தேவனின் வலது கரம் என்பது வேதாகமத்தில் பயன்படுத்தப்படும் ஒரு உருவகம். தேவன் ஆவியாயிருக்கிறார். அப்புறம் ஏன் அவர் மனிதனாக விவரிக்கப்படுகிறார் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
மனித உருவாக்கம்:
இதன் பொருள் என்னவென்றால் மனித சொற்களைப் பயன்படுத்தி கடவுளை விவரிப்பதாகும். வரையறுக்கப்பட்ட மனிதர்கள் கடவுளைப் புரிந்துகொள்வதற்காகவே இந்த விளக்கம். வேதாகமத்தில், தேவன் கண்கள், காதுகள், கைகள் மற்றும் கால்களைக் கொண்டவர் என்று விவரிக்கப்பட்டுள்ளது (ஆமோஸ் 9:3; தானியேல் 9:18; ஏசாயா 5:25; 63:3; ஆதியாகமம் 3:8).
வலது கை:
இது சுமார் ஐம்பத்தாறு முறை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வலது கை கனம் மற்றும் அந்தஸ்து என்பதாக பார்க்கப்படுகிறது. வலது கை வலிமை, வல்லமை, அதிகாரம் மற்றும் திறமை ஆகியவற்றைக் குறிக்கிறது.
பாதுகாப்பு மற்றும் இரட்சிப்பு:
தேவனின் வலது கரம் இரட்சிப்பு மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது மற்றும் அவரை நம்புபவர்களுக்கு மகத்துவத்தை அளிக்கிறது. "உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்" (சங்கீதம் 18:35). தேவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே இரட்சிப்புக்கான ஒரே வழி உள்ளது.
வெற்றி:
இஸ்ரவேல் தேசத்தை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதன் மூலம் தேவன் அவர்களுக்கு ஜெயத்தைக் கொடுத்தார். பத்து வாதைகளால் அவர்களைத் துன்புறுத்தி தேவன் தண்டனையை நிறைவேற்றினார். பார்வோன் மீண்டும் இஸ்ரவேலை அடிமைப்படுத்த விரும்பியபோது, கர்த்தர் செங்கடலைப் பிரித்து, இஸ்ரவேலைக் கடந்து செல்ல அனுமதித்து, பார்வோனையும் அறுநூறு இரதங்களைக் கொண்ட இராணுவத்தையும் மூழ்கடித்தார். மோசே இந்த அற்புதமான வெற்றியை தேவனின் வலது கரம் என்று கூறினான்; "கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது" (யாத்திராகமம் 15:6).
போதனை:
கர்த்தருடைய வலது கரம் சத்தியத்தையும், சாந்தத்தையும், நீதியையும், அற்புதமான செயல்களையும் போதிக்கிறது. "சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்" (சங்கீதம் 45:4). தேவன் யார், அவருடைய எதிர்பார்ப்புகள் என்ன, தேவனின் நோக்கம் என்ன மற்றும் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள என விழுந்துபோன மனிதகுலத்திற்கு போதனை தேவை.
நீதி:
"தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது" (சங்கீதம் 48:10). தேவன் நீதியுள்ளவர், எனவே அவருடைய செயல்கள், கிரியை மற்றும் தீர்ப்புகள் நீதியானவை.
நிலை நிறுத்துதல்:
தேவனின் வலது கரம் அவருடைய மக்களை ஆதரிக்கிறது. அவர் தம் மக்களைப் பலப்படுத்துகிறார், உதவுகிறார், ஆதரிக்கிறார் மற்றும் நிலை நிறுத்துகிறார் (ஏசாயா 41:10). ஆகவே, தேவ ஜனங்கள் திகைக்கவோ, பயப்படவோ, சோர்வடையவோ தேவையில்லை.
கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்:
கர்த்தர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார் (எபேசியர் 1:20). இரட்சகரும் ஆண்டவருமான உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம் மக்களுக்காக பரிந்து பேசுகிறார். "கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே" (ரோமர் 8:34).
தேவனின் தீர்ப்பு:
கர்த்தர் பரிசுத்தமானவர். பாவத்துடன் அவர் ஒருபோதும் ஒப்புரவு ஆவதில்லை. ஒரு நீதியுள்ள தேவனாக, அவர் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களின் மீது தீர்ப்பை நிறைவேற்றினார். கோபாக்கினைப் பாத்திரமும் நியாயத்தீர்ப்பும் அவருடைய வலது கரத்தில் இருக்கிறது (ஆபகூக் 2:16).
அவருடைய வலது பாரிசத்தில் இருக்கும் பரிபூரண ஆனந்தத்திலும் நித்திய பேரின்பத்திலும் நான் முழுமையான மகிழ்ச்சியடைகிறேனா? (சங்கீதம் 16:11)
Author: Rev. Dr. J .N. மனோகரன்