கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் என்னும் ஆசை மனிதர்கள் மனதில் இருந்தமைக்குக் காரணம் கடவுள் அப்படியாகப் பிறப்பார் என்ற முன்னறிவிப்பேயாகும். அந்த முன்னறிவிப்பே மனித எதிர்ப்பார்ப்புக்கு அடித்தளமாயிருந்தது. அத்துடன் கடவுள் மனிதனாகி மனிதர்களை தன் வசப்படுத்திக்கொள்ளும் திட்டத்தை இந்த உலகம் உண்டாவதற்கு முன்பே கொண்டிருந்தார் என்று பவுல் (எபேசியர் 1:4) கூறுகிறார். கடவுள் மனிதனாகப் பிறப்பது அவருடைய திட்டம் மாத்திரமல்ல அவருடைய விசுவாச கிரியையுமாயிருக்கிறது என்று இயேசு கூறுகிறார் (யோவான் 10:17). இது கடவுள் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க், அவர் மீண்டும் வந்த நிலையை அடையமுடியும் என்பதே அந்த விசுவாசமும் அதன் கிரியையுமாயிருக்கிறது. அவர் அப்படிப்பட்ட ரிஸ்க் எடுப்பதற்குக் காரணம் அவர் மனிதர்கள்மேல் கொண்டிருந்த அன்பும், அவர்களைக் கொண்டு செய்யவேண்டியிருந்த திட்டமும் அத்துடன் கீழ்காணும் காரணங்களும் அடங்கும்.
1. மனித உருவத்தில் தெய்வீகம்
தெய்வத்தை பல்வேறு உருவங்களாக வடித்துக்கொண்டிருந்த மனிதர்களுக்கு தெய்வத்தை மனிதனாகக் காட்டவே இயேசு பிறந்தவர். அவர் ஆதியிலே வார்த்தையாக இருந்தார் என்றும் அவரே தேவனாயிருந்தார் என்றும், அவருக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லா நித்தியமானவராகவும் தன்னிலே உருவானவராகவும், சகலத்தையும் அவரே அவருக்காக உண்டாக்கினார் என்றும் உண்டானவைகள் அனைத்தின் உயிராகவும் ஒளியாகவும் வழியாகவும் அவரே இருக்கிறார் என்றும் யோவான் சொல்கிறான் (யோவான் 1:1-5). வார்த்தையாகவும் ஆவியாகவும் இருந்த அவர் மனித மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது என்றும் கூறுகிறான் (யோவான் 1:14). இயேசு கடவுளின் அனைத்து அம்சங்களையும் கொண்டவர் என்றும் அவருக்கும் தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது என்றும் அவர் கடவுளின் தற்சொரூபம் என்றும் பவுல் சாட்சி கொடுக்கிறான் (கொலோசேயர்.2:9, 1:14). மனித உருவில் தெய்வத்தையும் தெய்வீகத்தையும் மனிதர்களுக்கு வெளிப்படுத்தவே கடவுள் மனிதனாகப் பிறந்தார் – தோன்றவில்லை.
2. தெய்வீக உருவில் மனித கௌரவம்
கடவுள் மனித உருவத்தில் பிறந்தது மனிதர்களை நேசித்ததும், அவர்கள் மூலமாய் இழந்துபோன உலகை மீட்கும் திட்டத்தையும் தாண்டி மனிதர்களை அவர் மதிக்கும் மனப்பான்மையும் விளங்குகிறது. மனித உருவிற்கு அவர் கொடுக்கும் கௌவரத்தை இயேசுவின் பிறப்பு வெளிப்படுத்துகிறது. அதற்கான காலத்திற்காக காத்திருந்து அது நிறைவேறினபோது, சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டவராக இருக்கவே இறைமகனாக கடவுளே பிறந்தார் (கலா-4:5). மனிதன் மீறினான் என்று சுட்டிக்காட்டும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட தன்னை உட்படுத்திக்கொண்டு மனிதனாக அனைத்து குறைபாடுகளையும் பெலவீனங்களையும் சுமந்தவராக பிறந்து நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவும்படி நம்மை அவருக்கு இணையாக சேர்த்துக்கொள்ளும்படி மனிதனாகப் பிறந்தார். ஏழைகளுக்கு கௌரவம் கொடுக்கும்படி சில அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள் அவர்கள் வீடுகளுக்கு சென்று தங்கி உணவருந்துகிற செயலை தங்களுக்குக் கீழானவர்களுக்கு கொடுக்கும் கௌவரமாகக் கருதுவதுபோலவே கடவுளும் மனித உருவெடுத்து மனிதர்களுக்கு கௌரவம் கொடுத்தார். அரசியல்வாதிகள் மற்றும் மதவாதிகளின் செயல்கள் ஒரு தற்காலிக தீர்வாகவே இருக்கும் ஆனால் கடவுள் மனிதனாகப் பிறந்தது மனிதனின் நிரந்தர கொளவரத்தை கொடுத்திருக்கிறது. இயேசுவின் பிறப்பிற்குப்பின்பு மனிதன் எப்படி கடவுளின் சாயலை இப்பூமியில் வாழ்ந்து காட்டமுடியும் என்று காண்பித்திருக்கிறார். அந்த கௌரவத்திற்கு இந்த கிறிஸ்மஸ் காலத்தில் நாம் பாத்திரமாய் இருக்கிறோமா என்று உணர்ந்து நம்மை சீர் செய்துகொள்ளவேண்டும்.
3. மனிதனை மீட்க மனித உருவில் தெய்வம்
மீறிப்போன மனிதனை மீட்க கடவுள் மனித உருவில் பிறக்கவேண்டியது அவசியமாயிருந்தது. அதனை நிறைவேற்றவே கடவுள் மனிதனாகப் பிறந்தார். இயேசு மனிதர்களின் பாவங்களைப் போக்கவும், அவர்களின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக பலியாகவும் பிறந்தார் (மத்தேயு 1:21, யோவான் 1:29). அவருடைய இரத்தம் சகலப்பாவத்தையும் நீக்கி நம்மையும் நம்மூலமாய் சகல உயிரினங்களையும் மீட்கிறது (ரோமர் 8:19-22). மனிதனின் பாவத்தை மாத்திரமல்ல பாவத்தினால் உண்டான சாபம், வியாதி, பிசாசிற்கு அடிமையாதல், போன்ற அனைத்திலிருந்தும் இந்த உலகை மீட்கும்படியாக மீட்பராக இயேசு பிறந்தார். அவருக்கு முன்பாக மோசே, தாவீது போன்ற அநேக மீட்பர்கள் அவரவர் காலத்தில், அவரவர்க்கு உரிய பொறுப்பில் ஒரு சில மக்கள் குழு, ஒரு சில காலத்திற்கு மாத்திரம் மீட்கும் கருவிகளாக கடவுளால் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் கடவுளின் மனுஅவதாரங்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே அவர்களைப்போல நாம் மாறவேண்டியதோ வாழவேண்டியதோ அவசியமில்லை. அவர்கள் நமது முன்னோடிகள் என்று எபிரேயர் ஆசிரியர் எழுதுகிறார், ஆனால் நமது அடிச்சுவடி இயேசு மாத்திரமே, காரணம்; அவரே மனித உருவில் உள்ள தெய்வம். மற்றவர்கள் தெய்வத்தின் சாயலை வெளிப்படுத்தும் மனிதர்களே என்பதை நாம் உணர்வோம்.
கடவுள் மனிதனாகப் பிறந்தது அவரது அன்பை வெளிப்படுத்தவும், மனிதர்கள் மூலமாக தனது திட்டங்களை நிறைவேற்றவும், மனிதர்களை தன்னைப்போல மாற்றி ஆதி நிலைக்குக் கொண்டு செல்லவும் கடவுள் மனிதனானார். ஆகவே இனி அவர் மனிதனாகப் பிறக்கவேண்டும் என்ற ஆசை கொள்வதைவிட மனிதனாகப் பிறந்தவரை மனிதர்களாகிய நாம் அனுபவித்து இச்செய்தியை அறியாத மக்களுக்கு அறிவித்து, நாளுக்கு நாள் மனித உருவில் வெளிப்படுத்திய தெய்வீகத்தை நாம் நம் வாழ்வில் வெளிப்படுத்துவதே மெய்யான கிறிஸ்மஸ்.
Author. Rev. Dr. C. Rajasekaran