முக்கியக் கருத்து
- தேவ ஜனத்தை அழிக்க எழும்பும் உலக நாடுகள்.
- யெகோவா தேவனின் வல்லமை.
- தேவ ஜனத்தைப் பாதுகாத்து சத்துருக்களை அழிக்க தேவ ஜனத்தின் ஜெபம்.
1. ஆபத்தும் அவசர உதவியும் (வச.1,2)
தேவ ஜனத்திற்கு பகைஞர் மூலம் மிகத் துரிதமாக வர இருக்கும் பேராபத்திற்கு தேவன் உதவி செய்ய வேண்டியதின் அவசரம் ஆசாபின் ஜெப தொனியில் ஒலிக்கிறது.
"தேவனே, மவுனமாயிராதேயும், ... சும்மாயிராதேயும். ... பகைஞர் தலையெடுக்கிறார்கள்' (1,2) என்ற ஓலம் ஆபத்தின் கடுமையை காட்டுகிறது.
2. 10 ஜாதிகளடங்கிய சத்துருக்களின் கூட்டம் (வச.3-8)
தேவ மக்களாகிய இஸ்ரவேலருக்கு விரோதமாக பத்து ஜாதிகளின் கூட்டமாகிய தேசங்கள் எழும்பி இஸ்ரவேலை பெயரில்லாமல் செய்து அழித்துவிட பல தந்திரமான ஆலோசனைகளை செய்துவருகிறார்கள் என்று தேவ ஊழியனாகிய ஆசாப் தனது தேவனுக்கு அறிவிக்கிறான்.
ஏசாவின் சந்ததியாகிய ஏதோம், லோத்தின் குமாரத்திகள் மூலம் முறைகேடாக உருவான மோவாப், அம்மோனியர், இஸ்மவேலின் சந்ததி, அசீரியர், அமெலேக்கியர், பெலிஸ்தியர் மற்றும் பல ஜாதிகள் மொத்தம் பத்து ஜாதிகள் இஸ்ரவேலரை முற்றிலும் அழித்துவிட எழும்பியதை இராஜாக்களின் புத்தகங்களின் 2 நாளாகமம் 20:1 வசனத்திலும் எரேமியா 1:19 வசனத்தில் எரேமியா தீர்க்கதரிசி மூலம் கூறப்படுவதையும் வாசித்துத் தெரிந்துகொள்ளுகிறோம்.
இன்றைக்கும் கூட இஸ்ரவேல் தேசத்தை உலக வரை படத்திலிருந்து அழித்து விடுவோம் என்று பல அரபு நாடுகளும், மற்றும் பல தேசங்களும் கூடி எழும்புவதை நாம் செய்திகளில் வாசித்துத் தெரிந்துகொள்ளுகிறோம். அதேபோல, ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும், திருச்சபைக்கும் விரோதமாக பல அதிகாரங்கள், தேசங்கள், மதவாத சக்திகள் எழும்பி தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை இங்கு விவரிக்க அவசியமில்லாமலேயே நமக்குத் தெரியும். கடைசி நாட்களில், உலக முடிவின் கடைசி யுத்தத்தில் ஆட்டுக்குட்டியானவருக்கு விரோதமாக பிசாசு உலக தேசங்களை யுத்தத்திற்குக் கூட்டுவான், யுத்தம் செய்வான் என்பதை வெளிப்படுத்தல் 13:1,5-10; 19:19-21, 20:7-10 வசனங்களிலும் வாசித்துத் தெரிந்துகொள்ளுகிறோம்.
ஆனாலும், பிசாசின் எல்லா தந்திர ஆலோசனைகளையும் கர்த்தர் தமது பரிசுதத்தவான்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார். 2 கொரிந்தியர் 2:11.
3. இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த வெற்றிகளின் நினைவுகூறுதல் (வச.9-11)
இஸ்ரவேலருக்கு விரோதமாக எழும்பின ஜாதிகளை, சத்துருக்களை கர்த்தர் தோல்வியடையச் செய்திருக்கிறார்.
நியாயாதிபதிகள் 4,7,8 அதிகாரங்களில் உள்ள வெற்றியை இங்கே ஆசாப் குறிப்பிடுகிறான்.
இன்றைக்கும் கூட இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக அண்டை அரபு தேசங்களெல்லாம் யுத்தம் செய்தும்கூட தோல்வியையே சந்திக்கிறார்கள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களினிமித்தம் தமது ஜனத்திற்குத் தேவன் இன்றைக்கும் தேசங்கள் மேல் பெலனையும் வெற்றியையும் கொடுத்து வருகிறார்.
ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய கிறிஸ்தவ விசுவாசிகளாகிய நமக்கும் திருச்சபைக்கும் கர்த்தர் தொடர்ந்து வெற்றியைக் கொடுப்பார். ஆபிரகாமின் ஆசீர்வாதம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் புறஜாதிகளிலிருந்து இரட்சிக்கப்பட்ட நமக்கும் கர்த்தர் உரிமையாக்கியிருக்கிறார் என்று கலாத்தியர் 3:14 வசனங்களில் தெரிந்துகொள்ளுகிறோம்.
4. தேவ ஜனத்தின் ஜெபத்தின் அத்தியாவசியம் (வச.12-18)
தேவனுடைய வாசஸ்தலத்தை தான் சுதந்தரமாக்கிக் கொள்வேன் என்று சத்துருக்கள் எழும்பி வருகிற சூழ்நிலையில், சத்துருக்களின் செயல்களைக் கர்த்தர் நிர்மூலமாக்கி தேவ ஜனத்திற்கு வெற்றியைக் கொடுக்க ஆசாப் ஜெபிப்பதுபோல திருச்சபை ஜெபிக்க வேண்டியது அதன் தலையாய கடமை. வெற்றி கொடுப்பேன் என்று கர்த்தர் வாக்குக்கொடுத்திருக்கிறார். புழுதிக்கும் துரும்புக்கும் சமமாக பறக்கடிக்கப்படுவார்கள் என்று ஏசாயா 17:13,14 கூறப்பட்டதை வைத்து (வச.13) இல் ஆசாப் ஜெபிக்கிறான். விசுவாசிகளுடைய நமது ஜெபத்திற்கு பதில், விசுவாசம் மூலம் உலகத்தை ஜெயிப்போம் என்று வேத வசனம்வாக்குக்கொடுக்கிறது. 2 கொரிந்தியர் 10:3,4, 1 யோவான் 5:4.
"யெகோவா' என்னும் நாமத்தால் தம்மை யாத்திராகமம் 6:2,3 இல் மோசேக்கு அறிமுகப்படுத்திய தேவன் சர்வ வல்லமையுள்ளவர். அவர் ஒருவரே பூமியனைத்தையும் ஆள்வார். பிசாசு அழிக்கப்பட்டு போவான்.
வெளி.19:20,21; வெளி.20:9,10; வெளி.21:3.
Author: Rev. Dr. R. Samuel