2:15 பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
2:16 மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.
2:17 அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணைநின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
2:18 அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான்.
2:19 அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.
2:20 அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டு வந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
2:21 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்.
2:22 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.