சங்கீதம் 102- விளக்கவுரை

முக்கியக் கருத்து

 - ஆபத்து நாளில், எந்த உதவியும் இல்லாத சூழ்நிலையில் கர்த்தரை நம்பி நம் வாழ்க்கையை அவர் கரங்களில் ஒப்புக்கொடுப்பதே நல்லது.
 - இந்த உலகம் மாறும், கர்த்தரோ மாறாதவர்.
 - குறித்த நேரத்தில் கர்த்தர் தமது ஜனமாகிய சீயோனை கட்டி எழுப்புவார்.

முன்னுரை

துயரப்படுகிற ஒருவன் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்கிறான். அவனது ஜெபத்திற்கு பதில் உடனே வருகிறது என்பதில் மாத்திரமல்ல, கர்த்தர் தமது திட்டத்தின்படி தமது ஜனமாகிய சீயோனுக்கும், திக்கற்றவர்களுக்கும் குறித்த நேரத்தில் இரங்கி தயை செய்கிறார் என்பதையும், அவர் மாறாத தேவன் என்பதையும் அறிந்துகொள்வதிலும் நிச்சயமான விடுதலை வரும்.

(வச.1-8) துயரப்படுகிறவனின் விண்ணப்பப் புலம்பல்.

துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி, ஆபத்தில் தனக்கு எந்த உதவியும் கிடைக்காத சூழ்நிலையில் கர்த்தரே தனக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கதறி ஜெபிக்கிறான். தனது துக்கத்திற்குக் காரணமாக தனது நிலையற்ற வாழ்க்கை, சரீர பெலவீனம், வியாதி, தனிமை, நித்திரையற்ற நாட்கள், சத்துருக்களின் நிந்தையும் குரோதமும் என்று பட்டியலிடுகிறான். "அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே' என்று ஞானி பிரசங்கி 2:23 ஆம் வசனத்தில் இந்த துயரப்படுகிறவன் நிலையை இரத்தினச் சுருக்கமாக கூறியிருக்கிறான்.

(வச.9-12, 23-27) மனிதனின் பெலவீனம் கர்த்தரின் பெலன்.

மனிதனின் பெலவீனம் அவன் நிழலைப்போலவும், புல்லைப்போலவும் இருக்கிறான்என்று தெரிவிக்கிறது. சீக்கிரத்தில் உலர்ந்து மறைந்து போகக் கூடியவன் (10,11). அவனுடைய பெலன் ஒடுக்கப்பட்டு நாட்கள் குறுகிப்போகக் கூடியவன் (23). ஆனால், கர்த்தரோ என்றென்றைக்கும் உள்ளவர். மனிதனை அவர் தமது சினத்தால் தாழ்த்தவும் (9), தம்மை நோக்கிக் கூப்பிடும்போது அவனது வயதை நீடிக்கவும் செய்ய வல்லவர் (24). ஆதியிலே பூமியை அவரே உண்டாக்கினார். இந்த பூமியும் வானமும் பழமையாகப்போகும் (25,26). ஆனால், கர்த்தரோ மாறாதவர். அவர் நீண்ட ஆயுசுள்ளவர் (27). ஆதி. 1:1,  2 பேதுரு 3:5-7, வெளி.1:11, தானியேல் 7:9.

(வச.13-20, 28) கர்த்தரே மனிதனை விடுவித்து திரும்பக்கட்டுவார்.

துயரப்படுகிற மனிதனை கர்த்தர் துக்கத்தில் மூழ்கவிடாமல் அவனை விடுவித்துத் திரும்பக் கட்டுவார். இதுவே கர்த்தரின் திட்டம் தமது குறித்த நேரத்தில் இதைச் செய்வார். 
"... சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; ...' என்று பிரசங்கி 3:11 ஆம் வசனத்தில் ஞானி சென்னதுபோல தொடர்ந்து கர்த்தர் தமது குறித்த நேரங்களில் மனிதனைத் திரும்பக் கட்டி எழுப்பி வருகிறார். கர்த்தர் தமது ஜனமாகிய சீயோனை ஏற்ற நேரத்தில் கட்டி எழுப்புவார் (வச.13-15) வெளி.21:1-4. தமது ஜனத்தை மாத்திரமல்ல திக்கற்ற மக்களின் ஜெபத்தைக் கேட்டு இரங்கவும், தம்மை நோக்கி கதறி ஜெபிக்கும் எளியவனையும் சிறுமையானவனையும் அலட்சியம் பண்ணாமல், அவர்கள் ஜெபத்தை அங்கீகரித்து, கட்டுண்டவர்களை விடுதலையாக்கவும் பூமியை கண்ணோக்கி இரங்குவார் (வச.16-20). தமது அடியாரின் பிள்ளைகளைக் குறித்துக் கர்த்தர் கவனமாக இருந்து அவர்கள் சந்ததி நிலைக்கச் செய்வார் (வச.28). இது தாவீதுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தம் மாத்திரமல்லாது, ஒவ்வொரு விசுவாசிக்கும் தாம் தரும் வாக்குத்தத்த ஆசீர்வாதம்.
"நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல வளருவான்' சங்கீதம் 92:12.
(வச.21-22) முடிவிலே கர்த்தருக்கு துதியுண்டாகும்.
கர்த்தர் தமது திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும்போது, அவருடைய நித்திய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்டு, ஜனங்களும் ராஜ்ஜியங்களும் அவருக்கு ஆராதனை செய்து, அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
சகரியா 8:22-23, வெளி.21:24.

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download