எரிகோவை தோற்கடித்த பிறகு, "இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்" (யோசுவா 6:26). பாவம், சிலை வழிபாடு மற்றும் தேவனுக்கு எதிரான கலகம் ஆகியவற்றின் விளைவாக, தேவனின் நியாயத்தீர்ப்பின் நினைவுச்சின்னமாக எரிகோ பாழடைந்த நகரமாக இருந்திருக்கும். ஆனால் அடுத்த இடத்தில் ஒரு புதிய நகரம் கட்டப்பட்டது. ஐந்நூற்று முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (கி.மு. 850), ஆகாப் மன்னனின் ஆட்சியின் போது, "பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்" (1 இராஜாக்கள் 16:34).
அறியாமை:
ஈயேல் பெத்தேலைச் சேர்ந்தவன். அவனுடைய பெற்றோர் அவனுக்கு தேவ நியமங்களை கற்பிக்கவில்லையா என்ன? பிள்ளைகளுக்கு சபைகளில் அல்லது சில கல்விக் கூடங்களில் பிரமாணங்கள் அல்லது ஒழுங்குகள் கற்பிக்கப்படும், ஒருவேளை இந்த ஈயேலைப் போன்றவர்கள் இந்த முக்கியமான பாடத்தை கற்பித்தபோது அதில் கலந்து கொள்ளவில்லை அல்லது புறக்கணித்தார்கள் போலும், அதுதான் வரலாறு தெரியவில்லை. ஆம், தேவனைப் பற்றிய அறிவு இல்லாதது மிகவும் ஆபத்தானது (ஓசியா 4:1,6; 6:6). சத்தியமோ அல்லது பிரமாணமோ அல்லது வரலாறோ இவைகளைக் குறித்து அறியாமல் இருப்பது என்பது எவ்விதத்திலும் மன்னிக்க முடியாது, பெரியோர்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கக்கூடிய கடமை உள்ளது என்பதை மறவாதிருப்போம்.
சத்தியம்:
"கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது" (சங்கீதம் 19:7). வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் தேவனுடைய வார்த்தைகள் அழிந்து போவதில்லை (மத்தேயு 24:35). தேவன் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்லவே (எண்ணாகமம் 23:19). எரிகோ என்பது தேவனின் தீர்ப்பாக அழிவுக்காக இருந்தது. நகரத்தை புதுப்பித்தல் என்பது தேவனுக்கு எதிரான கலகமாகும்.
துன்மார்க்கமான செல்வாக்கு:
இஸ்ரவேலில் மிகவும் பொல்லாத அரசனாகிய ஆகாபின் ஆட்சியின் போது ஈயேல் வாழ்ந்தான் (1 இராஜாக்கள் 16:29-34). ஆகாப் தீமை செய்தான், சமுதாயம் தீமையை புதிய முயற்சி போல் இயல்பானதாக ஏற்றுக்கொண்டது. பெத்தேலைச் சேர்ந்தவன் என்பதால், யெரொபெயாம் அங்கு அமைத்த சிலை வழிபாட்டால் ஈயேல் பாதிக்கப்பட்டான் (1 இராஜாக்கள் 12:28-33). தீயவர்களுடனும் பொல்லாதவர்களுடனும் நட்பு கொள்வது முட்டாள்தனமான, ஒழுக்கக்கேடான மற்றும் பரிசுத்தமற்ற செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.
நம்பிக்கையின்மை:
தனது முதல் குழந்தையான அபிராம் ஏன் இறந்தான் என்று ஈயேல் யோசித்தானா அல்லது சிந்தித்தானா? அவனது கட்டிடத் திட்டத்தை கைவிடும்படி யாராவது அவனுக்கு அறிவுரை கூறினார்களா? இவ்வுலகில் பெயர் பெற வேண்டும் என்ற தனது திட்டத்தில் விடாப்பிடியாக இருந்தான்.
மாந்திரீகம்:
சில வேதாகம அறிஞர்கள் அவர் அடித்தளம் அமைத்தபோது தனது முதல் மகனைப் பலியிட்டதாகவும், வாயில்களை அமைத்தபோது தனது இளைய மகனைப் பலியிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
தேவனின் தீர்ப்புக்கு எதிராக நான் போராடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்