முக்கியக் கருத்து
- உலகம் மற்றும் பாவம் இவற்றிற்கு எதிர்த்துப்போரிடும்படி கன்மலையைப் போன்ற மாறாத பெலனுள்ள கர்ததர் நம்மை யுத்தத்திற்கு பழக்குவிக்கிறார்.
- கர்த்தரை நம்பி ஜெயத்தையும் செழிப்பையும் பல சீர்களையும் பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது.
வச.1-4 - யுத்தத்திற்கு பழக்குவிக்கும் கர்த்தர்
தாவீது, இஸ்ரவேலின் சத்துருக்களோடு போரிட்டு ஜெயம்பெற கர்த்தரால் அழைக்கப்பட்டு அவராலேயே யுத்தத்திற்கு பழக்குவிக்கப்பட்டதுபோல, விசுவாசிகளாகிய நாமும் உலகம், பாவம் இவற்றிற்கு எதிராக போரிட்டு சாத்தானுடைய கோட்டைகளை இடித்துத் தள்ளி மக்களை கிறிஸ்துவின் இரட்சிப்புக்குள் நடத்துவதன்மூலம் தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படுவதற்காக ஆவிக்குரிய யுத்தத்திற்கு கர்த்தர் நம்மை பழக்குவிக்கிறார் (1-2). 1 சாமு.17:45,46; 2 சாமு.22:35; எபேசியர் 6:10-18. நம்மை யுத்தத்திற்கு பழக்குவிக்கிற தேவன் கன்மலையைப்போன்று பெலனும், மாறாத தன்மையுமுள்ளவர். ஆனால், மனிதனோ மாயைக்கு ஒப்பான, மாறிப்போகும் பெலவீனமுள்ளவன். மனுப்புத்திரனை கர்த்தர் எண்ணிப்பார்க்கவும்கூடாத அளவிற்கு மிகச் சிறியவனாயிருக்கிறான் (3-4). ஆகவே, மனிதன் தனக்குத்தானே வெற்றியை தேடிக்கொள்ள முடியாது.பிலிப்.4:13.
வச.5-11 - கள்ளத்தனமான மனிதனுக்கு தப்புவிக்கிற கர்த்தருக்கு கீர்த்தனம்
மாயை பேசும் வாய், கள்ளத்தனம் செய்யும் கை உடைய உலக மக்களுக்கு கர்த்தர் தமது பராக்கிரமத்தை உபயோகப்படுத்தி தப்புவிக்க தாவீது ஜெபிக்கிறான். விசுவாசிகளாகிய நாமும்கூட பொய்யும் அநியாயமும் நிறைந்த பாவ ஜீவியத்தில் வாழும் உலக மக்கள் நம்மை கெடுக்காதபடி கர்த்தர் தமது வல்லமையுள்ள பரிசுத்த ஆவியினால் காத்துக் கொண்டு வழிநடத்துபடி எப்பொழுதும் ஜெபிக்கவேண்டும். நம் ஆண்டவராகிய இயேசுவும இதற்காக நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். உபா.5:15; 7:1,4,5; 2 தீமோத்.2:22,23; யோவான் 16:7-11.
வச.12-15 - இவ்வித சீரைப்பெற்ற பாக்கியமுள்ள ஜனம்
கர்த்தரால் யுத்தத்திற்கு பழக்குவிக்கப்பட்டு, மாயையும் பொய்யுமான உலகத்தை ஜெயிக்கும் ஜனம் கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்களுடைய குமாரர் குமாரத்திகள் செழிப்படைந்து உயர்ந்திருப்பார்கள். அவர்களுடைய மிருக ஜீவன்கள் பெருகி பலத்திருக்கும். சத்துரு உட்புகமுடியாது. அழுகையும் கூக்குரலும் இருக்காது. இந்த எல்லா சீர் மேன்மைகளையும் பெற்று பாக்கியமுள்ள ஜனங்களாக வாழ்வார்கள். ஏசாயா 62:3,4; 1 பேதுரு 2:9.
Author: Rev. Dr. R. Samuel