ஆராதனை குழுவினர் அருமையான பாடலைப் பாடினர். கேட்டவர்கள் அனைவரும் உத்வேகமடைந்து ஆவியில் உயர்த்தப்பட்டனர். பெரும் கைதட்டல் கொடுத்தனர். இருப்பினும், காது கேளாத மற்றும் பேச முடியாத தேவ மனுஷனான அந்த பாடலின் எழுத்தாளரை யாரும் நினைவில் கொள்ளவில்லை. ஆனால் எழுத்தாளரை தேவன் மறந்து விட்டாரா? அல்லது அவர் அங்கு இல்லாத போதும், மற்றவர்களை விட எழுத்தாளர் தேவனை மகிமைப்படுத்தினாரா? திருச்சபை வரலாற்றில், குறைபாடுகள் உள்ள பலர் பாடல்கள், பிரசங்கங்கள், இறையியல், கதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்களை எழுதியுள்ளனர். அவர்களின் பலவீனங்களின் மூலம் தேவன் தனது வல்லமையை வெளிப்படுத்தினார், அவருடைய நாமம் உயர்ந்தது மற்றும் மகிமைப்படுத்தப்பட்டது (2 கொரிந்தியர் 12:9,10) . ஹெலன் கெல்லர், ஃபேனி க்ராஸ்பி, ரே சார்லஸ், ஸ்டீவி வொண்டர், ஆர்ட் டாட்டம், ஜார்ஜ் ஷீரிங், லெனி டிரிஸ்டானோ, டெய்ன் ஷூர், ஏமி கார்மைக்கேல் மற்றும் பலர் தேவனை மகிமைப்படுத்தினர் மற்றும் மற்றவர்களை ஊக்கப்படுத்தினர்.
பரிசுத்தத்தின் மகிமை:
தேவனை வணங்குவதும் மகிமைப்படுத்துவதும் பரிசுத்த நோக்கங்களுடன், ஜீவ பலியாக செய்யப்பட வேண்டும், மேலும் எல்லா தீமைகளையும் தவிர்க்க வேண்டும். பரிசுத்த தேவன் ஒருபோதும் பாவத்துடன் சமரசம் செய்து கொள்ள முடியாது. மனந்திரும்பாமல், தேவனை அணுகுவது ஆபத்தானது. விசித்திரமான நெருப்பு, சுயமாக தீர்மானிக்கப்பட்ட பாணிகள் அல்லது அங்கீகரிக்கப்படாத வழிபாட்டு முறைகள் ஆரோனின் மகன்களான நாதாப் மற்றும் அபியூவின் மேல் தேவனின் தீர்ப்பை வரவழைத்தது (லேவியராகமம் 10:1).
முழு பலம்:
ஆராதனை என்பது அனைத்து பலத்துடன் அதாவது ஆவி, ஆத்மா, சரீர உணர்வுகள், இருதயம், மனம் மற்றும் ஆவியுடன் தேவனை நேசிப்பதாகும். அனைவரும் தேவனை விரும்பி ஆராதிக்க அழைக்கப்படுகிறோம். சபைக் கூட்டங்களில் ஆராதனை என்பது ஒரு மேடை நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்துவது அல்ல, மாறாக முழு சபையின் ஈடுபாடாகும்.
தினசரி மகிமை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னைப் பின்பற்றும் சீஷர்கள் அனுதினமும் தங்கள் சிலுவையை எடுத்து கொண்டு பின்பற்றும்படி அழைத்தார் (லூக்கா 9:23-25). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பவுல் ரோமில் உள்ள விசுவாசிகளுக்கு; “சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை” (ரோமர் 12:1) என எழுதுகிறார்.
பரலோக பிதாவை மகிமைப்படுத்துங்கள்:
கிறிஸ்துவைப் பின்பற்றாதவர்கள் பரலோகத் தகப்பனாகிய தேவனைத் துதிக்கத் தூண்டும் வகையில் சீஷர்கள் வாழ வேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போதித்தார் (மத்தேயு 5:14-16). சுற்றியிருப்பவர்களுக்கு உப்பைப் போன்ற மணத்தையும் சுவையையும் கொடுப்பது ஆராதனை. இருளில் இருப்பவர்களை வழிநடத்தும் ஒளியாக இருப்பது உண்மையான ஆராதனை. மலைமீது கட்டப்பட்ட நகரத்தைப் போல நம்பிக்கை கொடுப்பது, அழிந்துபோகும் ஜனங்களுக்கு வந்து இரட்சிப்பைப் பெறுவதற்கான ஒரு அழைப்பாகும்.
நான் தேவனை மகிமைப்படுத்துகிறேனா, தேவனை மகிமைப்படுத்த மற்றவர்களை தூண்டுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்