அநேகருக்கு ஒரு ஆசை இருக்கிறது, வாழ்நாளில் தங்கள் பெயர் பிரபலமாக இருக்க வேண்டும், தங்களுக்கென்று ஒரு அடையாளம் உண்டாக வேண்டும் எனவும், இறந்த பின்னரும் தங்களைப் பற்றிய நினைவுகள் காலங்காலமாக பேசப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். பல சிலைகள் நன்றியுணர்வு நினைவுச்சின்னங்களாக அமைக்கப்பட்டன, பின்னர் மறக்கப்பட்டன, அழிக்கப்பட்டன அல்லது அடையாளம் காணப்படாதளவு துண்டு துண்டாக அடைந்தன, அவை வீசப்பட்டன. பாபேலைக் கட்டியவர்கள் தங்கள் பெயர் பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினர் (ஆதியாகமம் 11:4). 'அப்சலோமின் அடையாளம்' என்று சொல்லப்படுமளவு ஒரு தூணை தன் மரபுவழியாக உருவாக்கினான் (2 சாமுவேல் 18:18).
நெகேமியாவின் ஜெபம்:
ஐம்பத்திரண்டு நாட்களில் எருசலேம் நகரின் சுவர்களைக் கட்டி முடிக்க நெகேமியா மக்கள் மற்றும் வளங்களைத் திரட்டினார். புறக்கணிக்கப்பட்ட லேவியர்கள் கவனித்துக் கொள்ளப்படுவதையும், ஆலய வழிபாடு தொடருவதையும் அவர் உறுதி செய்தார். பிறகு இப்படி ஜெபிக்கிறார்; "என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்" (நெகேமியா 13:14).
நினைவில் கொள்ளுதல்:
பண்டைய உலகில், மன்னர்கள் குடிமக்களின் நற்செயல்களைப் பதிவு செய்யும் புத்தகத்தை வைத்திருந்தனர். மொர்தெகாயின் செயல் அத்தகைய ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது; அவர் தாமதமான வெகுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றார் (எஸ்தர் 6:1-3). மல்கியா தீர்க்கதரிசி, தேவனிடத்திலும் ஞாபகப்புஸ்தகம் இருப்பதாக எழுதுகிறார் (மல்கியா 3:16). நெகேமியா தனது பங்களிப்பு தேவ சமூகத்தில் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும் என்று ஜெபித்தார்.
அழியாமல் பாதுகாத்தல்:
எதிர்காலத் தலைவர்களால் நல்ல பங்களிப்புகள் அழிக்கப்படலாம். ராஜ்யம் பிளவுபட்டதால் சாலொமோனின் மரபு முட்டாள் ரெகொபெயாமினால் அழிக்கப்பட்டது. நன்றி கெட்ட பார்வோன் யோசேப்பையும் அவருடைய பங்களிப்பையும் மறந்துவிட முடியும் (யாத்திராகமம் 1:8-11). நெகேமியா ஆரம்பித்த ஆலய வழிபாடு, ஓய்வுநாள் ஒழுங்குமுறைகள் மற்றும் பிற மறுசீரமைப்பு ஆகியவை நம்பிக்கையற்ற மக்களால் அழிக்கப்படக்கூடாது.
பலன் அளித்தல்:
ஒருவேளை, நெகேமியா ஒரு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவானாக, தேவனின் இந்தப் பண்பு பற்றி அறிந்திருக்கவில்லை. தேவன் அநியாயம் செய்பவர் அல்ல, அதனால் அவருடைய பரிசுத்தவான்களின் பணியை மறந்துவிடமாட்டார். அவர்களுக்குத் தவறாமல் வெகுமதியும் அளிக்கிறார். "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே" (எபிரெயர் 6:10). "சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மத்தேயு 10:42).
அக்கினியால் பரிசோசித்தல்:
"ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்" (1 கொரிந்தியர் 3:12-15). நெகேமியாவின் பணி உண்மையாகவே நித்திய மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் விலையேறப்பெற்ற கற்களால் ஆனது.
நான் நெகேமியாவைப் போல அவருடைய ராஜ்யத்திற்காக பங்களிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்