முக்கியக் கருத்து
- தேவனுடைய பாதுகாப்பு தேவபிள்çáகளுக்கு எப்போதும் உண்டு.
- இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தீர்க்கதரிசனங்கள்.
(கோராகின் புத்திரர் பாட்டு)
வச.1 - தேவ மக்களுக்கு தேவன் அடைக்கலமாகவும் பெலனாகவும் இருப்பது ஒரு பெரிய பாதுகாப்பின் தைரியத்தைக் கொடுக்கிறது. பாதுகாப்பு ஒருவனுக்கு எப்போது தேவைப்படுகிறது என்றால், அவன் ஆபத்தில் இருக்கும்போது மிக முக்கியமாகவும் மிக சீக்கிரமாகவும் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பாதுகாப்பை தேவன் தமது ஜனத்திற்குக் கொடுக்கிறார்.
"... பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்'
என்று ஏசாயா 26:1,4 வசனங்களில் வாசிக்கிறோம்.
இந்த சங்கீதம் எழுதப்பட்ட சூழ்நிலையை 2 இராஜாக்கள் 18:13 வசனங்களிலும் 19:16,32,33 வசனங்களிலும் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம்.
யூதா தேசத்தை எசேக்கியா என்ற இராஜா அரசாண்ட காலத்தில், செனகெரிப் என்ற அசீரியா இராஜா படையெடுத்து வந்து அவைகளைப் பிடித்து முற்றிலும் தனக்குக் கீழ்கொண்டு வர முயற்சித்தபோது, எசேக்கியா இராஜா தேவனிடம் பாதுகாப்புக் காகவும், விடுதலைக்காகவும் ஊக்கமாக ஜெபித்தான்.
கர்த்தருடைய வார்த்தை ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் எசேக்கியாவுக்கு (2 இராஜா. 19:32,34) ஆம் வசனத்தில்
உரைக்கப்பட்டது.
"... செனகெரிப் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை ... நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார்' .
வச.2,3 - ஆகவே எந்த சூழ்நிலையிலும் தேவஜனங்களாகிய நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. பூமியதிர்ச்சியோ, வெள்ளமோ, துன்மார்க்கரால் வரும் பொல்லாப்புகளோ எதற்கும் நாம் பயப்படாமல் தேவனை நோக்கி ஜெபித்தால் நமக்கு முழு பாதுகாப்பை அளித்து அவர் நம்மை காத்துக்கொள்வார்.
கோராகின் புத்திரரின் அனுபவம் - எண்ணாகமம் 26:9-11 ஆம் வசனங்களில் பார்க்கலாம்.தங்களின் அனுபவத்தின் பின்னணியில் இந்த சங்கீத வாக்கியங்களை பாடியிருக்கிறார்கள்.
வச.4,5 - தேவனுடைய நகரமாக விவரிக்கப்படும் தேவமக்கள் மத்தியில் தேவன் இருப்பதால் நாம் அசைக்கப்படுவதில்லை.
மூன்று காலங்களுக்கேற்ற விளக்கங்கள் இந்த வசனங்களுக்கு நாம் கொடுக்கலாம்.
1). தற்காலத்தில் - பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசமாயிருக்கிறார் - 1 கொரி.6:19.
2). அடுத்து வரப்போகும் இயேசு கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி காலத்தில், தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியிலிருந்து ஒரு நதி புறப்பட்டு ஓடும் - எசேக்கியேல் 47:1
3). பரலோக இராஜ்ஜியத்தில் - தேவனுடைய சிங்காசனத்திலிருந்து ஜீவ தண்ணீரின் நதி புறப்பட்டு வரும் - வெளி.22:1.
இவையெல்லாமே பரிசுத்த ஆவியானவர் அருளும் பாதுகாப்பையும், பராமரிப்பையும் விளக்குகிறது.
வச.6,11 - கடைசி கால நிகழ்ச்சிகளையும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான தீர்க்கதரிசன வார்த்தைகளும் எழுதப்பட்டிருக்கிறது. கடைசி நாட்களில் உலக மக்கள் மிகுந்த பாவச் செயல்களில் ஈடுபட்டு தேவனுடைய வார்த்தைகளையும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியையும் நிராகரிப்பதால் தேவ கோபம் பல தேசங்களில் ஊற்றப்பட்டு பூமியிலே பாழ்க்கடிப்புகள் நடந்தேறும் என்று வெளிப்படுத்தல் புத்தகத்தில் வாசிக்கிறோம். இவற்றை இன்றைக்கு கண்கூடாகவும் உலகத்தில் பார்க்கிறோம்.
ஆனால், இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக வந்து எல்லா யுத்தங்களையும், பாழ்க்கடிப்புகளையும் நிறுத்தி ஓயப்பண்ணி, அவரே நித்திய இராஜாவாக உயர்ந்து ஆளுகை செய்வார்.
"... இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; ... அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது' (தானியேல் 7:13,14).
"இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, ... உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்' (வெளி.11:17).
ஆகவே, தேவ மக்கள் எந்த சூழ்நிலைக்கும் பயப்படாமல் அவரை உறுதியாய் பிடித்துக்கொண்டு, அவர் உயர்ந்து நம்மையும் உயர்த்த ஆயத்தப்படுவோம்!
Author: Rev. Dr. R. Samuel