'இங்கு ஜனங்கள் நுழைய தடை' என்பது போன்ற அறிவிப்பு பலகைகளை நாம் கண்டிருப்போம். ஆதாம் மற்றும் ஏவாளுக்கும் ஏதேன் தோட்டத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டது (ஆதியாகமம் 3:23). தேவன் பரலோகத்தில் பாவியான மக்களை அனுமதிப்பதில்லை. "நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்" (வெளிப்படுத்துதல் 22:15) என்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுகிறார்.
1) குற்றவாளிகள்:
மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள் கக்கினதைத் தின்னும்படி திரும்பும் நாய்களோடு ஒப்பிடப்படுகிறார்கள். "நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்" (நீதிமொழிகள் 26:11; 2 பேதுரு 2:22). அவர்கள் பாவத்திலே ஊறிப்போனவர்கள் மற்றும் அதுவே எளிதானதாகவும் சொகுசானதாகவும் பழக்கவழக்கமாகவும் மாறிவிட்டது.
2) மந்திரவாதிகள்:
எதிர்காலக் கணிப்பு, எண கணித ஜோசியம், சூனியம், வசீகரம், மாந்திரீகம், ஜோதிடம், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வழிபடுவது என்பதையெல்லாம் தேவன் தடை செய்கிறார் (உபாகமம் 17:3-4; 18:10-12). ஆவிகள் இருப்பதாக மக்கள் தவறாக நம்புகிறார்கள்; அது மாத்திரமல்ல அது அவர்களை கடவுளை அடைய உதவும் என்பதாக நினைக்கிறார்கள். உண்மையான கடவுள் யார் என்பதை அறிந்து கொள்வதைத் தடுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
3) ஒழுக்கக் கேடுகள்:
இயற்கைக்கு முரணான, கண்ணியமற்ற உணர்வுகளுக்கு தேவன் நியாயந்தீர்க்கிறார். "இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்" (ரோமர் 1:26). திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, வழக்கத்திற்கு மாறான உடலுறவு , விபச்சாரம், ஆபாசம், இச்சையோடு நோக்குவது மற்றும் கூட்டாளியின் உதவியின்றி உடலுறவை அனுபவிக்க அதற்கான பொம்மைகளை பயன்படுத்துவது என ஈடுபடும் அனைவரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் (மத்தேயு 5:28).
4) கொலைகாரர்கள்:
வன்முறையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு உடல் ரீதியாகவும், வாய்மொழியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தீங்கு விளைவிப்பவர்கள் தண்டனைக்கு பொறுப்பாவார்கள். "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்" (மத்தேயு 5:22)
5) பொய் வழிபாடு செய்பவர்கள்:
துரதிர்ஷ்டவசமாக, மக்கள் சிருஷ்டித்தவரை மறந்துவிடுகிறார்கள், அவர்களாகவே தன்னை படைத்தவர் இப்படிதான் இருப்பார் என்று கற்பனை செய்து கொண்டு சிருஷ்டிப்பை போல் உருவாக்கி தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், இறுதியில் அதைவிட்டு வெளியேற முடியாதபடி மாட்டிக் கொள்கிறார்கள். பவுல் எழுதுகிறார்: “அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்" (ரோமர் 1:22,23).
6) பொய்கள்:
யோவான் 8:44ல் சொல்லப்பட்டது போல சாத்தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான். அவனில் உண்மை இல்லை. கர்த்தராகிய இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார். கர்த்தராகிய இயேசுவை நிராகரிப்பவர்கள், பொய்யை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பரலோகத்தில் நுழைவதிலிருந்து நிராகரிக்கப்படுகிறார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து நீதி என்னும் சால்வையை நான் பெற்றிருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran