திருமண நாள் விவாகரத்து நாளாக முடிந்த வேதனையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது திருமணத்தின் அன்று வெட்டப்படும் கேக்கை தன் மீது எறிந்து விளையாடவோ, முகத்தில் தடவவோ கூடாது என்று மணப்பெண் மணமகனை எச்சரித்துள்ளாள். ஆனால் மணமகன் ஐந்நூறு டாலர் கேக்கை எடுத்து மணமகளின் முகத்தில் தேய்த்து ஒன்றுமில்லாமல் செய்து விட்டான். ‘தன் ஒப்பனை, முடி அலங்காரம் மற்றும் விலையுயர்ந்த கேக் எல்லாம் பாழாகிவிட்டது, அதனால் என் நம்பிக்கையும் உடைந்து விட்டது’ என்று மணமகள் எழுதி வைத்து விட்டு அவள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறி தனியாக வாழ முடிவு செய்தாள் (என்டிடிவி, செப்டம்பர் 21 2023). பெண்களுக்கு மரியாதை கொடுப்பதும், அவர்களை கண்ணியமாக நடத்துவதும் கிறிஸ்தவ மதிப்பாகும். இருப்பினும், கலாச்சாரம் வேதத்திற்கு முரணானது மற்றும் பெண்ணை ஒரு பொருளாகவோ அல்லது பொம்மையாகவோ அல்லது கைப்பாவையாகவோ தான் கருதுகிறது.
பெண்கள் மீதான மோசேயின் மரியாதை:
மோசே எகிப்திலிருந்து தன் உயிருக்காக ஓட வேண்டியதாயிற்று. அவன் மீதியான் தேசத்தில் வந்து தங்கினான்; அப்போது அங்கு ஆடு மேய்க்கும் பெண் இடையர்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டான். மோசே ஏழு குமாரத்திகளைப் பாதுகாத்து அவர்களின் ஆடுகளுக்குத் தண்ணீர் ஊற்ற உதவினான் (யாத்திராகமம் 2:15-22). ஆசாரியரும் அந்த குமாரத்திகளின் தந்தையுமான ரெகுவேல் தனது மகள்களில் ஒருவளான சிப்போராளை மோசேக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
பலவீனம்:
பலவீனமான மற்றும் வலிமையற்றவர்களை துன்புறுத்துவது, ஒடுக்குவது மற்றும் சுரண்டுவது பெரும்பாலான கலாச்சாரங்களில் பொதுவானது. நலிந்தவர்களையும், பலவீனமானவர்களைப் பாதுகாப்பதும், அவர்களின் உரிமைகளுக்காக நிற்பதும், அவர்களுக்கு உதவுவதும் கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம். பெண்கள் பலவீனமான பாத்திரங்களாக குறிப்பிடப்படுகிறார்கள் (1 பேதுரு 3:7).
கண்ணியம்:
ஆண்களைப் போலவே பெண்களும் தேவ சாயலில் படைக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27). தேவனால் கொடுக்கப்பட்ட உள்ளார்ந்த கண்ணியம் அவர்களுக்கு இருக்கிறது. கண்ணியத்தை புண்படுத்துவதும், பெண்கள் உட்பட யாராக இருந்தாலும் அவர்களை இழிவுபடுத்துவதும் தேவனுக்கு எதிரான பாவமாகும்.
தெரிவுகள் மற்றும் விருப்பங்கள்:
எல்லா மனிதர்களுக்கும் விருப்பு வெறுப்புகள் உண்டு. இது அவர்களின் தனிப்பட்ட பின்னணி, குணம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. இருப்பினும், மணமகளின் தெரிவு மற்றும் விருப்பங்கள் புறக்கணிக்கப்பட்டன, கேலி செய்யப்பட்டன, அப்பட்டமாக அவமதிக்கப்பட்டன. மணமகள் தனது விருப்பத்தை மணமகனிடம் மிகவும் முன்னதாகவே தெரிவித்திருந்தாள், ஆனால் அவன் வேண்டுமென்றே அவளுடைய கோரிக்கையை நிராகரித்தான். ஆரம்பமே இப்படியிருந்தால் தன் வாழ்க்கையே பரிதாபகரமான நரகமாகிவிடும் என்று மணப்பெண் உணர்ந்தாள்.
ஆதிக்கம்:
மணமகன் மணமகள் மீது ஆதிக்கம் செலுத்தவும், என்ன செய்ய வேண்டும் என்பதை ஆணையிடவும், மணமகளின் உரிமைகள் மற்றும் ஆசைகளை புறக்கணிக்கவும் விரும்பினான். அன்பு, உணர்திறன் மற்றும் இரக்கம் காட்டுவதற்கு பதிலாக, அவன் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தினான். வேதாகமக் கட்டளை என்னவென்றால்; “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்” (எபேசியர் 5:25).
நான் பெண்களை மதிக்கிறேனா, பெண்களை ஈனப்படுத்தாமல் கனப்படுத்தக் கற்றுக்கொடுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்