முக்கியக் கருத்து
- வாழ்க்கையின் பல இக்கட்டான சூழ்நிலையிலும், ஆபத்திலும், ஆதரவற்ற நிலையிலும் இருந்து தேவனால் விடுவிக்கப்பட்டவர்கள் கர்த்தரை துதிக்கும் பாடல்.
- மேட்டிமையானவனை தாழ்த்தி எளியவனைக் கர்த்தர் உயர்த்துகிறார்.
- ஞானிகள் இதை உணர்ந்துகோள்வார்கள்.
முன்னுரை
ஆபத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிடும்போது, வாழ்க்கையின் வெவ்வேறுவிமான இக்கட்டுகளிலிருந்து தேவன் விடுவிப்பதை இந்த சங்கீதம் விவரிக்கிறது. விடுவித்த தேவனை விடுவிக்கப்பட்டவர்கள் துதித்துப் பாடுகிறார்கள்.
மீட்கப்பட்டவர்கள் கர்த்தரை துதிக்கவேண்டும்
1. சத்துருவின் கைகளினின்று விடுதலை (வச.1-3)
மனித வாழ்க்கையில் பலவித சத்துருக்களைச் சந்திக்க நேரிடுகிறது. மனிதர், பிசாசு, வியாதி, அக்கிரமம். பாவம் போன்ற எல்லாவித எதிரிகளினின்றும் கர்த்தர் கடந்த நாட்களில் தப்புவித்திருக்கிறார். ஆகவே, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது, அவரை நாம் துதிக்கவேண்டும்.பல தேசங்களிலிருந்தும் இவ்விதமாக அவரால் மீட்கப்பட்டவர்கள் அவரை துதிக்கவேண்டும். 2 சாமுவேல் 22:1,2, 1 கொரி.1:10.
விடுவிக்கும் கர்த்தரை மனுப்புத்திரர் துதிக்கவேண்டும்
2. பசி, தாகம், தங்கும் தாபரம் அறியாத நிலையிலிருந்து விடுதலை (வச.4-9)
இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு கானான் தேசம் செல்ல மேற்கொண்ட வனாந்திர யாத்திரை, ஆபிரகாம் தனது தகப்பன் வீட்டைவிட்டும், யாக்கோபு தன் தகப்பன் வீட்டை விட்டும் திக்கு தெரியாத தேசத்தை நோக்கி செய்த யாத்திரை, இவற்றில் பசி, தாகம் அடைந்தது போன்ற சூழ்நிலைகளிலிருந்து கர்த்தர் கொடுத்த விடுதலை இளைப்பாறுதல்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. கர்த்தர், நமக்கும் இந்த உலக வாழ்க்கையின் எல்லா தேவைகளை சந்திக்க வல்லவர். போகும் பாதையை காட்ட வல்லவர். இம்மட்டும் அவர் நம்மை திருப்தி செய்ததற்காகவும், இனிமேலும் நம்மை அவர் வழிநடத்தப்போவதற்காகவும் கர்த்தரைத்
துதிக்கவேண்டும்.சங்கீதம் 23:1, யாக்கோபு 1:17.
3. அந்தகாரமான சூழ்நிலை, கட்டுகள் இவற்றினின்று விடுதலை (வச.10-16)
ஆவிக்குரிய, சரீர வாழ்க்கை இரண்டிலுமே அந்தகாரத்திலும் கட்டப்பட்டும் உள்ள சூழ்நிலையில் அனேகர் இருக்கிறார்கள். வெண்கலக் கதவு, இருப்புத் தாழ்ப்பாள் போன்ற கடினமாக சூழ்நிலைகளையும் உடைத்து ஆத்துமாவையும், சரீரத்தையும் மீட்ட கர்த்தரைத் துதிக்கவேண்டும்.யோபு 36:7-12, லூக்கா 1:78,79, 1 பேதுரு 2:9
4. பாவம், வியாதி, பெலவீனம் இவற்றினின்று விடுதலை (வச.17-22)
மனிதனைப் பற்றும் பாவம் அவனுக்கு வியாதியையும் பெலவீனத்தையும், மூடத்தனத்தையும் கொடுக்கிறது. கர்த்தரை அறிதலே ஞானத்தையும், சுகத்தையும் கொடுக்கிறது. ஆகவே, கர்த்தர் தமது வசனங்கள் மூலம் மனிதனுக்கு கர்த்தருக்கு பயப்படும் பயத்தையும், உன்னதரை அறியும் ஞானத்தையும், கொடுத்து அவனுடைய அக்கிரமங்கள், வியாதி பெலவீனம் இவற்றினின்று விடுதலை கொடுக்கிறார். இவ்விதமாக கிருபையால் அதிசயங்களை செய்து மனுப்புத்திரரை தேவன் மீட்டுக்கொள்கிறபடியால் அவருக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்தி துதிக்கவேண்டும். ஏசாயா 53:5, சங்கீதம் 40: 1,2,3. 1 பேதுரு 2:24.
5. வாழ்க்கைப் படகில் மோதும் சூறாவளியினின்று விடுதலை (வச.23-32)
கப்பல் ஏறி கடல் யாத்திரை செய்வது போன்ற வாழ்க்கைப்படகின் பிரயாணத்தில் பல சூறாவளிகளையும், பெருங்காற்றுகளையும் அலைகளையும் சந்திக்கும்போது பல வேளைகளில் முழுகிப்போகும் சூழ்நிலைகளில் வெறித்தவனைப்போல காணப்பட்ட நம்மைக் கர்த்தர் கிருபையாக கொந்தளிப்பை அமர்த்தி, அமைதியுண்டுபண்ணி, சமாதான சந்தோஷத்தைக் கொடுத்துக் கரை சேர்த்தார். ஆகவே ஜனங்களின் சபையிலே அவருடைய அதிசய செய்கைகளை விவரித்து சாட்சி கூறி துதிக்கவேண்டும்.யோனா 1:4, ஏசாயா 25:4, மத்தேயு 8:24-27.
6. நீரூற்றுகளை வறண்ட நிலமாகவும், அவாந்தரவெளியை தண்ணீர் தடாகமாகவும் மாற்ற வல்லவர் (வச.33-38)
பொல்லாத குடிகளுடைய வழிகளினிமித்தம் அவர்கள் தேவனை தேடாததினிமித்தமும் செழிப்பான தேசத்தை கர்த்தர் உவர் நிலமாக்க வல்லவர். ஆனால் தேவனை நோக்கிக் கூப்பிடும் ஜனத்திற்காக அவாந்திர வெளியைத் தண்ணீர்த் தடாகமாக்கி அங்கே பயிர்களையும் தோட்டங்களையும் விளையச் செய்து அவர்களுடைய மிருக ஜீவன்களும்கூட பெருகும்படியாக
குறைவில்லாமல் போஷித்து ஆசீர்வதிக்கிறார். ஏசாயா 35:1,2,3, யோவான் 6:10-13.
"ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்' என்று ஆதியாகமம் 26:12 இல் வாசிக்கிறோம்.
உலகம் பொல்லாப்பினால் நிறைந்திருந்தாலும் நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது குறைவில்லாமல் நம்மை
போஷிப்பார்.
7. பிரபுக்களை இகழ்ந்து, எளியவனை உயர்த்துகிறார். ஞானிகள் இதை உணர்ந்துகோள்வார்கள். (வச.39-43)
மேட்டிமையானவர்களை கர்த்தர் தாழ்த்தி, எளியவனை உயர்த்தும் தேவன் நம் கர்த்தர்.லூக்கா 14:11, 1 சாமுவேல் 2:8,10
நியாயக்கேடு செய்கிறவர்கள் வாய் அடைக்கப்படும். உத்தமர்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
கர்த்தருடைய கிரியைகளினிமித்தம் மகிழ்வார்கள்.
Author: Rev. Dr. R. Samuel