யூத் வித் எ மிஷன் (YWAM) என்ற அமைப்பு ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது, அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்; அறிய செய் (அதாவது அவரைப் பற்றி பிரகடனம் செய்வது). எபிரெய பழைய ஏற்பாட்டில் 'அறிதல்' என்ற வார்த்தை 950 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அறிந்து கொள்வது என்பது ஒரு நெருக்கமான உறவைக் குறிக்கும். “ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை *அறிந்து* உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்" (எரேமியா 9:23-24). "இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக" (கலாத்தியர் 6:14) என்று பவுல் எழுதுகிறார். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்சகரை அறியாமல் தேவனை அறிந்து கொள்வது என்பது இயலாத காரியம்.
1) அவரை அறிவது:
"நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்" என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசி மூலம் சொன்னார் (எரேமியா 24:7). மனித இதயம் வளமான நிலம் போல் ஆக வேண்டும், அதனால் விதை அதாவது தேவனுடைய வார்த்தை வேர்விடும் (மத்தேயு 13:23). "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3) என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதித்தார். கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக பவுல் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்தார். அதுமாத்திரமல்ல; என் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவை அறிந்து கொள்வதே மிதமிஞ்சிய மதிப்பு என்றார் பவுல் (பிலிப்பியர் 3:8).
2) அவருடைய வார்த்தையை அறிவது:
வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது இன்று ஒரு முக்கிய வார்த்தை. வேதம் கற்பது என்பது வாழ்நாள் முழுவதும் நடக்கும் செயல். பவுல் தீமோத்தேயுவுக்கு வேதவசனங்களை அறிவதைத் தொடர நினைவூட்டுகிறார், இவ்விஷயம் நம்மையும் தூண்டுகிறதாகவும், ஒருபோதும் தப்பில்லாததாகவும் எப்போதும் பயனுள்ளதாகவும் இருக்கிறது; மேலும் வசனங்கள் நம்மிடம் பேசுகிறது (2 தீமோத்தேயு 3:14-16). கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளர்வது என்பது மிக அவசியம் (2 பேதுரு 3:18). தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை அறியாததால் சங்காரமாகிறார்கள் (ஓசியா 4:6).
3) அவரது அன்பை அறிவது:
தேவன் முதலில் நம்மை நேசித்தார். கல்வாரி சிலுவையில் காட்சிப்படுத்தப்பட்ட தேவ குமாரனின் அன்பை உண்மையில் அறிவது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது. பவுல் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர அல்லது அறிய விரும்புகிறார் (எபேசியர் 3:18-19).
4) உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிவது:
பவுலுக்கும் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிய விருப்பம் இருந்தது (பிலிப்பியர் 3:10). கிறிஸ்தவர்கள் உயிர்த்தெழுதலின் வல்லமையுடன் வாழ அழைக்கப்பட்டுள்ளனர். தேவன் தனது மகிமைக்காக கற்பனை செய்ய முடியாத, அடைய முடியாத மற்றும் நெருங்க முடியாத விஷயங்களைச் செய்ய, அழிவிற்குரிய சரீரம் உடைய மக்களை கூட பயன்படுத்த முடியும். ஏமி கார்மைக்கேல் ஒரு விபத்து காரணமாக இருபது ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார், அவரது எழுத்துக்களால் உலகளவில் தேவனால் பயன்படுத்தப்படும் ஒரு வல்லமையான கருவியாக மாற முடிந்ததே.
நான் எதைக் குறித்து மேன்மை பாராட்டுகிறேன்?
Author : Rev. Dr. J. N. Manokaran