல” என்றார். எனவே இடிகள் சொன்னவைகள் முத்திரையிடப்பட்டன.
5, 11:19 தேவாலயம் திறக்கப்பட்ட பொழுது இடிமுழக்கங்களும் உண்டாயின. மனிதருக்கும், தேவனுக்கும் இடையில் இருந்த தடைகள் நீங்கினால் உண்டான மகிழ்ச்சி ஆரவாரமே இந்த இடிமுழக்கம்,
6. 14:2 ஆட்டுக்குட்டியானவர் 1,44,000 பேரோடு சீயோன் மலைமேல் நிற்கும்போது இடிமுழக்கம் உண்டானது. இவர்கள் ஒருவரும் அறியாத, பாடக்கூடாத பாட்டைப்பாடினபோது அது இடிமுழக்க தொனியாய் ஒலித்தது.
7. 19:6 ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் வந்தது என்ற சந்தோஷ செய்தி இடிமுழக்கம் போன்ற சத்தத்தோடு அறிவிக்கப்பட்டது.
Author: Rev. S.C. Edison