யோசேப்பு - கவனிக்கப்படாத ஹீரோ

யோசேப்பு - கவனிக்கப்படாத ஹீரோ

தேவன் உலகத்தை நேசித்தார், பாவமுள்ள மனிதகுலத்திற்காக தம் குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இது ஒரு வரலாற்றுச் சூழலில், புவியியல் இருப்பிடத்தில் மற்றும் தேவனின் அற்புதமான மக்களின் தீவிர ஈடுபாட்டுடன் நடந்தது. தேவனின் பல கருவிகளில், கிறிஸ்துமஸ் காலங்களில் பாடப்படாத ஹீரோவாக யோசேப்பு கருதப்படலாம். தேவ மனுஷனான இந்த யோசேப்பு அற்புதமான மற்றும் குறிப்பிடத்தக்க மனிதர், நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி மற்றும் உத்வேகமானவர் ஆவார். 

தேவனுக்கு முன்பாக நடத்தல்
தாவீதின் வழித்தோன்றல் மற்றும் இஸ்ரவேலின் வரலாற்றில் மிகவும் விரும்பப்பட்ட ராஜாவின் வம்சம் இந்த யோசேப்பு. இஸ்ரவேல் புத்திரர்கள் தேவனையும் அவருடைய வார்த்தையையும் நிராகரிக்கும் தொடர்ச்சியான கலகத்தால் தேவனுடனான உடன்படிக்கை உறவை இழந்தனர். ஆவிக்குரியச் சீர்கேட்டுடன் அரசியல் வீழ்ச்சியும், நாடு பல அந்நிய சக்திகளின் அடிமைகளாகவும் மாறியது. ஆளும் வர்க்க உயரடுக்குகளில் ஒருவராக இருந்திருக்கக்கூடிய யோசேப்பு, உயிர்வாழ கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இந்த பாதகமான சூழ்நிலையில், யோசேப்பு தேவனுக்கு எதிராக முணுமுணுக்கவோ அல்லது கோபப்படவோ இல்லை. ஆம், தேவன் மீதான அவரது விசுவாசம் வெளிப்புற சூழ்நிலைகளால் கட்டளையிடப்படவில்லை.

தச்சராக இருப்பது கடினமான வேலையாக இருந்தது. மக்களுக்கு பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அபரிமிதமான உடல் ஆற்றல், மன சுறுசுறுப்பு மற்றும் திறன்கள் தேவை. அநேகமாக  அவர் ஒரு புகழ்பெற்ற கலைஞராக இருந்திருக்க வேண்டும். அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் உறுதியான நம்பிக்கையும் அவருடைய வேலையைச் சிறப்பாகச் செய்ய உதவியது.

யோசேப்பு ஒரு நீதிமான் அல்லது நீதியுள்ள மனிதர் என்றும் அறியப்பட்டார். "அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது" (மத்தேயு 1:19-20). யூத சட்டத்தின்படி, மரியாள் விபச்சாரி என்று முத்திரை குத்தப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படலாம். ரோமர்களின் கீழ் வாழ்ந்த யூதர்களுக்கு மரண தண்டனை வழங்க சுதந்திரம் இல்லை. யோசேப்பின் மற்றொரு விருப்பம் 'அமைதியாக அவளை விவாகரத்து செய்வது'. ஒரு நேர்மையான நபராக மற்றவர்களிடம் உணர்திறன் உடையவராக, தீர்ப்பு அளிக்கும் எண்ணம் இல்லாதவராகவும் மற்றும் பழிவாங்கும் எண்ணமும் இல்லாதவராகவும் இருந்தார். அவர் மரியாளை நிபந்தனையின்றி, அன்புடனும், நன்றியுடனும் ஏற்றுக் கொண்டதுமில்லாமல் கர்த்தாதி கர்த்தர் மற்றும் இராஜாதி இராஜாவிற்கும் ஊழியம் செய்ய ஒப்புக் கொண்டார்.

தேவன் யோசேப்பிடம் பேசினார்;  அப்போது எவ்வித தயக்கமின்றி, சந்தேகங்களின்றி, கேள்விகளின்றி அல்லது வாதங்களின்றி உடனடியாகவே கீழ்ப்படிந்தார். மத்தேயு அத்தியாயம் அந்த கீழ்ப்படிதலை மிக அழகாக விவரிக்கின்றது. "யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்" (மத்தேயு 1:24,25). யோசேப்பு சென்று தனது தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் அல்லது சகாக்கள் ஆகியோரிடம் எவ்வித ஆலோசனையையோ கேட்கவில்லை.

யோசேப்பு தேவனோடு சஞ்சரித்தது என்பது அந்நாட்டின் சட்டத்தின் மீதான அவரது அணுகுமுறையில் பிரதிபலிக்கிறது. "அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்" (லூக்கா 2:1-5). மரியாள் கர்ப்பமான நிலையில் இருந்தபோதிலும், அந்த ஆணையின்படி யோசேப்பு செய்தார்.  ஆணையை புறக்கணிக்க அவர் எந்த காரணத்தையும் கூறவில்லை.

மரியாளுடன் இணைந்து நடத்தல்
யோசேப்பு மரியாளை தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார், அவளை நேசித்தார், அவளைக் கவனித்துக் கொண்டார் மற்றும் அவளுக்கு சேவை செய்தார். நாசரேத்திலிருந்து பெத்லகேம் வரை சுமார் 120 கிமீ தூரம் இருந்தது. அவர்கள் நடக்கலாம் அல்லது மரியாளுக்கு கழுதை அல்லது கோவேறு கழுதை மீது சவாரி செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கலாம், ஆனாலும் யோசேப்பு நடந்தார். ஒரு கர்ப்பிணித் தாய் இவ்வளவு தூரம் பயணம் செய்வது கடினமான பயணமாக இருந்திருக்கும். யோசேப்பு மரியாளுக்கு தேவையான தார்மீக ஆதரவை வழங்கினார். கர்ப்பிணியான மரியாளுக்கு தொந்தரவு இல்லாத பயணமாக அமைய யோசேப்பு மெதுவாக மரியாளுடன் நடந்திருப்பார்.

ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்வது கண்டுபிடிக்கப்படாத அல்லது நடைமுறைப்படுத்தப்படாத சகாப்தத்தில்; விடுதி முழுவதுமாக நிரம்பியிருந்தது. அக்கால ஹோட்டல்களில் வரண்டா கூட இல்லை ஆனால் வாகனங்களை நிறுத்துமிடம் (விலங்குகளுக்கு) இருந்திருக்கலாம். இந்த தம்பதியருக்கு பார்க்கிங் இடத்தை வாடகைக்கு விட்டதன் மூலம் விடுதிக் காப்பாளர் ஓரளவு பணத்தைச் சம்பாதித்திருப்பார்.  அநேகமாக, யோசேப்பு தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்க தனது மனைவிக்கு உதவி செய்யும் மருத்துவச்சியாக செயல்பட்டிருக்கலாம்.  சுகாதாரமற்ற சூழல், பாதுகாப்பான பிரசவத்திற்கான உபகரணங்கள் மற்றும் யோசேப்பிற்கு எவ்வித நிபுணத்துவமும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், யோசேப்பு மரியாள் மீதான தனது அன்பிற்காக கூடுதலாக எவ்வளவு தூரங்களையும் கடக்கத் தயாராக இருந்தார்.

இயேசுவுக்காக நடத்தல்
யோசேப்பும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் நடந்தார். நாசரேத்திலிருந்து பெத்லகேம் வரை தனியாக நடந்து செல்வது யோசேப்புக்கு எளிதாக இருந்திருக்கும். இருப்பினும், அவர் மரியாளுடன் நடக்க வேண்டியிருந்தது, இன்னும் கர்த்தராகிய இயேசுவாகப் பிறக்கவில்லை. ஒருவேளை, ஆண்டவர் பிறந்தபின்பு, பெத்லகேமில் உள்ள மற்ற பெண்களின் உதவியை அழைத்து, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பிற தேவைகளைப் பெற முயற்சிக்கும்போது, அங்கும் இங்கும் ஓட வேண்டியிருந்தது.

"பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்" (லூக்கா 2:21).   விருத்தசேதனம் என்ற மதக் கடமையைச் செய்ய யோசேப்பும் மரியாளும் குழந்தை இயேசுவை சுமக்க வேண்டியிருந்தது. அந்த நடை சுமார் 5 மைல்கள் அல்லது 8 கி.மீ. இருக்கலாம். பிரசவத்திற்குப் பிறகு அந்த தூரத்தை நடப்பது பெற்றோர் இருவருக்கும் கடினமாக இருந்திருக்கும். யோசேப்பும் மரியாளும் ஆவிக்குரியவர்களாக இருந்தார்கள், தேவனுடைய தேவைகளை நிறைவேற்ற கடினமாக உழைக்கத் தயாராக இருந்தனர்.

ஞானிகள் குழந்தையைத் தேடிக் கொல்ல, தூண்டப்பட்ட ஏரோதைச் சந்திக்கிறார்கள். "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய், ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது" (மத்தேயு 2:13-15). இது ஒரு நள்ளிரவில் நெருக்கடியான வெளியேற்றம். மீண்டும், யோசேப்பு எப்போதும் போல தன்னிச்சையாக கீழ்ப்படிந்தார்.  கர்த்தராகிய இயேசுவின் பாதுகாப்பிற்காக, யோசேப்பு நடக்க வேண்டியிருந்தது, உண்மையில் சொல்ல போனால் அவரது மனைவி மரியாள் மற்றும் கர்த்தராகிய இயேசுவுடன் எகிப்துக்கு அகதியாக ஓட வேண்டும்.

யூத நடைமுறையின்படி, யோசேப்பு தனது குடும்பத்தை ஆண்டுதோறும் புனித யாத்திரையாக எருசலேமுக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், இயேசு பன்னிரண்டு வயதாக இருந்தபோது விஷயங்கள் வேறுபட்டன.  கர்த்தராகிய இயேசு எருசலேம் கோவிலில் அநேகமாக பெற்றோருக்கு தெரிவிக்காமல் தங்கியிருந்தார். பெரிய யாத்ரீகர்களின் குழுவில் ஆண்டவர் இயேசு இருப்பதாக யோசேப்பு நினைத்திருந்தார். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மூன்று நாட்கள் தேடி அலைய வேண்டியதாயிற்று. "மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்" (லூக்கா 2:46). யோசேப்புக்கு இது கடினமான இருந்திருக்க வேண்டும். மனதில் கவலையும், களைப்பும், ஆவியில் கடமை தவறிவிடுமோ என்ற பயமும் அவனை சோர்வடையச் செய்திருக்க வேண்டும். இருப்பினும், முழு அத்தியாயத்திலும் கோபம் அல்லது வைராக்கியம் அல்லது மனக்கசப்பு என எதுவும் இருந்ததாக தெரியவில்லை. யோசேப்பு தனது வீட்டை எவ்வாறு நிர்வகித்தார் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. ஒரு ஆவிக்குரிய நபராக, அவர் வேதாகமத்தை கற்பித்தார், ஜெபங்களைக் கடைப்பிடித்தார் மற்றும் அவரது குழந்தை பருவத்தில் இருக்கும் கர்த்தராகிய இயேசுவுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார்.

சவால்
யோசேப்பு தேவனால் மிகவும் சிறப்பான மற்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக அழைக்கப்பட்டார்.  சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த உயர்ந்த நிலைக்கு ஆச்சரியமாக பதிலளித்ததன் மூலம் யோசேப்பு தனது நம்பகத்தன்மையை வெளிப்படுத்தினார்.  அவர் நீதியுள்ளவர் மற்றும் நாட்டின் சட்டத்திலிருந்தும் அல்லது தேசத்தின் பிரமாணங்களிலிருந்தும் விலகவில்லை. விசுவாசத்துடன், அவர் மரியாளின் கணவனாக தனது பாத்திரத்தை எந்த காயமும் கோபமும் இல்லாமல் நிறைவேற்றினார். ஆச்சரியப்படும் விதமாக, அவர் மரியாளிடம் உணர்திறன் மற்றும் இரக்கமுள்ளவராக இருந்தார். ஆவிக்குரிய ரீதியில் பக்குவமுள்ள நபராக தேவனின் வழிகாட்டுதல்களுக்கு தன்னிச்சையாகக் கீழ்ப்படிந்தார். கணவன் மற்றும் தந்தையாக, அவர் குடும்பத்தின் விசுவாசமான பொறுப்புள்ளவராகவும்  பாதுகாவலராகவும் இருந்தார்.

*தேவனின் நீதியின் கருவியாக யோசேப்பு எவ்வளவு பெரிய ஹீரோ அல்லவா!*

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Rev. Dr. J .N. மனோகரன் Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download