பழங்கால சட்ட நடைமுறையில் தங்கள் மீது அல்லது தங்கள் மேல் சாபம் என்று அழைப்பதன் மூலம் ஒரு குற்றத்தை நிராகரிக்க முடியும். யோபு தனது நண்பர்களின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தான்.
1) யோபு ஆசைப்படவில்லை (யோபு 31:1-4; 9-12):
யோபு எந்தப் பெண்ணையும் இச்சையுடன் பார்ப்பதில்லை என்று தன் கண்களோடு உடன்படிக்கை செய்திருந்தான். யோபு தன் மனைவியை ஆண்டவரிடமிருந்து பெற்ற சொத்தாகக் கருதினான், எனவே அவளுக்கு உண்மையாக இருந்தான்.
2) யோபு பொய் சொல்லவில்லை அல்லது ஏமாற்றவில்லை (யோபு 31:5-8):
அவன் வாழ்வில் பொய் இல்லை. யோபு உண்மையுள்ள வாழ்க்கையை நடத்துவதாக அறிவித்தான்.
3) யோபு தன் ஊழியர்களை கைவிடவில்லை (யோபு 31:13-15):
யோபு தன் வேலைக்காரர்களை சமமாக பாவித்தான், ஆண் பெண் வித்தியாசமின்றி கண்ணியமாக நடத்தினான். பவுல் கற்பித்தபடி எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதமில்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள். ஆம், இறுதி நீதிபதியான தேவனிடம் தான் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை அவன் உணர்ந்திருந்தான் (எபேசியர் 6:9).
4) யோபு தவறிழைக்கவில்லைஎ (யோபு 31:16-23):
விதவைகள், அனாதைகள் மற்றும் தந்தையற்றவர்கள் போன்ற ஏழைகள் அல்லது ஆதரவற்றவர்களிடம் யோபு இரக்கத்தையும் அக்கறையும் கொண்டிருந்தான். வஸ்திரமில்லாதவர்களுக்கு உடைகள் அளித்து உதவினான். "திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால், என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக" என யோபு தன்னைத்தானே கூட சபித்துக் கொள்கிறான்.
5) யோபு தன் செல்வத்தை நம்பவில்லை (யோபு 31:24-25):
யோபு தனக்கு பணக்காரனாகும் திறமை இருப்பதாகக் கூறவும் இல்லை. அவன் தன் செல்வத்தை நம்பவும் இல்லை.
6) யோபு பொய் வழிபாட்டைப் பின்பற்றவில்லை (யோபு 31:26-28):
யோபு இயற்கையையோ சூரியனையோ வணங்கவில்லை. அவன் சிலைகளின் கைகளை முத்தமிடவில்லை.
7) யோபு எதிரிகளுக்கு கூட அநியாயம் செய்யவில்லை (யோபு 31:29-30):
யோபு தன் எதிரிகளின் வீழ்ச்சியை விரும்பவும் இல்லை, அவர்களை சபிக்கவும் இல்லை.
8) யோபு புலம்பெயர்ந்தோரைக் கவனித்துக்கொண்டான் (யோபு 31: 31-32):
வீடற்றோர் அல்லது புலம்பெயர்ந்தோர் அல்லது அகதிகளுக்காக யோபு தனது வீட்டைத் திறந்து கொடுப்பவனாக இருந்தான்.
9) யோபு தன் பாவத்தை மறைக்கவில்லை (யோபு 31:33-34):
யோபு பாவத்தை மறைக்கவோ அல்லது ஔிக்கவோ முயற்சிக்கவில்லை மாறாக ஒப்புக்கொண்டான்.
10) யோபு தனது கூற்றை உறுதிப்படுத்துகிறான் (யோபு 31:36-40):
இது தான் தன் தலையெழுத்து என்று யோபு புலம்புகிறான், தன் வழக்கை கேட்க ஆட்கள் இருந்தால் நன்றாயிருக்கும் என கர்த்தரிடம் வினவுகிறான். பின்நாட்களில் தன் வாயின் அறிக்கைகளுக்காக வருந்துகிறான் (யோபு 42:5-6). வருந்தத்தக்கது என்னவெனில், தன்னைக் குற்றம் சாட்டுவது தேவன் என நினைக்கிறான்; ஆனால் குற்றப்படுத்துவது சாத்தான் அல்லவா.
நான் யோபு போல அறியாமையில் பேசலாமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்