பொதுவாக, கோபத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்; நியாயமான கோபம் மற்றும் நியாயமற்ற கோபம்.
நியாயமான கோபம்:
எலிகூவின் கோபம் நியாயமானது; யோபு மற்றும் அவனது நண்பர்களால் தேவனின் குணம், மரியாதை மற்றும் நற்பெயரை தவறாக சித்தரித்து தவறாகப் புரிந்து கொண்டதால் எலிகூ வருத்தமும் கோபமும் அடைந்தார் (யோபு 32:1-5). எருசலேம் ஆலயத்தில் தேவனை ஆராதிப்பதை குலைப்பதையும், பரிசுத்தமான இடம் திருடர்களின் குகையாக மாற்றப்பட்டதையும் கண்டு கர்த்தராகிய இயேசு கோபமடைந்தார் (யோவான் 2:13-18). ஓய்வு நாளில் சூம்பின கையையுடைய மனுஷனை ஆண்டவர் சுகமாக்கினதற்காக இருதய கடினப்பட்ட யூத மக்கள் மீது கர்த்தர் கோபமடைந்தார் (மாற்கு 3:5).
நியாயமற்ற கோபம்:
இந்த கோபம் பெருமையால் தூண்டப்படுகிறது, பயனற்றது அல்லது தேவனின் நோக்கங்களை சேதப்படுத்துகிறது அல்லது இது நாளுக்கு நாள் நீடிக்கிறது (யாக்கோபு 1:20; 1 கொரிந்தியர் 10:31; எபேசியர் 4:26-27). கட்டுப்பாடற்ற கோபம் பொருட்களுக்கு சேதம் அல்லது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் சில நேரங்களில் வாழ்க்கைத் துணைவர்களோடு ஏற்படும் வாக்குவாதம் மேலும் அதிகமாகி வன்முறையில் முடிகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆவிக்கு தீங்கு செய்யலாம், காயப்படுத்தலாம் அல்லது அழிக்கலாம். பணியிடங்களில், கோபமான முதலாளி, தொழிலாளர்களின் வாழ்க்கையை மோசமாக்கலாம்.
மூடரின் கோபம்:
"உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்" (பிரசங்கி 7:9). எரிச்சல் அல்லது விரக்தியான கோபம் உணர்ச்சிகளில் இருந்து வெளிப்படுகிறது. இது மிதமாகவோ அல்லது வன்முறையாகவோ வெளிப்படுத்தப்படலாம். இருப்பினும், அதை நீண்ட நேரம் அடக்கி வைக்கும்போது, அது மனதையும் எண்ணங்களையும் ஆக்கிரமிக்கிறது. இதன் விளைவாக கோபமான அணுகுமுறை மற்றும் கோபமான எண்ணங்கள் கோபமான நடத்தைக்கு வழிவகுக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கோபம் அந்த ஆளுமையின் மைய நிலையை எடுக்கிறது. பின்னர் கோபம் ஆழமாகச் சென்று, ஒரு நபரின் ஆவியைக் கெடுக்கும். அது முட்டாள்களின் இருதயத்தில் அந்த கோபம் அப்படியே தங்கி விடும்.
அடக்கப்படும் கோபம்:
கோபத்தை வெளிப்படுத்தாதபோது, அதை அடக்கவும் ஒடுக்கவும் முடியும். இது ஒரு நபரின் சரீரத்தை அல்லது ஆரோக்கியத்தை பாதிக்கலாம். ஆனால் புகைந்து கொண்டிருக்கும் கோபம் ஒருநாள் இடம் பொருள் ஏவல் இல்லாமல் வெடிக்கலாம். யோனா தீர்க்கதரிசி கோபப்படுவதற்கு தனக்கு உரிமை இருப்பதாகக் கூறினார், ஆனால் அதை வெளிப்படுத்த முடியவில்லை, அதனால் துக்கமடைந்து இறக்கும் அளவுக்கு கோபமடைந்தார் (யோனா 4:9).
கோபத்தை வெல்ல:
புத்திசாலிகள் கோபத்தின் மூலத்தை ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் தேவனைச் சார்ந்திருக்கிறார்கள். தேவ ஆவியானவர் ஒரு விசுவாசி பொறுமையாக இருக்க உதவுகிறார் (கலாத்தியர் 5:22-23).
கோபம் என்னை ஆட்கொள்கிறதா அல்லது நான் கோபத்தை மேற்கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்