முக்கியக் கருத்து
- தேவனுடைய நகரமாகிய சீயோனின் விசேஷம்.
- பல ஜாதியாரும் சேர்ந்த ஒரு தேவஜனம் உருவாகும்.
1. தேவன் தெரிந்துகொண்ட சீயோனின் விசேஷம் (வச.1-3)
சீயோன் என்ற தேவனுடைய நகரத்தில் அவர் அஸ்திபாரம் கட்டியிருக்கிறார். தேவன் கட்டப்போகும் தேவனுடைய ராஜ்ஜியத்தின் தலைநகரமாக எழுத்தின்படியான சீயோன் நகரம் கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியில் இருக்கும். அதேபோல, பரலோக ராஜ்ஜியமாகிய நித்திய ராஜ்ஜியத்தில் ஆவிக்குரிய சீயோன் நகரமாகிய விசுவாசிகள், கிறிஸ்துவின் திருச்சபையாகிய மணவாட்டி தலைநகரமாகவும், அஸ்திபாரமாகவும் திகழும். அப்பொழுது இந்த சீயோன் நகரை குறித்து விசேஷமாக பேசப்படும். ஏசாயா 28:16, 1 பேதுரு 2:4-6
2. பல தேசத்தாரும் இணைந்த புதிய சீயோன் (வச.4-6)
பல தேசத்தைச் சேர்ந்தவர்களும் இயேசு யோவான் 3:3,5-7 வசனங்களில் சொன்ன மறுபடியும் பிறக்கும் அனுபவத்தின் மூலம் இரட்சிக்கப்பட்ட ஜனமாக மாறி ஆவிக்குரிய சீயோன் என்ற புதிய சீயோன் நகரமாக உருவாகி, பரலோகத்தில் வந்து
சேரும்போது "... இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்;...' (வச.5). இவ்விதமாக மறுபடியும் பிறந்தவர்கள் கர்த்தருடைய ஜீவபுத்தகத்தில் பேரெழுதப்பட்டவர்களாக இருப்பார்கள். இதைக்குறித்து தான் வெளிப்படுத்தல் 20:15, வெளிப்படுதல் 21:27 வசனங்களில் வாசிக்கிறோம். இப்படி பல தேசத்தார், பாஷைக்காரர்கள். தேவன் வாசம்செய்யும் பரிசுத்த ஜனமாக இணைந்து உருவாகி நித்திய நித்தியமாக வாழப்போவதை புதிய எருசலேம் அல்லது புதிய சீயோன் என்று உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்த சத்தியம் எபிரெயர் 12:22-24 இலும் வெளி.7:9 வசனங்களிலும் விளக்கப்பட்டுள்ளதை வாசித்துத் தெரிந்துகொள்ளலாம்.
3. ஜீவத்தண்ணீரின் ஊற்று (வச.7)
இவ்விதமாக இரட்சிக்கப்பட்ட புதிய ஜாதியாகிய தேவ மக்களிடமிருந்து தேவனின் ஜீவத்தண்ணீராகிய ஊற்றுப் புறப்படும் என்றும்,அதைக் குறித்து மிகுந்த சந்தோஷம் பரலோகத்தில் உண்டாகும் என்றும் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நித்திய ஜீவன் தரும் தண்ணீரின் ஊற்றாகிய பரிசுத்த ஆற்றைக்குறித்து வேதத்தில் பல வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை வாசித்து நாம் மகிழ்ச்சியடையலாம். எசேக்கியேல் 47, யோவான் 7:38,39, வெளி.22:1,2.
Author: Rev. Dr. R. Samuel