முக்கியக் கருத்து
- நான் தேவனை துதிப்பேன்.
- மண்ணுக்குத் திரும்பும் மேன்மையான மனிதன் மேல் வைக்கும் நம்பிக்கை வீண்.
- சதாகாலங்களிலும் அரசாளும் கர்த்தர் மேல் வைக்கும் நம்பிக்கை பாக்கியமானது.
வச.1,2 - நான் கர்த்தரைத் துதிப்பேன்
நான் உயிரோடிக்கும் வரைக்கும் கர்த்தரைத் துதிப்பேன் என்று சங்கீதக்காரன் கூறுகிறான். மாம்சமான யாவும் கர்த்தரைத் துதித்தாலும்கூட, என்னுடைய பொறுப்பும் வாஞ்சையும் நான் உள்ளளவும் அவரைத் துதிக்கவேண்டும் என்று துதியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறான். அல்லேலூயா என்ற 'கர்த்தரைத் துதி ' என்னும் பொருள்படும் வார்த்தை இந்த சங்கீதம் முதலிருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு ஆராதனையிலும் கர்த்தருக்கு துதி செலுத்தப்படவேண்டியது அவசியம். கர்த்தர் ஏன் துதிக்குப் பாத்திரர் என்பதும் பின்வரும் வசனங்களில் விளக்கப்பட்டுள்ளது. வச.3,4 - மேன்மையான மனிதனும் நம்பத்தகுந்தவனல்ல பிரபுக்களும், ராஜாக்களும், உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவர்களும்கூட ஒருநாள் மடிந்து மண்ணுக்குத் திரும்புவார்கள். அவர்கள் மனம் மாறக் கூடியவர்கள். இந்த உலகில் எந்த பெலமுள்ள மனிதனும் நிரந்தரமற்றவனே. ஆகவே, அப்படிப்பட்ட மனிதன் மேல் நம்பிக்கை வைப்பது வீண். ஆதி.3:19; பிரசங்கி 3:19.
வச.5, 6 - யாக்கோபின் தேவன் நம்பத்தகுந்தவர்
நிலையற்ற மனிதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, யாக்கோபின் தேவன் வானத்தையும் பூமியையும் சர்வ சிருஷ்டியையும் படைத்தவரானதால் அவரே நம்பத்தகுந்தவர். யாக்கோபின் தேவன் என்று அழைப்பதன் முக்கியத்துவம் என்னவென்றால் யாக்கோபு வெறும் கோலும் தடியுமாக தேவனை மாத்திரம் நம்பி தனது பிரயாணத்தை மேற்கொண்டபோது அவனை வழியிலே சந்தித்து, வாக்குத்தத்தம் கொடுத்து ஆசீர்வதித்தார். அவன் சென்ற இடத்தில் அவனை மிகவும் பலுகிப் பெருகச் செய்து இரண்டுக்கும் மேலான பரிவாரங்களோடும் திரளான ஆடு, மாடுகள் பொருட்களோடும் தனது தகப்பன் தேசத்திற்கு திரும்பச் செய்தார். இப்படி தனது உண்மையைக் காத்துக்கொண்ட தேவன் நமக்கும் நம்பத்தகுந்தவர். ஆதி.32:9,10,12.
சரணம்
1. ஆதரையில் ஆதரவோ
ஆண்டவர் மாத்திரமே நமக்கு
யாக்கோவின் தேவனை துணையாகக் கொண்டோம்
பாக்கியவான்களாய் வாழ்ந்திவோம் - கர்த்தரின்
பல்லவி
கர்த்தரின் நாள் இது இதிலே நாம் மகிழுவோம்
கர்த்தரின் நாமத்தை கீர்த்தனம்பண்ணுவோம்
கர்த்தரை பணிந்து நாம் ஆராதிப்போம்
அனுபல்லவி
பரிசுத்த ஆவிக்குள் பெலமடைந்திடுவோம்
பரிசுத்த ஆவியில் களிகூர்ந்திடுவோம் - கர்த்தரின்
- பாடல் சகோதரி சாராள் நவரோஜி
வச.7-9 - மகா இரக்கமுள்ள தேவன்
இந்த யாக்கோபின் தேவன் என்றழைக்கப்படுகிறவர் பசியுள்ளவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறார். ஒடுக்கப்படுகிறவர்களுக்கு நியாயஞ்செய்கிறார். குருடர்களுக்கு பார்வையளித்து, மடங்கடிக்கப்பட்டவர்களை தூக்கிவிடுகிறார். திக்கற்ற பிள்ளைகளையும் பரதேசிகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார். அதே நேரத்தில் துன்மார்க்கமாகவே ஜீவிக்க விரும்புகிறவர்களின் வழியை கவிழ்த்துப்போட்டு நீதியாய் ஜீவிக்க விரும்புகிறவர்களை சிநேகிக்கிறார்.
1 பேதுரு 3:12; உபாகமம் 10:17,18; எரேமியா 20:13; லூக்கா 4:17-21.
வச.10 - ஆதரவும் நம்பிக்கையுமான வார்த்தை
இந்த தேவன் சதாகாலங்களிலும் அரசாளுகிறவர். ஆகவே இவர் மேல் நம்பிக்கை வைத்தால் அது வீண் போகாது. நிலைத்து நிற்கும். சீயோனாகிய தேவ ஜனத்திற்கு இது மிகுந்த ஆதரவையும் நம்பிக்கையையும் தரும் வார்த்தைகளாகும். மீகா 4:7,8; வெளி.11:15.
Author: Rev. Dr. R. Samuel