ஆவியின் கனி - விசுவாசம்
விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசக் குடும்பத்தார் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் நற்குணத்தைத் தொடர்ந்து நம்மிடம் காணப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம் விசுவாசம் என்பதாகும்.

’விசுவாசம்’ என்ற வார்த்தையை ’Faith’ என நாம் எளிதில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுவோம். ஆனால் NIV மற்றும் NKJV போன்ற முக்கிய ஆங்கில வேதாகமங்களிலோ இந்த வார்த்தைக்கு ’Faithfulness’ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த faithfulness என்ற வார்த்தை அப்படியே உண்மை, சத்தியம் என்ற வார்த்தைகளுக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே ஆவியின் கனியாகிய விசுவாசம் என்ற வார்த்தையானது விசுவாசித்தல் என்ற காரியத்தை மட்டுமல்ல, விசுவாசமாக / நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளுதல் என்ற காரியத்தை இந்த ஆவியின் கனி வரிசையில் குறிப்பதாக அறியலாம். கிரேக்க மொழியில் இந்த இரண்டுகாரியங்களுக்கும் ‘Pistis’ என்ற ஒரே வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.

விசுவாசம் என்பது தேவனுடைய பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி. இதனால் தான் அவர்களுக்கு விசுவாசிகள் என்ற பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. ’மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்’ (மாற்கு 1:15) என்பது தான் இயேசு கிறிஸ்துவின் முதல் பிரசங்கம். கிறிஸ்தவ வாழ்வின் முதல் அடிப்படை தகுதியும் அதுவே (யோவான் 1:12). ’விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசாயா 28:16); தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (ஆபகூக் 2:4); நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது (மத்தேயு 8:13); மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் (மத்தேயு 21:22)’ போன்ற வசனங்கள் நாம் இன்னும் திரியேக தேவனை, அவருடையை வார்த்தைகளை இன்னும் விசுவாசிக்க நம்மைத் தூண்டுகின்றன.

அத்துடன் நாம் எவற்றையெல்லாம் விசுவாசிக்க வேண்டும் என்றும் அவருடைய கற்பனைகள் நமக்குப் போதிக்கின்றன. தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபி. 11:6). நாம் என்னென்ன காரியங்களுக்காக தேவனை விசுவாசிக்கிறோமோ அந்த அளவில் தான் நாம் அவருக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள முடியும். எந்தவித கிரியைகளில் எல்லாம் அது செயல்படலாம் என எபிரேயர் 11ம் அதிகாரத்தில் கொடுக்கப்படுள்ள விசுவாச வீரர்கள் பட்டியலிலிருந்து தெளிவாக அறிகிறோம்.

விசுவாசத்தினாலே ஆபேல் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; ஏனோக்கு தேவனுக்குப் பிரியமானவனாய் நடந்தான்; நோவா பேழையை உண்டுபண்ணினான்; ஆபிரகாம் கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்; மேலும் ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; விசுவாசத்தினாலே சாராள் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணினாள்; விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்; விசுவாசத்தினாலே யோசேப்பு, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்; விசுவாசத்தினாலே மோசே கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணி  செயல்பட்டு இஸ்ரவேலரை வழிநடத்தினான். இவ்விதமே ராகாப்,  கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் மற்றும் ஸ்திரீகள் தங்கள் விசுவாசத்தினால் நடந்து கொண்ட காரியங்களை எபி 11ம் அதிகாரம் முழுவதும் காண்கிறோம்.

எனவே விசுவாசி ஒவ்வொருவரும் விசுவாசத்துக்கு பாத்திரமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ’கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது’ (யாக்கோபு 2:26). ’கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது’ (பிலி. 1:29). குறிப்பாக, கிறிஸ்தவ விசுவாசத்தினால் வரும் பாடுகள் ஒருபுறம் இருக்க, 2 தீமோத்தேயு 3:1-5 ல் கடைசி நாட்களில் வருமென்று கூறப்பட்டுள்ள உலகப்பிரகாரமான காரியங்களை நம்மிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும். 

அதற்கு ஆவியின் கனியாகிய விசுவாசத்தில் நாம் பெருக வேண்டியது நமக்கு அவசியமாகிறது. இதற்கு  உதாரணமாக, விசுவாசத்தின் வெளிப்பாடாக பணஆசை அற்றவர்களாக இருக்கும் நிலையை எபிரேயர் நிருபத்தில் பவுல் கூறுவதைக் காண்கிறோம். ’நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே’ (எபிரேயர் 13:5,6).

இவ்விதம் விசுவாசமும் விசுவாசமாய் இருத்தலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவைகளே. ஒன்றில் வளர மற்றொன்று அவசியமாகிறது. அதாவது விசுவாசத்தில் வளரும் ஒருவரால் தான் விசுவாசமாகவும் நடந்து கொள்ள முடியும். விசுவாசிகளாகிய நாம் தேவனுக்கும் அவருடைய வாத்தைகளுக்கும் உண்மையாய் நடந்து கொள்ளுதல் வேண்டும். ’தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள்; என்னிடத்திலும் விசுவாசமாய் இருங்கள்’ (யோவான் 14:1) என்றார் இயேசு கிறிஸ்து. ’விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்’ (எபிரெயர் 11:6).  

இந்த விசுவாசத்தில் வளர நாம் செய்ய வேண்டியதென்ன? ’விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்’ என ரோமர் 10:17 ல் பார்க்கிறோம். நாம் கிறிஸ்தவ விசுவாசத்தில் மென்மேலும் வளர தேவனுடைய வசனமாகிய பரிசுத்த வேதாகமத்தை முறையாக வாசிக்க வேண்டும்; அவைகளை தியானிக்க வேண்டும்; அவைகளை கேள்விப்படும் போதே நமக்குள் விசுவாசம் பிறக்கும். சிறுசிறு காரியங்களில் அவைகளை செயல்படுத்தப் பழகும் போது பெரிய காரியங்களிலும் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் விசுவாச வீரர்களாக வீராங்கனைகளாக நாம் மாறுவோம். இந்த அனுபவங்களுக்கு நம்மை அர்ப்பணிப்போம். ஆமென்.

[இது பாலைவனச் சத்தம் – ஜூலை 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]Topics: Daily Devotions Dr. Pethuru Devadason

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download